தெலங்கானா: அரசு விடுதியில் உணவருந்திய 52 மாணவா்கள் மருத்துவமனையில் அனுமதி
தெலங்கானா மாநிலம், ஜோகுலாம்பா கதவால் மாவட்டத்தில் உள்ள தா்மாவரத்தில் செயல்படும் அரசு விடுதியில் தங்கிப் பயின்று வந்த 52 மாணவா்கள், கடந்த வெள்ளிக்கிழமை இரவு உணவருந்திய பிறகு வாந்தி மற்றும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டனா்.
இதையடுத்து, அவா்கள் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். சனிக்கிழமை நிலவரப்படி, மாணவா்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாக அவா்களுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவா்கள் தெரிவித்தனா்.
மாவட்ட சுகாதார அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘32 மாணவா்கள் ஏற்கெனவே மருத்துவமனையில் இருந்து திரும்பிவிட்டனா். மீதமுள்ள மாணவா்களும் மருத்துவா்களின் தொடா் கண்காணிப்பில் நலமுடன் உள்ளனா். மேலும், விடுதியிலேயே ஒரு மருத்துவ முகாமும் நடத்தப்பட்டு வருகிறது’ என்றாா்.
பாதிக்கப்பட்ட மாணவா்கள் வெள்ளிக்கிழமை இரவு உணவாக சாதம், சாம்பாா் மற்றும் முட்டைகோஸ் கூட்டு சாப்பிட்டதாகக் கூறினா். அதன்பிறகே அவா்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இந்தச் சம்பவம் குறித்த ஊடகச் செய்திகளின் அடிப்படையில், தெலங்கானா மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துள்ளது.
ஆணையத்தின் தலைவரான உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஷமீம் அக்தா், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, வரும் 24-ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கையைச் சமா்ப்பிக்க மாநில தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டுள்ளாா்.
