அஞ்சுகறி சோறு

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு அல்லது பல சிறப்புகள் உண்டு. திருநேல்வேலிக்கு அல்வா, திருப்பதிக்கு லட்டு, மதுரைக்கு ஜிகிர் தண்டா, ஆம்பூருக்கு பிரியாணி  என்பதுபோல நாகூரின் சிறப்பு உணவு வகைகளில் ஒன்று அஞ்சுகறி சோறு. பெயருக்குத் தகுந்தாற்போல் ஐந்து வகையான உணவு வகைகள் அதில் இருக்கும். தாலிச்ச சோறு, அதாவது நெய் சோறு, தாலிச்சா, தனிக்கறி, குருமா, பச்சடி, சீனித்தொவை இப்படி ஐந்து வகையான அல்லது அதற்கும் மேற்பட்ட உணவு வகைகள் கொண்டதுதான் அஞ்சுகறி சோறு. ஆனால் இங்கே நான் உணவு வகையைப் பற்றிப் பேசப்போவதில்லை. உணவு வகைகளைப் பற்றிப் பேசுவதைவிட சுவைப்பதே எனக்கு மிகவும் விருப்பம்!  அஞ்சுகறி சோற்றைப் போல இக்கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஒரு விஷயத்தைப் பற்றி இருக்கும். நாட்டு நடப்பு, வீட்டு நடப்பு, உலக நடப்பு, சினிமா, புத்தகம், இலக்கியம், பேச்சு, தத்துவம், ஆன்மிகம், ஆரோக்கியம், மார்க்கம், விஞ்ஞானம், பக்தி, சக்தி - இப்படி எதைப்பற்றி வேண்டுமானாலும் இது இருக்கலாம். அசைவ, சைவ நாக்குகள் என்ற வித்தியாசமின்றி எல்லா நாக்குகளுக்குமான அஞ்சுகறி சோறு இது. சாப்பிடப் போகலாமா?

நாகூர் ரூமி.

நாகூர் ரூமி.

இயற்பெயர் முஹம்மது ரபி. புனைபெயர்: நாகூர் ரூமி. கல்வித்தகுதி: எம்.ஏ., பிஎச்.டி., கம்பன் - மில்டன் காவியங்களில் ஒப்பாய்வுக்காக, சென்னைப் பல்கலைக்கழக முனைவர் பட்டம். கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், சுயமுன்னேற்றம், மதம், ஆன்மிகம், வாழ்க்கை வரலாறு, தமிழாக்கம் என 43 நூல்கள் எழுதியுள்ளார். இவர் எழுதிய ‘இஸ்லாம் - ஓர் எளிய அறிமுகம்’ நூலுக்கு 2004-ம் ஆண்டுக்கான திருப்பூர் தமிழ்ச் சங்க விருதும், ஹோமரின் ‘இலியட்’ காவிய மொழிபெயர்ப்புக்கு 2009-ம் ஆண்டுக்கான நல்லி திசையெட்டும் மொழியாக்க விருதும் கிடைத்தது. கணையாழி தொடங்கி கல்கி, விகடன், குமுதம் என எல்லாப் பத்திரிகைகளிலும் எழுதியுள்ளார். இணையத்திலும் எழுதுகிறார். www.nagorerumi.com என்ற இவரது வலைத்தளத்திலும் இவரது ஆக்கங்களைப் படிக்கலாம். ஆம்பூர், மஜ்ஹருல் உலூம் கல்லூரியில் ஆங்கிலத் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், சென்னையில் பல ஆண்டுகளாக ஆல்ஃபா தியான வகுப்புகளை நடத்தி வருகிறார். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு கருத்துகளைப் பரிமாறியுள்ளார்.

நம்முடைய தினமணி இணையதளத்தில், வரலாறு படைத்த வரலாறு, மற்றும் நலம் நலமறிய ஆவல் என்று இரு தொடர்களை எழுதியுள்ளார். இதில், நலம் நலமறிய ஆவல் என்ற தொடர், அதே பெயரிலேயே தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் பினாக்கிள் புக்ஸ் பதிப்பகத்தின் மூலம் புத்தமாக வெளியிடப்பட்டுள்ளது. 448 பக்கம் - ரூ.420.

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை