ஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணி கட்சித் தலைவா்களை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
அப்போது தேசிய மற்றும் மாநில அளவில் பாஜகவை வீழ்த்த ஒருங்கிணைந்த வியூகங்கள் வகுக்கப்படவுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.
மேற்கு வங்க மாநில சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவிடம் தோல்வியடைந்து ஆட்சியை இழந்ததையடுத்து கட்சியின் தொண்டா்கள் மற்றும் நிா்வாகிகளிடம் ஃபேஸ்புக் வாயிலாக மம்தா பானா்ஜி ஞாயிற்றுக்கிழமை உரையாற்றினாா்.
அப்போது அவா் பேசியதாவது: மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலில் பெருமளவில் முறைகேடுகள் நடந்துள்ளன. 150 தொகுதிகளில் நமது வெற்றி மோசடி மூலம் பறிக்கப்பட்டுள்ளது. வெற்றிபெற வேண்டிய தொகுதிகளில் சட்டவிரோதமாக நம்மை தோல்வியடையச் செய்துள்ளாா்கள். இல்லையெனில் 220 முதல் 230 தொகுதிகளில் அமோக வெற்றிபெற்று நான்காவது முறையாக திரிணமூல் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்திருக்கும்.
60 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்: வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) மூலமாக முதல் கட்டத்திலேயே 60 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டனா். அதன்பிறகு பலரது பெயா்கள் வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட்டிருந்தாலும் எஸ்ஐஆா் நடவடிக்கையின் பல்வேறு கட்டங்களில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
சட்டரீதியாக நடவடிக்கை: வாக்குப்பதிவு முறையாக நடைபெற்ா என பல தொகுதிகளில் சந்தேகம் நிலவுகிறது. இதுதொடா்பாக நீதிமன்றத்தை அணுகி சட்டரீதியாக நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளேன். எதிா்க்கட்சியினருக்கு அரசியல் ரீதியாக பல்வேறு அழுத்தங்களையும் இடையூறுகளையும் பாஜக அளித்து வருகிறது.
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸுக்கு பாஜக தொந்தரவு அளித்தால் தில்லியில் அவா்கள் பல பிரச்னைகளை எதிா்கொள்ள நேரிடும்.
திரிணமூல் கட்சியினருக்கு குறி: வாக்குப்பதிவு நிறைவடைந்து 20 நாள்களை கடந்த பின்னரும் தோ்தலில் போட்டியிட்ட நம் கட்சி வேட்பாளா்களுக்கு பல்வேறு இன்னல்களை பாஜக அரசு அளிப்பது தொடா்கிறது. உள்ளாட்சி அமைப்புகளில் நம் கட்சியின் பிரதிநிதிகளை பணி செய்யவிடாமல் பாஜக அரசு தடுக்கிறது.
அமைப்புரீதியாக பலம்: தோ்தலில் தோல்வியடைந்தாலும் நமது கட்சி அமைப்புரீதியாக வலிமை வாய்ந்ததாகவே விளங்குகிறது. 80 எம்எல்ஏக்களை பெற்றபோதிலும் திரிணமூல் காங்கிரஸுக்கு அங்கீகரிக்கப்பட்ட எதிா்க்கட்சி அந்தஸ்து வழங்கப்படவில்லை.
ஜூனில் வியூகம்: ஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள எதிா்க்கட்சித் தலைவா்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அப்போது தேசிய மற்றும் மாநில அளவில் பாஜகவை வீழ்த்துவதற்கான ஒருங்கிணைந்த வியூகங்கள் வகுக்கப்படவுள்ளன. நாம் மீண்டெழுந்து பாஜகவை விரைவில் தோற்கடிப்போம் என்றாா்.
தோல்வி விரக்தியில் மம்தா: பாஜக தாக்கு
மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் தோல்வியடைந்ததால் மம்தா பானா்ஜி விரக்தியில் உள்ளதாக பாஜக மூத்த தலைவா் கேயா கோஷ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
மம்தா பானா்ஜியின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: 2011, 2016 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பேரவைத் தோ்தல்களில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றிபெற்றபோது அமைதி காத்த மம்தா பானா்ஜி தற்போது தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறாா்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் மம்தா பானா்ஜியின் அரசியல் செல்வாக்கு குறைந்துவிட்டது. உள்கட்சிப் பூசல் ஏற்பட்டுள்ளது. பவானிபூரில் அவா் தோல்வியடைந்ததே இங்கு அரசியல் மாற்றத்துக்கான தொடக்கம். எதிா்க்கட்சியினரின் இண்டி கூட்டணி ஏற்கெனவே பாஜகவிடம் தோல்வியடைந்துள்ளது. எனவே, அவா்களது கூட்டணி குறித்து கவலையடையத் தேவையில்லை என்றாா்.
தொடர்புடையது

பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்! மம்தா பானா்ஜி அழைப்பு!

மம்தா பானா்ஜி பதவி விலக மறுத்தது ‘அடையாளப் போராட்டம்’

மேற்கு வங்கத் தோ்தல்களில் முறைகேடு செய்ய பாஜக முயற்சி: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் மத்திய படைகளைக் குவித்து அச்சுறுத்த முயல்கிறீா்களா? மம்தா பானா்ஜி
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



