Enable Javscript for better performance
சித்திரைப் பெண்ணின் பாதம்- Dinamani

சுடச்சுட

  

  சித்திரை வருகிறது என்பதை கட்டியம் சொல்லும் ஒரு இயற்கை நிகழ்வு, ஆங்காங்கே பூத்துக் குலுங்கும் தாவரங்கள். இயற்கை தன்னை புஷ்பித்துக்கொள்ளும் வசந்தமே, உலகெங்கும் இயல்பாகப் புத்தாண்டு எனக் கொண்டாடப்படுகிறது. இந்தியா, எகிப்து, சுமேரியம், சீனம் என உலகின் பழமையான பண்பாடுகள் அனைத்துமே, வசந்தத்தின் வருகையைத் தம்முடைய புத்தாண்டுகளாகக் கொண்டாடுகின்றன.

   

   

   

  வசந்தம் என்பது மானுட இனம் பூமியில் பரிணமிக்கும் முன்னரே உருவாகிவிட்ட ஒன்று. 13 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் பூ பூக்கும் தாவரங்கள் பூமியில் தோன்றின. அவை பரிணமித்து, தம் பூ பூக்கும் சுழலை பூமியின் பருவநிலைச் சுழலுக்கு ஏற்ப தகவமைத்துக்கொண்டன. அப்போதே, வண்ணங்கள் மிகுந்த வசந்தம் உருவாகிவிட்டது. மலர்களின் பரிணாமத்துடன் இணைந்து விலங்கினப் பரிணாமமும் விறுவிறுப்படைந்தது. தாவரவியலாளர்கள், பூ மலரும் தாவரங்களை Angiosperms (மூடிய விதை கொண்ட தாவரங்கள்) என்று சொல்கிறார்கள். எனினும், வெளிப்படையாகத் தெரியும் அடையாளம், அவற்றின் மலர்கள்தான்.

   

   

   

  மகரந்தச் சேர்க்கை என்பது முதலில் காற்றால்தான் நடைபெற்றது. ஆனால், அதற்குக் காற்றையே நம்பியிருப்பது என்பது அப்படி ஒரு நிச்சயமான விஷயம் கிடையாது. வண்ண மலர்கள் பரிணமித்து, அவை பூச்சிகளைக் கவரத் தொடங்கின. அதன்பின்னர், காற்றாலும் பூச்சிகளாலும் மகரந்தச் சேர்க்கை நடைபெற ஆரம்பித்தது. இதில், பூச்சிகளால் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவது என்பது காற்றால் நடைபெறுவதையும்விட மிகவும் நிச்சயமான ஒன்று. பூமியில், மலர்த் தாவரங்கள் தோன்றியபின்னர், அவை பூச்சிகளைக் கவரும் நிலைக்குச் செல்ல 3 முதல் 4 கோடி ஆண்டுகள் ஆயின. ஆனால், பூச்சிகள் மட்டுமே இத்தாவரங்களின் தோழனல்ல. மூடிய விதைகளில் இருந்து மலரும் பூக்களைக் கொண்ட தாவரங்கள், அன்று இருந்த டைனோசர்கள் உட்பட அனைத்து விலங்குகளையும் தம் பரவுதலுக்குப் பயன்படுத்திக்கொண்டன.

   

   

   

  பின்னர், டைனோசர்கள் மறைந்து மானுட இனம் தோன்றியது. மலர்கள், மானுட இனத்துடன் பெரும் உறவு கொண்டன. மலர்களும் கனிகளும், அவற்றை அளிக்கும் தாவரங்களும் பெருமரங்களும், மானுடத்தை அகத்திலும் புறத்திலும் அரவணைத்தன. இம்மலரும் தாவரங்களால் பெரும் வனங்கள் நிரம்பி உருவாகின. மானுடம் தன் அகப்பண்பாட்டின் மிக உயர்ந்த உச்சங்களை, இத்தாவரங்கள் நிரம்பிய சூழல்களிலேயே பெற்றது. குருதேவர் ரவீந்திரநாத் தாகூர், இந்தியப் பண்பாட்டின் ஒரு தனிப்பெரும் சிறப்பாகவே வனத்துடனான மானுட உறவைச் சொல்கிறார். இந்தியப் பண்பாட்டின் பெரும் சிந்தனையாளர்கள், வனங்களில் உருவானவர்கள். இந்திய இதிகாசங்கள், பேரளவில் வனங்களில் நடக்கின்றன. அவற்றின் பேரெழில் பொருந்திய சம்பவங்களின் களமாக அமைவது வனம்தான் என்பதைச் சொல்கிறார் தாகூர். ‘உயிர்த்துடிப்பு கொண்டவை அனைத்தும், உயிருள்ளவற்றில் இருந்து உருவாகின்றன’ என்கிற உபநிடத வரிகள், தம்மில் வனத்தின் இதயத்தைக் கொண்டிருக்கின்றன என்கிறார் அவர்.

  இவ்வாறு வனம் சார்ந்து உருவான ஒரு பண்பாட்டில், தாவரங்களின் மலர்தலுடன் சில அதிசயமான ஒட்டுறவுகள் ஏற்பட்டிருக்கின்றன. மானுட அகத்தையும், தாவரங்கள் மலர்தலையும் இணைக்கும் அற்புதமான சில அழகுச் செயல்பாடுகள் இங்கு உருவாகியிருக்கின்றன. அதைத் தெரிந்துகொள்வதற்குள், மற்றொரு அண்மை நிகழ்வை பார்ப்போம்.

   

   

   

  வசந்த காலம். அழகிய செர்ரி மரங்கள். பூத்துக் குலுங்குகின்றன. அவற்றின் அருகே வரும் சுற்றுலாப் பயணிகள், மரத்தின் மலர்கள் தம்மீது சொரிய செல்ஃபிகள் எடுக்க விரும்புகின்றனர். எனவே, அம்மரங்களை உதைக்கின்றனர். மலர்கள் மண்ணில் விழ, அவர்கள் அம்மலர்கள் சூழ தம்மைப் புகைப்படங்கள் எடுக்கின்றனர். இது நடப்பது சீன சுற்றுலாத் தலங்களில். அரசாங்கமே தலையிட்டு, இப்படிச் செய்பவர்களைக் கடுமையாகத் தண்டிப்பதாகச் சொல்லியிருக்கிறது.

  அங்கு, மலர்ந்த மலர்களை விழவைத்து வீணடித்து அகங்காரத்துக்காக மரங்களை மிதிக்கிறார்கள். நம் வலை ஊடகங்களிலும் இப்படங்கள் வலம் வந்தன. நம் பண்பாட்டிலும், மரங்களை மிதிப்பது உண்டு. மலர்களை வீணடிக்க அல்ல; மாறாக, மரங்களை மலர்விக்க.

  இந்திய இலக்கியங்கள் சில, மிக விசித்திரமான தொடு உணர்வுகள் மூலம் மரங்களை மலரச் செய்வதை குறித்துப் பேசுகின்றன. அவை அனைத்துமே பெண்களால் நிகழ்பவை. வடமொழி இலக்கியத் தொகுப்பான சுபாஷிதவலி, அப்படிப் பல தாவரங்கள் பூப்பதைச் சொல்கிறது.

  ப்ரியங்கு மரம், தான் பூத்துக் குலுங்க பெண்கள் தொடுவதற்காக ஏங்குமாம். மகிழம் பூ பூக்க, இளம் பெண்கள் தங்கள் வாயால்  மதுவைக் கொப்பளித்து உமிழ வேண்டும். கற்பகவிருட்சம் மலர, அதன் கீழ் நின்று பெண்கள் காமரசம் சொட்ட பேச வேண்டும். அசோக மரம் பூக்க வேண்டுமென்றால், இளம்பெண்கள் அலங்கரித்த தங்களுடைய கால்களால் அம்மரத்தை உதைக்க வேண்டும். மாமரம் பூக்க, பெண்கள் தங்கள் வாயால் காற்றை மெல்ல அதன் மீது ஊத வேண்டும்.

  இவை எல்லாவற்றிலும் இருக்கும் பொதுத்தன்மை என்னவென்றால், மலரும் நிலைக்கு ஒரு தாவரம் வந்து திரண்டு நிற்கும்போது, அதனை அவ்விளிம்பிலிருந்து நகர்த்த ஒரு பெண்ணின் தூண்டுதல் தேவை. அந்தத் தூண்டுதல், அவள் காலிலிருந்து கிடைக்கும் உதையாக இருக்கலாம். அல்லது அவள் பேச்சு, அல்லது உமிழ் நீர் என எதுவாகவும் இருக்கலாம். இன்னொரு தளத்தில், இது பெண்ணுக்கும் இயற்கைக்கும் இருக்கக்கூடிய ஒரு ரகசியமான ஆழ்ந்த உறவின் வெளிப்பாடாக அமைகிறது.

   

   

   

  இவை எல்லாமே, கவிகளின் அழகிய கற்பனைகளாக இருக்கலாம். அப்படித்தான் இருக்க வேண்டும். தாவரங்களின் உயிரியக்கங்களை நம் தொடுதல்களும் வருடல்களும் விரைவுபடுத்தும் அல்லது வெளிப்படவைக்கும் என்பது நல்ல கவித்துவம் கொண்ட கற்பனை. காளிதாசனும் ஆதிசங்கரரும் அதைப் பயன்படுத்தியிருக்கலாம். அதைத்தாண்டி, அறிவியல் ரீதியில் இது உண்மையாக இருக்க முடியாது.

  அல்லது…

  ஜேனட் ப்ராம் (Janet Braam), மரபியல் ஆராய்ச்சியாளர். அவர், தாவரங்களின் ஹார்மோன்கள் அவற்றின் மரபணுச் செயல்பாட்டை எப்படிப் பாதிக்கின்றன என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். ஜிப்ரெலின் என்பது தாவர ஹார்மோன்களில் ஒன்று. அவரது ஆராய்ச்சியில், இந்த ஹார்மோனை அவர் கடுகுச் செடி ஒன்றின் இலைகள் மீது தெளித்தார். அப்படித் தெளித்ததும், செடியின் பல மரபணுக்கள் செயல்பட ஆரம்பிக்கின்றன என்பதைக் கண்டுபிடித்தார். இது நிச்சயமாக ஜிப்ரெலின் ஹார்மோனின் விளைவாகத்தான் இருக்க வேண்டும். இதில் பெரிதாக அதிசயப்பட ஏதுமில்லை. ஆனால், என்ன அதிசயமென்றால், ஹார்மோன் கலக்காத நீர் தெளிக்கப்பட்டபோதும் இதுவேதான் நடந்தது. ஆக, நீர் தெளிக்கப்படும் உணர்வாலேயே தாவரத்தின் மரபணுக்கள் தூண்டப்படுகின்றன எனும் முடிவுக்கு அவர் வந்தார். இப்போது, நீரும் தெளிக்காமலேயே தான் தொட்டால் அதேபோல மரபணுக்கள் தூண்டப்படுமா என ஆராய்ந்தார் அவர். அதே மரபணுக்கள் அவர் தொட்டபோதும் தூண்டப்படுவதைக் கண்டார். இவற்றை TCH மரபணுக்கள் என அவர் பெயரிட்டார். (TCH - Touch)

   

   

   

  இந்த ஆராய்ச்சி பல சுவாரசியமான விஷயங்களைச் சொல்கிறது. கடுகுச் செடியின் ஒவ்வொரு செல்லிலும் 25,000 மரபணுக்கள் உள்ளன. எல்லா செல்களிலும் உள்ள மரபணுக்கள் ஒரே மாதிரிதான் என்றாலும், எல்லா செல்களிலும் எல்லா மரபணுக்களும் செயல்படுத்தப்படுவதில்லை. அந்தந்த செல்களின் தேவைகளுக்கு எந்தெந்த மரபணுக்களைச் செயல்படுத்த வேண்டுமோ அவைதான் செயல்படுத்தப்படுகின்றன. இலைகளில் உள்ள செல்களில், சூரிய ஒளியை வாங்கும் தன்மை கொண்ட அமைப்புகளுக்கான புரதங்கள் தேவை. வேர்களில் உள்ள செல்களில், மண் சத்துகளை உறிஞ்சுவதற்கான அமைப்புகளுக்கான புரதங்கள் தேவை. அந்தந்த புரதங்களை உருவாக்குவதற்கான மரபணுக்களை, அந்தந்த செல்களில் செயல்படத் தூண்ட வேண்டும். இந்தத் தூண்டுதல்கள், புறத்திலிருந்து ஏற்படலாம் என்பதுதான் ஜேனட் ப்ராமின் கண்டுபிடிப்பின் ஆதார சுருதி.

  இந்த 25,000 மரபணுக்களில், இரண்டு சதவிகித மரபணுக்கள் பலவிதமான தொடுதல் உணர்ச்சிகளால் தூண்டப்படுகின்றன. எப்படிப்பட்ட தொடுதல் உணர்ச்சிகள்? ஒரு இலையில் ஒரு பூச்சி வந்து அமர்வதால் ஏற்படும் உணர்வு. ஒரு விலங்கு, அந்தச் செடியின் கிளைகளை உரசிக்கொண்டு போவதால் ஏற்படும் உணர்வு - போன்றவை.

  ஒரு இளம்பெண், தன் வாயில் மதுவினைக் கொப்பளித்து உமிழ்ந்தால் மகிழ மரம் பூக்கும் என்பதற்கு அறிவியல் ஆதாரம் இல்லை. முன்பு சொன்னதுபோல, அது கவித்துவ கற்பனையாகவே இருக்கலாம். ஆனால், வெவ்வேறுவிதமான தொடு உணர்வுகள், தாவரங்களில் ஆதார உயிரியக்கங்களைத் தூண்டும் என்பது உண்மை. அந்த உண்மையை, ஒரு அழகிய கற்பனையாக மட்டுமல்ல; அதை ஒரு ஆழமான அக-படிமமாகவும் (Archetype) மாற்றினார்கள் நம்மவர்கள்.

  ஆதிசங்கரர் தனது சௌந்தர்யலஹரியில், பெண்ணின் அழகிய காலால் உதைபட்டுப் பூக்கும் அசோக மரத்தைப் பாடுகிறார். அம்பிகைக்கென அவள் விளையாட இருக்கிறது நந்தவனம் - இளங்காடு. அங்கே நிற்கிற அசோக மரம் பூப்பதற்காக, அம்பிகை தன் பாதத்தால் அதை உதைக்கிறாள். இதை சிவபெருமான் கடும் பொறாமையுடன் பார்க்கிறாராம். (சௌந்தர்யலஹரி 85-வது பாடல்).

   

   

   

  அடுத்த பாடலிலேயே சிவபெருமானுக்கு அந்தப் பாக்கியம் கிடைத்துவிட வைக்கிறார் பகவத்பாதர். ஊடல்கொண்ட பார்வதியின் பாதம் இப்போது சிவனின் சிரசில் படுகிறது. அவளது பாதத்தில் இருக்கும் சிலம்பு, 'கிலிகிலி’ என எழுப்பும் ஒலியானது, சிவன் முன்பு தன் கண்ணால் எரித்த மன்மதன், இப்போது அவரை பழிவாங்கிவிட்டதான வெற்றிநகைபோல இருக்கிறதாம்.

  இதைப்போலவே இன்னொரு சம்பவம் -

  ஜெயதேவர் தம் கீதகோவிந்தத்தில், 'சாருசீலே பிரியே! சாரு சீலே’ என்ற பல்லவியுடன் கூடிய அஷ்டபதியில், கிருஷ்ணன் இப்படிக் கூறுவதாக எழுதினார் - “ராதே, விரகத்தினால் தவித்துக்கொண்டிருக்கும் என்னுடைய சிரசினில், பனிமலர் போன்ற உன் தாமரைத் தளிர் அடிகளை வை”. பரவச நிலையில் அந்த வரிகளை எழுதினார் அவர். பின்னர், அது தெய்வநிந்தனை என நினைத்தார். அந்த ஓலையைக் கிழித்து எறிந்துவிட்டு, எண்ணெய் தேய்த்து நீராடச் சென்றார். அவர் சென்ற சில நிமிடங்களில், மீண்டும் வீட்டுக்கதவு தட்டப்பட்டது. அவர் மனைவி பத்மாவதி கதவைத் திறந்தார். வந்தவர் கணவர். எண்ணெய்த் தலையுடன் வந்து எழுத்தாணியையும் ஓலையையும் கேட்டார். ‘திடீரென்று ஒரு நல்ல கவிதை தோன்றியது. அதை எழுதி வைத்துவிடுகிறேன்’ எனச் சொல்லி, கவிதையை எழுதி வைத்துவிட்டுப் போனார். எண்ணெய்க் கறையுடன் ஓலை இருந்தது. குளித்துவிட்டு வந்து பூஜையை முடித்து, ஜெயதேவர் மீண்டும் வந்து எழுத அமர்ந்தபோது, திடுக்கிட்டுப் போனார். அதே வரிகள். கண்ணன் சிரசில் ராதையின் பாதம். பத்மாவதி ஏதாவது எழுதிவிட்டாளா என மனைவியிடம் கேட்டாள். எண்ணெய்த் தலையுடன் வந்து எழுத்தாணி வாங்கி எழுதியது நீங்கள்தான் என, ஓலையில் இருந்த எண்ணெய்க் கறையைக் காட்டினாள் பத்மாவதி. ஜெயதேவருக்கு உண்மை புரிந்தது. கண்ணனே ராதை பாதத்தைத் தன் சிரசில் ஏற்கிறான். இது, பரம்பரையாகச் சொல்லப்படும் வழக்கு.

   

   

   

  கீதகோவிந்தம், கடவுளை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது. ராதை ஜீவாத்மா என்றும், தூது செல்லும் அவள் தோழி ஆசாரியனாகவும் உள்பொருள் வைத்துப் பாடப்பட்டது.

   

   

   

  அருணகிரிநாதர், 'மாதுகுறமகள், பாதம்வருடியமணவாளன்’ என்றும், ‘குவலயம் யாவும் போற்ற பழனையில் ஆலங்காட்டில் குறமகள் பாதம் போற்றும் பெருமாள்’ என்றும் முருகனைப் பாடுகிறார். வள்ளி ஜீவான்மா என்றும், முருகன் பரம்பொருள் என்பதும் தத்துவம். ‘பக்குவப்பட்ட ஆன்மாவின் பொருட்டு இறைவன் இரங்கிவந்த அருள் நிலையை இது அறிவிக்கிறது’ என்கிறார் வாரியார் சுவாமிகள். ஆக, கீதகோவிந்தத்திலும் திருப்புகழிலும், பரம்பொருள் தன் எல்லையற்ற அருளால், தன் காதலியான ஜீவாத்மாவை அவன் சிரசிலும் கால்வைக்கச் செய்து இன்புறுகிறான்.

   

   

   

  ஒரு தளத்தில், இவை அனைத்தும் நம் அகவாழ்வு மரபை ஒட்டியவை எனக் கருதலாம். சைவ சமய அறிஞர் முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி, பெண்ணின் முன் ஆண் தலைவணங்குவதையும், அதைப் பெண் ஏற்றுக்கொள்வதையும் தொல்காப்பிய மரபில் பொருத்திக் காட்டுகிறார்:

  மனைவியுயர்வுங்கிழவோன்பணிவும்

  நினையுங்காலைப்புலவியுள்உரிய…

  என்பது தொல்காப்பியம்.

  அவர் பார்வையில், இறைச் செயலாக இது மாறும்போது, அது விளக்கப்பட வேண்டிய ஒன்றாக மாறுகிறது.

  இல்லறம் நிகழும்போது, மனைவி தலைவனிடத்தில் காரணம் பற்றியோ அல்லது காரணத்தைக் கற்பித்துக்கொண்டோ ஊடுதலும், ஊடலைத் தணிக்க நாயகன், தன்னுடைய தலைமைப் பண்புக்கு மாறாக, அவளடியில் பணிதலும், அவன் அவ்வாறு பணியும்போது, அச்சமும் நாணமும் இன்றி நாயகனின் பணிதலை நாயகி ஏற்றுக்கொள்வதும், தலைவன் தலைவி இருவர்க்கும் உரிய என்பது இந்நூற்பாவின் கருத்து. இந்த ஊடலும், ஊடல் உணர்த்துதலும், காம இன்பத்தை அதிகப்படுத்தும் என்பர். ...சிவநெறியில், நாயக நாயகி பாவம்கொள்ளுதல் இல்லை. ...ஆயினும், சிவநெறிச் சான்றோர்கள் பத்தியுடன் அருளிய நூல்களில், உமையின் ஊடலைத் தணிக்க, சிவபிரான் அவள் அடியை வணங்கியதாகக் கூறப்படும் கவிச்சுவை கனிந்த கற்பனை மிகுந்த பல பாடல்கள் உள்ளன. அவை, சிவத்தின் பரத்துவத்துக்குக் குறையாகச் சைவ சித்தாந்திகள் கருதுவதில்லை.

  ஆதிசங்கரர், நம் மரபின் அக வாழ்க்கைச் சுவையாக இருக்கும் இந்த அழகிய செயல்பாட்டை, ஒரு அடிப்படை உயிரியக்கத்துடன் இணைக்கிறார். வெளியே பார்க்க, காதலனின் ஏக்கமாக இருக்கிறது – தேவியின் பாத உதை ஏற்கும் அசோக மரத்தைக் கண்டு சிவன் அடையும் அசூயை. (இதைப்போல ஒரு ஏக்கம், காளிதாசனின் மாளவிகாக்னிமித்ரத்தில் வருகிறது. அக்னிமித்ரன், அசோக மரத்தை மாளவிகா உதைக்கையில் ஏக்கமடைகிறான். ஆனால், சிவ சக்தி லீலையில், அதுவே ஆதி உயிரியக்கத்தின் படிமமாகிறது. சிவனது தலை மீது கால் வைக்கிறாள் தேவி. அவள் காலடி பட்டு அவன் மலர்கிறானா இப்பிரபஞ்சமாக?

   

   

   

  கொய்சிரோ மட்ஸுனோ (Koichiro Matsuno), உயிரி பொறியியலாளர். உயிரின் ஆதி தோற்றம் குறித்து ஆராய்ச்சிகள் செய்பவர். உயிர் எப்படி உருவானது என்பதற்கான அடிப்படைக் கேள்விகளுக்கான விடையைத் தேடும்போது, சாங்கியத்தைக் குறிப்பிடுகிறார். கால-சமத்தன்மையை இழக்கச்செய்யும் ஓர் அடிப்படை இயக்கம் – பருப்பொருள் சார்ந்தே உருவாக முடியும் என்கிற தரிசனத்தை அவர் சாங்கியத்திலிருந்து பெறுகிறார். சிவனை உதைக்கும் தேவியின் பாதம் ஏற்படுத்தும் மலர்தல் – உயிரின் ஆதி மடலவிழ்தலின் முதல் விரிசலினை ஏற்படுத்தியததன் படிமமாகவே இருக்கலாம். ஈஸ்வரன் - பிரகிருதி எனும் சாங்கிய இருமையில் என்பதில், பிரகிருதி செயலியக்கமற்ற ஒன்றாக இருக்க வேண்டியதில்லை என்பதை சாக்த மரபு சுட்டியது. மட்ஸுனோ, அளவை என்பது ஜடப்பொருளியக்கத்தில் மாறுபட்ட ஒன்றாக இருக்க வேண்டிய அவசியம் சாங்கிய தரிசனத்தில் இல்லை என்பதைச் சொல்கிறார். எனில், ஈஸ்வரன் பிரபஞ்சமாக மலரவைக்கும் உதை, பிரகிருதி ரூபமாகவும் இருக்கும் அன்னையிலிருந்து வந்த ஒன்றாக இருக்கலாம். சுவாரசியமான விஷயம் என்னவென்றால், காளி அவள் உக்கிர ரூபத்தில் காளியாக இருக்கும்போது, அவளின் பாதம் சிவன் மார்பு மேல் படுகையில் அவள் தன்னிலை அடைகிறாள்.

   

   

   

  காலச் சமநிலையில் ஏற்படும் விரிசலில் இருந்து உயிரியக்கம் ஆரம்பமாகிறது. பழம்பெரும் மலையாளக் கவிஞர் வயலார் ராமவர்மா, தம் புகழ்பெற்ற திரைப்பாடல் ஒன்றில், சாங்கிய தரிசனத்தின் பிரகிருதியும் ஈஸ்வரனும் தானும் காலத்தின் பிரதி ரூபங்கள் என்கிறார். வசந்தத்தையும் பாடும் பாடல் அது. வயலார் ராமவர்மா, இறை நம்பிக்கை அற்றவர்.

   

   

   

  https://youtube/RjxLCwPI7FA

  ஆக, நம் அக மரபு கண்டடைந்தது – தலைவின் பாதத்தைத் தலைவன் தன் மேல் வைத்தல் என்பது ஒரு மிகமிக அடிப்படையான உயிரியக்கத்தின் பிரதிபலிப்பு. அது, உயிரின் உதயத்தில் இருக்கிறது. தாவரங்களின் மலர்தலில் இருக்கிறது. காதலின் உச்சத்தில் இருகிறது. பரமாத்மாவுடன் ஜீவாத்மா இணையும் ஆன்மிகக் கோட்பாடுகளில் இருக்கிறது. நம்மைச் சுற்றி நம் அனைத்துச் சுழல்களிலும் இருக்கிறது.

   

   

   

  இதோ! புத்தாண்டாக சித்திரைப் பெண் வருகிறாள்! அவள் காலடி வைத்ததும், சரக்கொன்றை மலர்கள் மிளிர்கின்றன. மிளிர் கொன்றையை மின்னார் செஞ்சடை மேல் அணிந்தவன் சிவன். அப்போது, சித்திரைப் பெண் வைக்கும் காலடி, சிவன் தலைமேல் படுகின்றதா? எனில், அவள்தான் யார்? காலமும் வெளியுமாகி, பிரபஞ்சமாக உறைந்து எங்குமாகி நிற்கும் ஆற்றலின் பெண் உருவமே தானோ!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai