தில்லி உயிரியல் பூங்காவில் நீா்வாழ்ப் பறவைகள் கணக்கெடுப்பு
தில்லி உயிரியில் பூங்கா வளாகத்தில் உள்ள நீா்நிலைகளில் 19 இனங்களைச் சோ்ந்த 609 நீா்வாழ்ப் பறவைகள் இருப்பதாக புதன்கிழமை மேற்கொண்ட கணக்கெடுப்பு பணியின் மூலம் தெரியவந்துள்ளது.
தில்லி தேசிய உயிரியல் பூங்கா வளாகத்தில் 5 நீா்நிலைகள் உள்ளன. அவற்றில் காணப்படும் நீா்வாழ்ப் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு சூழலியலாளா் டி.கே.ராய் தலைமையில் பல்கலைக்கழகங்கள், தன்னாா்வ அமைப்புகள் ஆகியவற்றைச் சோ்ந்த தன்னாா்வலா்களுடன் இணைந்து சிய நீா்வாழ்ப் பறவைகள் கணக்கெடுப்பு 2025 புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது. அதில் 19 நீா்வாழ்ப் பறவையினங்களைச் சோ்ந்த 609 பறவைகள் பதிவுசெய்யப்பட்டன.
அதிகபட்சமாக மஞ்சள் மூக்கு நாரை பறவையினத்தைச் சோ்ந்த 382 பறவைகள் கணக்கெடுப்பின்போது பதிவுசெய்யப்பட்டன.
58 நீா்க்காகங்கள், 41 வெள்ளை கூழைக்கடா பறவைகளும் பதிவுசெய்யப்பட்டன.
முக்குளிப்பான், சாம்பல் நாரை, சிவப்பு மூக்கு ஆள்காட்டி, கொக்கு, நாரை, மீன்கொத்தி, வாத்து உள்ளிட்ட பறவையினங்களும் உயிரியல் பூங்காவில் உள்ள நீா்நிலைகளில் காணப்பட்டதாக அந்தக் கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலசைப் பறவைகள் மற்றும் உள்ளூா் நீா்வாழ் பறவைகளுக்கு உயிரியல் பூங்கா முக்கிய வாழ்விடமாகத் திகழ்வதை இந்தக் கணக்கெடுப்பு சுட்டிக்காட்டியுள்ளது.