வசந்த பஞ்சமி: சங்கமத்தில் புனித நீராடிய பக்தர்கள் மீது பூக்கள் தூவி வரவேற்பு!

பிரயாக்ராஜில் நிகழ்ந்த வசந்த பஞ்சமியை பற்றி..
வசந்த பஞ்சமி
வசந்த பஞ்சமி
Published on
Updated on
1 min read

வசந்த பஞ்சமியான இன்று பிரயாக்ராஜில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். அப்பகுதியில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஜன. 13 முதல் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. பிப்.26 மகா சிவராத்திரி வரை நடைபெறும் இந்த நிகழ்வில் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து புனித நீராடிச் செல்கின்றனர்.

கங்கா, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறும். அந்தவகையில் இந்தாண்டு மகா கும்பமேளா பாஜகவின் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு கோலாகலமாக நடத்தி வருகிறது.

தற்போது வரை 30 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வந்து சென்றதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கும்பமேளாவில் இந்தாண்டு 6 நாள்கள் விஷேசமாகக் கருதப்படுகிறது. அதில் ஒன்று தான் வசந்த பஞ்சமி.

இன்றைய நாள் வசந்த பஞ்சமி கடைப்பிடிக்கப்படுகிறது. மாதந்தோறும் வளர்பிறையில் ஐந்தாம் நாளாகவும், தேய்பிறையில் ஐந்தாம் நாளாகவும் பஞ்சமி திதி வருகின்றது. முக்கியமாக கருட பஞ்சமி, ரிஷி பஞ்சமி, வசந்த பஞ்சமி மூன்றும் பிரசித்தி பெற்றவை. இதில் தை அமாவாசைக்குப் பின்வரும் பஞ்சமி வசந்த பஞ்சமியாகக் கொண்டாடுகிறது.

வசந்த பஞ்சமி வட மாநிலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த நிலையில் திரிவேணி சங்கமத்தில் வசந்த பஞ்சமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.

மாநில அரசு அதிகாரிகள் கூற்றுப்படி, இன்று காலை 8 மணி வரையில் சுமார் 62,25,000 பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். இதன் மூலம் தற்போது வரை சுமார் 36 கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளனர்.

வசந்த பஞ்சமி அன்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவது மிகச் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இதனால் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பக்தர்கள் மீது ஹெலிகாப்டர்கள் மூலம் வண்ண வண்ண பூக்கள் தூவப்பட்டது. சாதுக்கள், துறவிகள், பக்தர்கள் மீது பூக்கள் தூவப்பட்ட நிலையில் புனித நீராடிய பக்தர்களை மேலும் மகிழ்வித்தது.

பிரயாக்ராஜில் மட்டுமல்லாது வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில், ராமர் ஜென்ம பூமியான அயோத்தியிலும் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.