சுடச்சுட

  

  சி
  ல வருடங்களுக்கு முன்பாக பிரான்ஸில் கொஞ்ச நாட்கள் இருக்கும் வாய்ப்புக் கிடைத்தது. மாண்ட்பெல்லியே என்ற ஊரில் இருந்தேன். அது மிகச் சிறிய நகரம். சற்றே பழமை வாய்ந்த நகரமும் கூட. ஜனநெருக்கடி இல்லாத அமைதியான ஊர் என்றாலும் மாலை ஆறு மணிக்கு மேலாக கொண்டாட்டம் ஆரம்பமாகிவிடும். திடீரென்று ஓரிடத்தில் இசை ஒலிக்கும். நடனமாடத் தொடங்குவார்கள். தனியாக இருக்கிறோம் என்கிற வருத்தமெல்லாம் எதுவும் வராத ஊர். அலுவலகம் விட்டு வந்தவுடன் பையை அறையில் வைத்துவிட்டு கிளம்பிவிடுவேன். அப்படியான தருணத்தில் ஒரு தெரு நடனக்குழுவினரோடு அறிமுகம் கிடைத்திருந்தது. அந்தக் குழுவில் நான்கு பேர்கள் இருந்தார்கள். ஒருவர் மட்டும் ஆங்கிலம் பேசுவார்.  கையோடு பெரிய ஒலிபெருக்கி, அதை இயக்குவதற்கான பேட்டரி போன்றவற்றை எடுத்துக் கொண்டு வருவார்கள். இசையை ஒலிக்கவிட்டு தங்களது திறமைகளைக் காட்டத் தொடங்குவார்கள். காற்றில் மிதக்கும் இறகு மாதிரி ஆட்டம் இருக்கும். யூடியூப்பில் Street Dance என்று தேடினால் பார்க்கலாம். அவர்களிடம் பேசிக் கொண்டிருந்த போதுதான் பார்குர்(Parkour) என்கிற சொல்லை முதன் முதலாகக் கேள்விப்பட்டேன். அந்த ஊரில் அப்பொழுது பார்க்குர் பயிற்சியாளரும் இருந்தார். வாகன நெரிசல் மிகுந்த சாலைகள், கட்டிடங்கள், மேடுபள்ளங்கள் எந்த இடமாக இருந்தாலும் லாவகமாக தாண்டியபடியே ஒடும் வித்தை. தெரு நடனக்குழுவினர் அழைத்துச் சென்று காட்டினார்கள். வெகு ஆச்சரியமாக இருந்தது. அவர்களது அசைவில் ஒரு சதவீதத்தைக் கூட நம்மால் செய்ய முடியாது என்று வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

   

  tracer.jpg 


  திருடர்கள் இந்த வித்தையைத் தெரிந்து கொண்டால் தாறுமாறாகத் தப்பித்துவிடலாம் எனத் தோன்றியது. அது உண்மைதான். இதை அடிப்படையாக வைத்து சமீபத்தில் ஒரு படம் வெளியாகியிருக்கிறது. Tracers. பார்க்குர்தான் படத்தின் முதுகெலும்பு.

  நாயகன் சைக்கிள் மெஸஞ்சர். பொட்டலமோ, கடிதமோ- எதைக் கொடுத்தாலும் வாங்கிச் சென்று சேர வேண்டிய இடத்தில் கொடுப்பான். அதற்காக காசு தருவார்கள். அம்மா அப்பா யாருமில்லாதவன். குறைந்தபட்சம் காதலி கூட இல்லாத அமெரிக்கன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். கஷ்ட ஜீவனம்தான். ஒரு கறுப்பின பெண்ணின் வீட்டின் பழைய ஷெட்டில் வாடகைக்கு குடியிருக்கிறான். அவனுக்கு ஒரு சிக்கல் இருக்கிறது- ஒரு சீனாக்காரனிடம் கடன் வாங்கியிருக்கிறான். பெருந்தொகை. அவனுடைய அம்மா மரணப்படுக்கையில் இருந்த போது அவளது செலவுகளுக்காக வாங்கிய கடன். சைக்கிள் மெசஞ்சருக்கு பெரிய வருமானம் இல்லை. இதில்தான் வாடகையும் கொடுத்து, கடனையும் அடைக்க வேண்டும். ஆனால் கடனைத் திருப்பி அடைப்பது அவ்வளவு சுலபமான காரியமாக இல்லை. சீனாக்காரன் அவ்வப்போது வந்து மிரட்டி உருட்டிக் கொண்டு போகிறான்.

  இப்படி காட்டாறாகப் போய்க் கொண்டிருக்கும் நாயகனின் வாழ்க்கையில் ஒரு பெண் மோதுகிறாள். இவன் சைக்கிளில் சென்று கொண்டிருக்க, எங்கிருந்தோ ஓடி வரும் அவள் இவன் மீது மோத, இருவரும் உருண்டு புரள, சைக்கிள் சக்கரம் வளைந்து நெளிந்து போகிறது. அதோடு விட்டிருந்தால்தான் பிரச்னையில்லை. சீனாக்காரனோடு அடி வாங்குவதோடு போயிருக்கும். ஆனால் அடுத்த நாள் இவனுக்கு புதிய சைக்கிள் ஒன்றை வாங்கிக் கொடுத்துவிட்டுச் செல்கிறாள். ‘உன் காதலி பரிசளித்திருக்கிறாள். வந்து வாங்கிக் கொள்’ என்று கடையிலிருந்து தகவல் வருகிறது. சென்று பார்த்தால் அவள் இல்லை. சைக்கிள் மட்டும் இருக்கிறது. எடுத்துக் கொண்டு வேகமாக பறக்கிறான். அங்குமிங்குமாக அலைந்து அவளைக் கண்டுபிடித்துவிடுகிறான். கண்ணின் கடைப்பார்வையைக் காட்டிவிட்டால் போதாதா? காட்டிவிடுகிறாள். அவளைப் பின் தொடர்ந்து செல்கிறான். நாயகி பார்க்குர் தெரிந்தவள். பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறாள்.
   

  taylor2.jpg 


  வழக்கமான சினிமாவில் என்ன நடக்குமோ அது நடக்கிறது. நாயகனும் பார்க்குரை பயிற்சி செய்யத் தொடங்குகிறான். பயிற்சியாளர் யாருமில்லாமல் தானாகவே கற்றுக் கொள்ளும் சுயம்பு. படு வேகமாக கற்றுக் கொள்ளத் தொடங்குகிறான். ஆனால் நாயகி தனி ஆள் இல்லை. ஒரு குழுவோடு இருக்கிறாள். அந்தக் குழு மில்லர் என்பவனுக்காக வேலை செய்கிறது. மில்லர்தான் அவர்களுக்கு வேலை பழக்கிவிட்டவன். குருநாதர். ஒவ்வொரு காரியத்தையும் பக்காவான திட்டமிடலுடன் சாதிக்கிறார்கள். ஆவணம், ஆயுதம், ரசாயனம் என எதுவாக இருந்தாலும் ஓரிடத்திலிருந்து எடுத்து இன்னொரு இடத்துக்கு கடத்திக் கொடுக்கிறார்கள். திருட்டு வேலைதான். ஆனால் செமத்தியான வருமானம். நாயகன் பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது மில்லரின் குழுவுக்கு இவனைப் பிடித்துப் போய்விடுகிறது. தங்கள் குழுவில் சேர்த்துக் கொள்கிறார்கள். இவனுக்கும் பிரச்சினை இருக்கிறதல்லவா? வருமானம் பார்த்தால்தான் சீனாக்காரனின் கடனை அடைக்க முடியும். அவன் வேறு அவ்வப்போது வந்து அக்கப்போர் செய்கிறான். பணம் மட்டுமில்லை- அழகான நாயகி வேறு அந்தக் குழுவில் இருக்கிறாள். மறுக்க முடியுமா? சேர்ந்து கொள்கிறான்.

  அதன் பிறகுதான் பிரச்னை ஆரம்பமாகிறது. நாயகனுக்கும் நாயகிக்கும் அரும்பும் காதல் மில்லருக்குத் தெரிந்துவிடுகிறது. பிரச்னை என்னவென்றால் முன்பொரு சமயத்தில் நாயகி தனியாக இருக்கும் போது எவனோ ஒருவன் அவளைத் தடவுகிறான். அதில் கோபமடையும் நாயகியின் சகோதரன் அவனை அடிக்க அதில் தடவியவன் கோமாவுக்குச் சென்றுவிடுகிறான். சிக்கினால் இருவரும் கம்பி எண்ணியாக வேண்டும். இந்தப் பிரச்னையிலிருந்து மில்லர்தான் நாயகியையும் அவளுடைய சகோதரனையும் காக்கிறான். அதற்கு பிரதியுபகாரமாக நாயகியை மில்லர் சுவீகரம் செய்து கொள்கிறான். இடையில் இவன் வந்தால் விடுவானா? நாயகனின் கதையை முடிக்க ரூட் போடுகிறான். இவர்களுக்கிடையில் அந்த சீனாக்காரனின் மாஃபியாவும் வந்துவிடுகிறது. சதி, சிக்கல், ஓட்டம், மாஃபியா- முடிவு என்னவாகிறது என்பதுதான் க்ளைமேக்ஸ்.
   

  taylor-3.jpg 


  படத்திலிருந்து பார்க்குரை நீக்கிவிட்டால் சாதாரணக் கதைதான். ஒரே குழுவில் பணிபுரியும் நாயகியை நாயகன் விரும்புகிறான். அவர்களுடைய தலைவன் எதிரியாகிறான். அவ்வளவுதான். ஆனால் இந்தக் கதைக்குள் பார்க்குரை வைத்து- அதன் வழியாக சாகசங்களைக் காட்டி அட்டகாசமான அதிரடித் திரைப்படமாக மாற்றியிருக்கிறாரக்ள். குறிப்பாக திரைக்கதையைச் சொல்ல வேண்டும். ஒற்றை வரிக் கதையில் ஒரு சீனாக்குழு, நாயகன் - நாயகி காதல், தான் வாடகைக்கு இருக்கும் வீட்டுக்காரக் குழந்தை மற்றும் குழந்தையின் அம்மாவின் அம்மாவின் பாசம், அப்பா வைத்திருந்த கார் செண்டிமெண்ட், கதையின் பின்னணியில் நாயகனின் கடன் பிரச்சினை, நாயகி மில்லருக்கு இடையிலான உறவுச் சிக்கல் என அனைத்தையும் செதில் செதிலாக இணைத்து படத்தை பூர்த்தியாக்கியிருக்கிறார்கள். படம் ஆரம்பிப்பதிலிருந்தே ஒவ்வொரு முடிச்சுகளாகக் காட்டுகிறார்கள். பிறகு முடிச்சுகள் அவிழ்க்கப்படாதா என்று எதிர்பார்க்க வைத்துவிடுகிறார்கள். அந்த எதிர்பார்ப்புதான் படத்தின் மிகப் பெரிய விறுவிறுப்பு.

  சுவாரஸியமான படம். ஆக்‌ஷன் படங்களைப் பார்க்கும் போது ‘உடான்ஸ் விடுறாங்க’ என்று அவ்வப்போது தோன்றிவிடுமல்லவா? இந்தப் படம் நெடுகிலும் அப்படியொரு எண்ணம் தோன்றுவதில்லை. அதிரடியான ஆயுதங்கள், விமானச் சண்டைகள் போன்ற பிரமாண்ட விஷயங்கள் எதுவுமில்லாமல் நடிகர்களின் இரண்டு கால்களையும் அந்தக் கால்களின் ஓட்டத்தை மட்டுமே படம் முழுக்கவும் காட்டுவதால் ஒரு உண்மைத் தன்மை விரவியிருப்பதாகவே தெரிகிறது. அதுதான் இந்தப் படத்தின் பெரிய நம்பகத்தன்மையும் கூட. நாயகனும் அவனுடைய குழுவும் ஓடுகிற ஓட்டத்தைப் பார்த்தால் நமக்கும் அப்படியெல்லாம் ஓட வேண்டும் என்று ஆசை வந்துவிடுகிறது. கேமிராவும் இசையும் அவ்வளவு துல்லியத் தன்மையை உருவாக்குகின்றன.

  taylor-1.jpg   நடுவில் மட்டும் சில நிமிடங்களுக்கு பார்க்குர் காட்சிகள் சலிப்படையச் செய்தன என்பது உண்மைதான். ஆனால் அதற்காக படம் மோசம் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. இன்னொரு முறை கூட தாரளாமாகப் பார்க்கலாம். நான் பார்க்கப் போகிறேன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai