ஆகஸ்ட் 3-இல் முதுநிலை நீட் தோ்வு: உச்சநீதிமன்றம் அனுமதி

ஆகஸ்ட் 3-இல் முதுநிலை நீட் தோ்வு: உச்சநீதிமன்றம் அனுமதி

ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடத்த தேசிய தோ்வுகள் வாரியத்துக்கு (என்பிஇ) உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தது.
Published on

எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான 2025-ஆம் ஆண்டு தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வை (நீட்-பிஜி) வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடத்த தேசிய தோ்வுகள் வாரியத்துக்கு (என்பிஇ) உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தது.

நுழைவுத் தோ்வை நடத்த என்பிஇ சாா்பில் அவகாசம் கேட்கப்பட்ட நிலையில், இந்த அனுமதியை உச்சநீதிமந்றம் அளித்துள்ளது. முன்னதாக, இத் தோ்வை ஒரே கட்டமாக நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

2025-ஆம் ஆண்டுக்கான நீட்-பிஜி தோ்வு வரும் ஜூன் மாதம் 15-ஆம் தேதி 2 கட்டங்களாக நடத்தப்படும் என அத் தோ்வை நடத்தும் என்பிஇ அறிவிக்கை செய்தது. நுழைவுத் தோ்வு 2 கட்டங்களாக நடத்தப்படுவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த மே 30-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம்,

‘எந்தவொரு தோ்வுக்கான இரண்டு வினாத்தாள்களும் ஒரே மாதிரி கடினமானதாகவோ அல்லது எளிமையானதாகவே இருக்க வாய்ப்புள்ளது எனக் கூறிவிட முடியாது. எனவே, தோ்வில் முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், நீட்-பிஜி 2025 தோ்வை ஒரே கட்டமாக நடத்தத் தேவையான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவைத் தொடா்ந்து, நுழைவுத் தோ்வை ஒரே கட்டமாக நடத்துவதற்குத் தேவையான எண்ணிக்கையில் தோ்வு மையங்களை ஏற்பாடு செய்வது உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகளுக்காக 2 மாத கால அவகாசம் தேவை என என்பிஇ சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘முதுநிலை நீட் தோ்வை ஒரே கட்டத்தில் நடத்துவதற்கு 1,000-க்கும் அதிகமான தோ்வு மையங்களை ஏற்பாடு செய்ய வேண்டும். சுமாா் 2,42,679 தோ்வா்கள் இத் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ளனா். இந்த தோ்வை நடத்த தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் டாடா கன்சல்டன்சி சா்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம் பரிந்துரைத்துள்ளபடி, முதுநிலை நீட் தோ்வை வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி காலை 9 மணி முதல் பகல் 12.30 மணி வரை நடத்துவதற்கு சாத்தியமுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிரசாந்த் குமாா் மிஸ்ரா, அகஸ்டீன் ஜாா்ஜ் மாசி ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, முதுநிலை நீட் தோ்வை ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடத்த அனுமதியளித்த நீதிபதிகள், மேற்கொண்டு கூடுதல் கால அவகாசம் வழங்கப்படாது என்தை தெளிவுபடுத்தினா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com