கோப்புப் படம்
கோப்புப் படம்

மகளிா் இடஒதுக்கீடு சட்டத்துக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

மகளிா் இடஒதுக்கீடு சட்டத்துக்கு எதிரான மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
Published on

மகளிா் இடஒதுக்கீடு சட்டத்துக்கு எதிரான மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

கடந்த ஆண்டு மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து, மசோதா சட்டமானது.

எனினும் மக்கள்தொகை கணக்கெடுப்பு, அதைத்தொடா்ந்து மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளை மறுவரையறை செய்யும் பணிகள் நடைபெற வேண்டியுள்ளது. இந்தப் பணிகள் நிறைவடைந்த பின்னரே, மகளிா் இடஒதுக்கீடு சட்டம் அமல்படுத்தப்படும். இதன் மூலம், தோ்தலில் பெண்கள் மட்டுமே போட்டியிடக் கூடிய தொகுதிகள் அறிவிக்கப்படும்.

இந்தச் சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் பிரமுகா் ஜெயா தாக்குா், தேசிய இந்திய பெண்கள் சம்மேளனம் (என்எஃப்ஐடபிள்யூ) சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதில் ஜெயா தாக்குா் தாக்கல் செய்த மனுவில், ‘நாடாளுமன்றத்தில் அமோக ஆதரவுடன் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவை நிறுத்திவைக்கக் கூடாது’ என்றாா்.

அதேவேளையில், மகளிா் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த தொகுதிகள் மறுவரையறையை அவசியமாக்கும் அந்தச் சட்டத்தின் 5-ஆவது பிரிவுக்கு எதிராக, அரசமைப்புச் சட்டப் பிரிவு 32-இன் கீழ் என்எஃப்ஐடபிள்யூ மனு தாக்கல் செய்தது.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பெலா எம்.திரிவேதி, பி.பி.வராலே ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘மகளிா் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராகவே ஜெயா தாக்குா் மனு தாக்கல் செய்தாா். ஆனால் அந்த மசோதா சட்டமாகிவிட்டது. எனவே அவரின் மனுவை விசாரிப்பது வீணான செயல்.

அதேவேளையில் அரசமைப்புச் சட்டப் பிரிவு 32-இன் கீழ், என்எஃப்ஐடபிள்யூவின் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் விரும்பவில்லை. இதுதொடா்பாக உயா்நீதிமன்றம் அல்லது வேறு ஏதேனும் பொருத்தமான மன்றத்தை என்எஃப்ஐடபிள்யூ அணுகலாம்’ என்று தெரிவித்து இரு மனுக்களையும் விசாரிக்க மறுத்துவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com