Enable Javscript for better performance
வேதாந்த சிம்பன்ஸிகள்- Dinamani

சுடச்சுட

  

  வேதாந்த சிம்பன்ஸிகள்

  By அரவிந்தன் நீலகண்டன்  |   Published on : 27th May 2016 12:14 PM  |   அ+அ அ-   |    |  

  மனிதர்களைப் பிற விலங்குகளிடமிருந்து பிரிக்கும் அந்தக் கோடு எது? ஒரு காலத்தில், அந்தக் கோடு துல்லியமாகவும் திடமாகவும் இருந்தது. மனிதன் மேம்பட்டவன். மனிதன் சிந்திப்பவன். அவனுக்கு உணர்ச்சிகள் உண்டு. அவனுக்கு மதிப்பீடுகள் உண்டு. விலங்குகள் அவ்வாறல்ல. அவற்றுக்குச் சிந்திக்க முடியாது. அக-வாழ்வு என்பது நிச்சயமாக மானுடத்தையும் விலங்கினத்தையும் பிரிக்கும் தீர்க்கமான திடமான எல்லைக் கோடு. ஒரு காலத்தில், மனிதன் இறைவனின் சாயலாகப் படைக்கப்பட்டான் என்பதை அப்படியே நேரடிப் பொருள் கொண்ட ஒரு காலகட்டம் இருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில், கிறிஸ்தவ உயர் இறையியல் அதை மானுட அக உலகினைக் குறிப்பதாகக் கூறியது.

   

   

   

   

  அறிவியல் ஆழமடைய ஆழமடைய, இந்தத் திடமான கோட்டின் தீர்க்கத்தன்மை மங்குகிறது. நம் பரிணாமத் தாயாதிகளான பிற பேரினக் குரங்குகளை எடுத்துக்கொள்வோம் – சிம்பன்ஸிகள், ஒரங்குட்டான்கள் ஆகியவை. இங்கே இந்தத் துல்லிய வேறுபாடு ஏறக்குறைய பொருள் இழந்துவிட்டது என்றேகூட சொல்லலாம். இந்த எல்லைக் கோடு சிதைந்த கதையையும், எப்போதும்போல சார்ல்ஸ் டார்வினிடமிருந்துதான் தொடங்கியாக வேண்டும். மனிதனுக்கும் மற்ற விலங்குகளுக்குமான மன-செயல்பாடு என்பது கணிசமான விதத்தில், அளவில்தான் வேறுபாடு கொண்டதே தவிர, அதன் தன்மை அல்லது அடிப்படை இயற்கையில் வேறுபாடு கொண்டதல்ல என டார்வின் கருதினார். (1).

   

   

   

   

  மானுட அக-உலகம் என்பது இறைவனின் அருட்கொடை. அல்லது அவரது சாயலாக நம்மிடம் இருப்பது. அதுவே நம்மை சர்வநிச்சயமாக மற்ற விலங்குகளிலிருந்து மேம்படுத்துகிறது எனக் கருதிய விக்டோரிய மனநிலைக்கு, இப்படி ஒரு பார்வை எத்தகைய அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும் என்பது வெளிப்படை.

  ஆனால், அறிவியலாளர்களும் மனிதர்கள்தான். அவர்களுக்கும் தம் உயிரிக்குழுவான மானுடத்தின் தனித்துவ மேன்மையைப் பேணும் பார்வை இருப்பது புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றுதான். எனவே, அக-உலகம் என்பதை மானுடர்கள் அல்லாத பிற பேரினக்குரங்களில் (primates) கண்டாலும், அவர்கள் அதன் கூடவே மானுடத்தை தனித்துவமாக்குவது எது என்பதாகவே அவர்களுடைய தேடல் இருந்தது. நாமும் பிற உயிர்களிடமிருந்து தனியாக மேம்பட்டு நிற்கும் ஒரு தனித்தன்மையை விரும்பத்தான் செய்கிறோம்.

  கருவிகள் தொடங்கி மீண்டெழும் சமத்துவம்

  ஒரு காலத்தில் கருவிகள் செய்வது மானுடத்தை தனித்துவமாக மேம்படுத்துவதாகக் கருதினோம். ஜேன் குடால் சிம்பன்ஸிகளும் கருவிகளைப் பயன்படுத்துவதை ஐயங்களுக்கு அப்பாலாக நிரூபித்தார்.

   

   

   

   

  படம்: நன்றி பிபிசி

   

  பின்னர் மானுடத்துக்கே உரியதான அறி-திறன்கள் (cognitive skills) சிம்பன்ஸிகளில் இருக்க வாய்ப்பில்லை என்றோம். அப்படி இல்லை என பின்னர் நிரூபணமாகியது. அதைப்போலவே, பிறர் வலியை தன் வலியாக உணரும் empathy சிம்பன்ஸிகளிடம் இல்லை என ஒரு ஆராய்ச்சி முடிவு கூறியது.

  2005-ல் வெளியான ஆய்வு ஒன்று - சிம்பன்ஸிகள் சுயநலத்துடன் செயல்படுவதாகவும், மானுடத்தைப்போல தன்னியல்பில் சமூக நலன் விரும்பும் தன்மை – அதற்கு அடிப்படையான பிறரை தன்னைப்போல உணர்வது என்பது சிம்பன்ஸிகளிடம் இல்லை என அது சொன்னது. நாம் யாரென அறியாதவர்களுக்குக்கூட ரத்தம் கொடுப்போம். ஒரு கஷ்டமெடுத்து பிறருக்கு உதவுவோம். ஆனால், சிம்பன்ஸிகள் அப்படி அல்ல. தன் மிக நெருங்கிய உட்குழுவுக்குத்தான் அப்படி அவை செய்யும். (2)

  2003 முதல் 2007 வரையிலாக, சர்வதேச அளவில் நடைபெற்ற ஒரு பரிசோதனை, இந்த வகையில் முக்கியமானது. மானுடக் குழந்தைகளும் மற்ற பெருங்குரங்கின குழந்தைகளுக்கும் பல்வேறு வகை அறிதிறன் சோதனைகளை (multiple cognitive tests) அறிவியலாளர்கள் நடத்தினர். (இரு பெரும் ஆப்பிரிக்க வனச் சரணாலயங்களில் வாழும் 106 சிம்பன்ஸிகளுக்கும், இந்தோனேஷியாவில் உள்ள சரணாலயத்தில் வாழும் 32 ஒராங்குட்டான்களுக்கும், 105 மானுட சிசுக்களுக்கும் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன). இந்தப் பரிசோதனைகளின் விளைவுகள் அதிசயமாக இருந்தன. பொருட்களின் அளவுகள் சார்ந்த பரிசோதனைகள் (எது அதிகம் எது குறைவு என முடிவு செய்வது), காரண காரிய தொடர்புகளைப் புரிந்துகொள்வது ஆகிய தேர்வுகளில், சிம்பன்ஸிகளும் மானுடக் குழந்தைகளும் ஒரே மாதிரியான தேர்ச்சி நிலை அடைந்திருந்தார்கள். ஆக, அறிதிறன்கள் நமக்கு மட்டுமேயான விஷயம் என்றும் சொல்லிவிட முடியாது என்றாகிவிட்டது.

   

   

   

   

  இருந்தாலும், ஏதாவது ஒரு வேறுபாட்டையாவது கண்டுபிடித்தே ஆக வேண்டுமே… சரி, மானுடக் குழந்தைகள் அதிகத் தேர்ச்சி காட்டிய இடம் எது? சமூகச் செயல்பாட்டுக்கான அறி-திறன்களில் மானுடக் குழந்தைகள் அதிகம் தேர்ச்சி காட்டினார்கள்.

  ஆக, விஷயம் தெரிந்துவிட்டது இல்லையா? நம் பரிணாமத் தாயாதிகளான சிம்பன்ஸிகள், ஒரங்குட்டான்கள் ஆகியவற்றிலிருந்து எப்படி வேறுபட்டு தனித்து நிற்கிறோமென? இந்த ஒப்பீட்டுத் தேர்வுகளை நடத்தியது, மாக்ஸ் ப்ளாங்க் மையத்தின் உளவியல் துறை (Developmental and comparative psychology department at the Max Planck Institute). இத்துறையைச் சார்ந்த எஸ்தர் ஹெர்மானுக்கு (Esther Herrmann) ஐயமில்லை. இந்தச் சமூக-அறிதிறன்கள் (social cognitive abilities) நம்மைப் பிற விலங்குகளிலிருந்து தனித்துவமாக்கிடுகின்றன.

  இந்தச் சமூக அறிதிறன்கள் எங்குதான் மையம் கொண்டு இயங்குகின்றன? இந்தப் பரிசோதனையின் அடிப்படையில், மானுட தனியியல்பு குறித்து ‘சயின்டிஃபிக் அமெரிக்கன்’ இதழில் எழுதிய கேரி ஸ்டிக்ஸ் (Gary Stix), அவற்றின் மைய அச்சு பிறர் அக நிலையை உணர்ந்துகொள்ளும் ஒரு தனித்தன்மை என்கிறார் (‘a special capacity for engaging in figurative “mind reading” of another person’s thoughts’).

  ஸ்டிக்ஸ் ஒரு முக்கிய அவதானிப்பை முன்வைக்கிறார். ‘இன்றைய சிம்பன்ஸிகள் போலவே, ஆதி தொடக்க கால மனிதர்களும் தனிமனிதத் தேவைகள் அடிப்படையில்தான் ஒருவரோடு ஒருவர் தொடர்புகொண்டிருப்பார்கள். ஆனால், சிம்பன்ஸிகள் இந்தத் தொடர்புக்கான சைகைகளை இன்னும் பிற சிம்பன்ஸிகளுக்குக் கற்றுக்கொடுக்கவோ அல்லது (இளைய சிம்பன்ஸிகளுக்கு) கடத்தவோ செய்யவில்லை’. (3)

  சிம்பன்ஸிகள் ஏதோ ஒரு கட்டத்தில் தேங்கிவிட்டன. நாம் முன்னகர்ந்துவிட்டோம். ஆனால், தேங்கிவிட்டனவா அல்லது அந்தத் திறனே இயற்கையில் சிம்பன்ஸிகளுக்குக் கிடையாதா? இந்தச் சமூக அறிதிறன் என்பதும் அதன் மைய அச்சாக இருக்கும். பிறர் அக-நிலை (உணர்ச்சி அல்லது எண்ணம்) என்னவென உணரும் திறன் – empathy - நமக்கு மட்டுமே உரியதா? என்றால், நம்மைப் பிற விலங்குகளிடமிருந்து திட்டவட்டமாகப் பிரிக்கும் அந்தக் கோட்டை, அந்த வரையறை எல்லையை நாம் ஒரு அறிவியல் உண்மையாகவே கண்டடைந்துவிட்டோமா?

  கொட்டாவி தொடங்கி கண்மணி வரை

  ஆனால், இந்த வேறுபாடும்கூட தாக்குப்பிடிக்கவில்லை. கொட்டாவியால் வந்தது வினை. நாம் கொட்டாவி விட்டால், நம் அருகில் இருப்பவரும் கொட்டாவி விடுவது வழக்கம். 2009-ல், உளவியலாளர்கள் கொட்டாவி என்பது வெறும் தூக்கத்தின் வெளிப்பாடு மட்டுமல்ல, அது தனிப்பட்ட நபர்களிடம் இணைப்பை ஏற்படுத்தும் ஒரு அம்சமும் அதில் இருக்கிறது. இது ‘empathy’யால் வருகிறது என்று பொதுவாகக் கருதுகிறார்கள். இந்த முடிவும்கூட, சிம்பன்ஸிகளிலிருந்து பெறப்பட்ட விஷயம்தான். சிம்பன்ஸிகள் சிறு சமூகக்குழுக்களாக இயங்குகின்றன. சிம்பன்ஸிகள் கொட்டாவி விடும் ஒன்பது விநாடி வீடியோக்களை அவற்றுக்குக் காட்டும்போது கொட்டாவித் தொற்று ஏற்படுகிறது. இது, தன் சுய சமூகக் குழுவைச் சார்ந்த சிம்பன்ஸியின் வீடியோ என்றால், அதிகமும் அந்நியரென்றால் குறைவாகவும் உள்ளது. (4)

   

   

   

   

  இந்த ஆராய்ச்சியின் தொடர்ச்சியில் ஒரு அதிசயம் காத்திருந்தது. மனிதர்கள் கொட்டாவி விடும் காணொளிகளை சிம்பன்ஸிகளுக்குக் காட்டும்போதும் கொட்டாவித் தொற்று ஏற்பட்டது. தெரிந்த மனிதர்கள், தெரியாத மனிதர்கள் என்றெல்லாம் சிம்பன்ஸிகள் வேறுபாடு காட்டவில்லை. இது சொல்கிற விஷயம் என்னவென்றால், அந்நியரிடம் ‘எம்பதி’ காட்டுவதென்பதும், அந்நிய உயிர்களிடம் ‘எம்பதி’ காட்டுவதென்பதும் மானுடர்களுக்கு மட்டுமே உரிய ஒன்றல்ல. (5)

  கண்கள் இரண்டால்…

   

   

   

   

  ஆகஸ்ட் 2014-ல் ஒரு ஆராய்ச்சி முடிவு வெளியாயிருந்தது. சிம்பன்ஸிகளுக்கும் மனிதர்களுக்கும் மிக நுண்ணிய விஷயமொன்றில் இருந்த ஒற்றுமை குறித்த சமாசாரம் அது. உங்கள் கண்களின் கண்மணி (pupil) உங்களை அறியாமல் நீங்கள் பார்க்கும் மனிதரின் உள்விழியின் நிலையைக் கண்டடையும். அதாவது, உங்களுக்கு வேண்டிய ஒருவர் உங்களிடம் கண்கள் விரிய தம் உணர்ச்சியைக் கொட்டும்போது, நீங்கள் அறியாமலே, உங்கள் கண்களின் உள்விழி அவரது உள்விழியைப்போல விரியும். அல்லது உங்கள் நண்பர் காலில் முள் குத்தி அந்த வேதனையில் அவர் விழி விரிந்தால், உங்கள் கண்விழியும் விரியும். தன்னிச்சையாக, உங்கள் நனவுணர்வு இல்லாமல் அது நடக்கும். எம்பதி. இதே விஷயம் சிம்பன்ஸிகளிலும் நடைபெறுகிறது என்பதைத்தான் அந்த ஆராய்ச்சி கண்டடைந்திருந்தது. (6)

  இந்தக் கண்டடைவின் முக்கியத்துவம் என்ன? கண் அசைவுகள், கண்மணியின் அளவு மாற்றங்கள் கொண்டு, தன் எதிர் நிற்கும் தன் சக-உயிரினத்தவரின் அகநிலையைத் தான் அடைதல் – இவை சமூகப் பிணைப்புகளை உருவாக்குவதில் முக்கிய இடம் வகிக்கின்றன. நட்பும் நம்பிக்கையும் இந்த விதைகளிலிருந்து முளைத்து பெரும் விருட்சங்களாகின்றன. நான் உன் அக உணர்வை உணர்கிறேன் என்பது மட்டுமல்ல, அதை உனக்கு என் கண்களால் மிக நுண்ணிய விதத்தில் சொல்லவும் செய்கிறேன். இந்தச் சமூக அறிதிறன் – empathy - மானுடத்தில் மட்டும் அல்ல, சிம்பன்ஸிகளிலும் இருக்கிறது. (7)

  அப்படி என்றால், மானுடப் பரிணாமத்தில் நமக்கு மட்டுமே நிகழ்ந்ததாக நாம் கருதும் முன்னகர்வுகள் பிற உயிரினங்களிலும் நிகழக்கூடும்தான்.

  மரபணு மாற்றமா முகுர நியூரான்களா?

  மானுடப் பரிணாம வளர்ச்சியில், பண்பாட்டுப் பரிணாமம் - big-bang of human cultural evolution என்று சொல்லப்படும் நிகழ்வு அது - நம்மில் நிகழ்ந்த காலம் என்பது 40,000 ஆண்டுகளுக்கு முன்னால் என்கிறார்கள் தொல்-மானுடவியலாளர்கள். ஆனால், இன்றைய மானுட மூளையின் தன்மையை 2,00,000 ஆண்டுகளுக்கு முன்னால் நாம் வந்தடைந்துவிட்டோம். எனில், ஏன் இந்த 150,000 ஆண்டுகள் இடைவெளி? தொல் மானுடப் பண்பாடுகளை ஆராயும் ஸ்டீவ் மித்தென் (Steve Mithen), இது ஒரு மரபணு மாற்றத்தால் ஏற்பட்டதாக ஊகிக்கிறார். மனித மூளையில் மூன்று தனித்தனி விதச் செயல்பாட்டு அமைப்புகள் இருந்தன என்கிறார். ஒன்று, பகுப்பாய்ந்து அறிவதற்கென ஒரு தனியாக நியூரானிய அமைப்பு; மற்றொன்று, சமூக அறிவுத்திறனுக்கானது. இன்னொன்று, கருவிகளை உருவாக்கிப் பயன்படுத்தும் தன்மை கொண்டது. ஏதோ ஒரு காலகட்டத்தில் நிகழ்ந்த மரபணு மாற்றத்தால், இந்த மூன்றும் ஒருங்கிணையும் நிலை மானுடத்தில் ஏற்பட்டது. பின்னர் அதுவே பண்பாட்டுப் பரிணாம வளர்ச்சியை உருவாக்கி அதிவேக வளர்ச்சியை ஏற்படுத்தியது.

  ஆனால், இந்தத் தீர்வை மூளை ஆரய்ச்சியாளர் வி.எஸ்.ராமச்சந்திரன் மறுக்கிறார். பண்பாட்டுப் பரிணாமத்தை உருவாக்கும் தன்மை கொண்ட தகவமைப்புகள் (adaptations) ஏற்கெனவே மானுட மூளைகளில் உள்ளுறங்கிக்கொண்டிருந்தன (pre-adapted) என்கிறார் ராமச்சந்திரன். பின்னர் அவை புற-சூழலின் தாக்கத்தால் விழித்துக்கொண்டன. அவற்றுள் முதன்மையான ஒன்று, அப்படி உள்ளுறங்கிக்கொண்டிருந்த ‘மானுடத் தனித்தன்மை’ கொண்ட தகவமைப்புகளில் (uniquely human) முகுர நியூரான்களின் செயல்பாடு என்கிறார் ராமச்சந்திரன். (8)

  பிறரின் நோயைத் தன் நோயாகக் காணும் தன்மையான எம்பதியின் நியூரானிய அடிப்படை இந்த முகுர நியூரான்கள்தான். ஏற்கெனவே விழியால் பிறர் வலியைச் சொல்லும் வலிமையை சிம்பன்ஸிகளிலும் இருப்பதை நாம் பார்த்தோம். எனவே, எம்பதி என்பதும், முகுர நியூரான்களின் செயல்பாடுகள் என்பதும் மானுடத்துக்கே உரியவை எனச் சொல்லிவிட முடியாது. 1,50,000 ஆண்டுகள், மானுடத்தில் அவற்றின் செயல்பாடுகள் உள்ளுறைந்து துயின்றதுபோல, சிம்பன்ஸிகளிலும் அவை இப்போது துயில்கின்றன அல்லது ஏற்கெனவே மையம் கொண்டு இயங்குகின்றன எனக் கருதலாம்.

  ‘எம்பதி’யின் (empathy) பதி

  அதென்ன எம்பதி எம்பதி என்கிறோம்… அதற்கான நம்முடைய வார்த்தைதான் என்ன?

   

   

   

   

  ஸ்ரீ வைணவ ஆச்சாரியரான வேதாந்த தேசிகர், ‘ஸ்ரீ தயா சதகம்’ என்கிற மிக அழகிய துதிப் பாடல் ஒன்றை எழுதியிருக்கிறார். தயை என்பதே பரம்பொருளை இயக்குகிறது. சிருஷ்டியையும் பிரளயத்தையும் – முழுப் பரிணாம இயக்கத்தையும் நடத்தும் விசை தயையே என்கிறார். தயையின் பதியே பரம்பொருள். வைணவ மரபில் ஸ்ரீனிவாசனான விஷ்ணு. ஸ்ரீ தயா சதகத்தின் முதல் பாடலில், ‘அநுகம்பயா’ என்கிற பதத்தைப் பயன்படுத்துகிறார். வேத இலக்கியம் தொடங்கி, பகவத் கீதையிலும் (10:11), பௌத்த மரபிலும், பாகவதத்திலும் பின்னர் ஸ்ரீ வைணவத்திலும் பயன்படுத்தப்படும் இந்தப் பதத்துக்கு மிக அடிப்படையான பொருள், ‘இணைந்ததிர்வது’ (vibrate). பிறிதின் நோய் தன்நோய் போல் போற்றும் தன்மையே அநுகம்பை என அழைக்கப்படுகிறது.

  மானுடரின் இருளகற்றும் அறிவொளியாகப் பரம்பொருளே இருப்பது அநுகம்பையால் என்றும் கீதை கூறுகிறது. உண்மை அறிவின் பயனே, பிறர் வலியைத் தன்வலியாக உணர்தல் என குறள் சொல்கிறது. கீதைக்கும் குறளுக்கும் இருக்கும் ஒரு பொதுமை ஊற்றுக்கண் இது. அறிவின் மூல இயற்கையும் முடிந்த விளைவும் அநுகம்பை என்கிற empathyதான்.

  அநுகம்பையிலிருந்து அந்நியமின்மைக்கு

  அநுகம்பையின் நியூரானிய அடிப்படை முகுர நியூரான்கள். ஆனால், தனக்கும் ‘அடுத்தவருக்கும்’ இடையிலிருக்கும் அந்தக் கோடு அழியும் நிலை – விரிவாக்கம் நம் மரபில் அந்நியமின்மை எனப்படுகிறது. அதுவே இரண்டற்ற நிலை. எல்லா மதங்களிலும், பிறரைத் தன்னைப்போல் உணர்வது அடிப்படை சமய மதிப்பீடாக முன்வைக்கப்பட்டுள்ளது. ஆபிரகாமிய மதங்களில், அவை ‘நம்பிக்கையாளர்களிடம்’ என்று வலியுறுத்தப்படுகிறது. ஆனால், நம்பிக்கையாளர் - நம்பிக்கையற்றோர் என்பதைத் தாண்டி, ‘எல்லோரும் இன்புற்றிருக்க’ நினைக்கும் வட்ட விரிவும், அதையும் தாண்டி அனைத்துயிர்களையும் தன்னுயிராக – யாதுமாகி எங்கும் நிறைந்து நிற்கும் ஒருமையை உணர்தலும் அத்வைத வேதாந்தமே. முகுர நியூரான்களின் செயல்பாடு, இந்த நிலை நோக்கிய இயக்கமே. அக-விரிவடையும் எந்தச் செயல்பாடும், பிரிக்கும் கோடுகளைக் கடந்து விரியும் எந்த இயக்கமும் இருமை தாண்டிய உணர்விலிருந்தே பிறக்கின்றன.

   

   

   

  அர்னே நயீஸ்

  தன் உயிரின எல்லையைத் தாண்டி, அனைத்துயிர்களிலும் அநுகம்பையை (empathy) காணும் அத்வைத உணர்வுக்கு ஒரு பரிணாம முக்கியத்துவமும் உள்ளது. இன்று மானுடத்தை எதிர்கொள்ளும் சூழலியல் பிரச்னைகளுக்கான தீர்வு வெறும் தொழில்நுட்பத் தீர்வுகளாக மட்டும் இருக்க முடியாது. இயற்கையின் உள்ளார்ந்த மதிப்பை மானுடம் உணர்ந்துகொள்ள வேண்டும். இதனை ஆழ்-சூழலியல் (deep ecology) பார்வை என்கிறோம். இப்பார்வையின் பிதாமகர், அர்னே நயீஸ் என்பவர். காந்திய தாக்கம் கொண்ட இவர், காந்தியின் இப்பார்வை அவரது அத்வைதத்திலிருந்து வந்தது என்கிறார். மானுடம் மட்டுமல்லாது அனைத்துயிர்களையும் ஒன்றாகப் பாவிக்கும் அத்வைதம் காந்தியுடையது. மரபு சார்ந்த அத்வைதம் அதைத்தான் கூறுகிறதா என்ற கேள்வி எழலாம்.

  மரபு சார்ந்த அத்வைத அறிஞரும் தத்துவப் பேராசிரியருமான அனந்தனந்தன் ரம்பச்சன் ‘ஆம்’ என்கிறார். இறை என்பதே அனைத்து இருப்புக்குமான அடிப்படை ஒருமையை உணர்ந்திடுவதற்கான ஒரு திறப்பு எனக் கருதும் அவர், இயற்கை உலகுடனான ஒருமையுணர்வையும் எம்பதியையுமே அத்வைதம் கோரி நிற்கிறது என்கிறார். (9)

  இன்னொருவிதமாகச் சொன்னால், இறை என்பது முகுர நியூரானிய இயக்கத்தை அதிகரித்து அகத்தை விரிவடையச் செய்யும் ஒரு கருவி. மானுடத்தை அத்தகைய விரிவை நோக்கிக் கொண்டுசெல்லும் பரிணாம-பண்பாட்டு அமைப்புகளே மதங்கள் எனக் கருதலாம். அவற்றில் சில, வட்டங்களில் தேங்கி நின்றிருக்கலாம். ஆனால், தேக்கநிலை உடைத்து தொடர்ந்து இயங்கினால், வட்ட விரிவு ஏற்படத்தான் செய்யும். ‘தத் த்வமஸி’ (‘நீயே அது’ என்கிற உபநிடத வாக்கியம்) என்பது சரஸ்வதி நதி தீரத்தில் எழுவது மட்டுமல்ல, ஆயிரமாண்டுகளில் ‘அனல் கக்’ (‘நானே சத்தியம்’) என அராபிய மண்ணில் மன்சூர் அல் கலாஜ் என்கிற அராபிய ஞானி இந்தப் பிரகடனத்தைச் செய்தார். அதற்காக, கலீபாவால் தூக்கிலிடப்பட்டார். ஆனால், உணர்தல் அராபிய மண்ணிலும் எழும். அதற்குக் காலம் இடம் என்கிற பேதங்கள் இல்லை. பரிணாம காலமெனும் நதியோட்டத்தில், ஆயிரமாண்டுகள் மிகச் சிறிய துளி சிமிட்டல்தான்.

  அனைத்துயிரையும் தன்னுயிராக உணரும் அத்வைத அறிதல்கூட மானுடரால் மட்டுமே சாத்தியப்படுகிறது அதுவே மானுடரின் தனித்தன்மை என்று சொல்லிவிடலாமா? அப்படி திட்டவட்டமாக நாம் சொல்லிவிட முடியாது. ஏனெனில் அநுகம்பை (empathy) என்கிற விஷயம் உணரப்படுவதைத் தாண்டி, ‘நான் உணர்கிறேன்’ என வெளிப்படுத்தவும் சிம்பன்ஸிகளால் முடியும். எனவே, விரியும் அகமும் அதைத் தூண்டும் இறை வடிவங்களும் சிம்பன்ஸிகளிலும் ஆழத்துயில்கின்றன அல்லது மெல்ல விழித்தெழ ஆரம்பித்துள்ளன என நாம் கருதலாம். நம்மிலும் அவை 1,50,000 ஆண்டுகள் துயிலவில்லையா?

  மானுடம் (எப்படி) வென்றதம்மா…

  நாம் அப்படித் துயில் கலைந்து எழுந்தபோது ஒரு ஆதிபாவத்தை செய்துதான் நம்மை நிலைநாட்டினோமா என்கிற ஐயத்தை இன்று தொல்-மானுட ஆராய்ச்சிகள் உருவாக்குகின்றன. ஒரு காலகட்டத்தில், பிற மானுடத் துணைப் பிரிவுகள் இருந்தன. அவை ஆதி-தொல் காலத்தில் மானுடர்களால் ஒழிக்கப்பட்டன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். குள்ளமான Homo florensis, நியாண்டர்தல் மானுடர் (Homo neanderthalensis) ஆகியவை நம்முடன் சம காலத்தில் வாழ்ந்து நம்மால் அழிக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். மானுடத்தின் தலைவர்களான போல்பாட்டும், அடால்ப் ஹிட்லரும், மாசேதுங்கும், ஸ்டாலினும், அலெக்சாண்டரும், இப்படிப் பேரழிவுகளை சக மனிதர்களுக்கு நாட்டின் பெயரால், இனத்தின் பெயரால் நடத்தியிருக்கிறார்கள். அதுபோல, ஒரு இன அழிப்பை செய்துதான் மானுடம் தன்னை நிலைநிறுத்தியதா? (10)

  கார்ல் சாகன் அப்படிக் கருதுகிறார். தன்னுடைய ‘ஆதி தோட்டத்தின் பூத நாகங்கள்’ (Dragons of Eden) எனும் நூலில், மற்றைய மானுட வகைகளை நாம் கொன்றொழித்தோம் என்றும், இன்று நம் கதைகளில் வருகிற சித்திரக்குள்ளர்கள், பூதகணங்கள் போன்றவையெல்லாம் இந்த சக-மானுட வகைகள் குறித்த ஒரு தொல்நினைவோ என்று நினைப்பது சுவாரசியமாக உள்ளது என்கிறார். (11)

  இப்படி ஒரு படுகொலை, கடந்த காலத்தில் மட்டும்தான் நிகழ வேண்டும் என்றிருக்கிறதா என்ன? சிம்பன்ஸிகளுக்கு நம் மொழியை நாம் சொல்லிக்கொடுக்கிறோம். நம் உளவியல் ஆராய்ச்சியாளர்கள், மொழியின் தோற்றுவாய்களை அறியச் செய்யும் இந்த ஆராய்ச்சிகளால் என்ன நடக்கிறது? நம்மை அறியாமலே, நாம் சிம்பன்ஸிகளின் பண்பாட்டுப் பரிணாம வளர்ச்சிக்கான வினைஊக்கிகளாக, பிரசவ மருத்துவர்களாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கலாம். அப்போது, நாளை சிம்பன்ஸிகள் அறிவார்ந்த ஒரு பண்பாட்டை உருவாக்கினால் என்ன ஆகும்? அவர்களும் நம் தாயாதிகள்தானே! இப்புவியின் இயற்கை வளங்களில் தமக்கான பங்கையும் மானுட ஆணவத்தால் மறுக்கப்பட்ட நீதியையும் அவர்கள் கோரமாட்டார்களா? அப்போது நாம் என்ன செய்வோம்?

  நாம் அவற்றின் மீது புனிதப்போர் தொடுப்போமா? வல்லவன் வெல்லும்படி ஆகுமா?

  ஹாலிவுட் படங்கள் அப்படித்தான் ஊகிக்கின்றன.

   

   

   

   

  ஆனால் வேறொரு சாத்தியமும் இருக்கிறது. ராமாயண சாத்தியம்.

  சமீபகால ஆராய்ச்சிகள் அதைக் கோடிட்டுக் காட்டுகின்றன. அப்படி நியாண்டர்தல்கள் அழிக்கப்பட்டிருக்கவில்லை. மாறாக மானுடர் சமுதாயம் அவர்களை உள்ளிழுத்துக்கொண்டது. நாம் நியாண்டர்தல்களை கொல்லவில்லை. அழிக்கவில்லை. அவர்களுடன் பண்பாட்டு உறவு கொண்டோம். கலவி கொண்டோம். அவர்களை நாம் அழிக்கவில்லை. அவர்கள் நம்மில் கரைந்தார்கள். (12) நாம் அவர்களையும் உள்ளடக்கியவர்கள்தான். நம் மரபணுக்களில் 1 முதல் 4 விழுக்காடு, நியாண்டர்தல்களின் பங்களிப்பு உள்ளதென்று சொல்கிறார்கள்.

   

   

   

   

  நியாண்டர்தல்

   

  ராமாயண காவியத்தில் நாம் வானரர்களைச் சந்திக்கிறோம். அவர்களெல்லாம் திராவிடர்கள் என்கிற இனக் கோட்பாட்டை தள்ளிவைத்துவிட்டுப் பார்க்கலாம். வானரர்களை நமக்குச் சமமான அறிவும் பண்பாடும் கொண்ட ஒரு மாற்று உயிரினக்குழுவாக நாம் ஏன் பார்க்கக்கூடாது? ராமாயணம் அப்படி சொல்வது கற்பனை என்றுகூட வைத்துக்கொள்வோம். ஆனால், அப்படி ஒரு சாத்தியம் வால்மீகியின் இதயத்தில் உதயமாகியிருக்கிறதல்லவா! வால்மீகி மகரிஷியே கிரௌஞ்ச பறவையின் வேதனையை தன்னில் உணர்ந்துதானே ஆதி காவியத்தை எழுதத் தூண்டுதல் பெற்றார் என பரம்பரைக் கதைகள் நமக்குச் சொல்கின்றன. ராமன் அப்படித்தான் பார்த்தான் என்கிறார் மகரிஷி. வானரரை சமமானவராகப் பார்த்தான். மானுடப் பிரிவினரையும் சமமாகப் பார்த்தான். பின்னாட்களில் அவன் பரம்பொருளென பாரதப் பண்பாட்டில் உணரப்பட்டபோது ராமன் காட்டிய சம-பார்வை அநுகம்பையுடன் இணைக்கப்பட்டது.

   

   

   

   

  வேதாந்த தேசிகர் தயா சதகத்தில் இதைச் சொல்கிறார். படகோட்டியான குகனையும், வேட்டுவப் பெண்ணான சபரியையும், வானர அரசனான சுக்ரீவனையும் தனக்குச் சமமாகவே ராமன் பாவித்தான். மானுடப் பிரிவுகளையும் தாண்டி, மானுடரல்லாத வானரரையும் அவனால் சமமாகக் காண முடிந்தது. இல்லை அவன் பாவிக்கவில்லை. தயா தேவி அவனை அப்படி மாற்றினாள் என்கிறார். அவனை அவர்களுக்குச் சமமானவனாக ஆக்கினாள் என்கிறார். (13)

  பன்மையை வன்முறையால் அழிப்பது அல்ல, சமமான மரியாதையுடன் ஏற்பதும் மானுடரால் சாத்தியம். அதற்குத் தேவை தயை – அதன் அடிப்படையானது அநுகம்பை.

  மானுடர் ஓர் உயிரினமாக தோன்றி அழியலாம். ஆனால் மானுடம் என்பது அநுகம்பையில் வேர் கொண்டு விரியும் ஒன்றென்றால், அது சிம்பன்ஸிகளிலும் டால்பின்களிலும் தொடரக்கூடும். ராமனின் வெற்றியில் மானுடம் வென்றதம்மா எனக் கம்பன் சொன்னது இதைத்தானென்றால், கவி வாக்கு பொய்ப்பதில்லை. அப்போது நாளை என்ன ஆகும்? இப்படி ஊகிக்கலாமா?

  தென்திசை நோக்கி அந்நியமின்மையான அத்வைதம் சொல்லும் ஆலமர் செல்வன், மானுட வடிவினனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மானுடர்கள் மட்கி அழிந்துவிட்டபின் வரும் நெடுங்காலம் ஒன்றில், அவன் சிம்பன்ஸியாகவோ ஒராங்குட்டானாகவோ அமர்ந்திருக்கலாம், விரல்கள் இணையும் சின்முத்திரையுடன்.

  மேலதிக விவரங்களுக்கு

  (1) Charles Darwin, 'The Expression of Emotions in Man and Animals', 1872.

  (2) Joan B Silk, Chimpanzees are indifferent to the welfare of unrelated group members, Nature 437, 1357-1359, 27 October 2005

  (3) Gary Stix, The 'it' factor, Scientific American, September 2014

  (4) Matthew W. Campbell, & Frans B.M. de Waal (2011). Ingroup-Outgroup Bias in Contagious Yawning by Chimpanzees Supports Link to Empathy, PLoS ONE, 6 (4): 10.1371/journal.pone.0018283

  (5) Carl Engelking, Chimps Display Empathy By Catching Humans’ Yawns, Discover, March 12, 2014

  (6) Kret-et al, Chimpanzees and Humans Mimic Pupil-Size of Conspecifics, PLOS, August 20, 2014

  (7) Jyoti Madhusoodanan, Chimps Empath-eyes?, The Scientist, 25-August-2014

  (8) http://www.cogsci.ucsd.edu/~rik/courses/cogs1_w10/readings/ramachandran00.pdf

  (9) Anantanand Rambachan, 'The Value of the World as the Mystery of God in Advaita Vedanta', Journal of Dharma 14 (3):287-297 (1989)

  (10)http://theadvancedapes.com/20121016a-world-with-more-than-one-human-species/

  (11) Carl Sagan,Dragons of Eden, Ballantine, 1977,p.96

  (12) Charles Q. Choi, Humans Did Not Wipe Out the Neanderthals, New Research Suggests, Live science, 20-Aug-2014, (http://www.livescience.com/47460-neanderthal-extinction-revealed.html)

  (13) ஸ்வாமி வேதாந்த தேசிகர், ஸ்ரீ தயா சதகம் : பாடல் 65

  kattana sevai