அத்தியாயம் 2: பிரிட்டிஷ் கல்வியின் சுருக்கமான வரலாறு
By தரம்பால் - தமிழில்: B.R. மகாதேவன் | Published On : 29th September 2015 10:00 AM | Last Updated : 28th September 2015 03:34 PM | அ+அ அ- |

இந்திய வரலாற்று அறிவு பெருமளவுக்கு, வெளிநாட்டினரால் எழுதப்பட்டவற்றில் இருந்தே உருவாக்கப்பட்டுள்ளது; மிகச் சமீப காலம்வரையிலும் அதுதான் நிலைமை. கடந்த ஐநூறு ஆண்டுகளாக இந்தியாவில் கல்வி வரலாறு குறித்தும் அவற்றிலிருந்தே தெரியவந்துள்ளது. நாலந்தா, தட்சசீலா பல்கலைக்கழகங்கள் பற்றி நமக்கு நிறையத் தெரியவந்திருப்பதற்கு அவைபற்றி நூற்றாண்டுகளுக்கு முன்பாக சில கிரேக்க, சீன யாத்ரிகர்கள் எழுதியிருந்ததுதான் காரணம். அவர்கள் எழுதி வைத்தவை கால வெள்ளத்தில் அழியாமல் தாக்குப் பிடித்திருக்கின்றன. அல்லது தாம் பார்த்தறிந்தவற்றைத் தமது சக பயணிகளுடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் மூலம் அது கால வெள்ளத்தை நீந்திக் கடந்து நம்மை வந்தடைந்திருக்கிறது.
கி.பி. 1500 வாக்கில் யாத்ரிகர்கள், புதிய பகுதிகளைத் தேடிச் செல்லும் ஆர்வம் மிகுந்தவர்கள் என பலர் இந்தியாவின் பல பாகங்களில் உலவ ஆரம்பித்திருந்தனர். 16-ம் நூற்றாண்டின் முடிவுவாக்கில் அவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அவர்கள் எந்தப் பகுதிகளில் இருந்து வந்தார்களோ அவற்றுக்கு இந்தியாவுடன் அதற்கு முன்புவரை எந்தத் தொடர்பும் இருந்திருக்கவில்லை. அவர்கள் வசித்த இடங்களின் தட்பவெப்பநிலை, சமுதாய அமைப்பு போன்றவை இந்தியாவிலிருந்து முற்றிலும் மாறுபட்டவையாக இருந்தன. எனவே அவர்களுக்கு இந்தியாவின் பழக்கவழக்கங்கள், மதங்கள், தத்துவங்கள், பழங்கால சமகால கட்டடக்கலைகள், செல்வச் செழிப்பு, கல்வி, கற்கும் முறைகள் போன்ற எல்லாமே புதிதாக, வித்தியாசமானவையாக இருந்தன. அவர்களுடைய பின்புலம், அனுபவங்கள், அனுமானங்கள் ஆகியவற்றுக்கு முற்றிலும் மாறுபட்டதாக இந்தியா இருந்தது.
1770க்கு முன்பாக (இந்தக் காலகட்டத்தில் அவர்கள் இந்தியாவின் ஆட்சியாளர்களாகிவிட்டிருந்தனர்) இருந்த பிரிட்டிஷாரின் நோக்கங்கள் முற்றிலும் வேறானதாக இருந்தன. அவர்களுடைய ஆய்வுகள், எழுத்துகள் ஆகியவற்றையே இந்த நூல் ஆதாரமாகக் கொண்டிருக்கிறது. இந்த நோக்கங்கள் (இதைத்தொடர்ந்த காலகட்டங்களிலும்) பெரிதும் வர்த்தகம், தொழில்நுட்பம் ஆகியவற்றைச் சார்ந்ததாகவே இருந்தன. இந்தியக் கைவினைக் கலைகளைப் புரிந்துகொள்ளுதல் அவற்றை மதிப்பிடுதல் என்பதாகவே அவை இருந்தன. அப்படித் தெரிந்துகொள்வதன் மூலம் இந்தியாவில் அவர்களுடைய செல்வாக்கு, ஆதிக்கம் ஆகியவற்றை அதிகப்படுத்தலாம் என்ற நோக்கில் அப்படிச் செயல்பட்டனர். அவர்களில் சிலர் பார்ஸிக்கள் அல்லது சூரத்தின் பனியாக்கள்பற்றி எழுதியிருக்கிறார்கள் என்றாலும் இந்திய மதங்கள், தத்துவங்கள், ஆய்வுகள், கல்வி அமைப்பு ஆகியவைகுறித்து அவர்களுக்கு அதுவரை பெரிய அக்கறை எதுவும் இருந்திருக்கவில்லை.
அப்படியான அலட்சியத்துக்கு ஒருவகையில் இந்தியாவிடமிருந்து அவர்களுடைய எதிர்பார்ப்பு என்னவாக இருந்தது என்பதே காரணம். சரியாகச் சொல்வதானால், அந்தக் காலகட்டத்து பிரிட்டிஷ் சமூகம் அதுபோன்ற விஷயங்களில் அக்கறை இல்லாமல்தான் இருந்தது. 18-ம் நூற்றாண்டின் பிந்தைய பகுதியில் மதம், தத்துவங்கள், கல்வி, கற்றல் போன்றவற்றில் பிரிட்டிஷார் உள்ளொடுங்கியவர்களாகவே இருந்தனர். 16, 17 மற்றும் 18 நூற்றாண்டுகளின் ஆரம்பகட்டங்களில் கல்வி, தத்துவம், அறிவார்ந்த செயல்பாடு என பிரிட்டனுக்கு எந்தப் பாரம்பரியமும் இருந்திருக்கவில்லை என்று அதற்கு அர்த்தமில்லை. இந்தக் காலகட்டத்தில்தான் பேக்கன், ஷேக்ஸ்பியர், மில்டன், நியூட்டன் போன்றோர் உருவாகி வந்திருந்தனர். ஆக்ஸ்ஃபோர்டு, கேம்பிரிட்ஜ், எடின்பர்க் போன்ற பல்கலைக்கழகங்கள் 13, 14-ம் நூற்றாண்டுகளில் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதிவாக்கில் பிரிட்டனில் 500 இடைநிலைப் பள்ளிகள் இருந்தன. எனினும் இந்தக் கல்வி மையங்களும் கற்றுக் கொடுத்தலும் மேட்டுக்குடியினருக்கு மட்டுமே கிடைத்தன. 16-ம் நூற்றாண்டுக்குப் பிறகு நிலைமை இன்னும் குறுகலானது. ப்ராட்டஸ்டண்ட் புரட்சிக்குப் பிறகு பெரும்பாலான மடாலயங்கள் மூடப்பட்டன. அரசு அவற்றின் வருவாயையும் சொத்துகளையும் பெரும் கெடுபிடிக்களுக்குள்ளாக்கியது.
ஏ.இ.டோப்ஸ்ஸின் கூற்றுப்படிப் பார்த்தால், ப்ராட்டஸ்டண்ட் புரட்சிக்கு முன்புவரை, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம்தான் இங்கிலாந்தில் இருக்கும் பிரதான இடைநிலைப் பள்ளியாகவும் ஏழைகளுக்குக் கல்வி தருவதில் முன்னணியிலும் இருந்திருக்கிறது. இறையியல் கல்வி, சட்டம், மருத்துவம் போன்றவற்றைக் கற்பதற்கான முக்கிய இடமாகவும் இருந்திருக்கிறது. கல்வி முழுவதும் இலவசமாக இருந்திருக்கவில்லை. எனினும் ஏழைகளுக்கும் அந்தக் கல்வி கிடைக்கும்வகையில் உதவித்தொகை, கட்டணச் சலுகை போன்ற சில ஏற்பாடுகள் நடைமுறையில் இருந்தன. ‘சொந்தமாக நிலமோ ஆண்டு வாடகை வருமானம் 20 ஷில்லிங்குகளாகவோ இல்லாதவர்கள் தங்கள் குழந்தைகளைப் பணிகளுக்கு அமர்த்திக்கொள்ளக்கூடாது. ஆனால், தாய் தந்தையருக்கு உதவும் வகையில் அல்லது அவர்களுடைய நிலத்தின் பணிகளுக்குத் தேவையென்றால் அப்படிச் செய்துகொள்ளலாம்’ என்று ஆரம்பகட்ட இங்கிலாந்து சட்டம் ஒன்று தெரிவிக்கிறது. மேலும் ‘யார் வேண்டுமானாலும் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பலாம்’ என்றும் அது தெரிவிக்கிறது.
ஆனால், 16-ம் நூற்றாண்டுக்குப் பிறகு இந்த நிலையில் மாற்றம் ஏற்படுகிறது. தேவாலயங்களில் ஆங்கில மொழி பைபிளை வாசிக்கக்கூடாது என்று சொல்லும் சட்டம்கூட இயற்றப்பட்டது. பள்ளிகளில் அல்லாமல் தனிப்பட்ட முறையில் கற்றுக்கொள்ளுதல் என்பது மன்னர்கள், நிலப் பிரபுக்கள், வணிகர்கள் போன்ற உயர் குடியினருக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது. கைவினைக் கலைஞர்கள், அவர்களுடைய உதவியாளர்கள், விவசாயிகள், பண்ணையாட்கள், தொழிலாளர்கள் ஆகியோருக்கு ‘புனித நூல்களைப் படிப்பதால் வரும் ஒழுங்கின்மையைத் தடுக்கும் நோக்கில்’ அவை மறுக்கப்பட்டிருந்தன. இந்தப் புதிய போக்கின்படி ‘உழவரின் மகன் உழவுத்தொழிலில் ஈடுபடவேண்டும்; கைவினைக் கலைஞரின் மகன் அந்தத் தொழிலில் ஈடுபடவேண்டும்; கனவான்களின் குழந்தைகள் ஆட்சி நிர்வாகம் குறித்தும் அதிகாரம் குறித்தும் கற்கவேண்டும். பிற தேசங்களைப் போலவே நமக்கும் உழவர்களின் தேவை அதிகமாகவே இருக்கிறது. அனைத்து தரப்பு மக்களின் குழந்தைகளும் பள்ளிக்குச் செல்லவேண்டியது அவசியமில்லை’ என்று தீர்மானிக்கப்பட்டது.
150 ஆண்டுகளுக்குப் பிறகு (அதாவது 17-ம் நூற்றாண்டின் முடிவு வாக்கில்) இந்தப் போக்கு மெதுவாக மாறத் தொடங்கியது. அனைவருக்குமான பரோபகாரப் பள்ளிகள் (Charity Schools ) தொடங்கப்பட்டன. மத போதனைகளைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு பாட்டாளி வர்க்கத்தைத் தயார்படுத்தவேண்டும் என்பதே இந்தக் கல்வி மையங்களின் நோக்கமாக இருந்தது. வேல்ஸில் ‘ஞாயிற்றுக் கிழமை வழிபாட்டில் பைபிள் படிக்கவும் மதம் சார்ந்த பிற விஷயங்களைத் தெரிந்துகொள்ளவும் ஏழைகளைத் தயார்படுத்தவேண்டும்’ என்பதே இந்தக் கல்வியின் நோக்கமாக இருந்தது.
சிறிது காலத்துக்குப் பிறகு இந்த பரோபகாரப் பள்ளி இயக்கம் தேக்கநிலையை அடைந்தது. 1780 வாக்கில் சண்டே ஸ்கூல் இயக்கம் ஆரம்பித்தது. அனைவருக்குமான கல்வி என்பது இந்தக் காலகட்டத்தில்கூட மடாலயத்தின் பணியாகவே இருந்தது. ‘அனைத்து குழந்தைகளும் பைபிளை வாசிக்கவும் புரிந்துகொள்ளவும் வேண்டும்’ என்பதே அவற்றின் இலக்காக இருந்தது. ‘ஞாயிற்றுக் கிழமை வழிபாடுகள் உரிய முறையில் பின்பற்றப்படவேண்டும்’ என்பதே ஞாயிற்றுக் கிழமை பள்ளிகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படக் காரணமாக இருந்தது. சில வருடங்களுக்குப் பிறகு, பிற நாள்களிலும் நடக்கும் டே ஸ்கூல்கள் மீது கவனம் குவிய ஆரம்பித்தது. அதன் பிறகு பள்ளிக் கல்வி வளர்ச்சி முகத்தை அடைந்தது. 1834 வரையில்கூட நேஷனல் பள்ளிகளின் பாடத்திட்டங்கள் கூட மத போதனைகள், வாசிப்பு, எழுத்து, கணிதம் என்பதாகவே இருந்தது. ‘தீய விளைவுகள் ஏற்படும்’ என்று கருதி சில கிராமத்துப் பள்ளிகளில் எழுதக் கற்றுத் தரவில்லை.
டே ஸ்கூல் இயக்கத்துக்குப் பெரிய உந்துதல் ‘பீல்ஸ் ஆக்ட் ஆஃப் 1802’ மூலம் கிடைத்தது. ‘சிறுவர்களைப் பணியில் அமர்த்திக் கொள்பவர்கள் ஏழுவருடப் பயிற்சிக் காலத்தில் நான்கு வருடங்களுக்கு எழுதப் படிக்கவும், கணிதமும் கற்றுத் தந்தாகவேண்டும். ஞாயிற்றுக் கிழமைகளில் ஒரு மணி நேர மத போதனை தரவேண்டும். அனைத்து குழந்தைகளையும் ஞாயிற்றுக் கிழமை வழிபாட்டில் பங்குபெறவைக்கவேண்டும்’ என்று அந்தச் சட்டம் சொன்னது. ஆனால், இந்தச் சட்டம் மக்களிடையே எந்த வரவேற்பையும் பெறவில்லை. எனவே, அதன் நடைமுறை அமலாக்கம் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. இதே காலகட்டத்தில்தான் ஜோசஃப் லங்காஸ்டர் முன்வைத்த மானிடோரியல் கல்வி முறை (Monitorial method of teaching) நடைமுறைக்கு வந்தது. (இதில் திறமைசாலியான மாணவர்கள் ஆசிரியர்களோடு சேர்ந்து பிற மாணவர்களுக்குக் கற்றுத் தருவார்கள். ஆண்ட்ரூ பெலும் இதையே முன்வைத்தார். இந்தியக் கல்வி முறையில் இருந்து இதற்கான உந்துதலைப் பெற்றிருக்கக்கூடும்). அது அனைவருக்குமான கல்வியைப் வெகுவாகப் பரவலாக்கியது. அந்தப் பள்ளிகளில் படித்தவர்களின் எண்ணிக்கை 1792-ல் 40,000 ஆகவும் 1818-ல் 6,74,833 ஆகவும் 1851-ல் 21,44,377 ஆகவும் உயர்ந்தது. 1801-ல் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை 3,363 ஆக இருந்தது. 1851 வாக்கில் அது 46,114 ஆக அதிகரித்தது.
ஆரம்பகட்டத்தில் ‘ஆசிரியர்கள் திறமையற்றவர்களாகவே இருந்தனர். அறிவு குறைந்தவர்களாக மட்டுமல்லாமல் குடிகாரர்களாகவும் இருந்தனர்’ என்று லங்காஸ்டர் தெரிவித்திருக்கிறார். ‘பள்ளிக்கு மாணவர்கள் ஒழுங்காக வருவதில்லை. அதைவிட்டுவிட்டு மிகவும் பெருந்தன்மையாகக் கணக்கிட்டுப் பார்த்தாலும் 1835-ல் சராசரி பள்ளிப் பருவம் என்பது ஒரு வருடமாக மட்டுமே இருந்தது. 1851-ல் அது இரண்டு வருடங்களாக ஆனது’ என்று டோப்ஸ் தெரிவித்திருக்கிறார்.
18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயப் பொதுக் கல்வி நிலையங்கள் பெரும் வீழ்ச்சியை அடைந்தன. 1797-ல் ஸ்ரூஸ்பரியில் இருந்த புகழ் பெற்ற பள்ளியில் ‘மூன்று நான்கு மாணவர்களுக்கு மேல்’ இல்லை. மறு சீரமைப்புக்குப் பிறகு அடுத்த வருடத்தில் சுமார் 20 மாணவர்கள் அங்கு சேர்ந்தனர்! எடன் போன்ற பள்ளிகளில் எழுத்துப் பயிற்சி, கணிதம் (ஏராளமான ஆங்கில லத்தீன் நூல்கள்) கற்றுத் தரப்பட்டன. ஐந்தாம் ஃபார்ம் மாணவர்கள் புராதன புவியியல் அல்லது அல்ஜீப்ரா போன்றவற்றைப் படித்தனர். அந்தப் பள்ளியில் அதிக காலம் படித்தவர்கள் யூக்ளிட் கணிதம் பற்றியும் படித்தனர். எனினும் 1851 வரையிலும் கணிதம் முக்கிய பாடமாக இருந்திருக்கவில்லை. கற்றுக் கொடுத்தவர்களும் அப்படியொன்றும் தேர்ந்த அறிவு பெற்றிருக்கவில்லை.
தொடக்கக் கல்வி 1800 வரையிலும்கூட மக்களிடையே பரவலாகியிருக்கவில்லை. இந்தியாவின் தட்சசீலம், நாலந்தா அல்லது நவத்வீப் பல்கலைக்கழகங்களைப் போலவே பிரிட்டனுக்கு ஆக்ஸ்ஃபோர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்கள் முக்கியமானவையே. 1773க்குப் பிறகு இந்தியாவுக்கு வந்த பயணிகள், அறிஞர்கள், நீதிபதிகள் போன்றோர் இந்த பல்கலைக்கழகங்களில் படித்துமுடித்திருந்தனர். 1800 வாக்கில் இந்தப் பல்கலைக்கழகங்கங்களில் கற்றுத் தரப்பட்ட பாடங்கள், படித்தவர்களின் எண்ணிக்கை பற்றி இங்கு குறிப்பிடுவது பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறேன். ஆக்ஸ்ஃபோர்டு பற்றிச் சொல்கிறேன். இதே காலகட்டத்து கேம்பிரிட்ஜ், எடின்பர்க் பல்கலைக்கழகங்களுக்கும் இது ஓரளவுக்குப் பொருந்தும் என்றே நம்பலாம்.
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் (இங்கிலாந்தின் ரோமுடனான உரசலுக்குப் பிறகான) கால வரிசையிலான வளர்ச்சி கீழ்க்கண்டவாறு:
- 1546 மன்னர் எட்டாம் ஹென்றியால் அமல்படுத்தப்பட்ட ஐந்து பேராசிரியர் பதவிகள் 1. இறையியல் 2. குடிமையியல் சட்டம் 3. மருத்துவம். 4. ஹீப்ரு மொழி 5. கிரேக்க மொழி
- 1619 வடிவ கணிதம் (ஜியாமெட்ரி), வானவியல்
- 1621 இயற்கை மெய்யியல், ஒழுக்கவியல் (1707-1829 வரையிலான காலகட்டத்தில் நிறுத்திவைக்கப்பட்டது)
- 1622 புராதன வரலாறு (ஹீப்ரூ, ஐரோப்பா பற்றிய வரலாறு)
- 1624 இலக்கணம், சொல்லாட்சிக் கலை (Grammar, Rhetoric), இயற்பியல் (Metaphysics) (1839-ல் இருந்து தர்க்கவியல் அந்த இடத்தைப் பிடித்தது)
- 1624 உடலியல்
- 1626 இசை
- 1636 அரபு மொழி
- 1669 தாவரவியல்
- 1708 கவிதை
- 1724 நவீன வரலாறு மற்றும் நவீன மொழிகள்
- 1749 கள ஆய்வுத் தத்துவம்
- 1758 பொதுச் சட்டம்
- 1780 மருத்துவக் கல்வி
- 1795 ஆங்கிலோ சாக்ஸன் (மொழி, இலக்கியம் போன்றவை)
- 1803 வேதியியல்
19-ம் நூற்றாண்டு ஆரம்ப வாக்கில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலையில் 19 கல்லூரிகளும் ஐந்து சுய அதிகாரம் பெற்ற துணைக் கல்வி மையங்களும் இருந்தன. 500 ஃபெல்லோக்கள் இருந்தனர். அதில் சிலர் அந்தக் கல்லூரிகளில் ஆசிரியர்களாக இருந்தனர். அதோடு 1800-ல் 19 பேராசிரியர்களும் இருந்தனர். 1854-ல் இந்த எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது.
19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இறையியல், செவ்வியல் பாடங்களே பிரதானமாக இருந்தன. செவ்வியல் பாடப்பிரிவுத் தேர்வின் பெயர் லிட்டரே ஹ்யூமானியோரஸ். கிரேக்கம், லத்தீன் மொழிகளும் இலக்கியங்களும், ஒழுக்கவியல் தத்துவம், சொல்லாட்சிக் கலை, தர்க்கம், கணிதவியல்கள் மற்றும் இயற்பியல் ஆகியவை அதில் இடம்பெற்றன.
சட்டம், மருத்துவம், பூகோளவியல் குறித்த விரிவுரைகளும் வழங்கப்பட்டன.
1805க்குப் பிறகு பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 760 ஆக இருந்த மாணவர் எண்ணிக்கை 1820-24-ல் 1300 ஆக அதிகரித்தது. நன்கொடைகள் குறிப்பாக நிலமாகக் கிடைத்தன. அவற்றில் இருந்து கிடைத்த வருமானம் மற்றும் மாணவர்களிடமிருந்த கிடைத்த கட்டணம் ஆகியவற்றின்மூலம் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலையின் பொருளாதாரத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டன. ஒவ்வொரு கல்லூரிக்கும் வருவாய் மூல ஆதாரங்கள் வெவ்வேறாக இருந்தன. உடைகள், போக்குவரத்துச் செலவுகள் உட்பட எல்லாச் செலவுகளையும் கணக்கில் கொண்டு பார்த்தால், 1850 வாக்கில் ஒரு பெற்றோர் தன் மகனை இந்தப் பல்கலைக்கழகத்தில் நான்காண்டு படிக்கவைக்க (விடுமுறைக் காலத்துக்கும் சேர்த்து) 600 - 800 பவுண்ட்கள் செலவிட வேண்டியிருந்தது.
பிரிட்டிஷார் மட்டுமல்லாமல் டச்சுக்காரர்கள், போர்ச்சுக்கீசியர்கள், ஃபிரெஞ்சுக்காரர்கள் ஆகியோர் நேரடியாகவோ 16 - 17 நூற்றாண்டுகளில் நிறுவிய பல்வேறு கிழக்கிந்திய கம்பெனிகள் மூலமாகவோ இந்தியப் பெருங்கடல் பகுதியில் தமது சாம்ராஜ்ஜியத்தை விரிவாக்குதல், தொழிற்சாலைகளை அமைத்தல், கோட்டைகள் கட்டுதல் என மும்மரமாக இருந்தனர். அங்கு அவர்களால் முடிந்த இடங்களை எல்லாம் ஆக்கிரமிக்கவும் செய்தனர். அதே நேரத்தில் தங்கள் பங்காக ஐரோப்பிய அறிஞர்கள் அந்தப் பகுதிகளில் நிலவும் நாகரிகங்கள் பற்றித் தெரிந்துகொள்ள முயற்சி எடுத்தனர். அவர்களில் முக்கியமானவர்கள் சில கிறிஸ்தவ மடாலய அமைப்புகள் குறிப்பாக மிகவும் பிரசித்திபெற்ற ஜேசுயிட் அமைப்பைச் சேர்ந்தவர்களாவர். அறிவியல், சமூகப் பழக்க வழக்கங்கள், தத்துவங்கள், மதங்கள் ஆகிய துறைகளில் அவர்கள் ஆர்வம் கொண்டிருந்தனர். வேறு சிலருடைய விருப்பங்கள் அரசியல், வரலாறு, பொருளாதாரம் சார்ந்ததாக இருந்தன. பெரும்பாலானவர்கள் தமது சாகச அனுபவங்களையும் ‘அபாரமான’ ‘அற்புதமான’ கீழைத்தேய நாட்டில் நடந்த சிற்சில துரதிர்ஷ்டங்களையும் எழுதிவைத்திருக்கின்றனர். ஐரோப்பிய மேட்டுக்குடியின் பரந்துபட்ட ஆர்வத்தின் காரணமாக ஒன்றுக்கு மேற்பட்ட ஐரோப்பிய மொழிகளில் இவை அச்சிடப்பட்டன. மதம் சார்ந்த அல்லது மிகவும் அறிவார்ந்த குறிப்புகளும் விவாதங்களும் கையெழுத்தாகவே பல தடவை பிரதி எடுத்துக்கொள்ளப்பட்டன.