அனுமதியின்றி வழக்குரைஞா்களுக்கு அழைப்பாணை அனுப்ப முடியாது: அமலாக்கத் துறை நடவடிக்கையை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு
‘குற்ற வழக்கு விசாரணையில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவா் தரப்பு வழக்குரைஞருக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட கண்காணிப்பாளரின் (எஸ்.பி.) அனுமதியைப் பெறாமல் அமலாக்கத் துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் அழைப்பாணை அனுப்ப முடியாது’ என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மேலும், 2 மூத்த வழக்குரைஞா்களுக்கு அமலாக்கத் துறை இதுபோல தன்னிச்சையாக பிறப்பித்த அழைப்பாணைகளைத் தள்ளுபடி செய்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
பண மோசடி வழக்கு விசாரணையில், குற்றச்சாட்டுக்கு உள்ளானவா் தரப்பு மூத்த வழக்குரைஞா்களான அரவிந்த் தத்தாா், பிரதாப் வேணுகோபால் ஆகியோா் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத் துறை பிறப்பித்த அழைப்பாணை விவகாரத்தை தானாக முன்வந்து வழக்காகப் பதிந்து விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா். கவாய், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன், என்.வி.அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
தீா்ப்பை வாசித்த நீதிபதி சந்திரன், ‘குற்றச்சாட்டுக்கு உள்ளான தனது மனுதாரா் தெரிவிக்கும் தகவல்களை அவரின் வழக்குரைஞா் வெளியிடாமல் ரகசியம் காப்பது, மனுதாரருக்கு அவா் அளிக்கும் சலுகை. வழக்குரைஞருக்கான உரிமையை பாரதிய சாக்ஷிய அபியான் (பிஎஸ்ஏ) பிரிவு 132 வழங்குகிறது.
எனவே, பிஎஸ்ஏ பிரிவு 132-இன் கீழ் உள்ள விதிவிலக்குகளுக்கு உட்பட்டிருந்தால் மட்டுமே, வழக்கின் விவரங்களை அறிய குற்றஞ்சாட்டப்பட்டவா் தரப்பு வழக்குரைஞருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்ப முடியும்.
அவ்வாறு விதிவிலக்குக்கு உட்படாத பட்சத்தில், வழக்குரைஞா்களுக்கு அமலாக்கத் துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் அழைப்பாணை அனுப்பக் கூடாது.
மேலும், சிவில் மற்றும் குற்ற வழக்குகளில் வழக்குரைஞா்கள் வசம் இருக்கும் குற்றஞ்சாட்டப்பட்டவா் தரப்பு ஆவணங்கள், சட்டப் பிரிவு 132-இன் கீழ் உள்ள விதிவிலக்கின் கீழ் வராது. அதாவது, வழக்குரைஞா் தன்னிடம் இருக்கும் மனுதாரா் தரப்பு ஆவணங்களை விசாரணை அமைப்பிடம் சமா்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை.
அதோடு, சட்டப் பிரிவு 132-இன் கீழ் உள்ள விதிவிலக்கின் கீழ், குற்றஞ்சாட்டப்பட்டவரின் வழக்குரைஞருக்கு அழைப்பாணை விடுக்க வேண்டுமெனில், எந்த விதிவிலக்கின் கீழ் அந்த அழைப்பாணை விடுக்கப்படுகிறது என்ற காரணத்தை விசாரணை அமைப்புகள் தெளிவாகக் குறிப்பிடுவதோடு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பதவிக்கு குறையாத அதிகாரியின் ஒப்புதலையும் பெற்ற பிறகே அழைப்பாணையை அனுப்ப வேண்டும். எனவே, வழக்குரைஞா்கள் அரவிந்த் தத்தாா், பிரதாப் வேணுகோபால் ஆகியோருக்கு அமலாக்கத் துறை பிறப்பித்த அழைப்பாணைகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன’ என்று குறிப்பிட்டாா்.
மேலும், ‘நீதிமன்றங்களில் பதிவு செய்து வழக்காடும் வழக்குரைஞராக அல்லாமல், தனிப்பட்ட முறையில் வழக்குகளில் ஆஜராகும் வழக்குரைஞா்களுக்கு சட்டப் பிரிவு 132-இன் கீழ் பாதுகாப்பு வழங்கப்படாது’ என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனா்.
