பகுதி – 3 டமால்… டுமீல்…

நிலக்கரி ஊழல் விவகாரத்தில் மன்மோகன் சிங்குக்கு சம்மன்‘உங்க (கோல்கேட்) பேஸ்ட்டிலே கருப்பு இருக்கா?’

நிலக்கரி ஊழல் விவகாரத்தில் மன்மோகன் சிங்குக்கு சம்மன்

‘உங்க (கோல்கேட்) பேஸ்ட்டிலே கருப்பு இருக்கா?’

***

திருப்பதி தேவஸ்தான டயரியில் மகாவிஷ்ணுவை அர்த்தநாரீஸ்வரரக சித்தரித்திருப்பதை எதிர்த்து வழக்கு.

மாதொருபாகன் என்றாலே வழக்குதான் போலிருக்கு.

***

சொத்து வரி கட்டாததால் நயன்தாராவுக்கு ஊட்டி நகராட்சி நோட்டீஸ்.

நயன்தாரா, வரிதாராதவராகிவிட்டாரா?

***

இரண்டு வருடங்களில், மனிதன் மாற்றுத் தலையைப் பொருத்திக்கொள்வது சாத்தியமாம்.

புதிய ‘தலை’முறை வருகிறது என்று சொல்லலாமா?

***

கம்ப்யூட்டர்கள் நம் மொழியில்  பேசுமாம்.

‘பாத்தது போதும்ப்பா ஆஃப் பண்ணு’ன்னு எரிந்து விழுமா?

***

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு 2 வருடம் கழித்து 40,000 பக்க பதில்.

கடைசி பேராவில் ‘இனிமே கேக்கமாட்டியே? கேக்கமாட்டியே’ என்கிற பஞ்ச் இருந்ததா?

***

ஜிம்பாப்வே ஜனாதிபதி முகாபே பிறந்தநாள் விழாவில் யானை மாமிசம்.

தொட்டுக்க காட்டுப் பூனைச் சட்டினியா?

***

ப.சிதம்பரத்தின் ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பு நீக்கம்

‘ஒய்’?

***

தியேட்டருடன் வணிக வளாகமாக மாறும் சாந்தி தியேட்டரில் சந்திரமுகி 888 நாட்கள் ஓடியது.

வசூல் ‘லகலகலகலக’ன்னு கொட்டியிருக்கும்

***

வீடுகளில் புலியை வளர்க்க வேண்டும் — பெண் அமைச்சர் அறிவுரை.

சீறினால் வீட்டு எஜமானி முறத்தால் அடித்து கண்டிப்பாள் என்று சாதுவாக இருக்குமா?

***

உருண்டை வடிவ முட்டை லண்டனில் ரூ.46,000-க்கு விலை போனது.

இவ்வளவு விலையில் வாங்கிப் போட்ட ஆம்லெட் ஜீரணமாகுமா?

***

சர்ச்சையில் பத்திரிகையாளரை ஏசிய விராட் கோலி.

மட்டையை வீசப்பா. ஆட்களை ஏசாதே.

***

எவரெஸ்டில் குப்பைகள் குவிந்துள்ளன.

இதில் என்ன அதிசயம். நம்மூரில் குப்பைகள் எவரெஸ்டாக குவிந்திருக்கின்றனவே!

***

ராயல்டி ஒழுங்காக வந்திருந்தால் பில் கேட்ஸாக ஆகியிருப்பேன் - இளையராஜா.

ராஜா, சக்கரவர்த்தியாக மாறியிருப்பாரா?

***

பிளஸ் டூ தேர்வின்போது நாற்காலி இல்லாததால் ஆசிரியர்கள் பெரும் அவதி.

விடை தெரியாது விழிக்கும் மாணவர்களின் அவதியை விடவா?

***

அடுத்த வாரம் முதல் ராகுல் செயலாற்றுவார் - கமல்நாத் அறிவிப்பு.

இதுவரை செயலாற்றவில்லை என்று பொருள்படுகிறதே!

***

26% இந்தியர்கள் குறட்டை விடுகிறார்களாம் - நிபுணரின் அறிவிப்பு.

என்றால் 74% தூக்கமில்லாமல் அவதிப்படுகிறார்கள் அல்லவா?

***

மூர்க்கத்தனமான ஆக்ரா குரங்குகள் மறுவாழ்வுக்கு ரூ.58 லட்சம்.

ராம, ராமா என்று சாதுவாக இருக்கும் குரங்குகள் என்ன பாவம் செய்தன?

***

வழக்கறிஞர்கள், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம் நடத்தினர்.

ஏற்கெனவே வழக்குகள் மாடு மாதிரி மெள்ள முன்னேறுகின்றன…

***

சமையல் எரிவாயு உருளை விநியோக ஊழியருக்கு கட்டாய டிப்ஸாக மாதம் பல ஆயிரங்கள் வருமானமாம்.

இதைக் கட்டுப்படுத்த ஒரு ‘ரெகுலேட்டர்’ அமர்த்தப்படுவாரா?

***

கிட்டேவா தீவில் உள்ளவர்களுக்கு நீரிழவு, முடக்குவாதம், டிமென்ஷியா போன்ற தொல்லைகள் கிடையாதாம்.

‘கிட்டேவா’ என்று வரவழைக்க முயன்றால்கூட கிட்டே வராதோ!

***

ஆம் ஆத்மி கெஜ்ரிவாலுக்கு பெங்களூரில் களி மண் பூச்சு சிகிச்சை.

மண்ணாசை பிடித்தவர் என்று எதிர்க்கட்சியினர் குரல் குடுப்பார்களா?

***

108 ஆம்புலன்ஸை ஓட்டும் கயல்விழி, குறுகிய நேரத்தில் நோயாளியைக் கொண்டு சேர்த்துவிடுகிறார்.

பெண் என்பதால் வழிவிடாத வாகனப் பேய்களும் இரங்கி வழி விட்டுவிடும் அல்லவா?

***

பிரிட்டனில், கோழிக்குஞ்சுகளை ஆணா பெண்ணா என்று கண்டுபிடிக்கும் ஊழியருக்கு ஆண்டுக்கு ரூ.38 லட்சம் சம்பளமாம்.

இதில் என்ன கஷ்டம்? கீச் கீச் என்று தொடர்ந்து சத்தம் போடுவது பெண். மௌனியாக இருப்பது ஆண்.

***

இங்கிலாந்தில், மனிதக் கழிவுகளின் வாயுவால் ஓடும் பஸ் அறிமுகம்.

பஸ் தாமதமானால் ‘ச்சே!  இன்னும் வரவில்லையே?’ என்று முக்கல் முனகலுடன் பயணிகள் அவதிப்படுவார்களா?

***

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com