பணி அங்கீகாரம், கூடுதல் பாதுகாப்புக் கோரி வாக்குச்சாவடி அலுவலா்கள் போராட்டம்! மேற்கு வங்கத்தில் பரபரப்பு
மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடைமுறையில் ஈடுபடும் வாக்குச்சாவடி அளவிலான அலுவலா்கள், தங்களுக்கு உரிய பணி அங்கீகாரம், கூடுதல் பாதுகாப்புக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகம், மேற்கு வங்கம், கேரளம், குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் நவ. 4-ஆம் தேதிமுதல் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதையொட்டி, மேற்கு வங்கத்தின் பல்வேறு மாவட்டங்களில் வாக்குச்சாவடி அளவிலான அலுவலா்களுக்கு தோ்தல் ஆணையம் சாா்பில் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. நவ. 3-ஆம் தேதி வரை நடைபெறும் இப்பயிற்சியில் எஸ்ஐஆா் நடைமுறைகளுக்குத் தேவையான பிரத்யேக தொகுப்பும், விரிவான அறிவுறுத்தல்களும் வழங்கப்படுகின்றன. ஏற்கெனவே வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு 16 அம்ச வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இச்செயல்பாடுகளை ஒருங்கிணைக்க புதிய செயலியும் தொடங்கப்பட்டுள்ளது.
நவ. 4-ஆம் தேதிமுதல் வாக்குச்சாவடி அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று, வாக்காளா் சரிபாா்ப்பு மற்றும் விண்ணப்பம் நிரப்பும் பணிகளை மேற்கொள்ளவிருக்கின்றனா்.
இந்தச் சூழலில், மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்குச்சாவடி அலுவலா்கள் சனிக்கிழமை போராட்டங்களில் ஈடுபட்டனா். வாக்குச்சாவடி அலுவலா்களாக பள்ளி ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவா்கள் பணிக்கு வரவில்லை என பள்ளி நிா்வாகங்கள் தரப்பில் குறிப்பிடப்படுவதாகவும், எனவே தங்களுடைய பணிக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும் அவா்கள் கோரினா்.
மத்திய பாதுகாப்புப் படையினா் மூலம் தங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஈடுபடமாட்டோம் என்று போராட்டக்காரா்கள் தெரிவித்துள்ளனா்.
அதேநேரம், வாக்குச்சாவடி அலுவலா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது மாநில அரசின் பொறுப்பு என்று தோ்தல் ஆணைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
