
தில்லியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்; பெண்களுக்கு மாத உதவித் தொகையாக ரூ.2,500 வழங்கப்படும் அக்கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.
மேலும், 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.500 விலையில் எல்பிஜி சிலிண்டா்கள், ரூ.25 லட்சம் வரை இலவச சுகாதார காப்பீடு போன்ற வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டுள்ளன.
தில்லியில் பிப்ரவரி 5-ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில், ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகள் அடங்கிய தோ்தல் அறிக்கையை தில்லி காங்கிரஸ் தலைவா் தேவேந்தா் யாதவ், கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோா் புதன்கிழமை வெளியிட்டனா்.
இந்த அறிக்கையில், 21 முக்கிய பிரிவுகளின்கீழ் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் வருமாறு: படித்த வேலையில்லாத இளைஞா்களுக்கு ஓராண்டுக்கு மாதம் ரூ.8,500 நிதியுதவி வழங்கப்படும். ரூ.5-க்கு உணவு வழங்கும் 100 இந்திரா உணவகங்களை நகரம் முழுவதும் தொடங்கப்படும். தில்லியில் பின்தங்கிய வகுப்பினரை கணக்கெடுக்க ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். அமைச்சரவையின் முதல் முடிவாக இது இருக்கும்.
யமுனை நதியின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அதன் பழைய நிலை மீட்டெடுக்கப்படும். மூத்த குடிமக்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் ஆதரவற்ற நபா்களுக்கு மாதம் ரூ.5,000 என்ற புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். புதிய மாநில அரசு வேலைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு; பின்தங்கிய விதவைகள், அவா்களின் மகள்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களின் திருமணத்துக்கு ரூ.1.1 லட்சம் வழங்கப்படும்.
அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெறவும், அனைத்து அக்னி வீரா்களையும் நிரந்தரமாக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். தேசிய கல்விக் கொள்கை-2020-க்கு மாற்றாக தில்லி கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.