அத்தியாயம் 4: இந்தியக் கல்வி தொடர்பான முதல் அதிகாரபூர்வ ஆவணங்கள்
By தரம்பால் - தமிழில்: B.R. மகாதேவன் | Published On : 13th October 2015 10:00 AM | Last Updated : 12th October 2015 12:26 PM | அ+அ அ- |

1813-ல் ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் நடைபெற்ற நீண்ட விவாதங்களின் பலனாக இந்திய பாரம்பரியக் கல்வியின் வீச்சு, இயல்பு (மற்றும் இன்றைய நிலை) குறித்து விரிவான தகவல்களைச் சேகரிக்க முடிவெடுக்கப்பட்டது. இந்தியாவில் மத, ஒழுக்கம் சார்ந்த மேம்பாட்டைக் கொண்டுவரவேண்டும் என்பதிலேயே இந்த விவாதங்கள் கவனத்தைக் குவித்திருந்தன. எந்தவொரு கொள்கையும் வகுக்கப்படுவதற்கு முன்பாக ஏற்கெனவே இருப்பதைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியமாக இருந்தது. ஆனால், இந்த ஆய்வுகளின் தரமும் வீச்சும் ஒவ்வொரு பிரஸிடென்ஸிக்கும் மாறுபட்டது. மாவட்டத்துக்கு மாவட்டம்கூட வேறுபட்டது (இப்படியான எந்தவிதத் தகவல்களைச் சேகரிக்கும்போதும், அதுவும் அப்படித் தகவல்களைச் சேகரிப்பதே முற்றிலும் புதிய செயல்பாடாக இருக்கும்போது, இப்படி வேறுபடுவது இயல்புதான்).
இப்படியான தகவல்கள் அவை அச்சிடப்பட்டவையாக இருந்தாலும் ‘மதராஸ் பிரஸிடென்ஸி பாரம்பரியக் கல்வி ஆய்வு’போல் அரசாங்க காப்பகத்தில் கையெழுத்துப் பிரதிகளாக இருந்தாலும் அவற்றில் பெரும்பாலானவை 1820கள், 1830களைச் சார்ந்தவையே. ஜி.டபிள்யூ லெய்ட்னர் மேற்கொண்ட அதிகாரபூர்வமற்ற ஆய்வுகள் 1882-ல் பஞ்சாபில் இருந்த கல்வியானது 1850-க்கு முன்பாக இருந்த கல்வியில் இருந்து எப்படி மாறுபட்டிருந்தது என்று ஒப்பிட்டு ஆராய்வதாக இருந்தன.
அந்த ஆய்வுகளின் முக்கிய அம்சங்கள் என்ன, எவ்வாறு ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் விரிவாகப் பார்ப்பதற்கு முன்பாக சில அடிப்படை அம்சங்கள் பற்றிப் பார்ப்போம்.
இந்த ஆய்வுகள் பற்றி முதலில் சொல்ல வேண்டிய விஷயம், அதன் எண்ணிக்கை பற்றியது. மேலும் இந்த ஆய்வுகள் இன்று பள்ளி என்று எதை நாம் சொல்கிறோமோ அது தொடர்பானது மட்டுமே. இது இந்திய பாரம்பரியக் கல்வி தொடர்பான தவறான மனப்பதிவை ஏற்படுத்திவிடக்கூடும்.
இந்திய பாரம்பரியக் கல்வியானது பாடசாலைகள், மதராஸாக்கள், குருகுலங்கள் போன்றவற்றின் மூலமாகவே தரப்பட்டுள்ளது. இந்த அமைப்புகளுக்கான நிதி ஆதாரமானது கல்வியறிவற்ற விவசாயிகள் உட்பட சமூகத்தின் அனைத்து தரப்பினரின் பங்களிப்பின் முலம் கிடைத்தது. கல்வி என்பது சமஸ்கிருதத்தில் சிக்ஷா (உள்ளொளி, நற்குணம், மெய்ஞானம் போன்ற கருத்தாக்கங்களை உள்ளடக்கியது) என்றழைக்கப்பட்டது. இந்தக் கல்வி அமைப்புகளே பாரம்பரிய சமூகங்களின் கலாசார மரத்துக்கு நீர்வார்க்கும் வாய்க்கால்களாகச் செயல்பட்டன. எனவே, பள்ளி என்று இன்று நாம் சொல்லும் நவீன அமைப்பு அன்றைய பாரம்பரியக் கல்வி அமைப்பின் பலவீனமான பிரதிநிதியே.
எனவே, பிரிட்டிஷ் ஆவணங்களில் இடம்பெற்றிருக்கும் கல்வி அமைப்பு தொடர்பான எண்ணிக்கையைக் கொஞ்சம் கவனத்துடனே எடுத்துக்கொள்ளவேண்டும். இங்கிலாந்தில் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது நல்ல விஷயம்தான் என்று உறுதியாகச் சொல்லிவிடமுடியாது. ஏனென்றால், அது தொழிற்சாலைப் பள்ளிகளே. அதேநேரம் இந்திய பாரம்பரிய கல்வி மையங்களின் சிதைவு என்பது கூடுதல் அக்கறையுடனும் வேதனையுடனும் கணக்கில் கொள்ளப்படவேண்டிய விஷயம். ஏனென்றால், தரமான கல்விக்கு மாற்றாக பலவீனமான கல்வி நிறுவனங்களின் பெருக்கத்தை அது காட்டுகிறது. எனவே, இந்தத் தகவல்களை நாம் ஆராய்வதற்கு முன்பாக இந்த விஷயத்தை மனதில்கொள்ளவேண்டும். அதற்கு முன்பாக முக்கிய அம்சங்கள் முதலில்.
கல்வி தொடர்பான ஆய்வுகளில் மிகவும் புகழ் பெற்றதும் அதிக சர்ச்சைக்குள்ளானதுமான கருத்து வில்லியம் ஆடம்மினால் சொல்லப்பட்டதுதான். அவர் தன்னுடைய முதல் அறிக்கையில் 1830களில் வங்காளம் மற்றும் பிகார் பகுதிகளில் சுமார் 1,00,000 பள்ளிகள் இருந்ததாகத் தெரிவித்திருக்கிறார். இந்தக் கூற்றானது பல்வேறு இந்தியப் பகுதிகளை நெருக்கமாகவும் நீண்ட காலமாகவும் தெரிந்துவைத்திருந்த பிரிட்டிஷ் அதிகாரிகளின் மனப்பதிவுகளில் இருந்து சொல்லப்பட்டிருக்கிறது. இந்தக் கருத்துக்கு எந்த ஆவண ஆதாரமும் இல்லை. தாமஸ் மன்ரோ போன்றவர்கள் இதுபோன்ற கருத்தை முன்பே தெரிவித்திருக்கிறார்கள். மதராஸ் பிரஸிடென்ஸியில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பள்ளி இருந்தது என்று கூறியிருக்கிறார். ‘1820களில் விரிவாக்கப்பட்ட பாம்பே பிரஸிடென்ஸியில் சிறிய கிராமமானாலும் பெரிய கிராமமானாலும் ஒரு கிராமத்துக்குக் குறைந்தது ஒரு பள்ளியாவது உள்ளது. பெரிய கிராமங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பள்ளிகள் இருக்கின்றன’ என்று ஜி.எல். பிரெண்டெர்கஸ்ட் போன்ற மூத்த அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். 1882 வாக்கில் டாக்டர் ஜி.டபிள்யூ லெய்ட்னரின் கூற்றுப்படி 1850 வாக்கில் பஞ்சாப் பகுதிகளில் பள்ளிகளின் எண்ணிக்கை இதற்கு இணையாக இருந்ததாகவே குறிப்பிட்டிருக்கிறது.
இந்தக் கூற்றுகள் அவை சொல்லப்பட்ட காலத்தில் இருந்தே வெவ்வேறுவகையிலேயே எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன. சிலரால் அது வேதம்போல் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. சிலரால் அது ஆதாரமற்ற பொய்யுரையாகக் கருதப்பட்டிருக்கிறது. இயல்பாகவே, முதல் வகைக் கருத்தானது வளர்ந்து வந்த இந்திய தேசியவாதத்தின் அங்கமாகத் திகழ்ந்தது. 19-ம் நூற்றாண்டின் பிந்தைய மற்றும் 20-ம் நூற்றாண்டின் முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த முக்கிய இந்தியர்கள், புகழ் வாய்ந்த ஆங்கிலேயர்களான கெர் ஹார்டி, அறிஞர்கள் மாக்ஸ் முல்லர் போன்றவர்கள் இந்தக் கருத்தை முன்வைத்தனர். இரண்டாவதுவகைக் கருத்தை முன்வைத்தவர்கள் ஏதோ ஒருவகையில் பிரிட்டிஷ் இந்திய ஆட்சி நிர்வாகத்தோடு தொடர்புடையவர்களாகவே இருந்தனர். அல்லது சமூக வளர்ச்சி தொடர்பான சில கருத்தாக்கங்களோடு கொண்டிருக்கும் நெருக்கம் காரணமாக இந்தத் தகவல்கள் எல்லாம் பொய் என்று சொல்லியாக வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தனர். அதிலும் குறிப்பாக 1860க்குப் பிறகு இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிப் பணியில் நீண்ட காலம் இருந்தவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியை நியாயப்படுத்தவேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். குறிப்பாக அதன் தொடக்க கால கொள்கைகளை நியாயப்படுத்தியே ஆக வேண்டிய கட்டாயம் இருந்தது. எனவே, ‘இந்திய பாரம்பரியக் கல்வியை பிரிட்டிஷ் கொள்கைகள் அழித்தன’ என்ற கருத்தை முன்வைக்கும் தரவுகளை அவர்கள் முற்றாக மறுத்தனர்.
இந்தப் பிரச்னை குறித்து நிறையவே எழுதப்பட்டுவிட்டிருக்கின்றன. ஆனால், அந்தக் கூற்றுகளையோ கணிப்புகளையோ அவை சொல்லப்பட்ட காலகட்டத்தையும் இடத்தையும் வைத்து மதிப்பிடப்பட்டிருக்கவே இல்லை. லெய்ட்னியரின் எழுத்துகளைத்தவிர எஞ்சிய பெரும்பாலான ஆய்வுகள் எல்லாமே 19-ம் நூற்றாண்டின் ஆரம்ப பத்தாண்டுகளைச் சேர்ந்தவையே. அதற்குப் பிந்தைய காலகட்டத்து பிரிட்டிஷ் நிர்வாகி ஒருவருக்கு முந்தைய அந்தத் தரவுகளை ஏற்க முடியதென்பதை ஒருவர் நிச்சயம் புரிந்துகொள்ள முடியும். ஏனென்றால், 1800 களில் இங்கிலாந்தில் ஏழை மாணவர்களுக்கென்று சொற்ப பள்ளிகள் மட்டுமே இருந்தன. பெரும்பாலான நடுநிலைப் பள்ளிகள்கூட மிகவும் மோசமான நிலையிலேயே இருந்திருக்கின்றன. மேலும் இந்தியாவைப்பற்றி எழுதியவர்கள் (அவர்கள் கல்வியைப் பற்றி எழுதியிருந்தாலும் தொழில் துறை கைவினைத் தொழில்கள் பற்றியானாலும் பிரிட்டிஷ் தொழிலாளர்களோடு ஒப்பிட்டு இந்திய விவசாயத் தொழிலாளர்களின் கூலி பற்றி எழுதியிருந்தாலும்) எல்லாரும் 18-ம் நூற்றாண்டின் பிந்தைய மற்றும் 19-ம் நூற்றாண்டின் முன்பகுதியைச் சேர்ந்தவர்களே. எனவே, இந்தியாவில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பள்ளி இருந்தது என்று அவர்கள் எழுதியது வார்த்தைக்கு வார்த்தை அப்படியே உண்மையாக இருந்திராவிட்டாலும் பிரிட்டனுடைய நிலையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவர்களுக்கு அப்படித் தோன்றியிருக்கும். அவர்கள் இப்படி ஒப்பிட்டுத் தமது ஆய்வு முடிகளைச் சொல்லியிருக்கவில்லை என்றாலும் முற்றிலும் மாறுபட்ட அந்தச் சூழலே அப்படிச் சொல்ல வைத்திருக்கும் என்று ஒருவர் எடுத்துக்கொள்ளலாம்.
வெறும் மனப்பதிவுகளின் அடிப்படையில் அல்லாமல் விரிவான தரவுகளின் அடிப்படையில் சொல்லப்பட்டிருக்கும் இந்த ஆய்வுகள் எல்லாமே பல உண்மைகளைத் தெரிவிக்கின்றன. இந்திய பாரம்பரியக் கல்வியின் இயல்பு; அதில் கற்றுத் தரப்பட்ட பாடங்கள், கல்விப் பருவம்; நிறுவனமயப்பட்ட கல்வியைப் பெற்றவர்களின் எண்ணிக்கை, மிக முக்கியமாக அந்தக் கல்வியைப் பெற்றவர்களின் சமூகப் பின்புலம் எனப் பல அரிய உண்மைகளை அவை தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பள்ளி என்ற சித்திரம் மிகவும் அபாரமானது. அது மிகப் பெரும் அளவில் அனைவரது கவனத்தையும் கவர்ந்தது. கூடவே பிற அனைத்து முக்கிய தகவல்களையும் அது இருட்டடிப்பும் செய்துவிட்டது. மிகவும் விரிவாக ஆராய்ந்து சொல்லப்பட்ட பிற கருத்துகள் உரிய கவனத்தைப் பெறாமலேயே போய்விட்டன. மிகவும் இயல்பான அதேநேரம் துரதிஷ்டவசமான நிலை இது. ஏனென்றால் பிற கருத்துகள் இந்திய சமுதாயம் குறித்த மிக முக்கியமான சித்திரத்தைத் தருகின்றன. இந்தத் தரவுகளை விரிவாக ஆராய்ந்து பார்த்துப் புரிந்துகொண்டு மேலும் தேவையான சில ஆய்வுகளை மேற்கொண்டால் ‘லட்சம் பள்ளிகள்’ என்ற புதிர்கூட அவிழ வாய்ப்பு உண்டு.
இந்தத் தரவுகளின் அடிப்படையில் பார்த்தால், 1800 களில் இந்தியாவில் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கையும் கற்றுத் தரப்பட்ட பாடங்களும் பிரிட்டனில் அந்தக் காலகட்டத்தில் இருந்ததைவிட எந்தவகையும் குறைந்ததல்ல என்பது நன்கு புரியவரும். மேலும் பெரும்பாலான விஷயங்களில் இந்தியக் கல்வி பிரிட்டனைவிடப் பல மடங்கு மேலானதாக இருந்திருக்கிறது (இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டபோது இந்திய பாரம்பரியக் கல்வி அமைப்பானது பிரிட்டிஷாரின் தவறான கொள்கைகளால் வெகுவாக சிதைக்கப்பட்டுவிட்டிருந்தது. அந்த இந்தியாவைப் பற்றித்தான் இந்தத் தகவல்கள் பேசுகின்றன). பிரிட்டனில் அப்போது கற்றுத் தரப்பட்ட பாடங்களைவிட இந்தியாவில் கற்றுத் தரப்பட்ட பாடங்கள் உயர்வாக இருந்திருக்கின்றன. கல்வி கற்கும் கால அளவு பிரிட்டனைவிட வெகுவாக அதிகமாகவே இருந்திருக்கிறது. கற்றுக் கொடுக்கும் முறையும் மேலானதாக இருந்திருக்கிறது. இந்தியாவில் இருந்த வழிமுறையே இங்கிலாந்தில் அனைவருக்குமான கல்வியைக் கொண்டுவர வழிகாட்டியிருக்கிறது. ஆனால், அது இந்தியாவில் அதற்கு முன்பே பல நூற்றாண்டுகளாக இருந்திருக்கிறது. பள்ளிக்கு வருபவர்களின் எண்ணிக்கை மிகவும் சிதைந்த நிலையில் இருந்த 1822-25 காலகட்டத்தில்கூட மதராஸ் பிரஸிடென்ஸியில் படித்தவர்களின் எண்ணிக்கையானது 1800களின் இங்கிலாந்து பள்ளிகளோடு ஒப்பிடும்போது பலமடங்கு அதிகமாகவே இருந்திருக்கிறது. இந்தியாவில் பள்ளிச் சூழல் மிகவும் இயல்பானதாகவும் நெருக்கடிகள் இல்லாததாகவும் இருந்திருக்கிறது. இங்கிலாந்து ஆசிரியர்களைவிட இந்தியப் பள்ளிகளின் ஆசிரியர்கள் அர்ப்பண உணர்வும் பொறுப்பும் மிகுந்தவர்களாக இருந்திருக்கின்றனர். இந்திய பாரம்பரியக் கல்வி ஒரு விஷயத்தில் மட்டும் வெகுவாகப் பின்தங்கியிருந்தது. அது மிகவும் முக்கியமான அம்சமும்கூட. அதுதான் பெண்களுக்கான கல்வி.
1800களில் இங்கிலாந்தில் கல்வி கற்ற பெண் குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில் கல்வி பெற்ற பெண் குழந்தைகளின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருந்திருக்கக்கூடும். பல பத்தாண்டுகளுக்குப் பிறகு நிச்சயமாக அப்படியாக ஆனது. கல்வி தொடர்பான ஆய்வுகள் எல்லாமே இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கு வீடுகளில் கல்வி தரப்பட்டது. பள்ளிகளில் அவர்களுடைய எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கான காரணத்தை ஒருவர் இதிலிருந்து புரிந்துகொள்ளலாம் என்றே சொல்லியிருக்கின்றன (எனினும் இந்தக் கூற்று எந்த அளவுக்கு நம்பகமானது என்பதை நிரூபிப்பது கடினமே).
மதராஸ் பிரஸிடென்ஸி மற்றும் பிஹார் - வங்காளத்தின் தரவுகள் ஒரு மாபெரும் கண்டுபிடிப்பாகவே இருக்கின்றன. அந்தத் தரவுகள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பின்புலத்தை விவரிக்கின்றன. கடந்த 100க்கும் மேற்பட்ட ஆண்டுகளில் அறிவார்ந்த தளங்களில் சொல்லப்பட்டுவரும் கருத்துக்கு முற்றிலும் மாறானதாக அந்த தரவுகள் இருக்கின்றன.
அதாவது இந்துக்களில் இரு பிறப்பாளர்களுக்கு (பிராமணர், சத்ரியர், வைசியர்களுக்கு) மட்டுமே கல்வி தரப்பட்டது; இஸ்லாமியர்களில் செல்வந்தர்களுக்கும் மேல் வர்க்கத்தினருக்கும் மட்டுமே கல்வி கிடைத்தது என்ற கூற்றை அந்தத் தரவுகள் வலுவாக மறுக்கின்றன. பிரிட்டிஷ் ஆவணங்கள் மாறுபட்ட சித்திரத்தை நமக்கு அளிக்கின்றன.மதராஸ் பிரஸிடென்ஸியில் இருக்கும் மாவட்டங்களிலும் (தமிழ் பேசப்படும் பகுதிகளில் மிக அதிகமாக) பீஹாரில் இரண்டு மாவட்டங்களிலும் இருக்கும் இந்துக்களைப் பொறுத்தமட்டில் இந்தத் தரவுகள் முற்றிலும் மாறுபட்ட சித்திரத்தைத் தருகின்றன. சூத்திரர்கள் மற்றும் அவர்களுக்குக் கீழே இருக்கும் சாதிகளைச் சேர்ந்த மாணவர்களே அப்போது இருந்த பாரம்பரிய இந்துக் கல்வி மையங்களில் பெரும்பான்மையாக இருந்திருக்கிறார்கள்!
கடைசித் தரவு உண்மையாக இருக்கவேண்டுமென்றால் பிரிட்டிஷாருக்கு முந்தைய இந்தியாவில் பொருளாதார நிலைமை அந்த அளவுக்கு மேம்பட்டதாக இருந்திருக்கவேண்டும். இந்த வருமான மூலங்கள் பல்வேறு பணிகளுக்காக இந்திய சமூகத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அந்த அமைப்பு அதற்கு முந்தைய அனைத்து அரசியல் நெருக்கடிகளையும் சமாளித்துத் தாக்குப்பிடித்து வந்திருக்கிறது. அதுவே கல்வி அமைப்பு செவ்வனே தொடர வழிகோலியிருக்கிறது என்பவையெல்லாம் இதில் இருந்துதெரியவருகின்றன. பிரிட்டிஷாரின் ஆட்சிக் காலத்தில் வருமானமானது மைய அதிகாரத்தின் கீழ் குவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தப் பாரம்பரிய அமைப்பு சிதைந்து அழிந்துவிட்டது. அதோடு அரசியல் செயல்பாடுகளும் பொருளாதாரம், சமூக வாழ்க்கை, கல்வி ஆகியவற்றை அழியவைத்துவிட்டது. இந்தக் கூற்று உண்மையென்றால் அது பிரிட்டிஷாருக்கு முந்தைய இந்தியாவின் அரசியல், சமுதாயக் கட்டமைப்பு குறித்து தற்போது சொல்லப்பட்டுவரும் பல்வேறு கருத்துகளை மறுபரிசீலனை செய்ய வைக்கும்.
கடைசி விஷயத்தைப்பற்றிக் கூடுதலாகப் பார்ப்பதற்கு முன்பாக, 1930களில் உருவான சர்ச்சைகள் மற்றும் கல்வி தொடர்பான தரவுகளின் பல்வேறு அம்சங்கள் இவற்றை நாம் புரிந்துகொள்ளவேண்டும். மதராஸ் பிரஸிடென்ஸி தொடர்பான தரவுகளே அதிகம் தெரியாததாகவும் மிகவும் விரிவானதாகவும் இருப்பதால் அதை முதலில் பார்ப்போம்.