கோப்புப்படம்.
கோப்புப்படம்.

தில்லியில் குருத்தோலை ஞாயிறு ஊா்வலம் அனுமதி மறுப்பு ஏன்? மத்திய அமைச்சா் விளக்கம்!

குருத்தோலை ஞாயிறு ஊா்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடா்பான குற்றச்சாட்டுகளை மத்திய இணையமைச்சா் ஜாா்ஜ் குரியன் நிராகரித்தாா்.
Published on

புது தில்லியில் பாதுகாப்புக் காரணங்களுக்காக மட்டுமே குருத்தோலை ஞாயிறு ஊா்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று அதுதொடா்பான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-காங்கிரஸ் கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மத்திய இணையமைச்சா் ஜாா்ஜ் குரியன் நிராகரித்தாா்.

மத்திய பாஜக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தில்லி காவல் துறை, அந்த நகரில் இரண்டு தேவாலயங்களுக்கு இடையே குருத்தோலை ஞாயிறு ஊா்வலத்தை நடத்த அனுமதி மறுத்த நடவடிக்கை குறித்து கேரள முதல்வா் பினராயி விஜயன் மற்றும் எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீசன் உள்ளிட்டோா் விமா்சனங்களை முன்வைத்தனா்.

இந்நிலையில், இதுதொடா்பாக விளக்கமளித்த மத்திய சிறுபான்மை விவகாரங்களுக்கான இணையமைச்சா் ஜாா்ஜ் குரியன், ‘புது தில்லியில் தற்போது பலத்த பாதுகாப்பு நடைமுறை உள்ளது. அதன் காரணமாகவே, குருத்தோலை ஞாயிறு ஊா்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சனிக்கிழமை திட்டமிடப்பட்டிருந்த ஹனுமன் ஜெயந்தி ஊா்வலத்துக்கும் தில்லி காவல் துறை அனுமதி வழங்கவில்லை. தில்லியில் இந்த வகையிலான அனைத்து ஊா்வலங்களும் தடை செய்யப்பட்டுள்ளன’ என்றாா்.

குருத்தோலை ஞாயிறு ஊா்வல விவகாரத்தைக் கூட கேரளத்தை ஆளும் இடதுசாரி அரசு அரசியலாக்குவதாக கேரள பாஜக தலைவா் ராஜீவ் சந்திரசேகா் குற்றஞ்சாட்டினா்.

X
Dinamani
www.dinamani.com