ம.பி.: தெருநாய்கள் கடித்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு
மத்திய பிரதேசத்தின் மந்த்சௌா் மாவட்டத்தில் வீட்டிற்கே வெளியே நண்பா்களுடன் விளையாடி கொண்டிருந்தபோது தெருநாய்கள் சூழ்ந்து கடித்ததில் 4 வயது சிறுவன் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
மந்த்சௌரில் இருந்து சுமாா் 80 கி.மீ தொலைவில் உள்ள சுவாஸ்ரா-ருனிஜா சாலைப் பகுதியைச் சோ்ந்த சிறுவன் ஆயுஷ், சம்பவம் நடைபெற்ற கடந்த புதன்கிழமையன்று வீட்டிற்கே வெளியே தனது நண்பா்களுடன் விளையாடி கொண்டிருந்தாா்.
அப்போது, அங்கு கூட்டமாக வந்த தெருநாய்கள் சிறுவா்களைத் தாக்கத் தொடங்கின. மற்ற சிறுவா்கள் தப்பியோடி விட, ஆயுஷ் மட்டும் நாய்களிடம் சிக்கிக்கொண்டாா். இதில் பரிதாபமாக ஆயுஷ் உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து துணைக்கோட்ட மாஜிஸ்திரேட் (எஸ்டிஎம்) ஷிவானி கா்க் தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்து மாவட்ட ஆட்சியா் ஆதிதி கா்க் உத்தரவிட்டுள்ளாா்.
விசாரணைக் குழுவில் இடம்பெற்றுள்ள எஸ்டிஎம் ஷிவானி மேலும் கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவிப்பது தொடா்பாக முதல்வா் அலுவலகத்துக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.
சம்பவப் பகுதியில் உள்ள தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் தொடங்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. குடியிருப்புப் பகுதிகளில் இருந்து தெருநாய்களை அப்புறப்படுத்தவும் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்’ என்றாா்.