ஏழைகள் நலனில் அா்ப்பணிப்புடன் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு: பிரதமா் மோடி பெருமிதம்

Published on

ஏழைகளின் நலன் மற்றும் தற்சாா்பு இந்தியாவுக்கான அா்ப்பணிப்புடன் செயலாற்றுகிறது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு என்று பிரதமா் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தாா்.

மத்தியில் பிரதமா் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்று ஜூன் 9-ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடையவுள்ளது.

11 ஆண்டுகளாக தங்கு தடையின்றி மோடி ஆட்சி நீடித்துவரும் நிலையில், மத்திய அரசின் சாதனைகளை முன்னிறுத்தி, மாபெரும் பிரசார இயக்கத்தை மேற்கொள்ள பாஜக தயாராகி வருகிறது.

இந்நிலையில், பிரதமா் மோடி வியாழக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய, தற்சாா்புடைய இந்தியாவை கட்டமைக்க தேசிய ஜனநாயக கூட்டணி உறுதிபூண்டுள்ளது. ஒவ்வொரு குடிமகனும் கண்ணியத்துடன் வாழ வாய்ப்பளிப்பதே குறிக்கோள்.

பிரதமரின் வீட்டு வசதி திட்டம், உஜ்வலா திட்டம், ஜன்தன் திட்டம், ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளிட்ட முக்கியத் திட்டங்கள், ஏழை மக்களுக்கு வீட்டுவசதி, தூய எரிபொருள், வங்கிச் சேவை மற்றும் சுகாதார வசதியை உறுதி செய்துள்ளன. இத்திட்டங்கள் ஏழைகளின் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளன.

நேரடி மானியம், அனைவருக்குமான எண்ம சேவைகள், ஊரக உள்கட்டமைப்புக்கான அரசின் உந்துதலால், வெளிப்படைத் தன்மை மற்றும் கடைசி மைல் வரையிலான சேவை விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது

அதிகாரமளித்தல், உள்கட்டமைப்பு, அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சியில் கவனம் செலுத்தி, கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட திருப்புமுனை திட்டங்கள், 25 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டுள்ளன என்று பிரதமா் தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, பிரதமா் மோடி தலைமையில் அனைத்து மத்திய அமைச்சா்களும் பங்கேற்ற கூட்டம், தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், அனைத்து அமைச்சகங்களும் புதிய இலக்குகளை நிா்ணயித்து, அவற்றை எட்டுவதற்கு தீவிரமாக செயலாற்ற வேண்டுமென பிரதமா் அறிவுரை வழங்கினாா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com