Enable Javscript for better performance
சீனாவுக்குக் கிடைத்த மருத்துவ நோபெல் பரிசு சொல்வது என்ன?- Dinamani

சுடச்சுட

  

  சீனாவுக்குக் கிடைத்த மருத்துவ நோபெல் பரிசு சொல்வது என்ன?

  By அரவிந்தன் நீலகண்டன்  |   Published on : 11th October 2015 08:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இந்த ஆண்டு சீனாவைச் சார்ந்த பெண்மணிக்கு மருத்துவத்தில் நோபெல் பரிசு கிடைத்திருக்கிறது. விஷயம் என்னவென்றால், அவர் மருத்துவர் அல்ல. ஏன், ஆராய்ச்சி முனைவர் பட்டம்கூட பெற்றவர் அல்ல. யுயு து (Youyou Tu), பாரம்பரிய சீன மருத்துவம் பயின்றவர். அவரது சாதனையெனக் கருதப்படுவது மலேரியாவை எதிர்க்கும் அர்திமீஸினின் (Artemisinin) என்கிற மருந்துப் பொருளை கண்டடைந்ததுதான்.

  1.jpg 

  இது நிகழ்ந்த சூழ்நிலை சுவாரசியமானது.

  வியட்நாம் மீது அமெரிக்க ஆக்கிரமிப்பு இருந்த காலகட்டம். தொடக்கத்தில், வியட்நாமுக்கு சீனா ஆதரவாக இருந்தது  (பின்னாட்களில் நிக்ஸனின் சீனப் பயணம் நடந்தபோது, ஒரு இரண்டும் கெட்டான் நிலைக்கு மாவோ போனார் என்பது வேறு விஷயம்). ஆனால், ஸ்டாலினுக்கு வியட்நாம் மீது அத்தனை நம்பிக்கை இல்லை. 1950-ல் சோவியத் யூனியன், அரை மனத்துடன் வியட்நாமை ‘கம்யூனிச நாடாக’ ஏற்றுக்கொண்டது. பிப்ரவரி 1950-ல், வியட்நாமின் கம்யூனிஸ்ட் தலைவரான ஹோ சூமின், மாஸ்கோ சென்றார். அவரை வேண்டா வெறுப்பாக வரவேற்றார் ஸ்டாலின்.

  ஹோ சூமின், ஸ்டாலினிடம் ஒரு உதவியை கேட்டார். மலேரியா எங்கள் வீரர்களைக் கொல்கிறது. எதிரிகளிடம் இறக்கும் வீரர்களைவிட மலேரியாவில் இறக்கும் வீரர்கள் அதிகம். அவர்களைக் காப்பாற்ற வேண்டும். மலேரியாவுக்கு எதிரான மருந்தான க்யுனைன் (Quinine) மருந்து வேண்டும். அப்போது சோவியத் யூனியனே அந்த மருந்தை அதிகமாக உற்பத்தி செய்துகொண்டிருந்தது. ஸ்டாலின் சரி என்று சொன்னார். ஆனால், கொடுத்தது என்னவோ மிகவும் அல்பமாக அரை டன் மருந்து(1).

  ஹோ சூமின், மாவோவிடமும் இதே உதவியை கேட்டார். வியட்நாம், சீனாவுக்கு அருகில் உள்ள நாடு. நாளைக்கு சர்வதேசப் பிரச்னைகள்  ஏற்படும்போது, தங்கள் வீரர்களும் வியட்நாமின் கொசுக்கள் நிறைந்த சூழ்நிலையில் போரிடவேண்டி வரும். அவர்களையும் மலேரியா தாக்கும். ஆக, உதவிக்கு உதவி ராஜதந்திரத்துக்கு ராஜதந்திரம். சீனாவின் மருத்துவ ஆராய்ச்சியாளர்களை மலேரியாவுக்கு எதிராக மருந்து கண்டுபிடிக்கும் பணியில் போர்க்கால அவசரத்துடன் ஈடுபடுத்தினார் மாவோ. 

  இங்கு ஒரு முக்கியமான அம்சத்தைப் பார்க்க வேண்டும். தொடர்ந்து, சீனாவில் நிலவிய சுய தாழ்வுமனப்பான்மை சீனப் பாரம்பரிய மருத்துவத்தை ‘நிலவுடமை சமுதாய மூடநம்பிக்கை’என்றே கருத வைத்திருந்தது. ஆனால் தேவை, அத்யாவசிய தேவை வேறு வழியே இல்லாமல் கம்யூனிஸ்ட்களை பாரம்பரிய மருத்துவத்தை நம்பும் நிலைக்குக் கொண்டுசென்றிருந்தது. 1958-ல், அதிகாரபூர்வமாக சீன அரசு மேற்கத்திய மருத்துவமும் சீனப் பாரம்பரிய மருத்துவமும் இணையான மதிப்பு கொண்டவை என அறிவித்தது. மாவோ சீனப் பாரம்பரிய மருத்துவத்தை உயர்த்திப் பிடித்ததற்கு ஒரு காரணம் உண்டு. உயிர் காக்கும் மருத்துவத்துக்கு சோவியத் யூனியனை சார்ந்திருக்க சீனா விரும்பவில்லை(2). என்னதான் சித்தாந்தம் ஒன்றென்றாலும் நோயும் மருந்தும் அரசியல் கருவிகளல்லவா?

  அப்படி ஈடுபடுத்தப்பட்ட மருத்துவ அணியில் இருந்த ஒரு பெண் ஆராய்ச்சியாளர்தான் யுயுது (Youyou Tu). இந்த அணியினர் சாதாரணமாக இதைக் கண்டுபிடித்துவிடவில்லை. கடுமையாகத் தேடினார்கள். யுயு து  இதை குறித்து 2011-ல் 'நேச்சர்’ என்கிற புகழ்பெற்ற இதழில் எழுதினார் -

  2000 சீன பாரம்பரிய மூலிகை சார்ந்த தயாரிப்புகளை நாங்கள் சோதித்தோம். இதில் 640 தயாரிப்புகளில் மலேரியாவுக்கு எதிரான குணாதிசயங்கள் இருக்கலாம் எனக் கருதினோம். 200 சீன மூலிகைகளிலிருந்து 380 வகை கஷாயங்களைப் பரிசோதனைச்சாலை எலிகளுக்குக் கொடுத்தோம். குறிப்பிடத்தக்க வகையில் வெற்றி கிடைக்கவில்லை(3).

  இறுதியாக, க்யிங்ஹோ என சீன மொழியில் அழைக்கப்படுகிற ஆர்ட்டிமிஸியா அனுவா என்கிற பெயருடைய மூலிகையில் அவர்கள் தேடல் நின்றது. ஆனால், அதைக் கஷாயமாகச் சுடவைத்து அதில் தேடியபோது அவர்களால் எதையும் கண்டறிய முடியவில்லை.

  இதன் பயன்பாடு குறித்து 1800 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட சீனப் பாரம்பரிய மருத்துவத்தின் அவசர கால சிகிச்சை கையேடு ஒன்று (Ge Hong's A Handbook of Prescriptions for Emergencies), இந்த ஆராய்ச்சிக் குழுவின் கவனத்தை ஈர்த்தது. மூலிகையை வெறும் நீரில் போட்டு சாறெடுக்கச் சொல்லியிருந்தார்கள். சுடவைக்கச் சொல்லவில்லை. யுயு து சொல்கிறார் -

  இந்த வாக்கியத்தைப் படித்தபோது, பொதுவாக நாம் செய்யும் சூடாக்கும் முறை நோய் எதிர்ப்புக் காரணிகளை அழித்துவிடுகிறது என நினைக்க வைத்தது. குறைந்த வெப்பநிலையில் இதனைப் பயன்படுத்தியபோது எங்களுக்கு நல்ல விளைவுகள் கிடைத்தன.

  ஆனால், செஞ்சீனத்தில் அப்போது மாவோ நடத்திக்கொண்டிருந்த ‘பண்பாட்டுப் புரட்சி’யின் விளைவாக, களப் பரிசோதனைகளையெல்லாம் செய்ய வாய்ப்பில்லாமல் இருந்தது. இதனால்ர இந்த ஆராய்ச்சிக் குழு தங்கள் மீதே பாரம்பரிய மூலிகையிலிருந்து எடுக்கப்பட்ட மருந்தைப் பரிசோதனை செய்து பார்த்தனர். வெற்றி. 1972-ல், CHOஎன்கிற வேதியியல் பார்முலா கொண்ட அர்திமீஸினின் (Artemisinin) மலேரியாவுக்கு எதிரான மருந்தாகக் கண்டடையப்பட்டது. ஆனால் அன்று, கம்யூனிஸ சீனாவில் நிலவிய சூழல் காரணமாக, அது சீன மொழி ஆராய்ச்சி சஞ்சிகைகளில் மட்டுமே வெளிவர முடிந்தது. 1977-ல் இதன் மூலக்கூறு வடிவம் கண்டறியப்பட்டது. 1979-ல் அதிர்ஷ்டவசமாக, சீனாவின் தேசிய அறிவியல் தொழில்நுட்ப கமிட்டி, இந்தக் கண்டுபிடிப்புக்கு ஒரு சான்றிதழை வழங்கியது. ஆனால் 1981-ல்தான் இந்தக் கண்டுபிடிப்பு வெளி உலகத்தை எட்டியது. உலக வங்கி, ஐநா வளர்ச்சி குழு (UNDP), உலக சுகாதார அமைப்பு ஆகியவை, மலேரியாவுக்கான மருந்துகள் குறித்த ஆய்வரங்கம் ஒன்றை பீஜிங்கில் நடத்தியதைத் தொடர்ந்துதான் இந்தக் கண்டுபிடிப்பு வெளி உலகை அடைந்தது(4).

  இன்று மருத்துவத்துக்கான நோபெல் பரிசு, பாரம்பரிய மருத்துவத்தை ஆராய்ச்சி செய்யும் சீனப் பெண்மணிக்குக் கிடைத்திருக்கிறது. இதில் ஒரு விஷயத்தைக் கவனிக்கலாம். என்னதான் சர்வதேசிய மானுடம், கம்யூனிசம் எல்லாம் பேசினாலும், சீனாவின் தேசிய சுயசார்புக்கான தேவைதான் இந்த வெற்றிக்குக் காரணம். இன்று சீனா தன்னுடைய கலாசார மேம்பாட்டைக் காட்ட, இந்த நோபெல் பரிசு விஷயத்தைப் பயன்படுத்துகிறது. சீன அதிபர், இந்த வெற்றி சீனத்தின் தேசியச் சக்தியையும் உலக அரங்கில் சீனா தங்கு தடையின்றி மேலெழும்புவதையும் காட்டுவதாகக் கூறியிருக்கிறார்(5).

  ஆனால், இந்தியாவில் நிலை என்ன என்பதைப் பார்ப்போம்.

  ஒவ்வொரு முறையும், இந்தியப் பாரம்பரிய மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சி, ஒரு புதிய முயற்சியைத் தொடங்கும்போது உடனடியாக முத்திரை குத்தப்படுகிறது. இதன் விளைவாக, ஒரு பெரிய அறிவுக் களஞ்சியம் முன்னெடுக்கப்படாமல் அழிவை நோக்கிக் கொண்டுசெல்லப்படுகிறது.

  ஒரு அண்மை எடுத்துக்காட்டைக் காணலாம். 'ஆயுர்ஜினோமிக்ஸ்’ என்கிற ஒரு புதிய பார்வையை இந்திய ஆராய்ச்சிக் குழு ஒன்று முன்வைக்கிறது. அதென்ன ஆயுர்-ஜினோமிக்ஸ்?

  2.jpg 

  ஒரு மருந்தை மக்களுக்குக் கொடுக்கும்போது, எல்லோருக்கும் அது ஒரே விளைவை ஏற்படுத்துவதில்லை. வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். இதற்குப் பின்னால் உள்ள மரபணுக் காரணிகளை ஆராயும் ஒரு அறிவியல் இருக்கிறது. அதனை பார்மகோஜினோமிக்ஸ் (Pharmacogenomics) என்கிறார்கள். இன்று, மானுட மரபணுத் தொகுப்பின் தனித்தன்மைகளை நாம் அறிந்துகொள்ள, ஒவ்வொரு மனிதனின் தனித்தன்மைக்கும் ஏற்ப அவருக்கான மருந்தை செம்மைப்படுத்தி அளிக்க முடியும். இதற்கு இணையான ஒரு கோட்பாடு ஆயுர்வேதத்தில் உள்ளது. ஒவ்வொரு மனிதனுக்குமான தனி இயற்கை – பிரகிருதி - அடிப்படையில், தனிமனித மருந்து அளிப்பது ஆயுர்வேத மருத்துவத்தின் சிறப்பு எனச் சொல்லலாம். ஆயுர்ஜினோமிக்ஸ் தனி-மனிதனின் மரபணு தொகுப்புக்கும் (ஜீனோமுக்கும்) ஆயுர்வேத பிரக்ருதிக்குமான தொடர்பை ஆராய்ச்சி செய்கிறது. முடிந்த முடிவாக, இப்படித்தான் தொடர்பிருக்கிறது என்று சொல்லிவிடவில்லை. ஆராய்ச்சி செய்கிறது. தொடர்பிருக்கலாமா எனப் பார்க்கிறது… அதை எப்படிப் பயன்படுத்த முடியும் என ஆராய்கிறது(6).

  trisutra.png 

  ஆராய்ச்சிகள் செய்யப்படுகின்றன. ஊக்கமளிக்கும் சில கண்டுபிடிப்புகளும் நிகழ்கின்றன. முடக்குவாதம் கொண்ட 350 நோயாளிகளை ஆயுர்வேத பிரகிருதி அடிப்படையிலான பகுப்பும், அவர்களின் மரபணுத் தொகுப்பும், அவர்களின் நோய் சார்ந்த + நோய் எதிர்ப்பு அம்சங்களையும் ஆராய்ச்சி செய்தனர் டெல்லி பல்கலைக் கழகத்தின் மரபணுவியல் துறையினர். அத்துறைத் தலைவியான B.K.தெல்மா, இந்த ஆராய்ச்சி முடிவுகளை திருவனந்தபுரத்தில் பிப்ரவரி 2014-ல் நடந்த கருத்தரங்கு ஒன்றில் தெரிவித்தார்.

  3. தெல்மா.jpg 

  முடக்குவாதம், பல மரபணுக்களின் பின்னலான செயல்பாடுகளால் வரும் ஒரு நோய். அது ஒவ்வொரு பிரகிருதி உடையவருக்கும் வெவ்வேறுவிதமாகச் செயல்படுவதை தெல்மா குழுவினர் கண்டறிந்தனர் - ‘வாத பிரகிருதி கொண்டவர்களில் முடக்குவாதம் உருவாக்குவதில் வீக்கத்தோடு தொடர்புடைய மரபணுக்களையும், பித்த பிரகிருதி கொண்டவர்களில் ‘oxidative stress’ தொடர்புடைய மரபணுக்களின் செயல்பாடு வெளிப்படுவதையும்’ அவர்கள் கண்டனர். எனில், இவை ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறுவிதமான சிகிச்சைகள் தேவைப்படும்(7).

  டிசம்பர் 2014-ல், சயின்டிஃபிக் அமெரிக்கன் இதழ் வெளியிட்ட கட்டுரை, மருத்துவத்தின் வருங்காலம் என்பது தனித்துவ தன்மை கொண்டதாக இருக்கும் எனக் கூறுகிறது. பிரகிருதி + ஜீனோம் அடிப்படையிலான ஆராய்ச்சி, இதற்கான மிக அருமையான ஒரு சட்டகத்தை அளிக்க முடியும். தனித்துவம் கொண்ட மருத்துவ முறைக்கான ஒரு அடிப்படை ஆயுர்ஜீனோமிக்ஸில் சாத்தியமாக வழி இருக்கிறது.

  ஆனால், இந்திய இடதுசாரி பத்திரிகையான ‘காரவான்’, இதே ஆயுர்ஜீனோமிக்ஸ் குறித்து எப்படி ‘ரிப்போர்ட்’ செய்கிறது எனக் கவனியுங்கள். ‘அப்படி அது என்னதான் ஆயுர்ஜினோமிக்ஸ்’ (’What on earth is “ayurgenomics” anyway?’) எனக் கட்டுரை தலைப்பே ஒரு எதிர்மறை தொனியுடன் பேசுகிறது. தொடக்கமே, பாஜகவின் 2014 தேர்தல் அறிக்கையில் உள்ள ‘முரண்பெயரான’ (oxymoronic timbre) ஆயுர்ஜீனோமிக்ஸ், அப்பெயரை கூகிளில் தேடவைத்ததாக ஆரம்பிக்கிறது. ஆனால், தேடலில் எதுவும் கிடைக்கவில்லையாம். இறுதியாக, கட்டுரையாளர் ‘மிதாலி முகர்ஜி’ எனும் ஆராய்ச்சியாளரை வந்தடைகிறார். ஆயுர்ஜீனோமிக்ஸ் எனும் பதத்தை உருவாக்கிய சிஎஸ்ஐஆர் (CSIR, Council for Scientific & Industrial Research) அமைப்பினைச் சேர்ந்தவர் இவர். இப்பதத்துக்கு, எவ்வித அரசியல் தாக்கமும் கிடையாது எனக் கேட்டுக்கொள்கிறார் (‘pleaded innocence of its political implications’) எனச் சொல்கிறது கட்டுரை. ஏறக்குறைய குற்றவாளியை விசாரிக்கும் தொனியில் – ஒரு மோசடியை மோப்பம் பிடித்துவிட்ட மொழியில் - கட்டுரை முழுக்க ஓடுகிறது.

  4. மிதாலி முகர்ஜி.jpg 

  இந்தக் குழுவினரின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் புகழ்பெற்ற சஞ்சிகைகளில், சர்வதேச சக அறிவியலாளர்களால் கடும் தரத் தேர்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு வெளியிடப்படும் ஆராய்ச்சி இதழ்களில் வெளியிடப்பட்டுள்ளன. அதை ஒற்றை வரியில் கூறிச்செல்லும் காரவான் பத்திரிகையின் &அறிவியல்’ செய்தியாளர் கூறுகிறார் - “இன்டர்நெட்டில் ஆயுர்ஜீனோமிக்ஸ் எனத் தேடினால், முகர்ஜி எழுதிய கட்டுரைகளும், அவருக்கு ஆதரவான ஆயுர்வேத வைத்தியர்கள் எழுதியவையுமே கிடைக்கின்றன. இல்லையென்றால், அவருடன் உள்ள ஆராய்ச்சியாளர்கள் எழுதியவையே கிடைக்கின்றன”. இறுதியாக கட்டுரை கூறுகிறது - “தன் நிலைப்பாட்டை ஆதரிக்க அவர் இந்து மீட்புவாதிகளை எதிரொலிக்கும் தொனியில், சுஷ்ருதரை குறிப்பிடுகிறார். ஆயுர்வேதப் பிதாமகர்களுக்கு நுண்ணுயிரிகள், ஜீன்கள், புரதங்கள் குறித்த அறிவு இருந்திருக்கலாம் எனக் கூறும்விதமாக அவர் பேசுகிறார்”. வார்த்தை விளையாட்டுகளைக் கவனிக்க வேண்டும். ‘அவர் கூறுகிறார்’ (said that) அல்ல, ‘தோன்றும்விதமாகக் கூறுகிறார்’ (suggested that)(8).

  இது, அறிவியலைப் பிரபலப்படுத்தும் கட்டுரையாக வெளியிடப்படுகிறது. ஒரு இந்திய இதழால், இந்திய அறிவியலாளர்கள், இந்தியப் பாரம்பரிய அறிவியலிலிருந்து பெறும் முயற்சிக்குச் செய்யப்படும் வெகுமதி – இந்த வார்த்தை விளையாட்டுகளும், பொறுக்கியெடுத்த எதிர்மறை நிலைப்பாடுகளும் நிரம்பிய கட்டுரை!

  இந்தியாவின் இடதுசாரி ஆக்கிரமிப்பு நிரம்பி வழியும் ‘அறிவியல்’ செய்தியாளர்களிடம் இருந்து இந்திய ஆராய்ச்சியாளர்களுக்குக் கிடைக்கும் ஊக்குவிப்பு இதுதான். குறிப்பாக, பாரம்பரிய அறிவியலுக்குக் கிடைக்கும் ஊக்குவிப்பு, எவ்வளவு எதிர்மறையாக இருக்கும் என்பதற்கான ஒரு நல்ல எடுத்துக்காட்டுத்தான், ‘காரவான்’ பத்திரிகை. காரவான் பத்திரிகை, ஏப்ரல் 2014-ல் இந்தச் செய்தியை வெளியிடுகிறது. ஆனால் பிப்ரவரி 2014ல், முனைவர் தெல்மா, திருவனந்தபுரத்தில் ஆயுர்ஜினோமிக்ஸ் குறித்து கருத்தரங்கில் பேசியிருக்கிறார். மார்ச் 2014-ல், புகழ்பெற்ற நேச்சர் இதழின் இந்தியப் பதிப்பில் இந்த ஆயுர்ஜீனோமிக்ஸ் குறித்த செய்தி கட்டுரை வெளியாகியுள்ளது. ஆன்லைனில் இந்தக் கட்டுரை 25 மார்ச் 2014-ல் வெளியாகியுள்ளது. தெல்மாவும் இடம்பெற்ற ஆராய்ச்சிச் கட்டுரை PLOS (Public Library of Science)-ஆல் ‘peer reviewed’ கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் முகர்ஜியின் பெயரே இல்லை. இது வெளியிடப்பட்டது செப்டம்பர் 2012-ல்(9).

  சிறிது யோசித்துப் பார்த்தால், எவ்வளவு பாராட்டப்பட வேண்டிய ஒரு நிகழ்வாக இந்த ஆயுர்ஜீனோமிக்ஸ் இருக்கிறது எனத் தெரியும். தெல்மா, மிதாலி முகர்ஜி ஆகிய பெண் ஆராய்ச்சியாளர்கள், மேற்கு சாராத ஒரு பாரம்பரிய சட்டகத்தை முன்வைக்கிறார்கள். இது முழுமையாகத் தோற்றாலும்கூட, முயன்று பார்த்த முன்னோடிகள் என அவர்கள் குறித்து நாம் பெருமைப்பட்டாக வேண்டும். ஆனால் அவர்கள் முக்கியமான முன்னகர்வுகளை இங்கு உருவாக்குகிறார்கள். நாளைக்கு இல்லாவிட்டால், இன்னும் ஒரு பத்தாண்டுகளில் இவர்களின் கண்டடைவுகள், பரந்துபட்ட மருத்துவப் புரட்சியை ஏற்படுத்தக்கூடும். இடதுசாரிகள் ஆக்கிரமித்து நிற்கும் நம் ஊடகங்களிலோ, இவர்களுக்குக் கிடைப்பதெல்லாம் மறுப்பு, சந்தேகம், இயன்ற வரை எதிர்மறை சித்தரிப்பு. செஞ்சீனத்தில், யுயு து தம் கண்டுபிடிப்புகளை வெளியுலகுக்குக் கொண்டுசெல்ல காத்திருந்த காலகட்டத்தைவிட, இடதுசாரி ஆக்கிரமிப்பு நிறைந்த இந்திய உலகில், இந்தியப் பாரம்பரியம் சார்ந்த அறிவியல் எல்லாவித எதிர்மறை சித்தரிப்புகளையும் தாண்டித்தான் தன்னை உலகுக்குக் கொண்டுசெல்ல வேண்டிய நிலையில் இருக்கிறது.

  எனவேதான், இந்தியப் பாரம்பரியத்தை முன்னெடுக்கும் நம் அறிவியலாளர்களை, நாம் அவர்கள் வெற்றியிலும் ஏன் தோல்வியிலும்கூட மனமாரக் கொண்டாடக் கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம்.  

  உலகின் நன்மைக்காக.

  சான்றாதாரங்கள்

  1. Dieter Heinzig, The Soviet Union and Communist China 1945-1950: The Arduous Road to the Alliance, Routledge, 2015, p.304

  2. Chunjuan Nancy Wei, Barefoot Doctors, The Legacy of Chairman Mao's Healthcare, in 'Mr. Science and Chairman Mao's Cultural Revolution: Science and Technology in Modern China' (Ed. Chunjuan Nancy Wei, Darryl E. Brock), Lexington Books, 2012 p.262

  3. Youyou Tu, The discovery of artemisinin (qinghaosu) and gifts from Chinese medicine,Nature Medicine 17, 1217–1220 (2011)

  4. ibid.

  5. Gwynn Guilford, The Chinese government is cranking up the nationalism after its Nobel win, url: http://qz.com/518337/the-chinese-government-is-cranking-up-the-nationalism-after-its-nobel-win/

  6. Michael Heinrich, Anna K. Jäger, Ethnopharmacology, John Wiley & Sons, 2015, p.286

  7. T.V.Padma, 'Ayurgenomics' unravel new rheumatoid arthritis genes, Nature India, Published online 25 March 2014

  8. Rakesh Kalshian, What on earth is “ayurgenomics” anyway?, Caravan, April 12 2014

  9. Ramesh C. Juyal etal, Potential of Ayurgenomics Approach in Complex Trait Research: Leads from a Pilot Study on Rheumatoid Arthritis, PLOS, September 26, 2012

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai