வெயிட்டா ஒரு லைட்

காடுகளில் டென்ட் அடித்துத் தங்குபவர்கள் போன்ற பலர் இதை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இன்னும் இந்தியச் சந்தைக்கு வரவில்லை. அதற்குள், அரசு அனைவருக்கும் மின் இணைப்பு கொடுத்துவிடும் என நம்புவோம்.

ஒரு மண்ணெண்ணெய் ‌விளக்கு எரியும்போது அதன் அருகில் இருந்து பார்த்திருக்கிறீர்களா? ஒரு மாதிரி புழுக்கமான வெப்பம், திரி கருகிய வாடை, எரியாமல் ஆவி ஆகிற மண்ணெண்ணெய் வாடை, கருநிறப் புகை என்று அது ஒரு மாதிரியாக இருக்கும். அதன் அருகில் உட்கார்ந்து படிக்கவோ பணி புரியவோ வேண்டுமெனில், அது கொடுமையான காரியமாக இருக்கும். (அந்தக் காலத்தில், மின்சார விளக்கு வசதி இல்லாத வீடுகளில் இப்படி மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படித்துப் சமூகத்திலும் அரசியலிலும் தொழிலிலும் பெரிய ஆளானவர்களும் உண்டு).

குறைவான வெளிச்சத்தில் தொடர்ந்து நீண்ட நேரம் படித்தாலோ, பணிபுரிந்தாலோ அது கண்பார்வையைப் பெரிதும் பாதிக்கும். உலகளாவிய கரியமில‌ வாயு வெளியேற்றுதலில் 3 சதவீதம், மண்ணெண்ணெய்யை எரிப்பதால் நிகழ்கிறது. அதில் வெளியாகும் கரியும் பிரச்னைக்குரியதுதான். மின்சார வசதி இல்லாத ஒரு குடும்பத்தில், அந்தக் குடும்பத்தின் வருமானத்தில் 30 சதவீதம் மண்ணெண்ணெய் வாங்குவதற்கே செலவாவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அந்தப் புகை நச்சுத்தன்மை வாய்ந்ததும்கூட. ஆனால், இவ்வளவு இருந்தும் வேறு வழியின்றி உலகம் முழுவதும் சுமார் 120 கோடிப் பேர் மண்ணெண்ணெய் விளக்கையே வெளிச்சத்துக்காக இன்றும் பயன்படுத்துகின்றனர். காரணம், மின்சாரம்‌ இல்லை. உண்மையைச் சொல்லப்போனால்,‌ மின் இணைப்பு கொடுக்கும் அளவுக்கு நிலையான மற்றும் நிதியுள்ள அரசாங்கங்கள்‌ இல்லை. நம் இந்தியாவில்கூட சில லட்சம் கிராமங்கள் இன்னமும் மின் இணைப்பு இல்லாமல்தான் இருக்கின்றன.

இதற்கான தீர்வுகளை எல்லாம் அலசிக் காயப்போட்டு அயர்ன் முதற்கொண்டு செய்தாகிவிட்டது. அவை திறன்மிக்கதாக இருந்தால் பர்ஸில் ஓட்டை விழுகிறது. மலிவானதாக இருந்தால் திறன்‌ இருக்கமாட்டேன் என்கிறது. ஆப்பிரிக்கா போன்ற வளரும்‌ நாடுகளில் சூரிய சக்தி ஏகத்துக்கும்‌ கிடைத்தாலும், தரமான சோலார் பேனல்களை அவர்களால்‌ நினைத்துக்கூட பார்க்க முடியாது. மேலும், இரவுகளில் வெளிச்சம் தேவையெனில், தனியாக பேட்டரிகள்‌ வேறு வாங்க வேண்டும்.

இந்த உலகில், எந்த மூலையிலும் எந்த நேரத்திலும் தங்கு தடையின்றி இயங்கக்கூடிய விசை ஏதும் இருக்கிறதா? காந்த விசை ம்ஹூம். சூரியன் - காற்று - நீர் எல்லாம் ம்ஹூம். ஆனால் ஈர்ப்பு‌விசை? அண்டார்டிகா‌, அரக்கோணம் என எந்த இடமாக இருந்தாலும், இரவோ பகலோ எதுவாக இருந்தாலும், கல்லைத் தூக்கிப் போட்டால் அது கீழேதானே விழும். அதை வைத்து மின்சாரம் தயாரிக்க முடியுமா?

முடியும் என்கிறார்கள் க்ராவிட்டி லைட் (Gravity Lite) அமைப்பினர். நிற்க. இது ஏதோ மந்திரத்தில் மாங்காய் காய்க்கும் விஷயம்போலத் தோன்றலாம். ஆனால், நாம்‌ எதுவுமே முதலாகப் போடாமல் ஆற்றலை எடுத்துவிட முடியாது. சில பல இயற்பியல் விதிகள் பிரபஞ்சத்தில் ஸ்டே ஆர்டர் வாங்கி‌வைத்திருக்கின்றன. அப்படி என்றால், இது எப்படித்தான் இயங்குகிறது? கொஞ்சம் இயற்பியலுக்குத் திரும்புவோம்.

தரையில் ஒரு பொருள் கிடக்கிறது. நீங்கள் அதைத் தூக்குகிறீர்கள்‌. நீங்கள் மேலே தூக்கும்போது அதன் நிலை ஆற்றல் (potential energy) அதிகமாகிறது. திரும்பக் கீழே போடும்போது, அந்த நிலை ஆற்றல் இயக்க ஆற்றலாக (kinetic energy) மாறுகிறது. அந்த இயக்க ஆற்றலைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கலாம்.

க்ராவிட்டி லைட் இப்படித்தான் இயங்குகிறது. ஒரு 12 கிலோ எடை. 12 கிலோ எடைக்கு கல்‌, மண் என எதை வேண்டுமானாலும் ஒரு பையில் போட்டுப் பயன்படுத்தலாம். கிணற்றில் நீர் இறைப்பதுபோல் ஒரு அமைப்பு. அந்த எடையை நாம் இழுத்து மேலேற்றிவிட்டுவிட்டால், அது கீழிறங்கும்போது ஒரு சிறிய நேர்திசை மின்சாரம் (direct current) உற்பத்தி செய்யும் ஜெனரேட்டரை சுழற்றுகிறது. அது உருவாக்கும் மின்சாரம் எல்‌.ஈ.டி. விளக்குகளை எரியச் செய்கிறது‌. அந்த எல்.ஈ.டி. விளக்குகள் மண்ணெண்ணெய் திரி விளக்குகளைவிட ஐந்து மடங்கு பிரகாசமானவை. அதைத்தவிர, தனியே பொருத்திப் பயன்படுத்தக்கூடிய சாட்லைட்டுகள் (satlights) (சாட்டிலைட்டுகள் (satellites) அல்ல) இரண்டும் வரும். எல்.ஈ.டி. விளக்குகளின் பிரகாசத்தை நாம் கூட்டவோ குறைக்கவோ செய்துகொள்ள முடியும்.

இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வந்திருக்க வேண்டும். கிணற்றில் நீர் இறைப்பதுபோல் 12 கிலோ எடையைத் தூக்கி விட்டுவிட்டால், அடுத்த நொடி அது கீழே வந்துவிடாதோ. அது கேமரா ப்ளாஷ்லைட்போல்‌ எரிந்து அணைந்துவிடுமே என்று? க்ராவிட்டி லைட்டில் இதற்கென தனிப்பட்ட பற்சக்கர அமைப்புகள் உண்டு.

மேலே தூக்கப்பட்ட எடை கீழே இறங்கும்போது, அது ஒரு கனமான பற்சக்கரத்தைச் சுழற்றுகிறது. இது படிப்படியாகச் சிறிய சக்கரங்களைச் சுழற்றுவதால், ஜெனரேட்டரைச் சுழற்றும் சக்கரம் நிமிடத்துக்கு சுமார் 1600 சுற்றுகள் சுற்றும்‌. இப்படி படிப்படியாக வேகம் குறைக்கப்படுவதால், ஏற்றப்பட்ட எடை மேலிருந்து கீழே வருவதற்கு 20 நிமிடங்கள் ஆகும். ஒரு முறை எடையை மேலேற்றி விட்டுவிட்டால், அடுத்த 20 நிமிடங்களுக்குத் தடையின்றி வெளிச்சம்.

எல்.ஈ.டி. விளக்குகளுக்கு ஒரு பண்பு உண்டு. அவை சீரான மின்சாரத்தைக் கோருபவை. அதனால், எடை வேகமாகக் கீழிறங்க முயன்றாலும், எல்.ஈ‌.டி. விளக்குகள் ஜெனரேட்டரின் வேகத்தைக் கட்டுப்படுத்தி, எடையைச் சீராக இறங்கச் செய்துவிடும்.

எடை குறைவான, அதே சமயம் அழுத்தமான ப்ளாஸ்டிக், ஜெனரேட்டர்களுக்குள் நியோடைமியம் (neodymium) என்னும் தனிமத்தால் ஆன காந்தங்கள் என கச்சிதமான பொருட்களால் க்ராவிட்டி லைட் சாத்தியப்படுகிறது. கென்யா போன்ற நாடுகளில், பல ‌வீடுகளில் குறிப்பாக, பள்ளி‌ செல்லும் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் பெரிய மாற்றங்களைச் செய்துகொண்டிருக்கிறது. காடுகளில் டென்ட் அடித்துத் தங்குபவர்கள் போன்ற பலர் இதை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இன்னும் இந்தியச் சந்தைக்கு வரவில்லை. அதற்குள், அரசு அனைவருக்கும் மின் இணைப்பு கொடுத்துவிடும் என நம்புவோம். ஆனால் எளிமையான, பெரும்பாலும் கவனிக்காமல் கடக்கக்கூடிய ஒரு விஷயத்தால் பெரிய பிரச்னைகளுக்கு தீர்வு சொல்வது ஆச்சர்யம்தானே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com