
மங்களூரு: கர்நாடக மாநிலத்தில், கடந்த 1998 - 2014ஆம் ஆண்டுக்குள் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட ஏராளமான பெண்களை புதைத்திருக்கிறேன், எரித்திருக்கிறேன் என்று தர்மஸ்தலா கோயில் துப்புரவுப் பணியாளர் தெரிவித்துள்ளார்.
தட்சிண கன்னடா காவல்நிலையத்துக்கு வந்த தலித் நபர், தான் தர்மஸ்தலா கோயிலின் முன்னாள் ஊழியர் என்றும், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பள்ளி மாணவிகள் உள்பட ஏராளமான பெண்களை புதைக்கவும், எரிக்கவும் வற்புறுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக, தான் இப்போது உலகுக்கு உண்மையைச் சொல்ல முன்வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது புகார் மனுவை, உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் கே.பி. தனஞ்செயிடம் கொடுத்திருப்பதாகவும், ஒருவேளை, உண்மை வெளிவருவதற்குள் தான் கொல்லப்பட்டாலோ, காணாமல் போனாலே, உண்மையைக் காப்பாற்றுமாறும் மனுவில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து புகார் அளித்த நபரின் அடையாளங்களை வெளிப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாகவும், நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தலித் நபர் சார்பில் ஆஜராகும் வழக்குரைஞர்கள், புகார் மனுவை வெளியிட்டிருப்பதோடு, புகார்தாரருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் பாதுகாப்பும் கேட்டுள்ளனர்.
இந்த புகார் மனுவுடன், தான் புதைத்த உடல்களைத் தோண்டி எடுத்து அந்த புகைப்படத்தையும் இவர் இணைத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், 1995 முதல் 2014ஆம் ஆண்டு வரை, தர்மஸ்தலா கோயிலின் துப்புரவுப் பணியாளராக வேலை செய்தேன், நேத்ராவதி ஆற்றங்கரையோரம் துப்புரவுப் பணிகளை மேற்கொள்வது என் வேலை. 11 ஆண்டுகளுக்கு முன்பு, அங்கிருந்து ஓடி அண்டை மாநிலத்தில் குடும்பத்துடன் தலைமறைவாக வாழ்ந்து வந்தேன். என்னையும் கொன்றுவிடுவார்களோ என்று பயந்து புகார் கொடுக்காமல் இருந்தேன்.
முதலில், என்னிடம் புதைக்கச் சொன்ன உடல்கள் எல்லாம் தற்கொலை செய்துகொண்டவர்கள் அல்லது விபத்தில் இறந்தவர்கள் உடல் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், புதைக்கக் கொடுத்த உடல்கள் எல்லாமே பெரும்பாலும் பெண்களாகவே இருந்தனர். ஆடை இல்லாமல்தான் உடல்களைக் கொடுப்பார்கள். சில வேளைகளில் உடல்களில் காயங்கள் இருக்கும். கழுத்தை நெறித்துக் கொன்ற தடயங்கள் இருக்கும். அப்போதுதான் அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்தேன். 1998ஆம் ஆண்டு எனது கண்காணிப்பாளர், ரகசியமாக உடல்களை புதைக்குமாறு சொன்னபோது, நான் மறுத்தேன், அப்போது என்னை அடித்துத் துன்புறுத்தி அந்த வேலைகளை செய்ய வைத்தனர் என்று புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னிடம் கொடுக்கப்பட்ட உடல்களில் பல சிறுமிகளின் உடல்களாகவும் இருந்தன. ஒரு முறை, பள்ளிச் சீருடையுடன் இருந்த பெண்ணை புதைத்தேன். அவருடன் சேர்த்து அவரது புத்தகப் பையையும் புதைத்தது என் வாழ்வில் மறக்க முடியாத கொடிய துயரமாக இருந்தது. சிலரது உடல்களை எரிக்கவும் செய்தேன்.
ஒரு முறை என் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணையே ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தினார், அப்போதுதான் அங்கிருந்து குடும்பத்துடன் தப்பியோடி தலைமறைவானோம்.
எனது நோக்கம் ஒன்றுதான், பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளங்களை வெளியே கொண்டு வர வேண்டும். குற்றவாளிகளை வெளிஉலகுக்குச் சொல்ல வேண்டும். நான் உடல்களைப் புதைத்த இடங்களுக்கு ரகசியமாக சென்று அதனை தோண்டி உடல்களைப் புகைப்படம் எடுத்து வந்துள்ளேன். காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயாராக உள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க.. ஐஆர்சிடிசி வழங்கும் ராமாயண சுற்றுலா! பார்க்க வேண்டிய 30 இடங்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.