ட்ராஷ் (Trash)

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு வரை எங்கள் ஊரில் பன்னியாண்டிகள் என்றவொரு குழுவினர் இருந்தார்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் உட்பட அத்தனை பேரும் அவர்களை ஒதுக்கி வைத்துவிடுவார்கள். சாக்கடைகளின் கரைகளில்


ருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு வரை எங்கள் ஊரில் பன்னியாண்டிகள் என்றவொரு குழுவினர் இருந்தார்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் உட்பட அத்தனை பேரும் அவர்களை ஒதுக்கி வைத்துவிடுவார்கள். சாக்கடைகளின் கரைகளில் குடிசைகள் அமைத்துக் கொண்டு பன்றிகளை மேய்ப்பதுதான் அவர்களுடைய வேலை. ஐம்பதாண்டுகளுக்கு முன்பாக அவர்கள் பகல் நேரத்தில் வெளியிலேயே வரமாட்டார்களாம். இரவில்தான் குப்பைகள் பொறுக்குவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எங்கள் காலத்தில் கொஞ்சம் பரவாயில்லை. பகலில் வெளியில் வரத் தொடங்கியிருந்தார்கள் என்றாலும் குப்பை பொறுக்குவதுதான் வேலையாக இருந்தது. வீட்டுக்கு வெளியில் செருப்பை போட்டு வைத்திருந்தால் ‘பன்னியாண்டிகள் தூக்கிட்டு போயிடுவாங்க’ என்று சாதாரணமாகச் சொல்வார்கள். அவர்கள் மீதான எந்தக் கருணையும் இல்லாத காலம் அது. ‘அவங்களுக்கென்ன குப்பைல பணம் கொலுசு மோதிரம் கூட கிடைக்குமாமா’ என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். இப்பொழுது பன்னியாண்டிகள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. சாக்கடைகளின் சரிவிலிருந்து மேலேறி வந்திருக்கக் கூடும். ஆனால் இன்னமும் குப்பை பொறுக்குபவர்கள் ஊர் ஊருக்கு இருக்கிறார்கள். பெங்களூரில் ஒரு பெரிய சாக்குப்பையைத் முதுகில் மாட்டிக் கொண்டு வருபவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு குப்பையில் என்னவெல்லாம் கிடைக்கும் என்ற யோசனை அவ்வப்பொழுது வந்து கொண்டேதான் இருக்கிறது. அதிசயமாக எப்பொழுதாவது புதையல் கிடைக்கும் அல்லவா? புதையல் கிடைக்கிறதோ இல்லையோ- ஆபத்துகளும் வந்து சேரலாம்.

சமீபத்தில் இந்தக் கதைக் களத்தை வைத்து ஒரு படம் வெளிவந்திருக்கிறது.


அது ஒரு பெரிய நகரம். நகரத்தின் குப்பைகளை லாரிகளில் கொண்டு வந்து ஓரிடத்தில் குவிக்கிறார்கள். வண்டியிலிருந்து குப்பை கொட்டப்படும் சமயத்திலேயே ஒரு குழு குப்பைகளைப் பொறுக்குகிறது. அது ஒரு சேரிப்பகுதி. அந்தச் சேரியில் இருப்பவர்கள் அத்தனை பேருக்கும் இதுதான் வாழ்வாதாரம். அப்படியொரு குழுவில் இருக்கும் ஒரு பையனிடம் பர்ஸ் ஒன்று சிக்குகிறது. அதற்குள் பணமும் இருக்கிறது. சந்தோஷம்தான். ஆனால் பணத்தோடு நிற்பதில்லை. அந்த பர்ஸூக்குள் ஆபத்தும் இருக்கிறது. அதுவும் பல மில்லியன் டாலர் ஆபத்து.

அது என்ன மில்லியன் டாலர் கதை என்பதையும் சொல்லிவிடுகிறேன். தான் அந்த நகரத்தின் மேயர் ஆகிவிட வேண்டும் என்று ஒரு ஊழல் பெருச்சாளி முயற்சி செய்து கொண்டிருக்கிறது. அந்த பெருச்சாளி விவரமான பெருச்சாளி. பண விவரங்களைக் கூட ஒரு நோட்டில்தான் எழுதி வைத்திருக்கிறது. கம்யூட்டர், செல்போன் என்றெல்லாம் ஏதாவது இடத்தில் குறித்து வைத்தால் சிக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறதல்லவா? அதனால் நோட்டில் எழுதி வைத்து பணத்தையும் அந்த நோட்டையும் தன்னுடைய உதவியாளரிடம் கொடுத்து வைத்திருக்கிறது. அந்த உதவியாளருக்கு ஒரு சமூக ஆர்வலரிடம் தொடர்பு இருக்கிறது. ஆர்வலரை சிறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள். ஊழலை ஒழிக்க போராடிக் கொண்டிருந்த சமூக ஆர்வலருக்கு உதவும் பொருட்டு அந்த உதவியாளர் பெருச்சாளியின் மொத்தப் பணத்தையும் சுருட்டி எடுத்துக் கொண்டு கம்பி நீட்டிவிடுகிறார்.

‘அய்யோ அதை நம்பித்தான் தேர்தலிலேயே நிற்கப் போகிறேன்’ என்று பெருச்சாளி பதறுகிறான். நகரத்தின் போலீஸ் அதிகாரி இந்த பெருச்சாளிக்கு கூழைக் கும்பிடு போடுகிறவன். பெருச்சாளி அவனைத் தூண்டிவிடுகிறான். விடுவார்களா? உதவியாளரைத் துரத்திக் கொண்டு வருகிறார்கள். பணத்தைப் புதைத்து வைத்த இடத்தை ஒரு குறிப்பாக எழுதி அதை பர்ஸூக்குள் வைத்து குப்பை வண்டிக்குள் வீசுகிறார். அந்த பர்ஸ்தான் குப்பை பொறுக்குபவர்களிடம் சிக்குகிறது. இப்பொழுது என்ன நடக்கும்? நீங்கள் நினைப்பதுதான். வேட்டை சிறுவர்களை நோக்கித் தொடர்கிறது.

பதினான்கு வயது சிறுவர்கள் மூன்று பேர்தான் கதைநாயகர்கள். இந்த மூன்று சிறுவர்களும் இதுவரைக்கும் சினிமா எதிலும் நடித்திராதவர்கள். ஆனால் அதையெல்லாம் துளி கூட கண்டுபிடிக்க முடியாது. அமர்க்களம்தான். படத்தில் மற்றவர்கள் எல்லோரும் துணை நடிகர்கள் மாதிரிதான். இந்த மூவரும்தான் மொத்தக் கதையும் தாங்குகிறார்கள்.


Trash. குப்பை. அதுதான் படத்தின் தலைப்பு. 2014 ஆம் ஆண்டுதான் படம் வந்திருக்கிறது. போர்த்துக்கீசு மற்றும் ஆங்கிலம் கலந்து எடுக்கப்பட்ட படம். பொதுவாக பெங்களூரின் தள்ளுவண்டிக்கடைகளில்தான் முக்கியமான படங்களின் சிடிக்கள் கிடைக்கின்றன. தேடிக் கொண்டிருந்த போது போர்த்துக்கீசிய மொழிப் படம் என்ற குறிப்பைத் பார்த்ததும் வாங்கிக் கொண்டேன். இப்படி பெருமொத்தமாக வாங்குகிற படங்களை உடனே பார்ப்பதும் அவ்வளவு பாதுகாப்பான செயல் இல்லை. பல படங்கள் தலைவலியைக் கொண்டு வந்து சேர்த்துவிடக் கூடும். அந்த எச்சரிக்கையுணர்வில் படம் குறித்து இணையத்தில் தேடிய போதும் பெரும்பாலான விமர்சனங்களில் பாராட்டித்தான் எழுதியிருந்தார்கள்.

படம் பார்க்க ஆரம்பித்த போதுதான் தெரிந்தது- மிகச் சரியாகத்தான் பாராட்டியிருக்கிறார்கள். முதல் காட்சியிலேயே ஒரு சிறுவன் துப்பாக்கியை நீட்டிக் கொண்டு நிற்பான். அவனது கைகள் நடுங்கிக் கொண்டிருக்கும். அருகிலிருந்து ‘அவனைக் கொன்றுவிடு ராஃபேல்’ என்று இன்னொரு சிறுவன் கத்திக் கொண்டிருப்பான். வன்முறை சார்ந்த படமாக இருக்கும் என்றுதான் தோன்றியது. ஆனால் அப்படியில்லை. சமூகத்தின் பெருந்தலையும் அவனது எடுபிடியான போலீஸ் அதிகாரியும் அந்தச் சிறுவர்களின் மீதாக செலுத்தும் வன்முறைதான் படத்தின் மையம். இந்தச் சிறுவர்கள் மட்டுமில்லாத அவர்களைச் சார்ந்த சேரியே பாதிக்கப்படுகிறது. ஏழ்மை, அதிகாரத்தின் கொடூர நகங்கள் என அத்தனையும் தமக்கு எதிராகத் திரும்பியிருக்கும் போதும் ‘உயிர் இருக்கும் வரை துணிந்து கொண்டேயிருப்போம்’ என்று உற்சாகத்தோடு திரியும் பையன்கள் நிமிர்ந்து அமர வைத்துவிடுகிறார்கள்.

பிரேசில் ஊழல் நிறைந்த நாடு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அங்கே வறுமையும் வன்முறையும் ஊழலும் விரவிக் கிடக்கின்றன என்று சொல்வார்கள். வளர்ச்சி என்ற பெயரில் பெருமுதலாளிகள் பெருகிக் கொண்டிருக்கும் அதே சமயத்தில்தான் சாக்கடைகளிலும், சேரிகளிலும் சிக்கி விளிம்பு நிலை மக்கள் திணறுகிறார்கள் என்பார்கள். இதையெல்லாம் இந்தப் படம் மேம்போக்காகத் தொட்டுக் காட்டுகிறது. ஒரு பக்கம் பல மில்லியன் டாலர்களை பதுக்கி வைக்கும் பணமுதலை என்றால் இன்னொரு பக்கம் குப்பை பொறுக்கும் பெருங்கூட்டம். ஒரு பக்கம் ராஜவிசுவாசியான போலீஸ் அதிகாரி என்றால் இன்னொரு பக்கம் அதிகாரியை சந்தோஷமூட்டுவதற்காக சிறுவனை சித்ரவதை செய்யும் அடியாளாகச் செயல்படும் காவலர்கள் என்று அந்நாட்டின் அவலங்களையெல்லாம் போகிற போக்கில் தொட்டுச் செல்கிறது படம்.

பர்ஸைத் தேடும் வேட்டையில் தங்கள் மீதாகச் செலுத்தப்படும் தொடர்ச்சியான அழுத்தங்கள் அதை இந்தச் சிறுவர்கள் சமாளிப்பது என்று படம் நீள்கிறது. இந்தக் கதைக்குள் உதவியாளர், ஒரு சமூக ஆர்வலர், கிறித்துவ பாதிரியார், சிறுவர்களுக்கு உதவும் இளம்பெண், உதவியாளரின் மகள் என்று பல அடுக்குகளை கதைக்குள் சேர்த்து சுவாரசியத்தைக் கூட்டியிருக்கிறார்கள். 2010 ஆம் ஆண்டில் இதே தலைப்பில் ஒரு நாவல் வந்திருக்கிறது. அதே கதையைத்தான் படமாக்கியிருக்கிறார்கள்.

ஏற்கனவே குறிப்பிட்டது போல சேரிப் பையன்களாக நடித்திருக்கும் மூன்று பையன்களும் பிரித்து மேய்ந்திருக்கிறார்கள். பர்ஸ் கிடைத்த விவகாரத்தை போலீஸிடமிருந்து மறைப்பதும், போலீஸ்காரர்கள் துரத்தும் போது தப்பிப்பதும், சிக்கி சின்னாபின்னம் ஆவதும், அந்த க்ளூவை கண்டுபிடிப்பதும் என்று அட்டகாசப்படுத்தியிருக்கிறார்கள் என்று சொல்வதில் எந்த மிகையுமில்லை. சேரி, ஏழைகள் என்றெல்லாம் சொல்வதனால் படம் அழுது வடியும் என்றெல்லாம் நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை. சிறுவர்களின் உடல்மொழியும், இயல்பான நகைச்சுவையும் அவ்வளவு இயல்பான போக்கில் படம் முழுக்கவும் நகர்கிறது.

சினிமா பிரியர்களாக இருந்தால் எப்படியாவது பிடித்து பார்த்துவிடுங்கள். நம்மூர் தியேட்டர்களுக்கு வரும் என்றெல்லாம் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இணையத்தில் இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com