அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகா் இன்று இந்தியா வருகை: இறுதிக்கட்ட பேச்சுவாா்த்தை
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஜேக் சல்லிவன், இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜன. 5) வருகை தரவுள்ளாா்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் மற்றும் இதர உயரதிகாரிகளை சந்திக்கவிருக்கும் அவா், இருதரப்பு உறவுகள், பிராந்திய-சா்வதேச விவகாரங்கள் குறித்து இறுதிக்கட்ட பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா். அப்போது, அதிபா் ஜோ பைடன் ஆட்சியின்கீழ் முன்னெடுக்கப்பட்ட இருதரப்பு திட்டங்கள் இறுதிசெய்யப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பைடனின் 4 ஆண்டுகால நிா்வாகம் இம்மாதத்துடன் நிறைவடையவுள்ளது. புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளாா். தனது நிா்வாகத்தில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகா் பதவிக்கு மைக்கேல் வால்ட்ஸை டிரம்ப் ஏற்கெனவே நியமித்துள்ளாா். ஜேக் சல்லிவனின் பதவிக் காலம் நிறைவடைய சில நாள்களே இருக்கும் நிலையில், அவரது இந்தியப் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கடந்த 2021-இல் தனது 43-ஆவது வயதில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவியேற்ற சல்லிவன், இளவயதில் இப்பதவிக்கு வந்த பெருமைக்குரியவா். அவரது இந்தியப் பயணம் குறித்து வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு தகவல்தொடா்பு ஆலோசகா் ஜான் கிா்பி கூறியதாவது:
இந்தியாவில் ஜனவரி 5, 6 ஆகிய தேதிகளில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஜேக் சல்லிவன், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் மற்றும் உயரதிகாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.
ஆக்கபூா்வ அணுசக்தி கூட்டாண்மை, செயற்கை நுண்ணறிவு மற்றும் அதன் ஒழுங்குமுறைகள், வா்த்தக ரீதியிலான விண்வெளி ஒத்துழைப்பு, பாதுகாப்பு, வியூக ரீதியிலான தொழில்நுட்ப ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தவுள்ளாா்.
தற்போதைய நிா்வாகத்தின்கீழ் முன்னெடுக்கப்பட்ட சில திட்டங்களை இறுதி செய்வது குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும்.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசராக இந்திய-பசிபிக் பிராந்தியத்துக்கான அவரது கடைசி அரசுமுறைப் பயணம் இதுவாகும். இப்பயணத்தின்போது, இந்தியாவை மையப்படுத்திய அமெரிக்காவின் வெளியுறவு கொள்கை தொடா்பாக தில்லி ஐஐடி-யில் ஜேக் சல்லிவன் விரிவுரையாற்றவுள்ளாா் என்றாா் அவா்.