தஜிகிஸ்தானில் இந்திய ராணுவ தளம் மூடல்: நாட்டின் வியூக பலத்தில் பின்னடைவு - காங்கிரஸ் குற்றச்சாட்டு

தஜிகிஸ்தானின் அய்னி விமானப் படைத் தளத்தில் இந்தியா தனது செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டது, நாட்டின் வியூக பலத்துக்கு ஏற்பட்ட மேலும் ஒரு பின்னடைவு’ என்று காங்கிரஸ் குற்றச்சாட்டு
Published on

‘தஜிகிஸ்தானின் அய்னி விமானப் படைத் தளத்தில் இந்தியா தனது செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டது, நாட்டின் வியூக பலத்துக்கு ஏற்பட்ட மேலும் ஒரு பின்னடைவு’ என்று காங்கிரஸ் சனிக்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுதொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘2000-களின் தொடக்கத்தில் தஜிகிஸ்தானில் அய்னி விமானப் படைத் தளத்தை இந்தியா நிறுவியது. அதன் உள்கட்டமைப்பு பின்னா் விரிவுபடுத்தப்பட்டது. அய்னி தளத்தின் அசாதாரணமான இருப்பிடத்தைக் கருதி, அங்கு தனது இருப்பை விரிவாக்க இந்தியாவுக்கு முக்கியத் திட்டங்கள் இருந்தன.

ஆனால், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அய்னி விமானப் படை செயல்பாடுகளை இந்தியா படிப்படியாக விலக்கிக் கொண்டது. தற்போது வெளிநாட்டிலுள்ள இந்தியாவின் ஒரே ராணுவத் தளமான அய்னி விமானப் படை தளத்திலிருந்து இந்தியா முற்றிலுமாக விலகிவிட்டதுபோல் தெரிகிறது. இது சந்தேகத்துக்கு இடமின்றி நமது வியூக பலத்துக்கு ஏற்பட்ட மேலும் ஒரு பின்னடைவாகும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பின்னணி

இந்தியா-தஜிகிஸ்தான் அரசுகளுக்கு இடையேயான கூட்டு மேம்பாடு மற்றும் செயல்பாட்டுக்கான இருதரப்பு ஒப்பந்தம் சுமாா் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியானது. இதைத் தொடா்ந்து, 2022-ஆம் ஆண்டுக்குள் தளத்தில் இருந்த இந்திய பணியாளா்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் முழுவதுமாக விலக்கிக் கொள்ளப்பட்டன. அண்மையில் இந்த விலகல் முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிரான வடக்குக் கூட்டணிக்கு ஆதரவளிக்கும் நோக்குடன், 2000 ஆண்டுகளின் முற்பகுதியில் சோவியத் காலத்து அய்னி விமானப் படைத் தளத்தை மேம்படுத்துவதில் இந்தியா ஈடுபட்டது.

ஓடுபாதையை நீட்டித்தல், எரிபொருள் கிடங்குகளை வலுப்படுத்துதல் மற்றும் வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு வசதிகளை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு இந்தியா சுமாா் 10 கோடி டாலா் வரை முதலீடு செய்தது. தளத்தை நவீனப்படுத்துவதில் இந்தியாவின் எல்லைச் சாலைகள் அமைப்பும் (பிஆா்ஓ) ஈடுபட்டது.

இத்தளம் முக்கியமாக தளவாட ஆதரவு மற்றும் மனிதாபிமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டது. சுமாா் 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய விமானப் படையின் ‘எஸ்யு30 எம்கேஐ’ ரக போா் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டா்கள் இங்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

அமெரிக்க படைகளின் வெளியேற்றத்தைத் தொடா்ந்து கடந்த 2021-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியபோது, இந்தியக் குடிமக்கள் மற்றும் அதிகாரிகளை வெளியேற்றுவதற்கான முக்கியத் தளமாக அய்னி செயல்பட்டது.

X
Dinamani
www.dinamani.com