Enable Javscript for better performance
வெற்றிடத்தின் விஷக் காளான்கள்- Dinamani

சுடச்சுட

  


  ண்மையில், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழக வளாகத்தில், அம்பேத்கர் – ஈ.வெ.ரா. பெயரில் தொடங்கப்பட்ட ஓர் அமைப்பு ‘தடை’ செய்யப்பட்டதாக ஒரு தவறான செய்தி பரப்பப்பட்டு, அதன் அடிப்படையில் போராட்ட நாடகங்களும் இனிதே நடந்தேறின.

  திராவிட இனவாத அரசியலில் கௌரவப் பெயர்களுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. இன்று, அது தமிழ்நாட்டின் பொதுப்புத்தி வரை நீண்டுவிட்டது. எந்தத் தலைவரையும் நீங்கள் அவருடைய இயற்பெயரால் சொல்லலாகாது. சி.என்.அண்ணாத்துரை என்றோ ஈ.வெ.ராமசாமி என்றோ சொல்லமுடியாது. பேரறிஞர், பெரியார் என்று ஆரம்பித்து, இளைய தளபதி வரை இது ஒரு தீவிர வழிபாட்டு மனநிலை. இந்தக் கௌரவப் பெயர் அரசியலின் அடிப்படையில், சென்னை ஐஐடியில் உருவாக்கப்பட்டுள்ள அம்பேத்கர் – ஈ.வெ.ரா. குழுமத்தின் பெயரையும் நாம் பார்க்கவேண்டி உள்ளது.

  ஈ.வெ.ராமசாமி, ‘பெரியார்’ என்று அழைக்கப்படுகிறார். பாபா சாகேப் என்று இந்தியா முழுவதும் மொழி வேறுபாடு இன்றி மக்களால் அழைக்கப்படுபவரும், நவ்யான பௌத்த போதிசத்வராகவே மதிக்கப்படுகிறவருமான பாபா சாகேப் அம்பேத்கர் வெறும் அம்பேத்கர் என்றே அழைக்கப்படுகிறார். பிரிட்டிஷ் அரசாங்கத்தின்போது ஜமீன்தார்களாகவும் நிலப்பிரபுகளாகவும் இருந்த ஆண்டைகளின் திராவிட அரசியலில், எப்படி ஒரு தலித் தலைவர் நிலவுடமை சாதிகளின் முடிசூடா மன்னரும் இனவாத அரசியல்வாதியுமான ஈ.வெ.ராமசாமிக்கு இணையாக வைக்கப்பட முடியும்? திராவிட அரசியலின் ஆதிக்க சாதித் திமிரை பெயரிலேயே கொண்டு விளங்குகிறது, இந்த ஐஐடி சென்னை மாணவர் குழுமம்.

  ambedkar-periyar.jpg 

  இந்தியாவில் உலகமயமாக்கும் காலகட்டத்தில்தான் திடீரென்று பாபா சாகேப் அம்பேத்கர், அரசியல் கட்சிகள் பலவற்றால் கண்டுபிடிக்கப்பட்டு சொந்தம் கொண்டாட ஆரம்பிக்கப்பட்டார். அதற்கு முன்னால், கம்யூனிஸ்ட்களும் காங்கிரஸ்காரர்களும் திராவிட இயக்கத்தினரும் அவரை எதிர்த்திருக்கிறார்கள். ஆனால் என்னதான் இந்து மதத்தை பாபா சாகேப் கடுமையாக விமரிசித்திருந்தாலும், அவரை இந்துத்துவர்கள் பொதுவாகவும்  ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ரீதியாகவும் தொடர்ந்து ஆதரித்திருக்கிறது.

  உதாரணமாக, இரண்டாம் உலகப் போரின் வைஸ்ராய் ஆட்சிக் குழுவில் அவர் இடம் பெற வேண்டுமென வைஸ்ராய்க்கு தந்தி அனுப்பியவர் வீர் சாவர்க்கர். இந்து சிவில் சட்டம் வரைவு செய்யப்பட்டபோது, இந்து மகாசபையில் மட்டுமல்ல காங்கிரஸிலும் அதற்கு எதிர்ப்பு இருந்தது. ‘சமுதாயத்துக்கு நன்மை தரும் என்றால், தேர்தல் விளைவுகள் குறித்து கவலைப்படாமல் இந்து சிவில் சட்ட முன்வரைவு சட்டமாக்கப்பட வேண்டும்’ என்று சாவர்க்கர் கூறினார்.

  ஆனால், இந்த இந்துத்துவ ஆதரவுகளுக்கு அப்பாலும் பாபா சாகேப் அம்பேத்கரின் முக்கியத்துவம், இந்திய வரலாற்றியலில் முக்கியத்துவம் உடையது. பாரத ஞான மரபுக்கும் சமுதாய இயக்கத்துக்குமான உறவு முழுமையான தேக்கநிலையை அடைந்திருந்த ஒரு காலகட்டத்தில், பாபா சாகேப் உதயமானார். இந்துக்கள் கொண்டாடும் அவர்களின் ஞானமரபின் உச்சமான உபநிடதங்களின் சமூகப் பரிமாணம், சமூக ஜனநாயகத்தையே வலியுறுத்துகிறது என்பதை பாபா சாகேப் சுட்டிக்காட்டினார். எல்லோரும் ஆண்டவனின் பிள்ளைகள் என்கிற ஆபிரகாமிய கோட்பாடு, ஜனநாயகத்துக்கு உறுதியான அடிப்படையை அளிக்க இயலாது. பிரம்மத்துவமே அத்தகைய ஒரு அடிப்படையை அளிக்கவல்லது என்று கூறினார். ஆனால், அதை இந்துக்கள் சமூகத்தில் கடைப்பிடிக்காமல், சமுதாயத்தில் மிக மோசமான பிளவுகள் ஏற்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினார்.

  இந்தியாவின் தேசியக் கொடியாக காவிக்கொடியும், இந்தியாவின் தேசிய மொழியாக சமஸ்கிருதமும் இருக்க வேண்டும் என்று அவர் கருதினார். இந்தியாவில் இந்துக்கள் ஒற்றுமையாகவும் அச்சமில்லாமலும் எவருக்கும் அடிமையாகாமலும் இருக்க வேண்டும். அதற்கு ‘சங்கதான்’ (இந்து ஒற்றுமை) வேண்டும். அதற்கு மத நூல்களின் அடிப்படையில் இந்து மதம் அமையக்கூடாது. மாறாக சமத்துவம், விடுதலை, சகோதரத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்து மதம் புனரமைக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். மிக முக்கியமாக இதற்கான அடிப்படைகளை, இந்துக்கள் தங்கள் பண்பாட்டுக்கு வெளியே தேடவேண்டியதில்லை என்று அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். இந்த அடிப்படை மதிப்பீடுகள் உபநிடதங்களிலேயே உள்ளன என்று கூறினார். பின்னர் இதையே விரிவாக எழுதினார்.

  எங்கே எழுதினார் என்பது முக்கியமான விஷயம். இந்து மதத்தை கடுமையாக விமரிசித்து எழுதியாகச் சொல்லப்படும் ரிடில்ஸ் நூலில்தான் இதை அவர் சுட்டிக்காட்டினார். அகம் பிரம்மாஸ்மி, தத்வமஸி ஆகிய மகாவாக்கியங்களின் அடிப்படையில் சமுதாயத்தைக் கட்டமைக்க இந்து சமுதாயம் தவறிவிட்டது என்பதுதான் அவர் முன்வைத்த முக்கியமான கருத்து. ‘இந்து மதம் அழிய வேண்டும் என’ அண்ணல் அம்பேத்கர் கூறியதாக அட்டைத்தட்டி வைப்பவர்கள், வசதியாக மறந்துவிடும் விஷயமும் இதுவேதான்.

  அன்றைய காலகட்டத்தில், ஏறக்குறைய அனைவரும் ஆங்கிலேயர் முன்வைத்த ஆரிய இனவாத கோட்பாட்டை ஏற்றுக்கொண்டிருந்தபோது அதனை கேள்விக்குள்ளாக்கியவர் பாபா சாகேப் அம்பேத்கர். மேலும் சாதியம் - தீண்டாமை ஆகியவற்றுக்கும் இனவாத கோட்பாட்டு அடிப்படை இல்லை என்பதை அவர் மீண்டும் மீண்டும் கூறினார். பொருளாதார விஷயங்களிலும் அவர் வலதுசாரியாகவே இருந்தார்.

  சீன - சோவியத் கம்யூனிச ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக, அமெரிக்க சார்புடைய SEATO அமைப்பில் இந்தியா சேர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். சீனாவிடம் பஞ்சசீலம் போன்ற கோட்பாடுகளுடன் உறவு கொண்டாடுவதை அவர் விரும்பவில்லை. திபெத் பிரச்னையில் சீனாவின் ஆக்கிரமிப்புப்போக்கு அவருக்கு மனவருத்தத்தை அளித்தது. இந்து மகாசபையின் முக்கியத் தலைவர்களான வீர் சாவர்க்கர், மூஞ்சே, நாராயண் பாஸ்கர் கரே, சுவாமி சிரத்தானந்தர் ஆகியவர்களிடம் அவருக்குப் பெரும் மதிப்பு இருந்தது.

  காந்தி கொலையின்போது கண்டன அறிக்கை கொடுக்காத ஒரே தலைவர் பாபா சாகேப் அம்பேத்கர் மட்டுமே என்பதை தனஞ்செய் கீர் சுட்டிக்காட்டுகிறார். அத்துடன், அக்கொலையுடன் தொடர்புபடுத்தப்பட்டு நேரு அரசாங்கத்தால் மிகவும் இன்னல்களுக்கு ஆட்படுத்தப்பட்டு, தனிமையில் வாடிய நாராயண் பாஸ்கர் கரே அவர்களுக்குப் பக்கபலமாக நின்று, அவரை சந்தித்து ஆறுதல் அளித்தவர் பாபா சாகேப் அம்பேத்கர். அதைப்போலவே தான் சட்ட அமைச்சராக இருந்தபோதிலும், சாவர்க்கரின் வழக்குறைஞரை ரகசியமாகச் சந்தித்து, அவர் மீது போடப்பட்டிருக்கும் பொய்வழக்கின் தன்மையை எடுத்துக்கூறியவர் பாபா சாகேப் அம்பேத்கர்.

  ஒரு விஷயத்தை – ஒரே ஒரு விஷயத்தைப் பார்ப்போம்.

  சுவாமி விவேகானந்தர் குறித்து பாபா சாகேப் அம்பேத்கர் கூறுகிறார்: ‘கடந்த நூற்றாண்டுகளில் மிகச் சிறந்த இந்தியர் சுவாமி விவேகானந்தர்தான். காந்தி அல்ல’. அதேபோல் ‘மானுட சேவை என்றாலே நம் நினைவுக்கு வருவது ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன்தான்’ என்கிறார் பாபா சாகேப். ஆனால் ஈ.வெ.ராமசாமி, விவேகானந்தர் குறித்துக் கூறுவதென்ன? ‘அந்த ஆள் ஒரு கிறுக்கன் மாதிரி’. 

  Swami_Vivekananda_Jaipur.jpg 

  இந்த ஒரே ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டால்கூட, பாபா சாகேபுக்கும் ஈ.வெ.ராமசாமிக்குமான வேறுபாடு, மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு என்பதும், இருவரையும் ஒன்றாகக் காட்டுவதைப்போல அபத்த மோசடி வேறு எதுவும் கிடையாது என்பதும் விளங்கும்.   

  இத்தனை அணுக முடியாத அம்சங்கள் இருந்தும், எப்படி இந்தியா முழுவதும் ஈ.வெ.ராமசாமியையும் பாபா சாகேப் அம்பேத்கரையும் இணைத்து இந்து வெறுப்பர்களால் மோசடி செய்ய முடிகிறது? இதற்கான பொறுப்பை இந்துக்களே ஏற்க வேண்டும். பாபா சாகேப் அம்பேத்கருக்கும் விவேகானந்தருக்குமான கருத்தியல் தொடர்புகள், மிக மிக உயிர்த்துவமானவை. ஆரோக்கியமான சமூக பரிமாண வளர்ச்சிக்கு, சமுதாய நல்லுறவுக்கு தேவையானவை. ஆனால், எங்கே விவேகானந்தர் - அம்பேத்கர் குழுமங்கள்? சரி விடுங்கள். தமிழ்நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள்.

  சுவாமி சகஜானந்தர், தலித் சமுதாயத்தின் ஈடேற்றத்துக்காகப் போராடியவர். எனவே, ஒட்டுமொத்த சமுதாயத்தின் சாதிய மனநோயை மாற்றப் போராடிய பெரும் மகான். அவர் பெயரில் இயங்கும் இந்து மாணவர் அமைப்புகள் எத்தனை? செயல்முறை வேதாந்தம் என்றார் சுவாமி விவேகானந்தர். ஆனால், இன்றைக்கு நாம் பார்க்கும் வேதாந்தம் எல்லாம் ஒன்று ‘கார்ப்பரேட் வேதாந்தா’வாக உள்ளது. அல்லது ஆச்சாரவாத வேதாந்தமாக உள்ளது. ‘களிமண் பானையில் அடைக்கப்பட்ட வெளி’ என்பதைத் தாண்டி, இந்த வேதாந்திகள் பேசுவதாகத் தெரியவில்லை. அல்லது ஒட்டுமொத்த வேதாந்தத்தை ஏதோ ‘பர்சனாலிட்டி டெவலப்மெண்ட்’ package என்று மாற்றியிருக்கிறார்கள்.

   

  sahajananda.jpg 

  ஒரு நிகழ்ச்சி -

  சுப்பா நாயுடு என்கிற பெரிய பண்ணையாரின் வீட்டுக்கு வந்திருக்கிறார் முருங்கப்பட்டு நீலமேக சுவாமி. அந்தப் பண்ணையார் வீட்டில் வேலை செய்யும் ஒரு சிறுவனைப் பார்க்கிறார். நெற்றியில் பளிச்சென துலங்கும் திருமண்.  தீர்க்கமான கண்கள். ‘யாரப்பா நீ’ என கேட்கிறார் சுப்பா நாயுடு. அந்தச் சிறுவன் பளிச்சென பதில் சொல்கிறான் – ‘நானா? நான் பரப்பிரம்மம்’.

  முனுசாமி என்கிற இயற்கை பெயர் கொண்ட அந்தச் சிறுவன்தான், பின்னாட்களில் சுவாமி சகஜானந்தர் என அறியப்பட்ட சமூக - ஆன்மிகத் தலைவர். இதே நிகழ்ச்சி, வேறு சில சாதிகளில் பிறந்த ஒருவர் வாழ்க்கையில் நடந்திருந்தால், இந்து சமுதாயத்தின் பொதுப்புத்தியில் எப்படி கொண்டாடியிருக்கப்படும் என நினைத்துப் பாருங்கள்.

  சட்டசபை உறுப்பினராகவும் இருந்தவர் சுவாமி சகஜானந்தர். இன்றைக்கு இந்துத்துவம் என்று முத்திரை குத்தப்படக்கூடிய விஷயங்களை, சுவாமி சகஜானந்தர் அன்றைக்கே தெளிவாகச் சொல்லியிருக்கிறார்:

  ஹரிஜனங்கள், கிறிஸ்துவ போர்டிங்குக்குப் போய்ப் படித்தால் கிறிஸ்தவர்களாகிவிடுகிறார்கள். மிஷனரி போர்டிங் ஹைஸ்கூல்களில் ஹரிஜனங்கள் போய்ப் படித்துவிட்டு ஹிந்துவாக திரும்பிவர மார்க்கமில்லை. போர்டிங் கிராண்டு (தொகை), மிஷினரிகள் சீமையிலிருந்து கொண்டுவந்து போடுவதில்லை. போர்டிங் செலவில் மூன்றில் இரண்டு பங்கை சர்க்கார் கொடுக்கிறார்கள். அப்படியிருந்தும் அவர்கள் போர்டிங் ஸ்கூல்களில் ஹிந்துக்களுக்கு ஹரிஜனங்களுக்கு சாப்பாடு போடுவதில்லை.

  இதை அடிகளார் சொல்வதற்குப் பின்னால் ஒரு சுய சோக அனுபவமும் உண்டு. மாணவனாக இருந்தபோது மிகச்சிறந்த புத்திசாலிப் பையனாக இருந்தவர் அடிகளார். அவர் திண்டிவனம் போர்டிங் மிஷன் ஸ்கூலில் சேர்ந்து படித்தார். அப்போது ஒரு கட்டத்தில், அவரது புத்திசாலித்தனத்தைக் கண்டு அவரை கிறிஸ்தவ மதத்தில் சேர நிர்ப்பந்தித்தார்கள் மிஷினரிகள். அவர் மறுக்கவும், போர்டிங்கில் சாப்பாட்டுக்கும் இதுவரை சாப்பிடதற்கும் பணம் கொடுக்கச் சொல்லி நிர்ப்பந்தித்தார்கள் மிஷினரிகள். மதம் மாற மறுத்ததால், இறுதியில் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு பண்ணையில் சேர வேண்டிய நிலை ஏற்பட்டது அடிகளாருக்கு.

  சகஜானந்தர் பெயரில் எத்தனை மாணவர் குழுமங்களை, சேவை அமைப்புகளை, பஜனை மண்டலிகளை இந்துக்கள் நடத்துகிறார்கள்?

  அத்வைதம் என்பது தீவிர சமுதாயத் தாக்கம் கொண்ட ஒரு அக்கினிக் குஞ்சு என்பதைக் கூறியவர் டாக்டர் அம்பேத்கர். அதை தமிழ்நாட்டில் வாழ்ந்து காட்டியவர் சுவாமி சகஜானந்தர். ஆனால் இந்துக்களோ, தங்களுக்கே உரிய வழியில் சடங்காச்சாரங்களுக்குத் துணை வராத எவரையும் முடிந்தவரை தங்கள் வரலாற்றின் அடிக்குறிப்புகளாக மட்டுமே மாற்றிக்கொண்டு, ஆச்சாரவாதிகளை தெய்வபிம்பங்களாக அற்புதக் கதைகள் கொண்ட அத்தியாயங்களாக மாற்றுவதில் சமர்த்தர்களாக இருக்கிறார்கள். இதனால், உலகின் மிக அரியதாக எஞ்சி நிமிர்ந்து நிற்கும் ஒரே பாகனீய பண்பாட்டை, தற்கொலைப் பாதையில் இட்டுச்செல்கிறோம் என்பதைக்கூட அறியாதவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.

  இப்படி, தொடர்ந்து இந்துக்கள் உருவாக்கிய வெற்றிடத்தில்தான், திராவிட இனவாத விஷக் காளான்கள் உருவாகி நிற்கின்றன. என்றைக்காவது –இந்துக்கள் இந்த நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும்போதே - போதிசத்வ அம்பேத்கர் – சுவாமி விவேகானந்தர் மாணவர் குழுமத்தையோ அல்லது சுவாமி சகஜானந்தர் மார்கழி பஜனை குழுவையோ சாதிகள் இல்லாத இந்து சமுதாயம் நடத்துவதை பார்க்க முடியுமென ஒரு சிறு கனவு இருக்கிறது. கனவாகவே…

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai