பகுதி - 5 டமால்... டுமீல்...

ஏழு வாரப் பெண் சிசு, அப்பாவைப் பார்த்து ‘ஐ லவ் யூ’ என்று பேசியதாம்.



ஏழு வாரப் பெண் சிசு, அப்பாவைப் பார்த்து ‘ஐ லவ் யூ’ என்று பேசியதாம்.

‘மீட் மை பாய் ப்ரண்ட்’ என்று பக்கத்துத் தொட்டில் ஆண் குழந்தையையும் அறிமுகமும் செய்துவைத்ததா?


***

கணவனைக் கொன்ற அமெரிக்கப் பெண், மரண தண்டனைக்கு முன் கேட்ட கடைசி ஆசை, சூப்பர் சாப்பாடு.

கணவருக்கும் சேர்த்து பெரிய ஏப்பம் விடத்தானே?


***

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏப்ரலில் இருந்து யோகாசனப் பயிற்சியாம்.

அலுவலக ஆசனத்திலேயே உட்காராதவர்கள், பத்மாசனம் போட்டா உட்காருவார்கள்?

***

தேனி மாவட்டத்தில் இருந்து புளி வரவு குறைவு.

‘புளி வருது, புளி வருது’ என்று குரல் வருவது வெறும் புரளிதானா?

***

மூன்று சேப்பாக் ஸ்டாண்டுகள், கட்டுமான விதி மீறலுக்காக இடிக்கப்படலாம்.

சிக்ஸர்கள் பறந்து தாக்கினால் தானே விழுந்துவிடும் என்றா?

***

வதந்திகள் இல்லாவிடில் வாழ்க்கை போரடித்துவிடும் - ரஷ்ய அதிபர் புடின்.

குழந்தைத்தனமான வதந்தியாவது இருக்க வேண்டும் என்கிறாரா?


***

ரகசிய ஏஜன்டுகளுகளின் பயிற்சிக்காக அமெரிக்காவில் போலி வெள்ளை மாளிகை அமைக்கத் திட்டம்.

உள்ளே வசிக்கும் ஒபாமா, ஹாலிவுட்டின் டூப்பாக இருப்பாரோ?


***

கணினியில் பலான படங்களைப் பார்த்த இங்கிலாந்து நீதிபதிகள் பதவி நீக்கம்.


நீதிக்குத்தான் தலை வணங்கணும். நீலத்துக்கா?


***

பிகாரில் தேர்வு மையங்களில் ‘பிட்’ அடிக்க, நண்பர்களும் உறவினர்களும் பகிரங்கமாக உதவுகிறார்களாம்.

அடுத்ததாக ஒலிபெருக்கி வைத்து விடைகளை டிக்டேட் செய்வார்களா?


***

டிராபிக் ராமசாமி திரவ ஆகாரம் மட்டும் உட்கொள்கிறார்.

திட உணவுகள் ஜீரணமாகாமல் வயிற்றில் டிராபிக் ஜாம் செய்து விடுவதாலா?

***

தலையாட்டி பொம்மைகளின் விற்பனை குறைவு.

அதான் வீட்டில் ஒன்று இருக்கே என்று மணமான பெண்கள் கருதுகிறார்களா?


***

பேச்சை பதிவு செய்து ரிலே செய்யும் பார்பி டால் கண்டுபிடிப்பு.


இதற்கு, தலையாட்டி பொம்மையே தேவலை. சிக்கலில் மாட்டி விடாது


***

காலி டெட்ரா பேக்கினால் செய்த பெஞ்ச்சுகளில் படுத்து ஓய்வெடுக்கலாமாம்.

உடலில் இருந்து உறிஞ்சப்பட்ட சக்தியை மீட்டுத் தரும் போலிருக்கு.


***

அமுலின் இன்சுலின் சத்து மிகுந்த ஒட்டகப் பால் விற்பனைக்கு வருகிறது.

குடித்தால், டயாபடீஸ் (பாலைவனக்) கப்பல் ஏறிப் போய்விடுமா?


***

சனி பகவானை தொழுத பின் திரும்பிப் பார்க்கக்கூடாதாம்.

திரும்பிப் பார்த்த முகத்தை நினைவில் வைத்துக்கொண்டு படுத்துவாரா?


***

தயிர்சாதம் 100 சதவீதம் சாதகமான உணவு இல்லை - ரயில்வே அமைச்சர் சுரேஷ் பாபு.

‘தஹி பாத்’ என்று இந்தியில் அமைந்தால்  சாதகமாயிடுமே!


***

உலகக் கோப்பை கிரிக்கெட் சூதாட்டம் நான்காயிரம் கோடி ரூபாயை தாண்டிவிடுமாம்.

இதில், ரீப்ளேயில் பெட் கட்டி ஏமாந்தவரின் தொகையும் உள்ளடக்கமா?


***

பொதுத் தேர்வின்போது பெற்றோர்கள் மோசடியில் ஈடுபட வேண்டாம் என பிஹார் முதல்வர் கோரிக்கை.

அப்படியென்றால் மற்றவர்கள் ஈடுபடலாமா?

***

சுடப்பட்ட அமெரிக்க இளைஞன், ரத்தக்களறியான தோளுடன் செல்ஃபி எடுத்து முகநூலில் பதிவு செய்தாராம்.

தோள் கண்டார் தோளே கண்டார் என்று மக்கள் வியந்து பாராட்டத்தானே?


***

மாயாவதி எழுதிய புத்தகத்தின் விலை ஒரு லட்சம் ரூபாய்.

பகுஜன் சமாஜ் தேர்தல் சின்னத்துக்குப் பொருத்தமாக, யானை விலையா?




***

தனக்கு மன நோய் இருக்கிறது என்று வரும் எண்ணமே ஒரு மனநோயாம்.

அதற்கு மருந்து இருக்காது என்று அஞ்சுவதும் ஒருவித மனநோயா?

***

ஹரியானா பசுக்களுக்கு பன்னிரெண்டு இலக்க ஆதார் போன்ற கார்டு அறிமுகம்.

இதைப் பெற அவை பலமுறை (கால்)நடையாக நடக்க நேரிடுமா?


***

சென்னை, கே.கே.நகர் பூங்காவில் மணிக்கு ஒரு முறை திருக்குறள் ஒலிபரப்பு.

யாருடைய திருக்குரலில்?!


***

கம்பெனி நிர்வாகிகளில் ஒரு பெண் டைரக்டர் கட்டாயம் இருக்க வேண்டும் என்று செபி கெடுபிடி.

இளம் பெண்ணாக அமைந்தால் ஆண் டைரக்டர்கள் டை அடித்து  டிப்டாப்பாக மீட்டிங்குக்கு வருவார்கள் அல்லவா?

***

ஐந்து ரூபாயாக இருந்த ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் இனி பத்து ரூபாய்.

‘ஐய்யா! என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா!’ என்று ரயில் நகர்ந்தவுடன் குதிக்க இனி இரண்டு மடங்கு செலவாகும்.


***

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com