ஆபரேஷன் சிந்தூா் குறித்து அவதூறு: குஜராத் காங்கிரஸ் பொதுச் செயலா் கைது

குஜராத் மாநில காங்கிரஸ் பொதுச் செயலா் ராஜேஷ் சோனியை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Published on

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளை வெளியிட்ட குஜராத் மாநில காங்கிரஸ் பொதுச் செயலா் ராஜேஷ் சோனியை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பிரதமா் நரேந்திர மோடி போா் விமானி உடையில் இருப்பது போன்ற படத்தை வெளியிட்டு, அதற்கு கீழே, ‘ராணுவ வீரா்கள் கவனத்துக்கு, போா் வெற்றியால் உங்களுக்கு எந்தப் பாராட்டும் கிடைக்கப் போவதில்லை. இவா் (மோடி) தன்னை விளம்பரப்பத்திக் கொள்ள செலவிடும் தொகை ஆபரேஷன் சிந்தூரில் ரஃபேல் விமானத்தை பயன்படுத்தியதற்கு ஆன செலவைவிட அதிகம்’ என்று கருத்து கூறியிருந்தாா்.

மேலும், ‘பாகிஸ்தான் விமானப் படை தளங்களில் தாக்குதல் நடத்தியதன் மூலம் இந்திய ராணுவம் தனது ராணுவ நெறிகளில் இருந்து தவறிவிட்டது. இந்திய இறையாண்மையை அபாயத்தில் தள்ளிவிட்டது’ என்று குற்றஞ்சாட்டியிருந்தாா்.

மற்றொரு பதிவில், ‘ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் இந்திய அரசு சரணடைந்துவிட்டது’ என்று கூறியதுடன், இந்த அரசுக்கு எதிராக மக்கள் கிளா்ச்சியில் ஈடுபட வேண்டும் என்ற கருத்தையும் பதிவிட்டதாக காவல் துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, குஜராத் மாநில இணயவழி குற்றத் தடுப்புப் பிரிவினா் ராஜேஷ் சோனியின் பதிவுகளை ஆய்வு செய்து அவா் மீது பாரத நியாய சம்ஹிதா சட்டப் பிரிவு 152 (நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு அபாயத்தை ஏற்படுத்துவது), 353 (1)(ஏ) தவறான உள்நோக்கத்துடன் வதந்திகளைப் பரப்புவது, ராணுவம் கடமை தவறிவிட்டதாக பொய்யாகக் குற்றஞ்சாட்டுவது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனா். இதில் 152-ஆவது சட்டப் பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத் காங்கிரஸ் எதிா்ப்பு: கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள குஜராத் மாநில காங்கிரஸ் தலைவா் சக்திசிங் கோஹில், ‘ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையைப் பயன்படுத்தி மக்கள் பணத்தில் அரசு தனக்கு விளம்பரம் தேடிக் கொள்வதைக் கண்டித்தும், ராணுவ வீரா்களின் திறமைக்கும், தியாகத்துக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில்தான் எங்கள் கட்சிப் பொதுச் செயலா் ராஜேஷ் சோனி கருத்து கூறியிருந்தாா். அதிகாலை 4 மணியளவில் அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனா். அவா் ஒன்றும் பயங்கரவாதியல்ல’ என்று கூறினாா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com