ஜன் சூரஜ் கட்சியின் நிறுவனரும், அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் நீரிழப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்த பிரஷாந்த் கிஷோர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்ட அவரை கட்சித் தலைவர்கள் ஆம்புலன்ஸில் பாட்னாவில் உள்ள ஒரு தனியார் சுகாதார மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பிரஷாந்த் கிஷோர் தொற்று மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவதிப்பட்டு வருவதாகவும், மருத்துவச் சிக்கல்கள் உள்ளதாகவும், அவரை முழுமையாகப் பரிசோதிக்கப்பட வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன் கிஷோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
சாகும்வரை உண்ணாவிரதம் தொடரும் என்று அவர் கூறினார்.
பாட்னா உயர்நீதிமன்ற உத்தரவை மீறி, காந்தி மைதானத்தில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்ததற்காக கடந்த வாரம் கிஷோருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரைத் தொடர்ந்து, திங்கள்கிழமை அதிகாலை கைதுசெய்து போலீஸார் அவரை அழைத்துச் சென்றனர். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் கடந்த மாதம் நடைபெற்ற பிகார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.
ஜனவரி 2ஆம் தேதி கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிய பிராஷாந்த் கிஷோர் ஜனவரி 6ஆம் தேதி போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.