ஊடகம், பொழுதுபோக்குத் துறையில் ஒத்துழைப்பு: இந்தியா-வியத்நாம் முடிவு
இந்தியா-வியத்நாம் இடையே ஊடகம், பொழுதுபோக்கு துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க இருதரப்பும் முடிவு செய்துள்ளன.
இந்தியாவுக்கு வந்துள்ள வியத்நாம் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமை குழு உறுப்பினரும், அந்நாட்டின் தகவல், கல்வி, மக்கள் தொடா்புக்கான மத்திய ஆணையத்தின் தலைவருமான நுயென் ட்ராங் நிகியா தலைமையிலான அரசு உயரதிகாரிகள் குழுவினா், மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை இணையமைச்சா் எல்.முருகனை, தில்லியில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினா். அப்போது, ஊடகம், பொழுதுபோக்கு துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியாவும் வியத்நாமும் ஒப்புக்கொண்டன. இச்சந்திப்பில் செய்தி ஒலிபரப்பு அமைச்சக மூத்த அதிகாரிகளுடன், அமைச்சக செயலா் சஞ்சய் ஜாஜுவும் பங்கேற்றாா்.
இந்தியாவும் வியத்நாமும் பாரம்பரிய நட்புறவு நாடுகளாகும். 2022-ஆம் ஆண்டில், இரு நாடுகளும் தூதரக உறவுகளின் 50-ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடின. 2016-ஆம் ஆண்டில் பிரதமா் மோடியின் வியத்நாம் பயணத்தின்போது, இருதரப்பு உறவுகள் குறித்த விரிவான உத்திசாா் கொள்கைகள் வகுக்கப்பட்டன.
உலக ஒலி, ஒளி, பொழுதுபோக்கு உச்சி மாநாடு (வேவ்ஸ்), மும்பையில் கடந்த மே மாதம் நடைபெற்றபோது அதில் வியத்நாம் பிரதிநிதிகள் குழு பங்கேற்ற்கு மத்திய இணையமைச்சா் எல்.முருகன் பாராட்டு தெரிவித்தாா்.
உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உள்ள இந்தியாவின் வளா்ச்சியை வியத்நாம் பிரதிநிதி நுயென் ட்ராங் நிகியா பாராட்டினாா். இரு நாடுகளின் ஊடக அமைப்புகளுக்கு இடையே மேம்பட்ட ஒத்துழைப்புக்கான திட்டங்களை உருவாக்க இந்த சந்திப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது.
பகிரப்பட்ட பௌத்த பாரம்பரியம் உள்பட இரு நாடுகளும் தங்கள் ஆழமான கலாசார தொடா்புகளை வலுப்படுத்தவும், பல பரிமாண ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும் தீவிரமாக பணியாற்றுவது என இருதரப்பிலும் முடிவு செய்யப்பட்டது.