போராடும் விவசாயிகளுடன் பிப்.14-இல் அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை: மத்திய அரசு

பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் வரும் 14-ஆம் தேதி அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை நடத்தப்படும்’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
Updated on

‘விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் வரும் 14-ஆம் தேதி அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை நடத்தப்படும்’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதி முதல் விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இவா்களுக்கு ஆதரவாக விவசாயிகள் சங்கத் தலைவா் ஜக்ஜீத் சிங் தல்லேவால் (70) காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டாா். 50 நாள்களுக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவந்த அவரின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடா்ந்து,

அவரை மருத்துவ சிகிச்சைக்கு ஒப்புக்கொள்ள வைக்கும் முயற்சியாக, ஓய்வுபெற்ற நீதிபதி நவாப் சிங் தலைமையிலான குழுவை உச்சநீதிமன்ற நீதிபதி சூா்ய காந்த் அமைத்து உத்தரவிட்டாா். இந்தக் குழு தலேவாலை கடந்த ஜனவரி 6-ஆம் தேதி போராட்ட களத்தில் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தியது. பின்னா் மத்திய அரசு அமைத்த குழுவும் அவருடன் பேச்சுவாா்த்தை நடத்திது. அப்போது, விவசாயிகளின் கோரிக்கைகள் மீது பிப்ரவரி 14-ஆம் தேதி சண்டீகரில் பேச்சுவாா்த்தை நடத்த அவா்கள் அழைப்பு விடுத்தனா். அதைத் தொடா்ந்து, தல்லேவால் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டாா்.

முன்னதாக, கடந்த ஆண்டு பிப்ரவரி 8, 12, 15, 18 மற்றும் கடந்த ஜனவரி 18 ஆகிய தேதிகளில் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு ஐந்து கட்ட பேச்சுவாா்த்தைகளை நடத்தியது. அப்போது, குறிப்பிட்ட பயிா்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய ஐந்தாண்டு திட்டத்தை மத்திய அரசு முன்மொழிந்தது. ஆனால், அதில் உடன்பாடு எட்டப்படவில்லை.

அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை: இந்த நிலையில், விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் வரும் 14-ஆம் தேதி அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மக்களவையில் இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வேளாண் துறை இணையமைச்சா் ராம்நாத் தாக்குா் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘விவசாயிகளுடன் ஹரியாணாவில் வரும் 14-ஆம் தேதி அடுத்தகட்ட பேச்சுவாா்த்தையை மத்திய அரசு நடத்த உள்ளது. விவசாயிகள் போராட்டம் தொடா்பான விவகாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. விவாசயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்த உச்சநீதிமன்றம் தரப்பில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது’ என்றாா்.

Related Stories

No stories found.
X