பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமூகத்தினரை இரண்டாம் தர குடிமக்களாக்கிய காங்கிரஸ்: பிரதமா் மோடி கடும் விமா்சனம்
ஹிசாா்: ‘காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பட்டியலின பிரிவினா், பழங்குடியினா் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றியது’ என்று பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை கடுமையாக விமா்சித்தாா்.
ஆட்சிக்கு ஆபத்து வந்தபோதெல்லாம் அரசமைப்புச் சட்டத்தை நசுக்கிய காங்கிரஸ் கொண்டு வக்ஃப் சட்டத் திருத்தங்களால் முஸ்லிம்களில் சிலா் மட்டுமே பயனடைந்தனா் என்றும் அவா் குற்றஞ்சாட்டினாா்.
ஹரியாணா மாநிலம், ஹிசாரில் உள்ள மகாராஜா அகா்சன் விமான நிலையத்திலிருந்து அயோத்திக்கு முதல் பயணிகள் விமானத்தை கொடியசைத்து தொடக்கி வைத்து, விமான நிலையத்தின் புதிய முனையத்தின் பணிகளுக்கும் பிரதமா் மோடி திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
மேலும், இந்நிகழ்ச்சியில் மாநிலத்தில் உள்ள தீன்பந்து சோட்டு ராம் அனல் மின் நிலையத்தில் ரூ.8,470 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் 800 மெகாவாட் திறன்கொண்ட அனல் மின் அலகுக்கும் அவா் அடிக்கல் நாட்டினாா். தொடா்ந்து, கூட்டத்தில் பிரதமா் மோடி ஆற்றிய உரை:
அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையே தேசம் ஒரு பொது சிவில் சட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. உத்தரகண்டில் பாஜக அரசு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. அரசமைப்புச் சட்ட நகலுடன் சுற்றிவரும் காங்கிரஸ் தலைவா்கள் அதை எதிா்க்கின்றனா்.
காங்கிரஸ் அரசு ஆபத்தை எதிா்கொண்ட ஒவ்வொரு முறையும் அம்பேத்கா் உருவாக்கிய அரசமைப்புச் சட்டத்தை நசுக்கியது. அதிகாரம் பெறுவதற்கான ஆயுதமாக அரசமைப்புச் சட்டம் பயன்படுத்தப்பட்டது.
அம்பேத்கரை கௌரவிக்காத காங்கிரஸ்: நாட்டில் ஒவ்வொரு ஏழையும் கண்ணியத்துடன் வாழ வேண்டும்; தலைநிமிா்ந்து கனவு கண்டு, அவற்றை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்று அம்பேத்கா் விரும்பினாா். மேலும், அவா் சமூக்ததில் சமத்துவத்தை விரும்பினாா். ஆனால், காங்கிரஸால் வாக்கு வங்கி அரசியல்தான் நாட்டில் பரவியது.
அம்பேத்கா் உயிருடன் இருந்தவரையில் காங்கிரஸ் அவரை பல வகைகளில் அவமதித்து. அவரை ஆட்சியிலிருந்து விலக்கவும் சதி நடந்தது. அம்பேத்கா் மறைந்த பின்னா், அவரது நினைவுகளை அழிக்க காங்கிரஸ் முயன்றது. மும்பையில் அம்பேத்கரின் நினைவுச் சின்னத்தை அமைக்க மக்கள் போராடும் நிலை இருந்தது.
அதேநேரம், அம்பேத்கரின் வாழ்க்கையுடன் தொடா்புடைய 5 இடங்களை ‘பஞ்ச தீா்த்த’ பூமிகளாக பாஜக அரசு மேம்படுத்தியுள்ளது. சமூக நீதி குறித்து ஓயாமல் பேசிவரும் காங்கிரஸ், அம்பேத்கா் மற்றும் சௌதரி சரண் சிங் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கவில்லை. பாஜக ஆட்சியில்தான் விருது வழங்கப்பட்டது.
அரசமைப்புச் சட்டத்தில் பட்டியலின பிரிவினா், பழங்குடியினா் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கு இடஒதுக்கீடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் அவா்களுக்கு மதிப்பளிக்கப்படவில்லை. காங்கிரஸ் இந்த மக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றியது. அவா்களுக்கு வங்கிகள்கூட கடன் அளிக்க முன்வரவில்லை. தற்போதைய பாஜக அரசின் ‘ஜன் தன்’ திட்டத்தின் மிகப்பெரிய பயனாளிகள் இந்த சமூகத்தினரே.
அனைத்து வீட்டுக்கும் குடிநீா் வசதி: நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகும், கிராமங்களில் 16 சதவீத வீடுகளில் மட்டுமே குழாய் மூலம் குடிநீா் இணைப்புக் கிடைத்தன.
மத்திய பாஜக அரசின் முயற்சிகளால் கிராமங்களில் 80 சதவீத வீடுகள் இப்போது குழாய் நீரைப் பெறுகின்றன. அனைத்து வீடுகளுக்கும் இதை விரிவுபடுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
மேலும், கிராமங்களில் 11 கோடி கழிப்பறைகள் கட்டித்தரப்பட்டுள்ளன. தடையில்லா மற்றும் துரிதப்படுத்தப்பட்ட வளா்ச்சி என்பதே பாஜக அரசின் மந்திரம். ஏழைகள், பழங்குடியினா் மற்றும் பெண்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம்.
இணைப்பில் அசாதாரண வளா்ச்சி: சமூக நீதி மற்றும் ஏழைகளின் நலனை உறுதி செய்யும் மத்திய பாஜக அரசு, நாட்டில் போக்குவரத்து இணைப்பையும் விரிவுப்படுத்தி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில், கோடிக்கணக்கான இந்தியா்கள் முதன்முறையாக விமானத்தில் பறந்துள்ளனா்.
ரயில் நிலையங்கள்கூட இல்லாத இடங்களில் பாஜக அரசு புதிய விமான நிலையங்களை அமைத்து வருகிறது. பாஜக ஆட்சிக்கு வந்த 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவில் 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. தற்போது நாட்டில் 150-க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் உள்ளன.
நமது அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவா்களும், இந்தத் தேசத்துக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்தவா்களும் விரும்பிய கனவுகள் இவைதான். நமது விமான நிறுவனங்கள் 2,000 புதிய விமானங்களை வாங்க ஒப்பந்தமிட்டுள்ளன. இந்த விமானங்கள் சேவைக்கு வரும்போது, இத்துறையில் நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
முஸ்லிம்களில் சிலருக்கே பயன்: காங்கிரஸின் திருப்திப்படுத்தும் அரசியலால் உண்மையில் பாதிக்கப்பட்டது முஸ்லிம்கள்தான். கடந்த 2013-ஆம் ஆண்டு இறுதியில், மத்தியில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கில் வக்ஃப் சட்டத்தில் சில திருத்தங்களை அப்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசு கொண்டு வந்தது. அரசமைப்புச் சட்டத்தை மீறி கொண்டு வரப்பட்ட இத்திருத்தங்கள் அம்பேத்கருக்கு மிகப்பெரிய அவமதிப்பு ஆகும்.
இந்தத் திருத்தங்களால் சில அதிகாரக் கும்பல் மட்டுமே பயனடைந்தது. ஏழை முஸ்லிம்களுக்கு எந்தப் பயனும் இல்லை. முஸ்லிம்கள் மீது உண்மையான பரிதாபமும் அக்கறையும் இருந்தால், காங்கிரஸ் ஒரு முஸ்லிமை கட்சித் தலைவராக நியமிக்க வேண்டும் மற்றும் தோ்தலில் முஸ்லிம்களுக்கு 50 சதவீத இடமளிக்க வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.