பகுதி - 4 டமால்... டுமீல்...

சீன நிறுவனங்களுக்கு வர்த்தக முன்னுரிமை சலுகை இனி கிடையாது – இலங்கை அறிவிப்பு.

சீன நிறுவனங்களுக்கு வர்த்தக முன்னுரிமை சலுகை இனி கிடையாது – இலங்கை அறிவிப்பு.

நிஜமாகவா? அல்லது இது இலங்கை காட்டும் scene-ஆ?

***

காவிரி டெல்டாவில் மீத்தேன் திட்டத்தை கைவிட போராட்டம்.

எடுத்தேன் கவிழ்த்தேன் என்று மீத்தேனில் முடிவு எடுத்துவிட்டார்களா?


***

விடிவதற்கு முன் குப்பையை வாறிய அமெரிக்க ஊழியருக்கு 30 நாள் சிறை.

இவரின் சுத்தம் (சிறையில்) சோறு போடும் போலிருக்கு.

***

மோடியின் ‘பேட்டி பச்சோவோ, பேட்டி பதாவோ திட்டம்’ அறிவிப்பு.

பெண்களைப் புரிந்துகொள்வதைவிட இந்தப் பெயர்களைப் புரிந்துகொள்வது கடினம் போலிருக்கு.

***

இனிய வாழ்வின் ரகசியம் மாதம் 11 முறை உடலுறவு கொள்வதாம்…

அதாவது, கணவன் அவருடைய மனைவியுடனும்தானே?

***

துடைப்ப டிஸைனில் 22 காரட் தங்கக் காதணிகள்.

பாராட்டுதல்களைக் கூட்டி வாரிக் குவிக்க வைக்குமா?

***

எண் 2-ஐ டயல் செய்தால், மூத்த குடிமகன்கள் உதவிக்கு போலீஸ் வரும். கடை கண்ணிகளுக்கு போய் உதவுமாம்.

நெஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜம்மாவா?


***

ஆந்திர கல்லூரி ஹாஸ்டல் சாம்பாரில் தவளை மிதந்ததால் மாணவர்கள் கொதித்தனர்.

தொடர்ந்து தவளையாக குதித்தனரா?

***

ரூ.1000 கட்டினால் ஒரு வருடத்துக்கு இலவசமாக கோவில்பட்டி சண்முகா தியேட்டரில் சினிமா பார்க்கலாமாம்.

மாணவர்கள் ஆயிரம் பொய் சொல்லி பணத்தைப் புரட்டிக் கட்டிவிடலாம்.

***

மணிரத்னம் 3 நிமிடங்களில் திரைக்கதையை சொல்லி விடுவாராம்.

வசனத்தை 4 நிமிடங்களிலா?

***

கரப்பான் பூச்சிகளுக்கு தனிப்பட்ட பெர்சனாலிடி உண்டாம்.

விருப்பு, வெறுப்பு, மறுப்பு, கடுப்பு ஆகியவை கரப்புக்கு உண்டுதானே?

***

காந்தியை பிரிட்டிஷ் ஏஜென்ட் என்று சொன்ன மார்கண்டேய கட்ஜூவுக்குக் கண்டனம்.

மார்கண்டேயராச்சே, சர்ச்சைகளில் சிரஞ்சீவியாக இருப்பார் போலிருக்கு.

***

கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனுக்கு கோர்ட்டில் ஆஜராக சம்மன்.

இந்தக் கச்சேரியில் கை தட்டிய வரவேற்பு இருக்காது.

***

ஜெர்மனி சுவற்றில் சிறுநீர் கழித்தால் திருப்பி பாய்ச்சி அடித்துவிடுமாம்.

நியூட்டன் விதிப்படி, அடித்த வேகத்திலேயே மூச்சா  திரும்பி வந்து தாக்குமா?

***

இந்தியக் கழிப்பறைகளே சிறந்தது — சீன நிபுணர்.

குத்திட்டு உக்காந்து, ஆராய்ந்து யோசிச்சு வந்த முடிவு போலிருக்கு!

***

ஜெஃப்ரி ஆர்ச்சரின் கதைகளை இந்திப் பட உலகம் திருடுகிறதாம்.

‘நாட் எ பென்னி மோர் நாட் எ பென்னி லெஸ்’ என்று வசூலிக்காமல் ஏமாறுகிறாரே!

***

இளநீரில் துளை போட்டுக் குடிக்க கருவி கண்டுபிடிப்பு. அரிவாள் தேவை இல்லையாம்.

வழுக்கைக்கு சீவ வேண்டாமா?

***

15-யும் 6-யும் கூட்டினால் விடை 17 என்று சொன்ன மாப்பிள்ளையை நிராகரித்த உ.பி. மணப்பெண்.

அடபோம்மா! வித்தியாசம் மூணு தானேன்னு நாலும் தெரிந்த நாட்டாமை பெரிசு சமாதானம் சொன்னதா?

***

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா பாம்பை சாப்பிட்டு இருக்கிறாராம்.

டென்னிஸ் கோர்ட்டில் பாம்பு மாதிரி  சரசரன்னு ஓட உதவத்தானே?

***

மதுரை ஓட்டலில், கஸ்டமரின் ராசிக்கு ஏற்ற தானியங்களால் தயாரித்த தோசை வழங்கப்படுகிறது.

இருப்பினும், தோசையின் தரம், மணம், சூடு போன்றவை அன்றைய ராசிபலனைப் பொருத்து அமையலாம்.

***

இருமல் நோயை நாய்த்துளசி மூலிகை விரட்டி அடிக்குமாம்.

குறிப்பாக, நாய் குரைப்பைப்போல் அதிர்ந்து தொடரும் இருமலைத்தானே?


***

ராகுல் காந்தி எங்கே போனார் என்கிற மர்மம் நீடிக்கிறது.

நேரு குடும்பப் பாடலைப் பாடித் தேடினால் பலன் இருக்காதா?

***

தமிழர் திருமணங்களில் தாலி இடம்பெற்ற காலம் பற்றி சர்ச்சை.

இந்தச் சிக்கலில் மூன்றுக்கு மேல் முடிச்சுகள் இருக்கும்போல் இருக்கு.

***

நிரோத்தின் புதிய உறையின் மேல் ஆணும் பெண்ணும் இணைந்து வயலின் வாசிக்கும் படம் இடம்பெற யோசனை.

வயலினைத் தொடர்ந்து வாசித்துக்கொண்டே இருந்தால் நிரோத் தேவைப்படாதே!

***

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com