Enable Javscript for better performance
கலையாளும் அறிவியல் கல்வி- Dinamani

சுடச்சுட

  

  சர் கென்னத் ராபின்ஸன், பிரிட்டிஷ் நாடகக் கலைஞர். சிறுவயதில் போலியோவால் பாதிக்கப்பட்டு, மாற்றுத் திறனாளிகளுக்கான கல்விச் சாலைகளில் பயின்றவர். அவர் பிரிட்டனின் சிறந்த கல்வியாளர்களில் ஒருவரும்கூட. புகழ்பெற்ற டெட் (Ted) உரை ஒன்றில், மேற்கத்திய கல்வி உலகில் அவர்கள் எதிர்கொள்ளும் ஒரு முக்கியப் பிரச்னை குறித்து கென் ராபின்ஸன் பேசுகிறார். மேற்கத்திய கல்வி நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்னையைத்தான் அவர் பேசுகிறார் என்றபோதிலும், அவர் முன்வைக்கும் பிரச்னை இன்று உலகில் அனைத்து கல்வி அமைப்புகளும் எதிர்கொள்வதுதான். அவரது பேச்சின் சாராம்சம் இதுதான்:

  நாம் கல்வியை நேர்கோட்டுத்தன்மையும் ஒற்றைத்தரத்தன்மையும் கொண்டதாக உருவகிக்கிறோம். தொழிற்சாலைகளைப்போல நம் கல்வி முறை உள்ளது. ஆனால், நமக்குத் தேவை விவசாயத்தன்மையுடன் செயல்படும் கல்வி முறை. உயிர்த்தன்மை கொண்ட கல்வி முறை. ஒவ்வொரு குழந்தையின் தன்னியல்பையும் தன்னார்வத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு செயல்படும் கல்வி அமைப்புகள். தொழில்மயமாக்கப்பட்ட நம் சமுதாயம் இயற்கை வளங்களைச் சீரழிப்பதைபோல, நம் கல்வி முறை நம் அக வளத்தை சீரழிக்கின்றது.

  நம் கல்வியின் மிக அடிப்படையான ஆதாரமான பிரச்னை இது. துவக்கக் கல்வியிலிருந்தே, தொழிற்சாலையின் தரக்கட்டுப்பாட்டு பணியைத்தான் நம் கல்வி அமைப்பு செய்கிறது - ஒரேபோல அனைவரையும் மாற்றுவது. ஒற்றைக்கோட்டு இயந்திரக் கல்வி முறை, அனைவருக்கும் ஒரேவிதமான தரத்தேர்வை முன்வைக்கிறது. ஒரேவிதமான வாழ்க்கை இலக்குகளை முன்வைக்கிறது. ஒரேவிதமான வாழ்க்கை வெற்றிகளை முன்வைக்கிறது.

   

   

   

  இதற்கான காரணமும் தீர்வும் என்ன என்பதை ஆழ்ந்து நோக்க வேண்டிய தேவையில் இருக்கிறோம்.

  குழந்தைக்குள் மூன்று குழந்தைகள்

  இந்திய மரபில், நம் பிரக்ஞை (Consciousness) நான்கு நிலைகளைக் கொண்டதாகக் கருதப்படுகிறது. ஒன்று, விஸ்வநரன் – அதாவது பொது மனிதன். இந்நிலையில் கிடைக்கும் அறிவு, அனைவருக்கும் ஒன்றாகவே இருக்கும். மனிதருக்கு மனிதர் மாறுபடுவதில்லை. உதாரணமாக, வட்டத்தை அதன் விட்டத்தால் வகுத்தால் கிடைப்பது என்ன என்பது ராமனுக்கும் கிருஷ்ணனுக்கும் வெவ்வேறாக இருக்கப்போவதில்லை. அடிப்படை கணித அறிவியல் தரவுகள் இந்த நிலையிலிருந்தே வருகின்றன. இதை வடமொழியில் ‘ஜாக்ரத’ நிலை எனச் சொல்கிறோம்.

  அடுத்த நிலை, தைஜஸன். கனவு நிலை. இது அக உலகம். இதற்கான கருவிகள் வேறுவிதமானவை. இதன் அறிதல்கள் ஒருவருக்கு ஒருவர் வேறுபடுபவை. அவை சொல்லும் செய்திகளையும் ஒற்றைத்தன்மையுடன் சமனப்படுத்த இயலாது. ஆனால், இங்கு சுவாரசியமான விஷயம் ஒன்றிருக்கிறது. ‘ஜாக்ரத’ நிலையில் உள்ள பல பிரச்னைகளுக்கான தீர்வுகள் கனவு நிலையிலிருந்து வர இயலும். இதற்கான மிகச்சிறந்த வரலாற்று எடுத்துக்காட்டு, பென்ஸீன் மூலக்கூறின் வடிவத்தை கெகுலே (Kekule) அறிந்துகொண்டதுதான். ஆறு கார்பன் அணுக்களும் ஆறு ஹைட்ரஜன் அணுக்களும் கொண்ட பென்ஸீன் மூலக்கூறின் வடிவத்தை அறிய அவர் கடும் பிரயத்தனப்பட்டுக்கொண்டிருந்தார். அப்போது அவர் ஒரு கனவில் ஆழ்ந்தார். ஒரு பாம்பு தன் வாலை தானே கடித்தபடி சுழலும் காட்சி அவர் அகத்தில் விரிந்தது. நாம் இன்று காணும் பென்ஸீன் மூலக்கூறு வடிவம் உருவானது அப்படித்தான்.

   

   

   

  அடுத்ததாக, நம் மரபில் ‘பிராஜ்ஞன்’ என்பது சொல்லப்படுகிறது. கனவுகளற்ற ஆழ்தூக்க நிலை. ஸுஷுப்தம் என வடமொழியில் சொல்வர். பிரக்ஞையின் அடர் உருவமாக இந்நிலை கருதப்படுகிறது. தூக்கம் என்றபோதிலும் இந்நிலையிலும் அறிதல் நிகழ்கிறது. அது, அறிதல்களின் தொகுப்பான அடர்நிலையாக உள்ளது. மாண்டூக்ய உபநிடதம், பிராஜ்ஞனை அனைத்தும் அறிபவன் (ஸர்வஜ்ஞ) என்றும், உள்நின்று இயக்குபவன் (அந்தர்யாமீ) என்றும், (அறிதல்களின்) மூலகாரணி (யோனி) என்றும் கூறுகிறது. 'தூங்கிக்கண்டார் நிலை' என திருமந்திரம் கூறுகிறது.

  இவை அனைத்தின் அடிப்படை அஸ்திவாரமாக, பிரக்ஞையின் நான்காவது நிலையான ‘துரியம்’ உள்ளது. அது, உணர்வு திரண்ட நிலை அல்ல; உணர்வு நிலை அல்ல. அதனைக் காண முடியாது. செயல்களற்ற புரிந்துகொள்ள முடியாத, அடையாளங்கள் இல்லாத, சிந்தனைக்கு அப்பாற்பட்ட நிலை. அது அமைதிமயமானது (சாந்தம்), மங்கலமானது (சிவம்), இரண்டற்றது (அத்வைதம்). இது குறித்து நாம் இங்கே கவலைப்பட தேவையில்லை.

  இங்கு நாம் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். அறிவியலின் தரவுகள் அனைத்தும் ஜாக்ரத நிலையில் உள்ளவை. சூரியனைப் பூமி சுற்றுகிறது என்பதோ அல்லது வட்டத்தின் பரப்பளவு ‘பை x ஆரம் x ஆரம்’ என்கிற பார்முலாவோ, நீர் என்பது HO என்பதோ ஜாக்ரத நிலையில் அனைவருக்கும் உண்மையான தரவுகள். அதேசமயம், அந்தி மயங்கிடும் வானவிதானத்தை எப்படி இரு மனங்கள் உள்வாங்கி அவற்றை கலையாக வெளிப்படுத்துகின்றன என்பது ஒன்றுபோல இருப்பதில்லை.

  ஒவ்வொரு குழந்தையின் உள்ளும் இருக்கும் விஸ்வநரனுக்கு மட்டுமல்லாமல், தைஜஸனையும் பிராஜ்ஞனையும் கல்வி முறை கணக்கில் எடுக்க வேண்டும். அவர்களின் அக வளர்ச்சிக்கான ஊட்டத்தை கல்வி அளிக்க வேண்டும். இதை எப்படிச் சாத்தியப்படுத்துவது?

  கலைக் கல்வி

  இதற்கான சிறந்த சாத்தியத்தை கலைக் கல்வி அளிக்கிறது. கலைக் கல்வியின் மூலம், விஸ்வநரனைத் தாண்டி தைஜஸனையும் பிராஜ்ஞனையும் குழந்தைகளில் வளர்க்க இயலும். தாவரங்களில் இலைகள் எப்படி அமைந்திருக்கின்றன என்பது அறிவியல் கல்வி. இலைகளின் பரிணாம வளர்ச்சிகளைச் சொல்லிக்கொடுப்பதும் அறிவியல் கல்வி. இலைகளின் பரிணாம வளர்ச்சியை ஒரு பேரியக்கத்தின் பகுதியாக அறியும் பார்வை அல்லது இலையின் அன்றாட உயிரியக்கத்தில் ஒரு கவிதையைக் காணும் பார்வை என்பது கலைப் பார்வை. ஒரு முழுமையான அறிதல் சட்டகத்தை உருவாக்க, அறிவியலும் கலையும் இணைந்த கல்விப் பயிற்சி தேவை.

  உதாரணமாக, கீழே உள்ள படங்களைப் பாருங்கள். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் உயிரியல் பிரிவொன்றில் வைக்கப்பட்டிருந்த ஓவியம் இது. அறிவியல் காட்டும் உயிரியக்கம், எத்தகைய கலைத்தாக்கத்தை உருவாக்க முடியும் என்பதைக் காட்டும் ஒரு முயற்சி.

   

   

   

  கலைக் கல்வி என்பது அறிவியலை முன்னெடுக்க அவசியமான ஒன்று. இந்தியவியலாளர் ஆனந்த குமாரசாமி, கலையியல் மேதை மட்டுமல்ல அவர். தேர்ந்த நிலவியலாளரும்கூட. அவர் இத்தொடர்பை வலியுறுத்துகிறார்:

  விவரணை அறிவியல் (Descriptive Sscience) என்பது தோற்றங்களின் பதிவுகளையே சொல்கிறது. ஆனால், கலையும் கோட்பாட்டு அறிவியலும் (Theoretical Science) பல ஒற்றுமைகளைக் கொண்டவை. அவை இரண்டுக்குமே கற்பனை அவசியமான ஒன்றாகும். இவை இரண்டுமே பல்வேறுவித தோற்றங்களில் உறைந்தியங்கும் ஒருமையை அறியும் இயற்கையான தூண்டுதலை இயக்க அடிப்படையாகக் கொண்டவை. அந்த இயக்கத்திலிருந்தே இயற்கை விதிகள் கண்டடையப்படுகின்றன.

  கலை, மிக நுண்ணிய விதத்தில் நம் நரம்பியக்கங்களின் உள் மர்மங்களைப் பயன்படுத்துகிறது.

   

   

   

  கலையை அறிவியல் அறியும்போது, அது நம் அறிதல் செயல்படும் விதத்தின் மர்மங்களை முடிச்சவிழ்க்கிறது. சோழர் காலக் கலை வெளிப்பாடுகளைக் கொண்டு, அவை எவ்வித பொது மூளை-நரம்பியல் இயக்கங்களின் அடிப்படையில் கலையாக மிளிர்கின்றன என்பது குறித்து வி.எஸ். ராமச்சந்திரன் விளக்குகிறார். அவற்றிலிருந்து பொதுவான அழகியல் விதிகளை உருவாக்க முடியுமா என்பதை அவர் துணிகிறார்.

   

   

   

  இன்றைய நரம்பியலாளர்கள், ஒன்பதாம் நூற்றாண்டின் பாரம்பரிய சீன ஓவியங்களைக் கொண்டு, நம் கண்கள் எப்படி நிறங்களை இணைத்தும் பகுத்தும் அறிகின்றன என்பதை விளக்குகிறார்கள். க்ளாட் மோனே (Claude Monet), புகழ்பெற்ற ஓவியர். ஜப்பானிய ஓவியக்கலையை உள்வாங்கியவர். அவரது சூரியோதய ஓவியம், விமர்சகர்களை மிகவும் திக்குமுக்காட வைத்த ஒன்று. அதில் அவர் பயன்படுத்தியுள்ள வண்ண உத்தி (use of same relative brightness of grey sky and orange sun), நம் மூளையின் நரம்பியக்கப் பாதைகளில் நிகழ்த்தும் செயல்பாடுகள் இன்று நரம்பியலாளர்களால் கண்டறியப்படுகின்றன. ஓவியங்களுக்குள் நம்மை திகைத்து ஒன்றவைக்கும் அம்சங்களின் பின்னால், நம் நரம்பியக்கத்தின் நுண்ணிய செயல்பாடுகள் பயன்படுத்தப்படுகின்றன. நரம்பியல் பேராசிரியை மார்க்ரெட் லிவிங்க்ஸ்டன் சொல்கிறார்: “கலைஞர்கள் பரிசோதனைகளைச் செய்கிறார்கள். பல்வேறு விஷயங்களைப் பரிசோதித்து எவை எப்படிச் செயல்படுகின்றன என அறிகிறார்கள். கலைஞர்கள் சிறந்த அவதானிகள்”.

  ஆனால், இவை எல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறுகின்றனவே ஒழிய, அவை ஒரு முழுமையான கல்வி முறையாக உருப்பெறவில்லை. குழந்தைகளின் தனித்தன்மைகளையும் ஈடுபாடுகளையும் உணர்ந்து, அவற்றை வழி நடத்தும் சாத்தியங்களைக் கொண்ட இடங்களாக கல்வி அமைப்புகள் உருவாகவில்லை.

  நடனம், ஓவியம் ஆகியவை, அவற்றின் தத்துவார்த்த அடிப்படையுடன் நம் கல்வி முறைகளில் சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும். அத்தகைய ஒரு கல்வி முறை நமக்கு இருந்தது. அதுதான் அபிநவ குப்தரையும், பதஞ்சலியையும், திருமூலரையும், சுஷ்ருதரையும் உருவாக்கி இருந்தது. அத்தனை பழமைக்குக்கூட செல்ல வேண்டாம்.

   

   

   

  பல்வேறு அறிதல் முறைகளை மிக எளிதாக நம் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கும் முறை நம் பண்பாட்டில் இருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த மேதை சதாவதானி செய்குதம்பி பாவலர். அவர் சதாவதானத்தை திண்ணைப் பள்ளிக்கூட அமைப்பு ஒன்றில் ஒரு குருவிடமிருந்து கற்றார் என்கிறார்கள். இந்த அமைப்பைக் குறித்த அடிப்படைச் செய்திகள்கூட, இன்று நம் கண்முன்னே நம்மைவிட்டு நழுவி மறைந்துகொண்டிருக்கின்றன. சதாவதானம் (ஒரே நேரத்தில் நூறு அவதானிப்புகள்), அன்று ஒரு பயிற்சி முறை மூலம் ஒருவரால் சாத்தியப்பட்டிருக்கிறது.

  இத்தகைய நிகழ்வுகள், நம் பாரம்பரிய கல்வி முறை குறித்த வரலாறுகளிலும் கதை வழக்குகளிலும் நிரம்பிக் கிடக்கின்றன. ஆனால், இன்று நாம் குழந்தைகளை ஒற்றைத்தரப்படுத்தும் கல்வி மூலமாக இயந்திரத் தயாரிப்புகளாக மாற்றிக்கொண்டிருக்கிறோம்.

  தவறுகள் இல்லாத கல்வி தவறானது

  தவறுகளுக்கு இடமில்லை என்பதிலிருந்து, தவறென எதுவுமே இல்லை என்பதற்கான இடத்தை நம் கல்வி முறை கொண்டிருக்க வேண்டும் என்கிறார் கென் ராபின்ஸன். தவறுகளை அனுமதிக்க தொழில்யுகக் கல்விக்கு இயலாது. அது தன் தேவைக்கான கச்சிதமான ஒற்றை விடையை அளிக்கும் ஊழியர்களையே வேண்டி நிற்கிறது. ஆனால், தவறுகள் என எதுவுமே இல்லை என்கிற ஒரு இடம் கல்வியில் இருக்கிறது. கணிதத்தில் தவறான விடை இருக்கலாம். ஆனால், அங்குகூட விடையை அறிவதற்கான வழிமுறைகள் வெவ்வேறாக இருக்கலாம்.

  அண்மையில், குப்புசாமி சாஸ்திரி சமஸ்கிருத கல்லூரியில் பண்டைய இந்தியக் கணிதத்தையும் வானவியியலையும் குறித்த மூன்று நாட்கள் பட்டறை நடைபெற்றது. அதில் ஒரு குறிப்பிட்ட கணித விஷயத்தில் விடையை அடைய ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளை நம் மரபில் கூறுவதை ஒரு பேராசிரியை குறிப்பிட்டார். அதில் ஒன்றைத் தவிர, பிற வழிமுறைகள் தேவையற்றவை என அவர் கருதினார். அவரிடம் அவர் பக்கத்து வீட்டுச் சிறுவன் +2 கணிதம் படிக்க வருவான். அவன் ஒரு கணக்கை ஒரு குறிப்பிட்ட முறையில் செய்தான். என்னவென்றால், அந்தக் கணக்கை செய்ய ஒரு குழப்பமான கணிதக் கோட்பாட்டை புரிந்துகொண்டு ஒருவிதத்தில் முடிக்க வேண்டும். ஆனால், அவன் அந்தக் குழப்பமான பகுதியைத் தொடாமலே வேறு வழியாக கணக்கைச் சரியாகச் செய்துவிட்டான். இப்போது அந்த பேராசிரியைக்கு, ஏன் பல்வேறுவிதமான வழிமுறைகளை ஒரே கணக்குக்கான விடையை அடைய நம் மரபில் வைத்திருந்தார்கள் என விளங்கியது என அவர் கூறினார். ஒவ்வொரு மாணவரும் தன்னியல்பில் வேறுபடுவார்கள். அவ்வேறுபாடுகளை, அறிதல் திறன்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு கணக்குக்கான விடைக்கு அவர்கள் செல்லும் வழிகளை மாற்றி அமைத்திருக்கிறார்கள்.

   

   

   

  கணிதத்திலேயே இப்படி பன்மை அறிதலுக்கு இடம் உண்டென்றால், கலையில் தவறுகளுக்கு என்ன இடம்? தவறுகள் என்று சொல்லப்படுபவை தவறுகள் அல்ல; மாற்றுப் பார்வைகள் என்பதை குழந்தைகள் உணரும் ஒரு இடம், கல்வியில் குழந்தைகளுக்குத் தேவை. அதிலிருந்தே படைப்பூக்கம் ஏற்பட முடியும். சுவாமி விவேகானந்தர் இதை வாழ்க்கைக்கே நீட்டுவிக்கிறார்:

  தோல்விகள் எனக் கூறப்படுபவை, வாழ்க்கைக்கு அழகு சேர்ப்பவை. அவை இல்லாமல் வாழ்க்கையில் என்னதான் சுவாரசியம் இருக்க முடியும்? ...சுவரைப் பாருங்கள். அது பொய்யே சொல்வதில்லை. ஆனால் மனிதன்? மனிதன் பொய் சொல்கிறான். அதனால் என்ன? மனிதனால்தான் தெய்வ நிலையை அடைய முடியும். எதையும் செய்யாமல் இருப்பதைக் காட்டிலும், எதையாவது செய்ய வேண்டும். அது தவறாகப்போனால் எந்தப் பிரச்னையும் இல்லை. எதுவும் செய்யாமல் இருப்பதைவிட அது சிறந்தது. ...நீங்கள் செய்த தவறுகளை நீங்கள் செய்யாதிருந்திருந்தால், நீங்கள் இருக்கும் நிலையை உங்களால் அடைந்திருக்க முடியும் என நினைக்கிறீர்களா? உங்கள் தவறுகளை ஆசீர்வதியுங்கள். வாழ்க்கைப் போராட்டத்தில், தவறுகளின் தூசி மண்டலம் எழும். அதைச் சகிக்க முடியாதவர்கள் வாழ்க்கையின் போராட்டத்திலிருந்து விலகிக்கொள்ளட்டும்.

   

   

   

  தோல்விகளையும் தவறுகளையும் எதிர்மறையாகக் காணாமல், அவற்றை அவசியத் தேவைகளாகக் கருதும் ஒரு கல்வியே படைப்பூக்கம் கொண்டவர்களை உருவாக்கும் கல்வியாக அமைய முடியும்.

  குமாஸ்தாக்களை உருவாக்கும் கல்வி

  கென் ராபின்சன், தனது பேச்சில் ஒரு விஷயத்தைக் கூறுகிறார். நமது இன்றைய கல்வி முறை, குழந்தைகளை குமாஸ்தா வேலை செய்யவைக்கிற ஒன்றாக இருக்கிறது. அவர்களின் இயல்பான படைப்பூக்கத்தை இல்லாமல் ஆக்குகிறது என்கிறார். சுவாரசியமான விஷயம் என்னவென்றால், பிரிட்டிஷ் கல்வி முறை மீது இந்திய தேசியவாதிகள் ஏறக்குறைய இதேவித விமர்சனத்தைத்தான் வைத்தார்கள். அதன் நோக்கமே குமாஸ்தாக்களை உருவாக்குவதுதான் என்றார்கள்.

  இவ்விஷயத்தை நாம் எப்படிப் புரிந்துகொள்வது? அடிப்படையில், தொழில்யுகக் கல்வியின் நோக்கம் ‘உற்பத்தித் திறன்’ கொண்ட உழைப்பாளிகளை உருவாக்குவதாக மட்டுமே இருந்தது. ஆல்வின் டாப்லர், சமூக அறிவியலாளர். புகழ்பெற்ற வருங்காலக் கணிப்பு நூல்களை எழுதியவர். அவர் எழுதிய ‘மூன்றாம் அலை’ நூல் புகழ்பெற்றது. முதல் அலை, விவசாயப் பண்பாடுகள். இரண்டாம் அலை, தொழில்யுகப் பண்பாடுகள் என்றும் அவர் கூறுகிறார். 1980-களின் இறுதியிலிருந்து இப்போது உருவாகிவரும் பண்பாட்டு முழுமையை மூன்றாம் அலை என அவர் கூறுகிறார். ‘இரண்டாம் அலை’ பண்பாட்டின் கல்வி அமைப்புகள் பரவலான எழுத்தறிவை அளித்தன என அவர் சொல்கிறார். ஆனால், அவை அடிப்படையாக குழந்தைகளுக்கு மூன்று விஷயங்களை உள்ளுக்குள்ளாகத் திணித்தன. அவை: 1.நேரம் தவறாமை, 2. கீழ்ப்படிதல், 3. வாழ்க்கை முழுக்க ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்வதற்கான பயிற்சி.

   

   

   

  இன்று பொறியியல் கல்லூரிகள் மீது இருக்கும் பெரும் கவர்ச்சியின் பின்னால் இருப்பது இந்த இரண்டாம் அலையின் தாக்கம்தான். சந்தைப் பொருளாதாரத்தின் தொழில்நுட்பத் தேவைகளைப் பூர்த்திசெய்வதே கல்வி அமைப்பின் முதன்மையான நோக்கமாக இருக்கிறது. இங்கு சந்தை என்பது ஏதோ முதலாளித்துவ பொருளாதாரத்தில் மட்டும் இருக்கும் ஒரு சமாசாரம் அல்ல. ஒட்டுமொத்த கம்யூனிச நாடுகளிலும் அரசு மூலமாக இயங்கிக்கொண்டிருந்தது சந்தையின் தேவைக்கான பூர்த்திகளே. அந்த அளவில் மட்டுமே கல்வியின் முக்கியத்துவம் தொழில்யுகத்தில் பிரசாரம் செய்யப்பட்டது.

  மாற்றுக் கல்விக்கான மக்கள் இயக்கம்

  ஒருவிதத்தில், இந்தியாவில் இம்முறைக்கு எதிராக எழுந்த எதிர்வினையை, உலக அளவிலான ஒரு மாற்றுக் கல்விக்கான முதல் குரலாகவே நாம் காணமுடியும்.

  சகோதரி நிவேதிதா, ஆனந்த குமாரசாமி, ககுஸோ ஒககுரா ஆகியோர் இந்த மாற்றுக் கல்விக்கான சாத்தியங்களை எழுதியிருக்கிறார்கள். காலனிய காலகட்டத்தில் தேக்கமடைந்த சூழலில், அறிவியல்-கலை ஆகியவற்றை இணைக்கும் ஒரு கல்வி முறை குறித்த பரிசோதனைகளை நிவேதிதா செய்தார்.

   

   

   

  சகோதரி நிவேதிதாவின் ஓவியம்: வஜ்ரம்: போஸ் அறிவியல் மையத்தின் சின்னம். போஸ் மையத்தில் ஓவியர் நந்தலால் போஸ் உருவாக்கிய அமைப்பு

  காந்தி, குமரப்பா, தரம்பால் ஆகியோர், இன்றைய கல்வி முறைக்கான மாற்றை இந்தியப் பாரம்பரியக் கல்வி முறைகளிலிருந்து மேலெடுத்து உருவாக்க முடியும் என்பதற்கான நம்பிக்கையையும் தரவுகளையும் அளித்தார்கள். நவீன காலகட்டத்தின் சவால்களையும் அழுத்தங்களையும் சந்திக்கும் ஒரு முழுமையான கல்வி முறையை பொதுமக்களுக்கு அளிக்க முனைந்தார்கள்.

  ரவீந்திரநாத் தாகூர், அரவிந்தர், மிர்ரா அன்னை, ஜே. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர், மாற்றுக்கல்விக்கான முயற்சிகளை செயல்படுத்தினார்கள். தாங்கள் உருவாக்கிய அமைப்புகளில் இத்தகைய கல்விப் பரிசோதனைகளைச் செயல்படுத்தியிருக்கிறார்கள். இம்முயற்சிகள், அந்தந்த அமைப்புகளின் சுற்றுச்சுவர்களைத் தாண்டி, பெரிய அளவில் வெளியே மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. என்றாலும், இந்தப் பரிசோதனைகள் முக்கியமானவை.

   

   

   

  வங்காளத்தில் எழுந்த அறிவியல்-கலைக் கல்வி இயக்கம், அன்றைய பாரதத்தின் மிகச்சிறந்த மனங்களை ஒருங்கிணைத்து ஒரு கல்வி முறையை சிந்தித்தது. நந்தலால் போஸ் போன்ற சிறந்த ஓவியக் கலைஞரும், ஜகதீஷ் சந்திர போஸும், நிவேதிதாவும், ரவீந்திரநாத தாகூரும் இது குறித்த தங்கள் எண்ணங்களைப் பரிமாறிக்கொண்டனர்.

   

   

   

  பாண்டிச்சேரி அன்னை: ஓவியரும் இசைக்கலைஞரும் ஆவார்

  பின்னர் உருவான இந்திய மத்திய அரசும் சரி, மாநில அரசுகளும் சரி, தொழில்யுக வளர்ச்சியையே தம் வளர்ச்சியாக சுவீகரித்துக்கொண்டன. வளர்ச்சியைக் குவிமையமற்ற முறையில் அணுக முடியும் எனும் கருத்துகள் பிற்போக்கானவை எனக் கருதப்பட்டன. அதுவே, கல்விக்கும் பொருந்துவதாயிற்று. எப்படி, சாதாரண மக்களுக்குத் தேவையான நஞ்சில்லா விவசாயமும் ஒருங்கிணைந்த தொழில்நுட்பமும் ஒரு ஃபேஷனாக மாறிவிட்டனவோ, அதுபோல மாற்றுக் கல்வியும் ஒரு ஃபேஷனாக மாறிவிட்டது.

  கலை, தத்துவம், அறிவியல், விளையாட்டு ஆகியவற்றை இணைக்கும் ஒரு மாற்றுக் கல்வி முறையை உருவாக்குவது இன்றைய அவசியம். இந்தியச் சூழலில், இது உண்மையில் அதிக பணம் கோரும் ஒரு விஷயமல்ல. இன்று வயல்வெளிகளை அழித்து சொகுசுப் பள்ளிகள் உருவாக்கப்படுவதை காண்கிறோம். குழந்தைகளுக்கு, அப்பள்ளிகளில் சீன தயாரிப்பு ‘க்ளே’ (Clay) கொடுக்கப்பட்டு அவர்கள் விளையாடுகிறார்கள்.

  மரங்கள் அடியில் வகுப்புகள் நடத்தப்படுவதைத் தடுக்கும் மனநிலை எது? மழைக்கு மட்டுமே வகுப்பறைகள் என இருப்பதை தடுப்பது எது? வயல்களில் உழைப்போருடன் இணைந்து, களை எடுப்பதிலும் நாற்று நடுவதிலும் குழந்தைகளை ஒத்தாசை செய்யவைப்பதை தடுப்பது எது?

  சகஜானந்தரும் விபுலானந்தரும்

  நம் தமிழகச் சூழலில், மாற்றுக் கல்விக்கான குரலை எழுப்பியவர்களில் முக்கியமானவர்கள் துறவிகளும் கல்வியாளர்களுமான சகஜானந்தரும், விபுலானந்தரும். சுவாமி சகஜானந்தர், குழந்தைகளுக்குப் பண்பாட்டு, தத்துவ கல்வியைப் போதிக்க வேண்டுமென்று கூறினார். கூடவே, உள்ளூர் மருத்துவ முறைகளை ஆரம்பப் பள்ளியிலிருந்தே குழந்தைகள் கற்க வேண்டும் என்று அவர் சொன்னார். ஒவ்வொரு நாளும் அதற்கு ஒரு மணி நேரம் ஒதுக்க வேண்டும். அப்படிச் செய்தால், தேசத்தின் ஆரோக்கியம் மேம்படும். பெரும் மருத்துவ கம்பெனிகள் நம்மைச் சுரண்டுவது நின்றுவிடும் என அவர் கூறினார்.

   

   

  சுவாமி விபுலானந்தர் கல்வியாளர். தமிழர்களின் மறைந்துபோன இசைக் கருவிகளின் வடிவங்களை மீட்டளித்தவர். ஆபிரகாம் பண்டிதர், 1917-ல் வெளியிட்ட கர்ணாமிர்த சாகரம் நூலைத் தொடர்ந்து, யாழ் நூலை வெளியிட்டார். 1993-ல், கலாநிதி மௌனகுரு எழுதுகிறார்:

  யாழ் நூல் பற்றிப் பல அறிஞர்கள் போற்றிப் புகழ்ந்துள்ளனர். எனினும், முறையான மதிப்பீடு ஒன்றினை யாரும் இதுவரை செய்ய முயன்றாரில்லை. …இசை ஆய்வு ஒரு துறையாக இன்னும் தமிழரிடை வளராமையும் ஒரு காரணமாக இருக்கலாம். யாழ் நூலைப் புரிந்துகொள்ள மூன்று வகை அறிவு தேவைப்படுகிறது. 1. இசை அறிவு, 2. கணித அறிவு 3. தமிழ் அறிவு. இசையை கணித மொழியில் விளக்க முனைந்த விபுலாநந்த அடிகளாரின் இசைக் கணிதமே தமிழிசைக்கு அவர் அளித்த பங்களிப்பு எனலாம்.

  தமிழும், இசையும், கணிதமும் அறிந்த ஒரு தலைமுறையை நம் கல்வி முறை உருவாக்கவில்லை.

   

   

   

  இயற்பியலாளர் சி.வி. ராமன், இந்திய இசைக் கருவிகளின் இயற்பியல் அடிப்படையிலான இசைத்தன்மைகளை ஆராய்ந்திருக்கிறார். பாரத இசைக் கருவிகளை மேற்கத்திய இசைக் கருவிகளுடன் ஒப்பிடுவதற்கான ஒரு இயற்பியல் அடிப்படையை அவர் உருவாக்குகிறார். இன்றும் இத்தகைய ஆராய்ச்சிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக, உயர் அறிவியல் ஆராய்ச்சிச் சாலைகளில் நிகழ்கின்றனவே தவிர, அவை நம் பள்ளிக் கல்வியின் ஒருங்கிணைந்த பாடத் திட்டத்தில் வந்து சேர்ந்திடவில்லை. அப்படிப் பாரம்பரிய கலைகளை ஆராய்ச்சி செய்யும் ஆய்வுகளை நாம் விரல் விட்டு எண்ணிவிடலாம். கலையைக் கல்வியிலிருந்து நீக்கியதன் மூலம், நம் பாரம்பரியத்தின் உயிர்சத்தான பல அம்சங்களை நாம் தொடர்ந்து இழந்துகொண்டிருக்கிறோம்.

  கலைக் கல்வி இன்று பொதுக் கல்வியிலிருந்து வெட்டப்பட்டுள்ளது. எப்படி ஒரு குழந்தை எண்ணறிவையும் எழுத்தறிவையும் பெறுகிறதோ, அப்படி அது கலையறிவையும் பெறுவது அவசியம். குழந்தையின் உள்ளே இருக்கும் விஸ்வநரனுக்கு மட்டும் நாம் உணவு ஊட்டுகிறோம். தைஜஸனையும் பிராஜ்ஞனையும் கவனிப்பதில்லை. ஆனால், அவையும் குழந்தையுடன் வளர்கின்றன. வேறு வழியின்றி, மலினமான திரைப்படங்களிலிருந்தும் சூழலிலிருந்தும் அவை தம் உணவை உட்கொள்கின்றன. இதன்விளைவாக, நுண்ணுணர்வையும் உள்ளுணர்வையும், வாழ்வின் ஆழமான மையங்களை சென்றறியும் தேடலையும் அவை இழக்கின்றன.

  நம் இன்றைய கல்வி அமைப்பு அதன் ஆகச்சிறந்த திறமையுடன் இயங்கினாலும்கூட, அதனால் செய்ய முடிந்ததுதான் என்ன? நல்ல தொழில்நுட்பவாதிகளை உருவாக்க இந்த அமைப்பினால் முடியும். கீழ்ப்படிதலுள்ள ஊழியர்களை உருவாக்க இந்த அமைப்பினால் முடியும். ஆனால், நல்ல அறிவியலாளர்களையும் கலைஞர்களையும் உருவாக்க இயலாது. நல்ல கலைஞர்களை உருவாக்கும் சமுதாயம் வெகு இயல்பாகவே நல்ல அறிவியலாளர்களை உருவாக்கிட முடியும். இவை அனைத்தையும் தாண்டி, தொழில்நுட்ப அறிஞராக ஒரு அப்துல் கலாமோ, ஒரு தூய அறிவியலாளராக ஒரு ஜார்ஜ் சுதர்ஷனோ, கலை அறிஞராக ஒரு வெங்கட் சாமிநாதனோ, நம் பண்பாட்டின் கலையுடன் தத்துவத்துடன் தம்மை இணைக்கும்போது நிகழ்வது என்ன? அவர்கள் தனிமனிதர்களாக சாதித்த விஷயங்களை நாம் ஒரு பண்பாடாக, சமுதாயமாக சாதிக்க முடியும். நம் குழந்தைகள் என்ன சாதிக்க முடியும் என்பதற்கான சிறுதுளி உதாரணங்களே அவர்கள் அனைவரும்.

  கென் ராபின்சன் முன்வைக்கும் கல்விச் சூழல் சவால்களுக்கான மாற்று – ஒரு உயிரியக்க, பன்மைத்தன்மை கொண்ட கல்வி முறை. அதை, தேச பண்பாட்டு எல்லைகளைத் தாண்டி நாம் உருவாக்க வேண்டிய தேவையில் இருக்கிறோம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai