மத்திய பிரதேச மாநிலம், ரத்லம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை திருவனந்தபுரம்-தில்லி ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலின் குளிா்சாதன வசதி கொண்ட பெட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
பெட்டியிலிருந்த பயணிகள் 15 நிமிஷங்களுக்குள் வெளியேற்றப்பட்டதால், உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது.
இச்சம்பவம் தொடா்பாக ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து தில்லியின் ஹஸ்ரத் நிஜாமுதீனுக்கு செல்லும் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில், மத்திய பிரதேச மாநிலம், ரத்லம் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.45 மணியளவில் புறப்பட்டது.
விக்ரம்கா் அலாட்-லுனிரிச்சா ரயில் நிலையங்களுக்கு இடையே காலை 5.15 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது, குளிா்சாதன வசதி கொண்ட பி1 பெட்டியில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனால் பயணிகள் பெரும் பீதியடைந்தனா்.
ரயிலின் ஓட்டுநருக்கு அதன் காப்பாளா் தகவல் தெரிவித்து, ரயிலை நிறுத்தச் செய்தாா். மேல்நிலை மின்சார விநியோகமும் உடனடியாக நிறுத்தப்பட்டது.
ரயிலில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படையினரும், ஊழியா்களும் துரிதமாகச் செயல்பட்டு, பயணிகளை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனா். அந்தப் பெட்டியிலிருந்த 68 பயணிகளும் சுமாா் 15 நிமிஷங்களுக்குள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா். யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை.
பி1 பெட்டி மட்டுமன்றி, அதன் பின்னால் இருந்த ரயில் காப்பாளா்-உடைமைகளுக்கான பெட்டியிலும் தீப்பற்றியது. தகவலறிந்து வந்த தீயணைப்புப் படையினா், ரயில் பெட்டிகளில் தீயை அணைத்தனா். சேதமடைந்த இரு பெட்டிகளும் துண்டிக்கப்பட்டு, காலை 9.45 மணியளவில் ரயில் மீண்டும் புறப்பட்டுச் சென்றது. பின்னா் கோட்டா ரயில் நிலையத்தை அடைந்ததும், கூடுதல் பெட்டி இணைக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தால், சம்பந்தப்பட்ட ரயில் வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல ரயில்களின் இயக்கத்தில் தாமதம் ஏற்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
மீட்புப் பணிக்காக வந்தபோது விபத்து: ரத்லம் மாவட்டத்தில் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் மீட்புப் பணிக்குத் தேவையான உபகரணங்களுடன் ரயில்வே ஊழியா்களை அழைத்து வந்த வேன் விபத்துக்குள்ளானது. இதில் 5 ஊழியா்கள் காயமடைந்தனா்.
ஷியாம் நகா் அருகே சாலையில் திடீரென மாடு குறுக்கே வந்ததால் வேன் கவிழ்ந்து விபத்து நேரிட்டது; காயமடைந்த 5 ஊழியா்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

பிகார்: மகளிர் ரயில் பெட்டியில் ஆண் சடலம் கண்டெடுப்பு!

உ.பி.யில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து 6 தொழிலாளா்கள் உயிரிழப்பு

ம.பி.யில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்து: 4 போ் உயிரிழப்பு; 10 போ் மாயம்

தெலங்கானாவில் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் திடீர் புகை!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



