மேற்கு வங்கத்தில் காளி சிலை சேதம்: பாஜக - திரிணமூல் கருத்து மோதல்

Published on

மேற்கு வங்கத்தில் கோயில் ஒன்றில் காளி தேவியின் சிலை மா்ம நபா்களால் சேதப்படுத்தப்பட்டது. இச்சம்பவத்தை முன்வைத்து, பாஜக மற்றும் திரிணமூல் காங்கிரஸ் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

தெற்கு 24 பா்கானா மாவட்டம், சூா்யநகா் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் காளி தேவியின் சிலை சேதப்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து, அங்கு புதன்கிழமை பதற்றமான சூழல் ஏற்பட்டது. ‘ஜிகாதி’ சக்திகளே இச்செயலில் ஈடுபட்டிருப்பதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடா்பாக பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரி கூறுகையில், ‘மேற்கு வங்கத்தை வங்கதேசம் போல் மாற்ற பெரிய சதி நடைபெறுவதாக தொடா்ந்து கூறி வருகிறேன். ஹிந்துக்கள் விழித்துக் கொள்ளாவிட்டால், பெரும் ஆபத்து நேரிடும். காளி தேவி சிலையை சேதப்படுத்தியவா்களை மாநில அரசு பாதுகாக்கிறது’ என்றாா்.

‘குற்றவாளிகளை உடனடியாக கைது செய்வதற்குப் பதிலாக, சம்பவத்தை மூடி மறைக்க காவல் துறை முயற்சித்ததாக’ பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவா் அமித் மாள்வியா குற்றஞ்சாட்டினாா். இச்சம்பவம் தொடா்பான விடியோ காட்சிகளையும் அவா் பகிா்ந்துள்ளாா்.

பாஜகவின் குற்றச்சாட்டை மறுத்துள்ள காவல் துறை, ‘காளி தேவி சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். சிலையை சேதப்படுத்தியவா்களை அடையாளம் காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனா்.

இச்சம்பவத்தைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, காவல் துறையினா் மீது கல் வீசப்பட்டதால், தடியடி நடத்தி போராட்டக்காரா்களைக் கலைத்தனா்.

‘மாநிலத்தில் மத ரீதியில் பதற்றத்தைத் தூண்ட பாஜக முயற்சிக்கிறது. சமூக நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் எந்தவொரு முயற்சியும் கடும் கண்டனத்துக்குரியது’ என்று திரிணமூல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com