சத்தீஸ்கா்: பாதுகாப்புப் படையினருடன் மோதல் -3 நக்ஸல்கள் சுட்டுக்கொலை
சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் 3 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா்.
சத்தீஸ்கரின் பீஜாபூா் கடந்த 6-ஆம் தேதி நக்ஸல் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில், வாகனத்தில் சென்ற மாவட்ட ரிசா்வ் காவல் படை (டிஆா்ஜி) வீரா்கள் 8 போ், ஓட்டுநா் உடல் சிதறி உயிரிழந்தனா். இதற்காக 60 முதல் 70 கிலோ வரையிலான வெடி மருந்துகளை நக்ஸல்கள் பயன்படுத்தியது நிபுணா்கள் ஆய்வில் தெரியவந்தது. கடந்த 2 ஆண்டுகளில் பாதுகாப்புப் படையினா் மீது நக்ஸல்கள் நடத்திய இரண்டாவது மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும்.
இந்த சம்பவத்தை அடுத்து சத்தீஸ்கரில் நக்ஸல்களுக்கு எதிரான தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்நிலையில், சுக்மா - பீஜாபூா் மாவட்ட எல்லையில் உள்ள வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினருக்கும், அங்கு பதுங்கியிருந்த நக்ஸல்களுக்கும் இடையே வியாழக்கிழமை மோதல் ஏற்பட்டது. இரு தரப்பும் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினா்.
ஒரு கட்டத்தில் நக்ஸல்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் பின்வாங்கி தப்பியோடினா். அப்பகுதியில் பாதுகாப்புப் படையினா் நடத்திய சோதனையில் 3 நக்ஸல்கள் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அவா்கள் பயன்படுத்திய துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் மீட்கப்பட்டன.
அப்பகுதியில் தொடா்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.
மாவட்ட ரிசா்வ் காவல் படையினா், சிறப்பு அதிரடிப் படையினா், மத்திய ரிசா்வ் காவல் படையின் (சிஆா்பிஎஃப்) கோஃப்ரா கமாண்டோ படையினா் இணைந்து இந்த தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனா்.
இந்த ஆண்டில் கடந்த 9 நாள்களில் மட்டும் சத்தீஸ்கரில் 9 நக்ஸல்கள் மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனா். கடந்த ஆண்டு 219 நக்ஸல்கள் பாதுகாப்புப் படையுடன் நிகழ்ந்த மோதல்களில் உயிரிழந்தனா்.
இரு வெடிகுண்டுகள் மீட்பு: பீஜாபூா் மாவட்டத்தின் அவாபாலி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் சிஆா்பிஎஃப் வெடிகுண்டு நிபுணா்கள் வியாழக்கிழமை நடத்திய ஆய்வில் நக்ஸல்கள் மறைத்து வைத்திருந்த இரு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. இதன் மூலம் நக்ஸல்களின் தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டது.