Enable Javscript for better performance
அச்சுதன் முதல் ஜானகி வரை- Dinamani

சுடச்சுட

  

  அச்சுதன் முதல் ஜானகி வரை

  By அரவிந்தன் நீலகண்டன்  |   Published on : 12th April 2015 10:34 AM  |   அ+அ அ-   |    |  


  த்மநாபபுரத்தில் இருக்கும் புகழ்பெற்ற சுற்றுலா ஸ்தலமான அரண்மனைக்கு சென்றீர்கள் என்றால், அங்கே அரசருக்குப் பரிசாக அளிக்கப்பட்ட ஒரு ‘மூலிகை’ கட்டிலைப் பார்க்கலாம். அதை அரசருக்கு அளித்தவர் ஒரு டச்சுக்காரர் எனக் கருதப்படுகிறது. அப்படி தகவல் சொல்கிற ஒரு சிறிய அறிவிப்பை அங்கேயே வைத்திருக்கிறார்கள்.

  17-ம் நூற்றாண்டில், மலபார் பகுதியில் டச்சு ஆதிக்கம் ஏற்பட்டது. ஹெட்ரிக் அட்ரியன் வான் ரீடீ (Hendrik Adrian von Rheede) என்பவர் அங்கே கவர்னராக இருந்தார். அவர் அந்தப் பகுதியின் தாவரங்களைப் பற்றி 12 பாகங்கள் கொண்ட ஹோர்ட்டஸ் மலபாரிக்கஸ் (Hortus Malabaricus) என்கிற மகத்தான தொகுப்பு நூல்களை வெளியிட்டார். மலபார் பகுதியின் அனைத்து தாவரங்களின் விவரங்கள் அடங்கிய தொகுப்பு அது. ஹோர்ட்டஸ் மலபாரிக்கஸ் என்றால் மலபாரின் தோட்டம் என்று பொருள். இந்தப் பிரதேசத்தின் 740 தாவரங்களின் விவரங்கள் அந்தத் தொகுப்பில் இருந்தன. இந்தத் தரவுகளை முழுமையாகத் தொகுக்க அவருக்கு கொஞ்ச நஞ்சமல்ல இருபத்தைந்து ஆண்டுகள் ஆகின. 1678-ல் தொடங்கிய வேலை 1703-ல்தான் முடிந்திருந்தது. காலனிய காலகட்டத்தில், அறிவியல் அறிவு எப்படி சேகரிக்கப்பட்டது என்பதற்கான அற்புதமான ஒரு ஆவணமாக இந்தத் தொகுப்பு கருதப்படுகிறது.

  botany.jpg

  இந்தத் தொகுப்பில் ஒரு முக்கியமான அம்சம் இருக்கிறது. இந்தத் தொகுப்புக்கான பணி தொடங்கியபோது, இத்தாலியில் இருந்து வந்திருந்த ஒரு மிஷினரி ஃபாதர் மாத்யூ என்பவர்தான் இந்தப் பணியில் ஈடுபட இருந்தார். ‘கிழக்கத்திய’ தாவரங்கள் குறித்த அவரது பகுப்பு முறையை விரைவில் கவர்னர் கைவிட வேண்டியதாக இருந்தது. அவை, இங்குள்ள தாவரங்களை வகைப்படுத்துவதில் பெரிதாக உதவிடுவதாக இல்லை. இறுதியில் உள்ளூர்வாசிகள், இங்குள்ள அறிஞர்கள் எப்படி தாவரங்களை பகுக்கிறார்கள் என்பதை கவர்னர் விசாரித்தார். அந்தப் பகுப்பு முறைதான் சரிப்படும் என்கிற முடிவுக்கு வந்தார். காலனிய அதிகாரி என்றாலும் அட்ரியன் ரீடீ செய்த சரியான முடிவு அது.

  யாரை அணுகுவது? மூன்று பட்டர்களையும் ஒரு வைத்தியரையும் அவர் அணுகினார். ரங்க பட்டர், விநாயக பட்டர், அப்பு பட்டர் ஆகியோர் அந்தப் பட்டர்கள். ஆனால், அவர்களுக்குக் களத்தில் தாவரங்களைக் கண்டறியும் திறமை இல்லை. ‘இட்டி’ அச்சுதன் (Itti Achuden), ஈழவ சமுதாயத்தைச் சார்ந்தவர். பாரம்பரியமான வைத்தியக் குடும்பம். அன்றைய நாள்களின் மிக முதன்மையான வைத்தியர் என்று ரீடீ கூறுகிறார். ஹோர்ட்டஸ் மலபாரிக்கஸ் நூலில் நாம் காண்கிற தாவரங்களின் விவரணம், பகுப்பு முறை, பெயர்கள் ஆகியவை அனைத்துமே ஏறக்குறைய அச்சுதனின் பங்களிப்பு என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நூலில் உள்ள தாவரங்களின் விவரணங்கள், ஓவியங்கள், அவற்றின் வகைப்படுத்துதல் ஆகியவை தங்கள் பாரம்பரிய நூல்களின் அடிப்படையிலும், தம் அறிதலுக்கு உகந்ததாகவும் உள்ளன என அச்சுதன் கொடுத்த சான்றிதழும் (20 ஏப்ரல் 1675) உள்ளது.

  சூழலியல் வரலாற்றாசிரியர் ரிச்சர்ட் க்ரூவ், தன்னுடைய ‘பசுமை ஏகாதிபத்தியம்’ (Green Imperialism) எனும் நூலில், அச்சுதனின் பங்களிப்பை முழுமையாகக் கொண்டுவர முயற்சி செய்திருக்கிறார். அட்ரியன் ரீடீ கூறுவதைக் காட்டிலும், அச்சுதனின் பங்களிப்பும் ஈழவர்கள் பயன்படுத்திய தாவர பாகுபாடு முறையும், ஹோர்ட்டஸ் மலபாரிக்கஸ் நூலின் மிக அடிப்படையாகவே பயன்படுத்தப்பட்டன என்கிறார். ஹோர்ட்டஸ் மலபாரிக்கஸ் ஐரோப்பாவை அடைந்த பிறகு, அங்குள்ள முக்கியமான தாவரவியல் நூல்களில் தாக்கம் செலுத்த ஆரம்பித்தது. உயிரினங்களின் வகைப்படுத்துதலின் பிதாமகர் என அறியப்படுகிறவர் கார்ல் லின்னயஸ். இவரது வகைப்படுத்துதல், இன்றைக்கும் முக்கியமானது. லின்னயஸ் தன்னுடைய பாகுபாட்டில், 240 புதிய தாவர இனங்களை ஈழவ பாகுபாட்டு முறையைப் பயன்படுத்தி வகைப்படுத்தினார். அதேபோல், பல அன்றைய மேற்கத்திய முக்கிய உயிரியலாளர்கள் – அடன்ஸன் (1763), ஜுஸே (1789), டென்ஸ்ட் (1818), ஹாஸ்க்ரல் (1867), ஹூக்கர் என பலரும் இந்த ஈழவ பாகுபாட்டு அமைப்பை பயன்படுத்தினர் என்கிறார் க்ரூவ். ஆனால், அதில் ஒரு நுண்ணிய அதிகாரத்துவ இழையும் ஓடிக்கொண்டுதான் இருந்தது.

  கார்ல் லின்னயஸ் தன்னை அறியாமலே ஈழவ பாகுபடுத்துதலை பயன்படுத்தினார் என்றாலும், அவருக்கு அது மற்றொரு பண்பாட்டில் இருந்து பெறப்பட்டது என்பது தோன்றவே இல்லை. அறிவு என்பது ஒரு பொதுவான அறிதலில் இருந்து உருவாகக்கூடியது. அந்த அறிதல் முறை அனைவருக்கும் ஒன்று மட்டுமே என்பதுதான் அப்போதைய மனநிலை. அறிதல், உரையாடல் மூலம் உருவாக முடியும். அதுவும், கிறிஸ்தவ மேற்கு கிறிஸ்தவரல்லாத பண்பாடுகளிடம் இருந்து அறிதலை பெற முடியும் என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத விஷயம் என்கிறார் மானுடவியலாளர் அன்னா ட்ஸிங் (Anna Lowenhaupt Tsing). ஆனால், நடந்தது என்னவோ அதுவேதான். கேரளத்தின் வைத்தியர்கள், தாவரவியல் அறிவை ஐரோப்பாவிடம் இருந்து பெறவில்லை. ஆனால் அவர்களின் தாவரவியல் அறிவு, ஐரோப்பிய அறிதல் முறையை மாற்றியமைத்தது.

  இங்கிருந்துதான் ஒரு சிக்கலான விஷயம் ஆரம்பிக்கிறது. அறிவியல் மேற்கில் நிறுவனரீதியாக பலமாக பலமாக அது பிற பண்பாடுகளிலிருந்து பெற்ற பங்களிப்புகளை உள்ளே தன்னுடையதாக மாற்றியமைத்தது. அத்துடன், தன்னுடைய அமைப்புக்கு வெளியே இருக்கிறவர்கள் ஒரு அளவுக்கு மேல் பங்களிக்க முடியாதவாறு விலக்க ஆரம்பித்தது. 1858-ல் C.R.W.வாட்கின்ஸ் என்பவர், தாவரவியல் அடிப்படைகள் (Principles and Rudiments of Botany) என்கிற நூலை எழுதினார். இதில் கார்ல் லின்னயஸின் பாகுபாடு விமரிசிக்கப்பட்டது என்றாலும், அதன் தொடக்கத்தில் அவர் ஒரு முக்கிய விஷயத்தை சுட்டிக் காட்டுகிறார். லின்னயஸ், ரீடீயின் நூலுக்கு தாம் முக்கியத்துவம் அளித்ததையும், அவற்றின் விவரணங்கள் மிகவும் துல்லியமாக இருப்பதையும் வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறார். ஆனால், இந்தியப் பெயர்களை பயன்படுத்துவதைத் தவிர்க்கிறார். கஷ்டப்பட்டு லத்தீனிய பெயர்களைச் சூட்டுகிறார். இவை எல்லாம், வேண்டுமென்று செய்யப்பட்டவை அல்ல. ஆனால், இவை அனைத்துமே மெதுவாக ஒரு அரணை எழுப்புகின்றன. எப்படி என்பதை பார்ப்போம்.

  ஆகஸ்ட் 2008-ல், ஜியோ எனும் பத்திரிகை, ஹென்றி நோல்டி எனும் ஆக்ஸ்போர்ட் தாவரவியல் ஆராய்ச்சியாளர் எழுதியுள்ள ‘காகிதப்பூக்கள்’ (‘Paper flowers’) எனும் கட்டுரையை வெளியிட்டது. ராபர்ட் விட் (Robert Wight, 1796-1872) எனும் ஸ்காட்டிஷ் மருத்துவர், இந்தியத் தாவரங்களைச் சேகரிப்பதிலும் வகைப்படுத்துவதிலும் பெரும் ஆர்வம் உள்ளவராக இருந்தார். இவர் இந்தியாவில் வாழ்ந்த 31 ஆண்டுகளில் (1817-1848) குற்றாலம், சிவகிரி, பழநி ஆகிய மலைப்பகுதிகளில் தம் நேரத்தை செலவிட்டார். பல தாவர இனங்களை வகைப்படுத்தினார். அவற்றுக்கு தாவரவியல் பெயர்களை இட்டார்.  ஏறக்குறைய 256 தாவர இனங்கள் (Species) அவருடைய பெயரைத் தாங்கியுள்ளன. அவரது பத்தாண்டு உழைப்பின் விளைவாக வெளிவந்த ‘இந்தியத் தாவரவியல் சித்திரங்கள்’ (Illustrations of Indian Botany – hand illustrated) என்ற அரிய நூல், 2462 தாவர ஓவியங்களைக் கொண்டதாக இருந்தது. பிரிட்டிஷ் காலனிய நாடுகளிலேயே இவ்வளவு விளக்கமான தாவரவியல் தரவுகள் வெளிக்கொணரப்பட்டது வேறெங்கும் இல்லை எனலாம்.

  இந்த ஓவியங்களை வரைந்தவர்கள் ரங்கையா (Rungiah) மற்றும் கோவிந்தன் (Govindoo) எனும் பெயர்களைக் கொண்ட தஞ்சாவூரைச் சார்ந்த ஓவியர்கள். ஒரு மாதத்துக்கு 10-12 ஓவியங்கள் வரை இவர்கள் தீட்டினர். ஹென்றி நோல்டி, இக்கட்டுரையின் இறுதியில் ஒரு விஷயத்தை நோல்டி குறிப்பிடுகிறார். இந்திய உதவியாளர்களால் ஓரளவுக்கு மேல் – அதாவது ஓவியங்களைத் தீட்டுவதற்கு  அப்பால் – தாவரவியலுக்குப் பங்களிக்க முடியவில்லை. ஏன்? நோல்டி கூறுகிறார்: ‘விட் (Wight) வாழ்ந்த காலகட்டத்தில், இந்தியர்கள் மேற்கத்தியப் பாரம்பரியத்தின் தாவரவியலுக்குப் பங்களிப்பதென்பது சாத்தியமே இல்லாத ஒன்றாகும். லின்னயன் (Linnaean) வகைப்படுத்தல் விதிகளும் வழிமுறைகளும் குறித்து இந்தியர்கள் அறிந்திருக்காததே அதற்குக் காரணம்’. தமது பங்களிப்பில் உருவான அறிவியல் புலத்திலிருந்து தாங்களே பண்பாட்டளவில் அந்நியப்பட்டு நிற்கும் சூழல் உருவானது, காலனியத்தின் மானுட சோகங்களில் ஒன்று.

  ஆனால், பாரம்பரிய அறிதல் இந்தியாவுக்குள் அதே ‘மேற்கத்திய’ அறிவியல் மூலமாகவே மீண்டெழுந்தது என்கிற சுவாரசியத்துடன் நாம் இங்கு கட்டுரையை முடிக்கலாம். 1940-கள், மரபணுவியலின் முக்கியமானதொரு காலகட்டம். குரோமோஸோம்கள் அறியப்பட்டன. ஜீன்களை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதில் அவற்றின் முக்கியத்துவம் உணரப்படலாயிற்று.

  janaki.jpg

  அப்போது இங்கிலாந்தில் ஒரு இந்தியப் பெண் விஞ்ஞானி முக்கியமான பங்களிப்பு கொடுத்துக்கொண்டிருந்தார். ஜானகி அம்மாள் அவர் பெயர். மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரியில் தாவரவியல் பேராசிரியையாகப் பணியாற்றியவர். கோயம்புத்தூரில் 1930-களில் கரும்பு, மூங்கில் ஆகியவற்றின் மரபணு ஆராய்ச்சியில் அவரது பங்களிப்பு சிறப்பாக இருந்தது. 1945-ல் உலகப் புகழ்பெற்ற தாவரவியலாளர் சிறில் டார்லிங்கடனுடன் இணைந்து ஒரு அட்லஸை வெளியிட்டனர். சாதாரணமான அட்லஸ் அல்ல அது. பயிரிடப்படும் தாவரங்களின் குரோமோஸோம்களின் அட்லஸ் (The Chromosome Atlas of Cultivated Plants). இந்த உலகப் புகழ்பெற்ற இந்தியப் பெண் விஞ்ஞானி, பாரதம் விடுதலை பெற்ற பின்னர் இந்தியாவுக்கு வந்து தனது ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார்.

  அவரது ஈடுபாடு, பாரம்பரிய தாவரவியல் அறிவை மீட்டெடுப்பதிலும் சேகரம் செய்வதிலும் அமைந்திருந்தது. Ethno-botany என மேற்கத்திய உலகில் அறியப்படும் மக்கள் - குழுக்களின் தாவரவியல் அறிவு இந்தியாவில் பரந்து செழித்து உள்ளது. அதனை அறிய வேண்டியதும் பாதுகாக்க வேண்டியதும் நம் கடமை என்பதை அவர் வளர்ந்துவரும் இந்திய தாவரவியலாளர்களுக்குக் கூறினார். காணி சமுதாய மக்கள், வெண்கோஷ்டம் (Costus speciosus) மூலிகைச் செடியைப் பயன்படுத்தும் விதங்களை ஆராய்ச்சி செய்தார். இந்தியாவின் மக்கடள்குழு தாவரவியலை உருவாக்கியவர் என இவரே கருதப்படுகிறார். காலனிய காலகட்டத்தில் மையப்படுத்தப்பட்ட தாவரவியலை மீண்டும் பண்பாட்டு உறவுகளுடன் ஜனநாயகப்படுத்தும் ஒரு இயக்கமாகவே நாம் ethno-botany-ஐ பார்க்கலாம். ஈழவ அச்சுதனிலிருந்து லின்னயஸுக்கு சென்ற அறிவின் அடுத்த சுற்று மீள் உருவாக்கம்.

  ஜானகி அம்மாள் கேரளாவைச் சேர்ந்தவர். அவர் பிறந்தது, அச்சுதன் பிறந்த ஈழவ சமுதாயத்தில் ஒரு பிரிவு என பெரும்பாலோரால் கருதப்படும் தீயர் சமுதாயத்தில்.

                                    ***

   

  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  ->
  flipboard facebook twitter whatsapp