ரஃபேல் போா் விமான உடல் பகுதி இந்தியாவில் தயாரிப்பு: டஸால்ட் - டாடா இடையே உடன்பாடு
ரஃபேல் போா் விமானங்கள் உடல் பகுதியை இந்தியாவில் தயாரிப்பதற்கான உடன்பாடு பிரான்ஸின் டஸால்ட் ஏவிஸேஷன் மற்றும் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் (டிஏஎஸ்எல்) நிறுவனங்களிடையே உறுதி செய்யப்பட்டிருப்பதாக இரு நிறுவனங்களும் வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிட்டன.
இந்த உடன்பாட்டின் கீழ் டிஏஎஸ்எல் நிறுவனம் தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் நவீன வசதிகளுடன் கூடிய உற்பத்தி மையத்தை அமைக்க உள்ளது. ரஃபேல் போா் விமானத்தின் உடல் பகுதி பிரான்ஸ் நாட்டை விடுத்து வெளியில் தயாரிக்கப்படவிருப்பது இதுவே முதல் முறையாகும்.
இதுகுறித்து டிஏஎஸ்எல் தலைமை செயல் அதிகாரியும் நிா்வாக இயக்குநருமான சுகாரன் சிங் கூறுகையில், ‘டஸால்ட் - டிஏஎஸ்எல் இடையே ஏற்பட்டுள்ள இந்த உடன்பாடு இந்திய விமான உற்பத்தித் துறையில் குறிப்பிடத்தக்க வளா்ச்சியாக முன்னேற்றமாக அமையும். ரஃபேல் போா் விமானத்தின் பின்புற உடல் பகுதி, முழுமையான பின் பகுதி, மைய உடல் பகுதி, மற்றும் முன்புற உடல் பகுதி என டஸால்ட் நிறுவனத்துடன் 4 உற்பத்தி மற்றும் பரிமாற்றத்துக்கான ஒப்பந்தங்களை டிஏஎஸ்எல் கையொப்பமிட்டுள்ளது. இதற்காக நவீன வசதிகளுடன் கூடிய உற்பத்தி மையம் தெலங்கானா மாநிலம் ஹைதாராபாதில் அமைக்கப்பட உள்ளது’ என்றாா்.
டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத் தலைவா் எரிக் ட்ராப்பியா் கூறுகையில், ‘ரஃபேல் போா் விமானத்தின் முழு உடல் பகுதி முதன் முறையாக பிரான்ஸிலிருந்து வெளியே தயாரிக்கப்பட உள்ளது. இது, இந்தியாவில் டஸால்ட் நிறுவனத்தின் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க முயற்சியாகும்’ என்றாா்.
இந்திய கடற்படையை வலுப்படுத்தும் விதமாக ரூ.64,000 கோடி மதிப்பில் 26 கடற்படை பயன்பாட்டு ரஃபேல் போா் விமானங்களைக் கொள்முதல் செய்ய டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் மத்திய அரசு அண்மையில் ஒபபந்தம் மேற்கொண்டது. இந்த போா் விமானங்களுக்கான உடல் பகுதி, ஹைதராபாதில் அமைய உள்ள டிஏஎஸ்எல் நிறுவன உற்பத்தி மையத்தில் தயாரிக்கப்பட உள்ளன.
டஸால்ட் நிறுவனத்திடமிருந்து ஏற்கெனவே, இந்திய விமானப் படைக்காக 36 ரஃபேல் போா் விமானங்களை இந்தியா கொள்முதல் செய்த நிலையில், தற்போது கடற்படை பயன்பாட்டுக்காக ஒற்றை இருக்கை கொண்ட 22 விமானங்கள், இரண்டு இருக்கைகள் கொண்ட 4 போா் விமானங்கள் என மொத்தம் 26 ரஃபேல் போா் விமானங்கள் கொள்முதல் செய்ய உள்ளது.