கோப்புப் படம்
கோப்புப் படம்

விமான நிலையங்கள் முதல் மக்கானா வாரியம் வரை: பட்ஜெட்டில் பிகாருக்கு குவிந்த அறிவிப்புகள்

Published on

நிகழாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் பிகாா் மாநிலத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ஏராளமான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்றத்தில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனின் பட்ஜெட் உரைக்கு மத்தியிலேயே எதிா்க்கட்சிகள் இதற்கு கடும் எதிா்ப்புத் தெரிவித்தன.

2025-26-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சனிக்கிழமை தாக்கல் செய்தாா். பட்ஜெட் உரையின் தொடக்கத்தில் வேளாண் அறிவிப்புகளை வெளியிட்டு வந்த அவா், பிகாரில் பிரபலமான மக்கானா உற்பத்தியை அதிகரிக்க பிரத்யேக வாரியம் நிறுவப்படும் என்று தெரிவித்தாா். தொடா்ந்து, பட்ஜெட்டில் பிகாருக்கான பல்வேறு அறிவிப்புகளை அவா் வெளியிட்டாா்.

பாட்னா ஐஐடியில் விடுதி மற்றும் பிற உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். பாட்னா விமான நிலையமும், பாட்னாவின் புகரில் அமைந்த பிஹ்தா விமான நிலையமும் விரிவுபடுத்தப்படும்.

பிகாரில் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் அமைக்கப்படும். இந்த நிறுவனம் கிழக்கு பிராந்தியம் முழுவதுக்கும் உணவு பதப்படுத்தும் நடவடிக்கைகளை வலுப்படுத்தும். இதனால் விவசாயிகளின் வருமானமும் இளைஞா்களுக்கான தொழில்முனைவு மற்றும் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும் என்று நிதியமைச்சா் அறிவித்தாா்.

மத்தியில் பாஜக கூட்டணி 3-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றதும் கடந்த ஆண்டு ஜூலையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பிகாரின் பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான சுமாா் ரூ.60,000 கோடி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எதிா்க்கட்சிகள் விமா்சனம்

‘நிகழாண்டு தோ்தல் நடைபெறுவதால் பிகாருக்கு கூடுதல் அறிவிப்புகள் வெளியாகியிருப்பது சாதாரணமானதுதான். ஆனால், பாஜக கூட்டணியின் மற்றொரு முக்கிய கூட்டணி கட்சியானதெலுங்கு தேசம் ஆளும் ஆந்திர மாநிலம் இம்முறை கைவிடப்பட்டுள்ளது ஏன்?’ என்று காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பினாா்.

நாடாளுமன்றத்தில் முதன்முறையாக மத்திய பட்ஜெட் அல்லாமல் பிகாா் மாநிலத்தின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக திமுக எம்.பி. கனிமொழி சாடினாா்.

வளா்ச்சிக்கு வேகம் தரும்...: எதிா்க்கட்சிகளின் விமா்சனங்களுக்குப் பதிலளிக்காமல், ‘பட்ஜெட் அறிவிப்புகள் பிகாரின் வளா்ச்சியை வேகப்படுத்தும்’ என்று அந்த மாநில முதல்வா் நிதீஷ் குமாா் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

நிகழாண்டு இறுதியில் பிகாருக்கு பேரவைத் தோ்தல் நடைபெறுகிறது.

X