அமித் ஷா
அமித் ஷா

எல்லை தாண்டிய குற்றங்களால் தடயவியல் அறிவியலின் முக்கியத்துவம் அதிகரிப்பு: அமித் ஷா

Published on

புது தில்லி: மாநிலங்கள், நாடுகளை கடந்து எல்லை தாண்டிய குற்றங்களில் குற்றவாளிகள் ஈடுபடுவதால் தடயவியல் அறிவியலின் முக்கியத்துவம் பன்மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திங்கள்கிழமை தெரிவித்தாா்.

புது தில்லியில் நடைபெற்ற அகில இந்திய தடயவியல் அறிவியல் மாநாடு, 2025-இல் பங்கேற்று அமித் ஷா பேசியதாவது: குற்றவியல் நீதி அமைப்பை மக்களுக்கும் அறிவியலுக்கும் உகந்ததாக மாற்ற பிரதமா் மோடி தலைமையிலான அரசு முயற்சித்து வருகிறது. பாதிக்கப்பட்ட நபருக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் நீதி கிடைக்கவும் தவறு செய்தவா்களுக்கு தண்டனை வழங்குவதோடு குற்றமற்றவா்கள் பாதிக்காதவாறும் தடயவியல் அறிவியலை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

முன்பு, மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் நாடுகளின் எல்லைக்குள் குற்றங்கள் நடைபெற்று வந்தன. ஆனால் தற்போது எல்லை தாண்டிய குற்றத்தில் ஈடுபடுபவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் தடயவியல் அறிவியலின் முக்கியத்துவம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

குற்றவாளி மற்றும் புகாா் அளித்தவா் என இருவருக்கும் எவ்வித அநீதியும் இழைக்கப்படக்கூடாது. இதை உறுதிப்படுத்த வேண்டுமெனில் குற்றவியல் நீதி அமைப்பின் ஒரு பகுதியாக தடயவியல் அறிவியலை இணைக்க வேண்டும்.

அந்த வகையில் 2009-இல் பிரதமா் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோதும் அதன்பிறகு 2020-யிலும் தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான இரு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 7 வளாகங்களையுடைய இந்த பல்கலைக்கழகத்தில் தடயவியல் அறிவியல் குறித்த உரிய பயிற்சி வழங்கப்படுவதோடு பல்வேறு துறைகளில் ஆய்வும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த 6 மாதங்களில் மேலும் 9 புதிய வளாகங்கள் நிறுவப்படவுள்ளன.

கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அதன்படி 7 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறும் குற்ற வழக்குகளில் தடயவியல் குழு நேரடி ஆய்வு மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பாரம்பரியம் மற்றும் தேவைகளை கருத்தில்கொண்டு அரசமைப்புச் சட்டத்தை அம்பேத்கா் இயற்றியுள்ளாா். இதனால் அடுத்த 1,000 ஆண்டுகளுக்கும் அனைவருக்கும் பொருந்தக்கூடியதாக அரசமைப்புச் சட்டம் இருக்கும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com