Enable Javscript for better performance
THE INTERVIEW - Dinamani

சுடச்சுட

  

  ம் வயது ஆட்கள் நாம் நினைத்துப் பார்க்கவே முடியாத இடத்தில் இருக்கும்போது துளியூண்டு பொறாமை எட்டிப்பார்க்கும் அல்லவா? 2012-ம் ஆண்டிலிருந்து அப்படிப்பட்ட பொறாமையை ஒரு மனிதன் மீது வைத்திருக்கிறேன். கிம் ஜாங் உன். வட கொரிய அதிபர். அவருடைய தாத்தாவும் அதிபர். அவருக்குப் பிறகு தந்தையும் அதிபர். இப்பொழுது இவரும் அதிபர். முப்பத்தியிரண்டு வயதுதான் ஆகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பே அதிபராக்கிவிட்டார்கள்.

   

  pic1.jpg 

  வட கொரியாவைப் பொறுத்தவரை, அதிபர்கள் என்றால் சாதாரண அதிபர்கள் இல்லை. ஐந்து வருடத்துக்கு ஒருமுறை ஆட்சி மாறும் என்றெல்லாம் எதுவும் இல்லை. சாகும்வரை, எதிர்த்துக் கேட்க ஆளில்லாத சகல அதிகாரங்களும் படைத்த கடவுள் மாதிரி. ஒரே ஒரு இம்சை உண்டு - அது அமெரிக்கா. அவனைச் சமாளிக்க அவ்வப்போது அணுகுண்டு வெடித்துக் காட்ட வேண்டும். ‘எம் பக்கத்தில் வந்தால் சொய்ங்ன்னு உன் மேல வீசுற அளவுக்கு வசதி இருக்கு’ என்று மிரட்டிக்கொண்டே இருக்க வேண்டும். அதைத்தான் பரம்பரை பரம்பரையாகச் செய்துகொண்டிருக்கிறார்கள்.

  சில ஆண்டுகளுக்கு முன், சீனாவில் டாலியன் என்னும் ஊருக்குப் பயணம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இடையில் நான்கு நாட்கள் சேர்ந்தாற்போல் விடுமுறை வந்தது. டாலியனிலிருந்து வட கொரியாவுக்கு எளிதாகச் சென்றுவிடலாம் என்றார்கள். நவீன உலகின் புதிரான நாடு என்றால் வட கொரியாதானே? அதைப்பற்றி முழுமையான தகவல் எதுவுமே கிடைக்காது. எல்லாவற்றையும் மறைத்து வைத்திருக்கிறார்கள், ஒரு எட்டுப் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடலாம் என்பதற்கான முஸ்தீபுகளில் இறங்கினேன். வருடத்துக்குச் சில ஆயிரம் வெளிநாட்டவர்களைத்தான் சுற்றுலாவுக்கென்று அவர்கள் தங்கள் நாட்டுக்குள் அனுமதிப்பார்கள். அதுவும் குழுவாக வந்தால்தான் அனுமதிப்பார்களாம். உடன் வந்திருந்த ஆட்களைக் கேட்டுப் பார்த்தேன். சீனப் பெருஞ்சுவரைப் பார்க்க அவர்கள் முடிவு செய்திருந்தார்கள். தனியாக வட கொரியாவுக்குச் செல்லும் தெனாவெட்டு இல்லாததால், அந்த யோசனையைக் கைவிட்டுவிட்டேன்.

  ஆனால், அப்பொழுதிருந்தே மூக்கு அரித்துக்கொண்டிருக்கிறது. அப்படி என்ன அந்த நாட்டில் இருக்கிறது? எந்த ஆவணப்படம் கிடைத்தாலும் விடுவதில்லை. Land of Whispers என்ற ஒரு ஆவணப்படம் ஓராண்டுக்கு முன்பாக வந்திருந்தது. வட கொரியாவுக்குப் பயணம் செய்த ஒருவர் அதைப் படமாக்கியிருந்தார். கொரியாவைப் பற்றிக் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்துகொள்ளத் தொடங்கியபோது, அந்த ஆளுக்கு படு தைரியம்தான் என்று நினைக்கத் தோன்றியது. இதை அப்படியே வெளியிடப்போகிறான் என்று தெரிந்திருந்தால், அப்போதே வகுந்திருப்பார்களோ என்னவோ. வடகொரியாவைப் பற்றி முழுமையாக இல்லையென்றாலும் குறுக்குவெட்டாகப் புரிந்துகொள்ள அந்தப் படம் உதவும். யூடியூப்பிலேயே கிடைக்கிறது.
   

  pic3.jpg
   

  இந்த இடத்தில் கொரியாவின் வரலாற்றைக் கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டும்.

  ஒருங்கிணைந்த கொரியா ஒரு காலத்தில் ஜப்பான் வசமிருந்தது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் வீழ்ந்த பிறகு, கொரியா பிரிக்கப்பட்டு வட கொரியா ரஷ்யாவின் வசமும், தென் கொரியா அமெரிக்காவின் வசமும் வந்தன. தென் கொரியர்கள் அதிர்ஷ்டசாலிகள். தப்பித்துவிட்டார்கள். அமெரிக்காவின் வசம் வந்ததால் தப்பித்துவிட்டார்கள் என்று சொல்லவில்லை. ஆட்சி அதிகாரம் ஒரே குடும்பத்திடம் சிக்கவில்லை. ஆனால் வட கொரியர்கள் பாவப்பட்டவர்கள். கிம் குடும்பத்தாரிடம் காலங்காலமாக தங்களை அடிமைகளாக நேர்ந்துகொண்டுவிட்டார்கள். வட கொரியாவைப் பொறுத்தவரை அதிபர்களாக இருந்த தாத்தா, அப்பா, பேரன் என்ற இந்த மூன்று பேரும்தான் கடவுளர்கள். அவர்களால் முடியாத காரியம் எதுவுமே இல்லை. பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அத்தனை பேரையும் கிட்டத்தட்ட மூளைச்சலவை செய்து வைத்திருக்கிறார்கள். தங்கள் அதிபர் சிறுநீர் கழிக்கமாட்டார், மலம் கழிக்கமாட்டார் என்று நம்புகிற கொரியர்களைச் சாதாரணமாகப் பார்க்கலாம் என்று சொல்வார்கள். தெய்வங்கள் சிறுநீர் கழிப்பார்களா? அந்த அடிப்படையில்தான் இந்த நம்பிக்கை.

  திரும்பிய பக்கமெல்லாம் தங்களின் தலைவரின் படம்தான். அதிபரின் படம் பிரசுரிக்கப்பட்ட செய்தித்தாளை மடக்கக்கூடாது. அவர்களது சிலைகளை நிழற்படம் எடுத்தாலும்கூட அவர்களது கீழாக இருந்துதான் படம் எடுக்க வேண்டும். எந்தப் பாகத்தையும் கத்தரிக்கக்கூடாது. மலைச்சிகரங்களுக்கு அதிபரின் பெயர். எங்கெங்கும் சிலைகள். இப்படி நாடு முழுவதும் அனைத்துமே கிம் மயமாகிக் கிடக்கிறது. செய்திகள் தணிக்கை செய்யப்படும். சானல்கள் தணிக்கை செய்யப்படும். தணிக்கை என்றால் சாதாரண தணிக்கை இல்லை. கடுமையான கட்டுப்பாடுகள். நாட்டு மக்களுக்கு சோற்றுக்குப் பஞ்சம் என்றாலும், உலக ராணுவங்களில் நான்காவது பெரிய ராணுவம் வட கொரியாவுடையதுதான். உலகின் மிகக் காஸ்ட்லியான கார்களை கணக்கு வழக்கு இல்லாமல் அதிபர் சேகரித்து வைத்திருப்பதாகச் செய்திகள் உண்டு. நாட்டு மக்கள் எக்கேடு கெட்டால் என்ன? அதிகாரம் எங்களிடம் இருக்கிறது என்கிற நினைப்புதான் அதிபருடையது.

  இப்போது அதிபராக இருக்கும் கிம், சுவிட்சர்லாந்தில் படித்திருக்கிறார். அவர் சுவிஸ்ஸில் இருந்தபோது அவர்தான் வட கொரிய அதிபரின் வாரிசு என்பது யாருக்குமே தெரியாது. சுவிட்சர்லாந்தில் இருக்கும் வட கொரிய தூதரகத்தின் அதிகாரி ஒருவரின் மகன் என்ற அடையாளத்தோடு, வேறு பெயரில்தான் படித்திருக்கிறார். ஒரு நிழற்படம் வெளியானதில்லை. அவர்தான் வட கொரியாவின் அடுத்த அதிபர் என்பதே யாருக்கும் தெரியாது. அவருடைய சகோதரர் ஒருவர்தான் அடுத்த அதிபர் ஆவார் என்று நம்பியிருக்கிறார்கள். அவருக்கு சற்று பெண் சாயல் இருக்குமாம். அதனால் இவரை அதிபராக்கிவிட்டார்கள். இறந்துபோன இவரது அப்பாவின் விருப்பம் அது - பெண் சாயல் உடையவன் அதிபராகக்கூடாது என்று சொல்லிவிட்டாராம்.

  இந்த அதிபரைப் பற்றிய செய்திகளையும் தகவல்களையும் படமாக்கிப் பார்த்தால் எப்படி இருக்கும்? அப்படியொரு படமும் வந்திருக்கிறது. The Interview.

  வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் (Kim Jong Un)-ஐ நேர்காணல் செய்வதற்காக இரண்டு பத்திரிகையாளர்கள் வட கொரியா செல்கிறார்கள். அவர்களை வைத்து அதிபரைக் கொல்ல அமெரிக்க உளவுப் படை திட்டமிடுகிறது. இந்தக் கதையின் வழியாக வட கொரியாவின் சூழலை வெட்ட வெளிச்சமாக்குவதற்கு முயற்சி செய்திருக்கிறார்கள். இந்தப் படத்தை சோனி நிறுவனம் தயாரித்திருந்தது. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு படு ஜாலியான படம். ஆனால், படத்தை வெளியிட்டால் கருணையே இல்லாத நடவடிக்கையை எடுப்போம் என்று வட கொரியா மிரட்டியது. படத்தைத் தயாரித்த சோனி நிறுவனத்தின் கணினிகள் Hack செய்யப்பட்டன. அந்நிறுவனம் தயாரித்து வைத்திருந்த சில படங்களின் காட்சிகளைக் கசியவிட்டார்கள். பிரச்னை தீவிரமாகிக்கொண்டிருந்ததை உணர்ந்த சோனி நிறுவனம், இந்தப் படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதற்குத் தயங்கியது. ‘பணம் போனால் தொலையட்டும். கொரியர்களுடன் எதுக்கு வம்பு?’ என்ற தயக்கம்தான். படத்தை வெளியிட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் உள்ளிட்டோர் அழுத்தம் கொடுத்தார்கள். கடைசியில், இணையத்தின் வழியாக மட்டும் படம் வெளியானது.

  ஸ்கைலார்க் என்னும் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் டேவ் மற்றும் அந்த நிகழ்ச்சியின் இயக்குநர் ஆரோன். பெரிய அரசியல் ஆர்வம் எதுவும் இல்லாதவர்கள். வட கொரிய அதிபர் தங்கள் நிகழ்ச்சியின் ரசிகர் என்று அவர்களுக்குத் தெரிய வருகிறது. அதுவரை பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருந்தவர்கள், ‘உங்களின் நேர்காணல் வேண்டுமே’ என்று வட கொரியாவுக்கு செய்தி அனுப்புகிறார்கள். பாதுகாப்புக் காரணங்களுக்காக ஆரோனை சீனாவின் மலைப்பகுதிக்கு வரச் சொல்கிறார்கள். கஷ்டப்பட்டு பயணிக்கிறார். ஒரே நிமிடம்தான். வடகொரிய அரசு நேர்காணலுக்கு அனுமதி அளிக்கிறது.  ‘இதைச் சொல்லவாடா இவ்வளவு தூரம் அலையவிட்டீர்கள்’ என்று நொந்துபோகிறார். இருந்தாலும் படு சந்தோஷம் அவருக்கு.

   

  pic3a.jpg
   

  டேவ் மற்றும் ஆரோன் இருவரும் வட கொரியா செல்வதற்குத் தயாராகிறார்கள். இந்த நேர்காணல் பற்றிய விஷயம் வெளியுலகுக்குத் தெரிந்தவுடன், அமெரிக்க உளவுத் துறையின் பெண் ஏஜென்ட் ஒருவர் இவர்களை நாடுகிறார். ஒரே குறிக்கோள்தான் - கிம் சாகடிக்கப்பட வேண்டும். முதலில் மறுக்கும் இவர்கள், பிறகு ஒப்புக்கொள்கிறார்கள். ஆமணக்கு விதையில் தயாரிக்கப்படும் விஷமான ரிஸினை, கொரிய அதிபருடன் கைகுலுக்கும்போது அவருடைய உடலுக்குள் செலுத்திவிட வேண்டும் என்பதுதான் திட்டம். அதை டேவ் செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது.

  இருவரும் வட கொரியாவுக்குச் செல்கிறார்கள். வட கொரிய அதிபரின் படாடோபமான வாழ்க்கை முறை இருவரையும் திகைக்கச் செய்கிறது. டேவ், அதிபர் கிம்மின் ஆதரவாளராக மாறுகிறார். அதற்குக் காரணம் இருக்கிறது. மது, மாது என்று டேவ்வுக்கு சகலமும் கிடைக்கின்றன. கிம்மின் பலவீனங்கள் டேவ்வுக்குத் தெரிய வருகிறது. டேவ்வுக்கு அதிபர் மீது பரிதாபம் வருகிறதோ இல்லையோ - நமக்கு வருகிறது. அதிபரைப் பற்றிய இந்தப் புரிதல் காரணமாக, அதிபரைக் கொல்ல தன்னால் முடியாது என்று கை விரித்துவிடுகிறார். ‘நீ கொல்லாட்டி என்ன? நான் கொல்கிறேன்’ என்று, அதிபரைக் கொல்லப்போவதாக ஆரோன் சொல்கிறார். ஆனால், இது ஒரு கமர்ஷியல் படம் அல்லவா? வழக்கம் போலவே டேவ்வுக்கும் வட கொரிய மக்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று ஒரே இரவில் தெரிந்துவிடுகிறது. இந்தச் சமயத்தில், ஆரோனை கிம்மின் பெண் பாதுகாவலர் விரும்புகிறாள். அவளும் இவர்களுக்கு ஆதரவாக மாறுகிறாள். ஆனால், அதிபரைக் கொல்லக்கூடாது என்கிறாள். வேறு என்ன செய்வது? நேர்காணலின் வழியாகவே அதிபரின் முகத்திரையைக் கிழிக்க முடிவு செய்யப்படுகிறது. நேர்காணல், தடையில்லாமல் ஒளிபரப்பாவதற்கு தான் உதவுவதாகச் சொல்கிறாள்.

  நேர்காணலில் எதிர்பாராத கேள்விகளை டேவ் கேட்கிறார். அதிபர் கிம்மை அழ வைக்கிறார். ‘நமது அதிபர் கடவுள் இல்லை; சாதாரண மனிதன்தான்’ என்று கொரியர்கள் ஆச்சரியமடைகிறார்கள். நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருக்கும் ராணுவமும் போலீஸும், டேவ்வையும் ஆரோனையும் கொல்ல வருகின்றன. இருவரும் தப்பித்து ஓடுகிறார்கள். கடும் கோபம் கொள்ளும் கிம்மும், ஹெலிகாப்டரில் இவர்களைத் துரத்துகிறார். கடைசியில் கிம்மைக் கொன்றுவிட்டு இருவரும் நாட்டை விட்டு வெளியேறுவதுதான் கதை.

  ஹாலிவுட் அதிரடிப்படங்களைப் போன்ற மசாலாவான படம்தான் இது. ஆனால், படம் முழுவதும் இழையோடும் நகைச்சுவை, சுவாரசியமான நகைச்சுவை. டேவ் மற்றும் அதிபராக நடித்திருந்த நடிகர்களின் கலக்கலான நடிப்பு என்று தூள் கிளப்பியிருக்கிறார்கள். டேவ், துள்ளலான கதாபாத்திரம் என்றால், முப்பத்தியிரண்டு வயதில் மிகப்பெரிய பொறுப்பைச் சுமந்துகொண்டிருக்கும் அதிபராக தனது பலவீனங்களை கஷ்டப்பட்டு மறைக்க வேண்டிய அழுத்தங்களையும், தனது வயதுக்கே உரிய இளைஞனின் ஆசைகளையும் பிரமாதப்படுத்தியிருக்கிறார், அதிபராக நடித்திருக்கும் ராண்டல் பார்க். படத்தில் பெரிய சண்டைக்காட்சிகள் இல்லை. பெரிய சதி வலைகள் இல்லை. மிக இயல்பான திரைக்கதையின் வழியாகவே இவ்வளவு சுவாரசியங்களைக் காட்டியிருக்கிறார்கள். எந்தப் பிரச்னையும் இல்லாமல் இப் படம் வெளியாகியிருந்தால், வட கொரியாவைப் பற்றிய ஒரு சித்திரத்தை ஒவ்வொருவருக்கும் உருவாக்கியிருக்கக்கூடும். ஆனால் தடுத்துவிட்டார்கள்.

  இந்தப் படமே ஒரு டுபாக்கூர். வட கொரிய சுப்ரீம் லீடரின் நல்ல பெயருக்குக் களங்கம் உருவாக்குவதற்காக அமெரிக்கக் கைக்கூலிகள் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள் என்று வட கொரியா கதறுகிறது. எங்கள் நாட்டில் வளங்கள் கொட்டிக் கிடக்கின்றன என்று மார் தட்டுகிறார்கள். ஆனால், Land of whispers படத்தில் வரும் சில காட்சிகள். The interview-ல் வருகின்றன. உதாரணமாக, ஒரு கடையில் பழங்கள்-காய்கறிகள் அழகாக அடுக்கப்பட்டிருக்கும். ஆனால், அவை உண்மையானவை இல்லை. ‘நம் நாடு வளமானது’ என்று காட்டுவதற்காக அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் ப்ளாஸ்டிக்கால் ஆனவை அவை. ஒருவேளை, ஆவணப்படத்திலிருந்து இந்தத் தகவலை The interview குழுவினர் பயன்படுத்தியிருக்க வாய்ப்பு உண்டு.

  ஆனால், உண்மையிலேயே வடகொரியாவின் சூழல் எப்படியிருக்கிறது? ஏன் மற்ற நாட்டவர்களை வட கொரியா தங்கள் நாட்டுக்குள் அவ்வளவு எளிதாக அனுமதிப்பதில்லை? ஏன் வட கொரியா பற்றிய எந்தச் செய்தியும் வெளியில் வருவதில்லை? ஏன் அந்த நாட்டில் திரைப்படங்கள் எதுவும் தயாரிக்கப்படுவதில்லை? - இப்படி ஏகப்பட்ட கேள்விகளைக் கேட்க முடியும். ஆனால், எந்தக் கேள்விக்கும் இப்போதைக்கு பதில் கண்டுபிடித்துவிட முடியும் என்று தோன்றவில்லை. நம் தலைமுறையின் மிகப்பெரிய புதிர் தேசம் அது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai