Enable Javscript for better performance
மயில் மக்களின் மௌன மரணம்- Dinamani

சுடச்சுட

  

  ஈராக்கில் உள்ள திகிரிஸ் ஆற்றின் குறுக்கே ஒரு அணையைக் கட்ட, 1985-ல் அந்நாட்டு அதிபர் சதாம் ஹுசைன் முடிவு செய்தார். அப்போது அவர் அமெரிக்காவால் சர்வாதிகார முத்திரை குத்தப்படவில்லை. இன்னும் சொன்னால், ஓரளவு அமெரிக்க ஆதரவு அவருக்கு இருந்தது. குர்திஷ் பகுதிகளில் சதாம் செய்த கொடுமைகள், ஊடகங்களில் அப்படிப் பிரபலப்படுத்தப்படவில்லை. அணைக்கட்டு கட்டுவதற்கான பொறுப்பு அலி ஹஸன் அல் மஜித் என்பவரிடம் அளிக்கப்பட்டிருந்தது. அவருக்குத் தெளிவான உத்தரவுகள் அளிக்கப்பட்டிருந்தன. இந்த அணைக்கட்டு கட்டப்படுவதற்காக அப்பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்களை அப்புறப்படுத்த வேண்டும். அப்படி அப்புறப்படுத்தப்பட்ட மக்கள் ‘அராபிய மய’ப்படுத்தப்பட வேண்டும்.

   

   

   

  யார் இந்த மக்கள்?

  அவர்கள் யஸுதிகள். அவர்கள் பேசுகிற மொழி குர்மன்ஜி என அழைக்கப்படுகிறது. அவர்களை அராபியர்களும் சரி, ஐரோப்பியர்களும் சரி, பொதுவாக அழைத்த பெயர் ‘பிசாசு வழிபாட்டாளர்கள்’. ஆனால் அவர்கள் வணங்குவது, மயிலில் ஆரோகணிக்கும் ஒரு தெய்வத்தை. அவர்களுக்கு தீயசக்தி, சைத்தான் போன்ற கோட்பாடுகள் எதுவும் இல்லை. இவர்கள் தம்மை குர்திஷ் பகுதியின் பூர்விகக் குடிகளெனக் கருதுகிறார்கள்.

  மயிலில் ஆரோகணிக்கும் தெய்வத்தை யஸுதிகள் வணங்குகிறார்கள். அவர்கள் தெய்வத்தை தீப ஒளியில் பார்க்கிறார்கள். அவர்கள் ஏற்றும் விளக்கு, நம் தமிழ்நாட்டில் ஏற்றப்படும் குத்துவிளக்கு போன்றே உள்ளது. அதன் உச்சியில் மயில் உள்ளது. அவர்கள் கோவில்களில் தீப ஆரத்தி எடுக்கப்படுகிறது. அவர்கள் கோவில் நம் கோவில்கள் போலவே கோபுர அமைப்பு கொண்டதாக உள்ளது. இந்தியா மட்டுமல்லாது, பாரசீக க்னாஸ்டிக் சமயங்களின் கூறுகளைக் கொண்ட ஒரு சமயமாக யஸுதிகளின் சமயம் உள்ளது. அடிப்படையில் இது இந்து மதம்போல ஒரு பாகனிய சமயம்தான்.

   

   

  யஸுதிகளின் லாலேஷ் ஆலயத்தில் தீட்டப்பட்டிருக்கும் ஓவியம்

  பல நூற்றாண்டுகளாக இம்மக்கள் தாம் சந்தித்த பல்வேறு சமயக்கூறுகளை உள்வாங்கி, சுதந்தரமான சமயப் பரிணாம வளர்ச்சி ஒன்றில் இம்மக்கள் வாழ்ந்திருக்கின்றனர். ஆனால், மதமாற்ற நோக்கம் கொண்ட சமயங்களின் ஆதிக்கம் மேலெழுந்தபோது, இவர்கள் ஒன்று மதம் மாற வேண்டும் அல்லது ஒடுக்கப்பட்ட மக்களாக வாழ வேண்டும் என்கிற நிலையைச் சந்தித்தனர். அதன்பின்னர் வந்த நூற்றாண்டுகள் அனைத்திலுமே இவர்கள் எண்ணற்ற அல்லல்களை அனுபவித்தனர். அவர்கள் கோவில்கள் உடைக்கப்பட்டன. அவர்கள் ஊர்கள் சூறையாடப்பட்டன. பெண்களும் குழந்தைகளும் அடிமைகளாக்கப்பட்டனர். ஆண்கள் கொல்லப்பட்டனர். தாம் வாழ்ந்த ஊர்களிலிருந்து தப்பி ஓடினர். இறுதியில், மலைப்பாங்கான பகுதிகளில் வசிப்பிடங்களை உருவாக்கிக்கொண்டு, இன்று ஒரு மிகச்சிறிய பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.

   

   

   

  மயிலின் மக்கள்

  துருக்கி கலீபாக்கள், அவ்வப்போது உருவாகும் பாலைவனப் போர் பிரபுக்கள், ஐரோப்பிய மிஷினரிகள் தொடங்கி, சதாம் ஹுசைன் இன்று ஐஸிஸ் வரை, இம்மக்களின் வாழ்க்கை கடந்த எட்டு நூற்றாண்டுகள் வெறும் கொடுமைகளாக மட்டுமே இருந்து வந்துள்ளது. அராபிய தீபகற்பத்தின் இறுதி பாகனிய மக்கள் இவர்களே.

  ஆனால், இம்மக்கள் சந்திக்கும் கொடுமைகள் குறித்து உலகம் பொதுவாகக் கண்டுகொள்ளவே இல்லை. தற்போதும் ஐஸிஸ் அமைப்பினால் மிகக் கொடுமையான பாலியல் சித்திரவதைகளுக்கு ஆளாகி அடிமைப்படுத்தப்படும் பெண்கள் யஸுதி இனத்தைச் சார்ந்தவர்களாவர். என்றபோதிலும், இது உலகின் மனசாட்சியையோ பெரும் ஊடகங்களையோ எவ்விதத்திலும் தட்டி எழுப்பவில்லை. மாறாக, சமூக வலைத்தளங்களே இம்மக்கள் படும் கொடுமைகளைக் குறித்த விழிப்புணர்வை நமக்கெல்லாம் ஓரளவாவது ஏற்படுத்தியுள்ளது.

  ஆனால் இப்படி எவராலும் கண்டுகொள்ளப்படாமல் அழிக்கப்படும் மற்றொரு இந்திய வம்சாவளி இனமும் உண்டு. ஈராக்கிய பாலைவனங்களில் அல்ல. ஐரோப்பியாவின் அனைத்து நாடுகளிலும் இன்றும் வெறுப்பையும் கொடுமைகளையும் சந்திக்கும் சமுதாயம் அது.

   

   

  ஜிப்ஸி / ரோமா மக்கள் : இந்திய வம்சாவளியினர்

  இரண்டாம் உலகப் போரில் நாசிகளால் திட்டமிட்டு அழிக்கப்பட்ட இனம், யூதர்கள். ஆனால், யூதர்கள் மட்டுமல்ல அப்படி திட்டமிட்டு இன ரீதியாக அழிக்கப்பட்டது. ஜிப்ஸிகள் எனப்படும் மக்களும் அப்படியே குறிவைத்து அழிக்கப்பட்டனர். ஜிப்ஸிகள் ஐரோப்பாவெங்கும் பரவிக் கிடக்கின்றனர். அவர்கள் தம்மை ரோமா என அழைக்கின்றனர். இவர்கள் இந்தியாவிலிருந்து, படையெடுப்புகளின்போது அடிமைகளாகப் பலவந்தமாகப் பல நாடுகளில் விற்கப்பட்டவர்கள். காளி - துர்க்கை வழிபாடு செய்பவர்கள். கன்யகுப்ஜம் எனும் பிரதேசத்தில் வாழ்ந்தவர்கள். சிறந்த கொல்லர்கள், தச்சர்கள், கைவினைஞர்கள், ஜோதிடர்கள். ஐரோப்பாவில் இவர்கள் பல்வேறுவிதமான கொடுமைகளை அனுபவித்து பிழைத்து வந்தனர். நாசிகளுக்கு முன்னரே, பல நூற்றாண்டுகளாக இம்மக்கள் நகரங்களில் நுழையக்கூடாது என்கிற கட்டுப்பாடுகள் ஐரோப்பா முழுக்க இருந்தன. இப்போதும்கூட, ஐரோப்பிய கிராமப்புறங்களில் இக்கட்டுப்பாடுகள் எழுதப்படாத விதிகளாக நிலவுகின்றன.

  நாசிகள் இவர்களை வதைமுகாம்களில் அடைத்தனர். ‘கீழான இனத்தவர்கள்’ எனக் கூறினர். நாசிகள், வதைமுகாம்களில் ஜிப்ஸிகளை கொன்றதோடு மட்டுமல்லாமல், ஜிப்ஸி குழந்தைகளை மிகக் கொடுமையான பல பரிசோதனைகளுக்கு ஆளாக்கினார்கள்.

   

   

  நாசிகளின் கொடும்-மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஜிப்ஸி குழந்தைகள்

  இன்று, யூதர்களின் படுகொலைக்கு உலகமெங்கும் நினைவுச்சின்னங்கள் உள்ளன. ஆனால், ரோமாக்களை நாசிகள் செய்த படுகொலைக்கு எவ்வித நினைவுச்சின்னமும் இல்லை. யூதர்களுக்கென்று இன்று ஒரு நாடு அமைந்துவிட்டது. நாசி படுகொலைகளுக்கும், யூதர்களுக்கு எதிராக ஐரோப்பாவில் நிலவிய கடுமையான மனப்பான்மையும் விதிகளும் இன்று பெரும்பாலும் பழங்கதைகள் எனலாம். ஆனால், ஜிப்ஸிகளை பொறுத்தவரையில் அவ்வாறல்ல.

  உதாரணமாக, பல்கேரியாவை எடுத்துக்கொள்வோம். அந்தத் தேசத்தின் மக்கள்தொகையில் பத்து சதவீதம் ரோமாக்கள்தான். அங்கு கடத்தப்பட்டு பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கப்படும் குழந்தைகளில் 80 சதவீதம் ‘ரோமா’ சமுதாயத்தைச் சார்ந்தவர்கள்தான். நாசி காலகட்டத்தில், ஐரோப்பாவின் ரோமாக்களில் 25 சதவீதத்தினர் கொன்றொழிக்கப்பட்டார்கள். கம்யூனிஸ்ட் ஆட்சியில் அவர்கள் தனி முகாம்களில் அடைத்து கொடுமைப்படுத்தப்பட்டனர். பிச்சை எடுக்கவைப்பது, போதை மருந்து கடத்தல் கும்பல்கள், கட்டாயப்படுத்தி குழந்தைகளை விற்கவைப்பது எனப் பல கொடுமைகளை இவர்கள் தொடர்ந்து ஐரோப்பாவில் அனுபவித்து வருகின்றனர்

  1972-ல், உகாண்டாவின் சர்வாதிகாரி இடி அமீன் ஒரு அறிக்கை வெளியிட்டார். பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின்போது அங்கே குடியேறிய இந்தியர்கள் மூன்று மாதங்களில் வெளியேற வேண்டும். இல்லாவிட்டால், அதன்பிறகு நடப்பதற்குத் தான் பொறுப்பல்ல. பின்னாட்களில், இந்த வெளியேற்ற அறிக்கையை வெளியிட அல்லா கனவில் கட்டளை இட்டதாக இடி அமீன் கூறினார். பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் வெளியேறினர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் பிரிட்டனில் குடி புகுந்தனர். சிலரை மட்டுமே அமெரிக்கா அனுமதித்தது. இன்று வரை 20,000 இந்தியர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவே இல்லை.

  ஈராக்கின் யஸுதிகள், ஐரோப்பாவின் ரோமா ஜிப்ஸிகள், உகாண்டாவின் இந்தியர்கள் – இவர்கள் அனைவரும் சந்தித்தவை / சந்திப்பவை பெரும் மானுட சோகங்கள். ஒருவிதத்தில், ஒட்டுமொத்த மானுடத்தின் மனசாட்சியை உலுக்கியிருக்க வேண்டிய சோகங்கள். ஆனால், ஏனோ இவை நடந்தது, இவர்களுடன் தொப்புள் கொடி உறவுடைய நமக்குக்கூட பெரிய பிரச்னையாகப் பதியவில்லை. இவர்களில் எவருக்காகவும் நாம் குரல் கொடுக்கவில்லை. உலக நாடுகளும் பெரிய அளவில் இதை பிரச்னையாக எடுத்துக்கொள்ளவில்லை.

  விஷயம் என்னவென்றால், உலகமெங்கும் இந்தியர்கள் பரவப் பரவ, இம்மாதிரி வெறுப்பையும் வன்முறையையும் இன ஒழிப்பையும் அவர்கள் சந்திக்கவேண்டி வரும். யூதர்கள் இத்தகைய வெறுப்பையே எதிர்நோக்கினார்கள். அவர்கள் இறுதியாக இதற்குப் பெரும் விலை கொடுத்து மீண்டார்கள். தம் மக்களில் அறுபது லட்சம் பேரை இழந்த பின்னரே இஸ்ரேல் என தமக்கென ஒரு தாயகம் இருப்பதன் அவசியத்தை உணர்ந்தார்கள்.

   

   

   

  யூதர்களும் பாரசீகர்களும் சிரிய கிறிஸ்தவர்களும் மதக் கொடுமைகளுக்குத் தப்பி இந்தியாவுக்கு வந்தபோது, அவர்களை இருகரம் நீட்டி வரவேற்ற தேசம் இந்தியா. பார்ஸிகள், ஈரானிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்தனர். அப்போது குஜராத் பகுதி அரசன், அவர்களின் தலைவர்களிடம் ஒரு கிண்ணம் நிறைய பாலைக் கொடுத்தான். இப்படி பால் நிறைந்திருப்பதுபோல என் நாட்டில் மக்கள் நிறைந்திருக்கிறார்கள். உங்களுக்கு நான் எப்படி இடம் அளிப்பது என வினவினான். அதற்கு பார்ஸி தலைவர் ஒரு பிடி சர்க்கரையை அந்தப் பாலில் இட்டார். பாலில் இந்த இனிப்பு கரைந்திருப்பதுபோல, நாங்கள் உங்கள் சமுதாயத்துடன் கலந்து அதை மேலும் இனிமையாக்குவோம் என சொன்னார். மகிழ்ந்துபோன மன்னன், பாரசீக பார்ஸிகள் அகதிகளாக அல்லாமல் பெருமைமிகுந்த குடிமக்களாக வாழ வழி செய்தான் என்பது பார்ஸிகள் மத்தியில் வழங்கப்படும் கதை.

  உலகமெங்கும், யூத வெறுப்பினை அந்தந்த நாடுகளில் வாழ்ந்த யூதர்கள் சந்தித்தனர். அவர்கள் மீண்டும் இஸ்ரேல் வந்தபோது, உலகநாடுகளில் பரவி வாழ்ந்த யூதர்கள் அவர்கள் சந்தித்த வெறுப்பையும் பட்ட கஷ்டங்களையும் சொன்னார்கள். ஆனால் இந்தியாவிலிருந்து வந்த யூதர்களுக்கு அப்படிச் சொல்ல எதுவும் இருக்கவில்லை. அது மட்டுமல்ல, அரசர்களே அவர்கள் வழிபடும் கோவில்களைக் கட்டிக்கொடுத்து, அதற்கு நில மானியங்களையும் அந்த வழிபாட்டுத் தலங்களைச் சுற்றி பாதுகாப்பும் அளித்திருந்தார்கள். 16-ம் நூற்றாண்டில்கூட, ஐரோப்பாவில் மதவெறியால் யூதர்கள் தாக்கப்பட்டபோது, அவர்கள் இந்தியாவுக்கு வந்து கேரளாவில் தங்கள் ஆலயத்தை அமைத்துக்கொண்டனர்.

  இதுதான் இந்தியாவின் பாரம்பரியம்

  இன்று உலகளாவியச் சூழலில், இப்பாரம்பரியத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி இந்தியா நகர வேண்டும். இந்தியா ஒரு உண்மையான வல்லரசாக அது தன் பண்பாட்டு வம்சாவளியினரையும் உலகின் பண்பாட்டு-இறையியல் பண்பாட்டு பன்மையையும் கொண்டாடி, அதைப் பாதுகாக்க குரல் கொடுக்கும் ஒரு தேசமாக தன்னை முன்னிறுத்த வேண்டும். இந்தியர்களுக்கு ஒரு தாயகம் இருக்கிறது. அதற்கு உலகமெங்கும் உள்ள தம் பண்பாட்டு உறவுகளுடன் ஒரு கடமை இருக்கிறது. அவர்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டிய கடப்பாடு உள்ளது. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, ரோமா / ஜிப்ஸி மக்களின் சர்வதேச மாநாடு ஒன்றை பாரதத்தில் கூட்டினார். அதை இன்னும் வலிமையாக, இன்றைய பிரதம மந்திரி முன்னெடுக்க வேண்டும். அத்துடன், யஸுதி மக்களின் உரிமைக்காக இந்தியா குரல் கொடுக்க வேண்டும். உண்மையில் யஸுதி, ஜிப்ஸி ஆகியோரைத் தாண்டி, உலகின் பூர்விகப் பண்பாடுகள் அனைத்துமே, அழிவையும் அபாயத்தையும் எதிர்நோக்கி இருக்கின்றன. அவை அனைத்துக்காகவும் இந்தியா குரல் எழுப்ப வேண்டும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai