பகுதி - 7 டமால்... டுமீல்...

ஜாவா மலையில் உள்ள பெண் சுண்டெலிகள், ஆண் சுண்டெலிகளைக் கவர பாட்டு பாடுகின்றனவாம்…


ஜாவா மலையில் உள்ள பெண் சுண்டெலிகள், ஆண் சுண்டெலிகளைக் கவர பாட்டு பாடுகின்றனவாம்…

சுண்டெலி நீயும் சுண்டெலி ஞானும் சேர்ந்திருந்தால் திருஓணம் மாதிரியா?

***

நாடு முழுவதும் ஏழுமலையானுக்கு கோயில் கட்ட திருப்பதி தேவஸ்தானம் முடிவு

உண்டி பெருகுதல் பெருமாளுக்கு அழகு என்றுதானே?

***

‘தாடி’ என்கிற வார்த்தை இந்தியிலும், ஃப்ரெஞ்சிலும் பெண்பாலாம்

அடிக்கடி நசநச என்று அரித்துப் பிடுங்குவதால் இருக்கும்.

***

சீன உணவு விடுதி ஒன்றில் ஆண்களின் கழிப்பறையில் பெண் பொம்மைகள்...

பொம்மைகள் கண்களை இறுக மூடிக்கொண்டு நிற்கும் அல்லவா?

***

டப்பிங் கலைஞர்களின் சம்பளப் பட்டுவாடாவில் குளறுபடிகள்.

குரல் கொடுக்கப்பட்ட கலைஞர்கள், இவர்களுக்காக குரல் கொடுப்பார்களா?

***

சிங்கப்பூரில் சூயிங்கம் வாங்க டாக்டர் பிரிஸ்கிரிப்ஷன் தேவையாம்.
மென்றுவிட்டு கண்ட இடத்தில் துப்பினால் ஃபைன் கட்ட பணமும் தேவை.

***

டில்லி அமைச்சர் சந்தீப் குமார், மனைவியின் காலைத் தொட்டுவிட்டுதான் வெளியே கிளம்புவாறாம்.

இதனால் அவளது நெஞ்சைத் தொட்டுவிடுகிறாரோ?

***

சென்னை விமான நிலையத்தில் 40-வது முறையாக கண்ணாடிக் கதவு உடைந்து விழுந்தது.

அடுத்த ஐட்டம் எங்கே விழும் என்று பெட்டிங் நடந்தாலும் நடக்கும்.

***

பட்ஜெட் உரையை, திருக்குறளுடன் ஆரம்பித்து நாலடியாருடன் முடித்தார் முதல்வர் பன்னீர்செல்வம்.

வரிகள் குறைவு என்பதால் வரிகள் குறைவான பாடல்களை தேர்ந்தெடுத்தாரா?

***

நாகப்பாம்பைப் பிடித்த வாலிபர் செல்ஃபி எடுக்கும்போது கொத்திவிட்டது.
படம் நான்தான் எடுக்கணும். நீ ஏன் எடுத்தாய் என்ற கடுப்புடன்தானே?

***

அமெரிக்காவில், இருளில் பார்க்க உதவும் சொட்டு மருந்து கண்டுபிடிப்பு.
பகலில் பசுமாடு தெரிவதுபோல் இரவில் எருமை மாடும் தெரியுமே!

***

வெள்ளிக்கிழமைகளில் முதலாக முட்டையிடும் கோழியால் வீட்டுக்கு ஆகாதென்று அதை அடித்துத் தின்றுவிடுவார்களாம்.

போட்டது தங்க முட்டையாக இருந்தால்…?

***

தங்கத்தினாலேயே செய்யப்பட்ட சைக்கிளின் விலை மூணு கோடி ரூபாயாம்.
வாங்குபவரின் பர்ஸ் பஞ்சராகிவிடாதா?


***

ரூபாய் நோட்டுகளை இந்தியக் காகிதங்களில் அச்சடிக்க பிரதமர் மோடி விருப்பம்.

கிழிஞ்சுது போ!

***

மகாராஷ்டிராவில், மாடுகளின் போட்டோக்களை உரிமையாளர்கள் வைத்துக்கொள்ள வேண்டுமாம்.

‘மாடு மாதிரி குடும்பத்துக்கு உழைக்கிற என் போட்டோக்குக் பதிலா?’ என்று மனைவிமார்கள் சப்பாதிக் கட்டையை கையில் எடுக்கலாம்.


***

ஐந்து உறுப்பினர்களை சேர்த்தால் ஒருவருக்கு ஹேர் கட்டிங் இலவசம் —மகாராஷ்டிரா பா.ஜ.க. அறிவிப்பு.

வேறு ‘கட்டிங்’ கிடைக்காதா என்று ஒரு குடிமகன் கேட்கிறார்.

***

வருமான வரி கட்டாத டாப் 18 பேர் பட்டியல் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது.

போட்டோக்களுடன் அறிவித்திருந்தால் சிரித்தபடி போஸ் குடுத்திருப்பார்கள்

***

கேட்வாக்கில், ஒல்லிக்குச்சி மாடல்கள் நடக்கத் தடை.

பார்வையாளர் பலமாகத் தும்மினால் பறந்து போய்விடுகிறார்கள் என்பதாலா?

***

இங்கிலாந்தில் உள்ள நாத்திகர்களின் எண்ணிக்கை 2050-ல் நாற்பது சதவீதம் அதிகரிக்குமாம்.

‘My God!’ நெஜமாவா?’ என்று வாய் பிளந்து வியப்பார்களா?

***

மனைவி, தன் பெயருடன் கணவர் பெயரையும் சேர்த்துக்கொள்ள சட்டம் ஏதும் இல்லையாம்.

அட! திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றுகூடத்தான் சட்டம் இல்லையே!


***

உ.பி. கிராமத்தில், திருமணத்துக்கு மணமகன் தாமதமாக வந்தால் நிமிடத்துக்கு நூறு ரூபாய் அபராதம்.

‘ஞானம்’ பிறந்து வராமலேயே இருந்துவிட்டால்…?

***

அமைச்சர் கஜபதி ராஜூ, விமானத்தில் தீப்பெட்டியுடன் பயணிக்கிறாராம்.
அவரே உரசி விஷயத்தை பற்ற வைத்துவிட்டாரே!

***

இந்து தர்ம சாஸ்திரத்தின் அறிவுரைப்படி, கோவணம் இல்லாமல் வீட்டின் நிலைப்படியைத் தாண்டக்கூடாதாம்.

அதாவது, கட்டுப்பாடுடன் வெளியே செல்ல வேண்டும். அதற்குத்தானே…?

***

உ.பி.யில், கணக்கு விடைத்தாள்களை ஹிந்தி ஆசிரியர்கள் திருத்துகிறார்களாம்...

‘யே கல்த்தி ஹை பாய். பில்குல் டீக் நஹி ஹை! (இது ரொம்ப தப்பு... கொஞ்சம் கூட சரியில்லை!)

***

ஏர் இந்தியா விமான காக்பிட்டில், கேப்டனை துணை விமானி தாக்கினாராம்…


பறந்து பறந்தா?

                                   ---------

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com