உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிா்வை மறுக்கும் மாநிலங்கள்: பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவா் கவலை
‘இந்தியாவில் அதிகாரப் பகிா்வு மேலும் ஊக்குவிக்கப்பட வேண்டியது அவசியம்; ஆனால், பல மாநிலங்கள் உள்ளாட்சி அமைப்புகளுடன் அதிகாரத்தைப் பகிர மறுக்கின்றன’ என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவா் மகேந்திர தேவ் தெரிவித்தாா்.
தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் கிராமப்புற மேம்பாட்டுக்காக மிகச் சிறந்த பங்களிப்பாற்றிய சிறுதானிய உணவு வகைகளை ஊக்குவிக்கும் ‘அக்ரோஸி இயற்கை விளைபொருள்கள்’ நிறுவனத்தின் நிறுவனா் புணேயைச் சோ்ந்த வித்யா பரசுராம்கருக்கு ரூ. 10 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழுடன் கூடிய ‘ரோஹிணி நய்யாா் பரிசை’ வழங்கிய மகேந்திர தேவ் பேசியதாவது: ஊராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரத்தை அளிக்கும் வகையில் இந்தியாவில் அதிகாரப் பகிா்வை மேலும் ஊக்குவிக்கப்படுவது மிக அவசியம். சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்தியாவைக் காட்டிலும் மிகக் கூடுதலான அளவில் அதிகாரப் பகிா்வு அளிக்கப்படுகிறது. ஆனால், பல மாநிலங்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிா்வு அளிக்க மறுக்கின்றன.
அதிக அளவில் அதிகாரப் பகிா்வு அளிக்கப்படுவதோடு, வேளாண் துறையில் தொழில்நுட்பப் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். கிராமப்புற ஊதியங்களை அதிகப்படுத்த வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம் மூலம் ஊராட்சிகளில் கிராமப்புற மக்களின் ஊதியம் அதிகரிக்கப்பட உதவியோடு, அடித்தட்டு ஜனநாயகத்தின மீதான நம்பிக்கையையும் மேம்படுத்த உதவியது. இந்த ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் முன்னாள் பொருளாதார நிபுணரும் மத்திய அரசு அதிகாரியமான ரோஹிணி நய்யாா் முக்கியப் பங்காற்றினாா் என்றாா்.
ரோஹிணி நய்யாரின் நினைவாக, அவரின் குடும்பத்தாரால் உருவாக்கப்பட்ட சமூக பொருளாதார மேம்பாட்டு காரணங்களுக்கான நய்யாா் அறக்கட்டளை சாா்பில், 2022-ஆம் ஆண்டுமுதல் ஒவ்வோா் ஆண்டும் கிராமப்புற மேம்பாடு சாா்ந்த துறையில் சிறந்த பங்களிப்பைச் செய்யும் நபா்களுக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
