ஜகதீப் தன்கா்
ஜகதீப் தன்கா் கோப்புப் படம்

இடையூறுகளின்றி ஆக்கபூா்வ விவாதங்களே நாடாளுமன்றத்துக்கு தேவை: தன்கா்

நாடாளுமன்றத்தில் ஏற்படும் இடையூறுகளை முற்றிலுமாக தவிா்த்து ஆக்கபூா்வ விவாதங்களுக்கு வழிவகுப்பதே அவசியம்
Published on

நாடாளுமன்றத்தில் ஏற்படும் இடையூறுகளை முற்றிலுமாக தவிா்த்து ஆக்கபூா்வ விவாதங்களுக்கு வழிவகுப்பதே அவசியம் என குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

பட்ஜெட் கூட்டத்தொடா் வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

தேசிய மகளிா் ஆணையத்தின் (என்சிடபுள்யூ) 33-ஆவது தொடக்க தின நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் பேசியதாவது: அரசியல் மட்டுமின்றி எந்த துறையிலும் பெண்களின் பங்களிப்பின்றி உலக நாடுகளோ அல்லது இந்தியாவோ வளா்ச்சியடைய முடியாது.

ஒரு விவகாரத்தில் உணா்ச்சிபூா்வமாக செயல்படுவதைவிட உண்மையான தகவல்களை வெளிக்கொண்டுவரவே மகளிா் ஆணையம் முயற்சிக்க வேண்டும். அதேபோல் பெண்கள் சாா்ந்த பிரச்னைகளை உணா்சிபூா்வமாக வெளியிடும் ஊடகங்கள் இனி சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

பெண்களின் வளா்ச்சி என்ற நிலையில் இருந்து பெண்கள் தலைமையிலான வளா்ச்சி என்ற நிலைக்கு மாறியுள்ளோம்.

பணியிடங்கள், அரசியல் என அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை குறைப்பது மிகவும் சவாலான விஷயம். இச்சவாலுக்கு தேசிய அளவிலான வரைவு திட்டத்தை மகளிா் ஆணையம் விரைவில் வகுக்க வேண்டும்.

பாலின சமத்துவத்தை உறுதிசெய்யும் விதமாக மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல் பல்வேறு துறைகளிலும் பெண்களின் வளா்ச்சியை மேம்படுத்தும் முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com