தியூப்ளே வீதி: அத்தியாயம்- 5

சோனியான ரெண்டு பையன்கள். என் வயசு இருக்கும். அவர்களோடு கூட, தடியான ஒருத்தன். அதே வயசுதான். மூன்று பேரும், இடுப்பைச் சுற்றிக் கொப்பும் குழையுமாக வேப்பிலையைச் செருகிக் கொண்டு சுட்டெரி

ரொ
ம்ப நேரமாக நடந்து கொண்டிருக்கிறது என்று தோன்றியது -

சோனியான ரெண்டு பையன்கள். என் வயசு இருக்கும். அவர்களோடு கூட, தடியான ஒருத்தன். அதே வயசுதான். மூன்று பேரும், இடுப்பைச் சுற்றிக் கொப்பும் குழையுமாக வேப்பிலையைச் செருகிக் கொண்டு சுட்டெரிக்கும் வெய்யிலில் தொம்தொம்மென்று குதித்து நடனம் ஆடிக் கொண்டிருந்தார்கள்.

ஆட்டி வைத்துக் கொண்டிருந்தவன் ஆடினவர்களை விட எலும்பனாக இருந்தான். சட்டமாகக் கால் மேல் கால் போட்டவன் அவன். அடைத்துப் பூட்டியிருந்த என் சி சி ஆபீஸ் படிக்கட்டில் உட்கார்ந்து உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருந்தான். சீனியருக்கே உரிய கர்வம் அவன் முகத்தில்.

‘நிறுத்தாம ஆடு. நிறுத்தினா திரும்ப முதல்லே இருந்து ஆரம்பிக்கணும். பாடுங்கடா. சொன்னேன் இல்லே? பாடிட்டே ஆடணும்’.

அவனுக்கு ஏழெட்டு சிநேகிதர்கள். என் சி சி ஆபிஸைச் சுற்றி வட்டம் போட்டிருந்த கைப்பிடிச் சுவரில் உட்கார்ந்திருந்தார்கள். ஆட்டம் சிறப்பாக அமைய அவ்வப்போது ரெண்டு பைசா யோசனைகளை வழங்கிக் கொண்டிருந்தார்கள் –

‘நேத்து என்ன ஜோரா ஆடினானுங்க. மார்லே வேறே தொம்தொம்னு அடிச்சுக்கிட்டு என்ன குதி. இவனுங்க சரி இல்லேடா லச்சு. ‘

‘டேய், கொழையை நல்லா எறக்கிச் சொருகிக்கடா’

லச்சு என்றழைக்கப்பட்ட தலைவன் புதுக் கட்டளையைப் பிறப்பித்தான்.

காலேஜில் சேர வந்த ஜூனியர் அடிமைகள் சகல திசைகளிலும் இருந்து புறப்பட்ட ஆணைகளைப் பயத்தோடு நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள். இதெல்லாம் நடந்து முடிந்து தான் வகுப்பு எல்லாம் ஆரம்பிக்கும் என்று தோன்றியது.

‘லச்சு, கேபரே டான்ஸ் போடச் சொல்லலாம்’

இப்படி ஒருத்தன் உருப்படி இல்லாத யோசனை சொல்லிக் கொண்டிருந்தபோது தான் நான் போய்ச் சேர்ந்தேன்.

என்னை தள்ளிக் கொண்டு வந்த தொண்டன், பிடித்து வந்த பிணைக்கைதியை தீவிரவாதிகளின் தலைவரிடம் ஒப்படைக்கிற பொறுப்போடு என்னைக் கைமாற்றி விட்டு கட்டைச் சுவரில் ஹாயாக உட்கார்ந்தான்.

‘கேபரே போடுவியா?’

ஆலோசனைக் கமிட்டி உறுப்பினன் என்னைப் பார்த்துக் கேட்டான். என்னை அந்தக் கோலத்தில் பார்ப்பதில் அவனுக்கு என்ன பரவசமோ தெரியவில்லை.

‘இவனா, நோ சான்ஸ். பல்லி மாதிரி இருக்கான்’

கட்டைச்சுவர் உப தலைவன் உடனே நிராகரித்தான். ஏன்’யா பல்லி எல்லாம் ஆடக் கூடாதா என்று லாஜிக் இல்லாத கோபம் என் மனதில்.

‘பேர் என்னடா?’

தலைவன் தோரணையாக விசாரித்தான். பெயரைச் சொன்னேன்.

‘காலேஜுக்கு படிக்க வந்தவனாடா நீ? மூஞ்சியைப் பாரு. எழுதி ஒட்டியிருக்கு. என்னன்னு கேளுடா?’

‘என்ன?’ என்றேன்.

பளாரென்று முதுகில் ஒன்று வைத்தான்.

‘கேக்கச் சொன்னா கேட்டுடறதா?’

சும்மா நின்றேன்.

‘குட்டிங்களை ஃபாலோ பண்ணிட்டு நொழஞ்சிட்டியா? பிரெஞ்சு பேசற பொண்ணா பாத்து குன்ஸா தள்ளிட்டுப் போயிடலாம்னு எத்தினி பேருடா கிளம்பியிருக்கீங்க’? 

மேற்படி விசாரிப்பில் இரண்டிரண்டு வார்த்தைகளுக்கு நடுவில் கொஞ்சம் தலைமுடியையும், தொடக்கத்தில் ஒரு கெட்ட வார்த்தையையும் கடைசியில் இன்னொரு கெட்ட வார்த்தையையும் சரளமாக இணைத்து அவன் பேசினான். பிரெஞ்சு பேசுகிற பெண்களை மட்டும் தள்ளிக் கொண்டு போக வந்தவர்கள் முகங்களில் என் களை எப்படி நகலெடுத்து வந்திருக்கும் என்று புரியாமல் நின்றேன்.

‘சினிமா பார்த்திருக்கியா?’

மூக்குப்பொடிக் கடை பொம்மை மாதிரி பலமாகத் தலையாட்டினேன்.

‘வாயிலே என்ன’?

தொடர்ந்து அவன் குறிப்பிட்ட அவயம்  வேறே உபயோகத்துக்கானது.

அந்த  எழுபதுக்களில் அறிமுகமாகியிருந்த ஒரு சினிமா ஹீரோயின் பெயரைச் சொன்னான். ஆந்திர இறக்குமதி. அந்த வயதில் இருந்த பலருக்கும் கட்டை குட்டையான, தாவணி போட்ட கனவுக் கன்னி.  அந்தப் பலரில், நான் முதலில்.

‘அவ படம் பார்த்திருக்கியா?’

கட்டை குட்டை ஹீரோயின் நடித்து சமீபத்தில் வந்த திரைப்படம். அருமையான பாட்டு. மழையில் நனைந்து கொண்டு ஹீரோவோடு பாடுவாள். பார்த்தாச்சு.

‘அவளை கிஸ் பண்ணனும் போல இருந்துச்சு இல்லே?’

இல்லை என்றேன். என் வம்சத்தில் கடந்த நாலு தலைமுறைகளை வைது ஓய்ந்தான்.

‘இவன் தான் அவ அப்படீன்னு நினைச்சுக்கோ’

கலவரமாகப் பார்த்தேன். அவன் சற்றே எழுந்து, ஆடும் அடியார்களில் ஓரமாக சந்தனப் பொட்டோடு ஆடிக் கொண்டிருந்த தடியனைப் பிரித்தெடுத்தான்.

வயிற்றில் சுடச்சுட கத்தியைச் செருகின மாதிரி இருந்தது. கத்தியை எதற்காகச் சூடு படுத்தி வயிற்றில் செருகணும், சும்மா செருகினாலே போதாதா  என்ற சந்தேகத்துக்கெல்லாம் பிழைச்சுக் கிடந்தால் பதில் தர உத்தேசம்.

கட்டை குட்டை ஹீரோயின் தற்காலிகமாக வந்து இறங்கியவனாம் சந்தனப் பொட்டுக்காரன். இவனும் கட்டை, குட்டை. அது மட்டும் தான் உண்மை. மற்றதைக் கற்பனை செய்து கொள்ள வேண்டும். எதுக்கு?

‘பக்கத்துலே போ’

சந்தனப் பொட்டுக்காரன் என்னைப் பார்த்தான். தலையில் சொதசொதவென்று தேய்த்திருந்த நீலி பிருங்காதியோ, மூலிகை சேர்த்துக் காய்ச்சிய வேறு ஏதோ தைலமோ அவன் நெற்றி முழுக்க வழிந்து ரெண்டு கன்னத்திலும் அப்பி வடிந்தது. 

‘கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுடா’

சந்தனப் பொட்டு முன்னால் நகர்ந்தது.

‘நீ இல்லேடா, இவன் கொடுக்கணும். நீ அவ. இவன் இவனே தான். புரியுதா?’

சகல விதத்திலும் இலக்கணம் மாற்றிய தலைவன் சொல் கேட்டு, சந்தனப் பொட்டு அரை அடி பின்னால் போய் நின்றான். தலைவன் என்ன சொன்னாலும் செய்யத் தயாராக இருந்தான் அவன். எத்தனை நாழிகையாகக் குழை அடித்து விட்டலாச்சாரியா படத்தில் குறளிப் பிசாசு போல ஆக்கி வைக்கப்பட்டானோ.

‘ஆகட்டும்டா’

தலைவன் என் கழுத்தில் கை வைத்து கட்டை குட்டை ஹீரோயின் டம்மிக்கு நெருக்கமாகத் தள்ளினான்.

அங்கே இங்கே என்று வீட்டு ஹாலில் பீரோவுக்குப் பின்னாலும், வளைந்து திரும்பும் மாடிப் படியிலும் வைத்து, மேகலாவுக்கு அவ்வப்போது ஒன்றும் ரெண்டுமாக இதுவரை அவசரமாக முப்பத்தேழு முத்தம் வழங்கியிருக்கிறேன். அந்த எண்ணிக்கையை எல்லாம் சரியாகக் கணக்கெடுத்து, இன்று காலேஜ் ராகிங் கோர்ட்டில் எனக்குத் தண்டனை போலிருக்கிறது.

இன்னும் ஒரு நிமிடத்தில் இது முடிந்து எனக்கு விடுதலை கிடைத்து விடும் என்று ஏனோ நம்பினேன். கடந்து போவதைப் பார்க்க வேண்டாம் என்று கண்ணை இறுக்க மூடியபடி நான் நிற்க, தலைவன் என் தோளில் ஓங்கித் தட்டினான்.

‘இவனை ஒண்ணும் பண்ண வேணாம்’.

தற்காலிகமாக அந்தக் கொடுமையிலிருந்து விடுவித்தவன் தூரத்தில் விரல் சுட்டினான். சந்தனப் பொட்டு வியர்வை துளித்த நெற்றியோடு, திரும்ப இலை தழை உடுத்து ஆடப் போனான்.

‘அந்தோ போறாங்க இல்லே உங்க அக்காளுங்க.’

தலைவன் திசை காட்டினான். இத்தனை அக்கா எனக்கு இருந்தால் நான் கல்லூரியில் படிக்க வந்திருக்க முடியாது.

கூட்டமாக வெய்யில் நேர முற்பகலில் நடந்து போய்க் கொண்டிருந்த அந்த சீனியர் பெண்கள் இதே காலேஜில் படிக்கிறவர்களாகத்தான் இருக்கும். ஜோசபின் மாதிரி மற்றவர்களுக்கு இங்கே என்ன வேலை இருக்கப் போகிறது?

ஜோசபின்? இப்போ வேணாம்.

‘உசரமா, அந்த நீலப் புடவை.. அத்தக் கணக்குப் பண்ணிக்கோ?

என்.சி.சி நடையும் ராணுவ நடையுமாகப் போய்க் கொண்டிருந்த எல்லோரும் எனக்கு கைப்பிடி அதிகமான உயரம். அழுத்தமான நீலம், மெல்லிசு நீலம், சுமார் நீல சாரிதான் எல்லோருமே.

‘ஓடிப் போய் அது முன்னாடி தரையிலே மண்டி போடு. புரியுதா?’

இதில் புரியாமல் போக என்ன இருக்கு?

என்றாலும், புரியுது என்று தலை அசைத்தேன். இல்லாவிட்டால் சந்தனப் பொட்டு அபாயகரமாக நகர்ந்து வந்து விடலாம். 

‘மண்டி போட்டு, சலாம் மகாராணின்னு சொல்லி தரையிலே நெத்தி படக் கும்புடணும். நீ சொல்றது இங்கே கேக்கணும், தெரியுதா? ஏதாச்சும் சொதப்பினே, மவனே, எல்லாப் பொண்ணுங்க முன்னாடியும் மண்டி போட வச்சுடுவேன்’

‘ஓடுடா’

நான் அவனுடைய உதவிகளில் யாரோ பிறப்பித்த உபகட்டளையைச் சிரமேற்கொண்டு லொங்கு லொங்கென்று ஓடினேன். வாழ்க்கையே ஒரு அபத்தமாக எனக்கு முன்னால் ஓடிக் கொண்டிருந்தது.

‘எமிலி, மீனாட்சி, பரீதா’

யாரோ யாரையோ கூப்பிடுகிற சத்தம். எனக்கு முன்னால் போய்க் கொண்டிருக்கிற நீலப் புடவைகள் ஒரு வினாடி நின்று பின்னால் பார்க்கிறார்கள். கூட்டமாக அவர்களைத் தொடந்து வரும் இன்னொரு க்ரூப் நீலப் புடவைகள் இவர்களோடு கலந்து போய் நிற்கிறார்கள். கலகலவென்று பேச்சு. சிரிப்பு. கையைக் கோர்த்துக் கொண்டு நடந்தபடிக்குத் தட்டாமாலை ஆடுகிறார்கள். கலைந்து மறுபடி சேர்ந்து நடக்கிறார்கள். நான் தேடிப் போக வேண்டிய நீலப் புடவை யார் இதில்?

குத்து மதிப்பாக இந்தப் பொண்ணு தான் என்று முடிவு செய்து, எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு முன்னால் எகிறி விழுந்தவன் மாதிரி முன்னால் பாய்ந்தேன். அவள் நிலை குலைந்து என் மேல் மோதிக் கொள்ளாமல் சட்டென்று நின்றாள்.

‘ஸ்டுபிட்’, ‘இடியட்’ இப்படி சினிமாவில் பார்த்துப் பார்த்து மனதில் பதிந்திருந்ததில் ஏதாவது ஒரு வார்த்தையையோ அல்லது எல்லாமாகச் சேர்ந்தோ வரலாமென எதிர்பார்த்தேன்.

அவள் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் குனிந்து என்னை வலுவாகப் பிடித்துத் தூக்கி நிறுத்தினாள்.

கூர்மையான பார்வை. இடது புறமாகப் பக்கவாட்டில் சாய்த்த முகத்தில் கூந்தல் காற்றில் பறந்து பாதி மறைத்திருந்தது. சிரிப்பா, பரிதாபத்தைப் பகிர்கிறதா என்று தீர்மானம் செய்ய முடியாதபடி உதடுகள் லேசாகப் பிரிந்திருந்தன. என்னை விட சற்றே பெரியவள். அழகிலே மூத்ததும் இளையதும் உண்டா என்ன?

‘யாரு நீ?’

நான் வெலவெலத்துப் போய்ச் சொன்னேன் -

‘மலாம் சகராணி’

ஓவென்று பெரும் சிரிப்பு அந்த வெட்டவெளி முழுக்கச் சுற்றி வந்த மாதிரி பிரமை. இந்தப் பெண்கள் சிரிப்பதைப் பார்த்து தூரத்தில் நிற்கிற நாட்டியக் குழு, ரசிகர்கள், நட்டுவனார் எல்லாரும் அங்கே இருந்தபடி ஆவலாகப் பார்த்துக் கொண்டிருந்ததை ஓரக் கண்ணால் பார்த்தேன்.

‘ஏய்ய்ய், நீ வா, நம்ம ஆளு’


அந்தப் பெண்கள் கையைப் பற்றி இழுத்து அவர்களோடு கூட்டிப் போனார்கள். எல்லோருமே வேகமாக நடக்கிறவர்கள். நெருக்கத்தில் வேறே. குட்டிகூரா பவுடர் வாடையும் யூதிகோலோன் வாடையும் என்னைச் சுற்றிச் சூழ, மிதந்து கொண்டு போனேன். இன்னிக்கு வகுப்புக்குப் போய் பாடம் படித்த மாதிரித்தான்,

காலேஜ் கேண்டீன் என்று ஊகித்த இடத்துக்கு என்னைக் கடத்திப் போனார்கள். டேபிள் துடைக்கிறவரிடமிருந்து ஈரத் துணியை வாங்கி ஒரு மேஜை விடாமல் மொறிச்சென்று துடைக்கச் சொன்னார்கள். பஜ்ஜி போடுகிறவருக்கு வாழைக்காயும் வெங்காயமும் அரிந்து தரச் சொன்னார்கள். வந்து உட்கார்ந்த இன்னொரு மகளிர் மட்டும் கும்பலிடம் மெனு ஒப்பிக்கச் சொன்னார்கள்.  பஜ்ஜியும் டீயும் தான் இருக்கு என்று உள்ளே கேட்டு வந்து சொன்னேன். அதை பத்து தடவை சொல்லி ஆர்டர் கேட்கச் சொன்னார்கள். கேண்டீன் வாசலில் நின்று ‘சூடான பஜ்ஜி, போனா வராது பொழுதுபோனா திரும்பாது’ என்று கூவிக் கூவி மார்க்கெட்டிங் செய்யச் சொன்னார்கள்.

சந்தோஷமாக எல்லாம் செய்தேன். இது பாய்லா டான்ஸ் போடச் சொல்லும் கும்பல் இல்லை. கட்டை குட்டை நடிகையாக ஒரு சாந்துப் பொட்டுக்காரனை கற்பித்து சினிமாவிலேயே இடம் பெறாத காட்சிகளை நடத்தச் சொல்கிற வில்லன்கள் குழு இல்லை. நீலச் சேலை கட்டிய அழகழகான பெண்கள் இங்கே எல்லோரும்.

என் கைக்காசு போட்டு எல்லோருக்கும் கை கழுவ, ஆமா, கை கழுவத்தான், ஆரஞ்சுத் தித்திப்பு குளிர்பானம் வாங்கித் தரச் சொன்னார்கள்.

‘அப்பா காலையில் கிளம்பறபோது அஞ்சு ரூபா தான் கொடுத்தார். திரும்பிப் போக பஸ்ஸுக்கு, இங்கே சாப்பிட எல்லாம் சேர்த்து அவ்வளவுதான்.

சுவாதீனமாகச் சட்டைப் பாக்கெட்டில் கைவிட்டு அந்தப் பணத்தை எடுத்தாள் நான் மண்டி போட்டு வணங்கிய சீனியர் சலாம் மகராணி.

நிஜமாகவே குளிர்பானம் வாங்கி நிஜமாகவே அதைக் கை கழுவ, வாய் கொப்பளிக்க உபயோகித்தார்கள்.

‘இப்போ ஓடு. ப்ரீ டைம் இருக்கறபோது கூப்புடறோம். டாண்ணு வரணும். ஒகே?’

நான் ஏன் ஓடப் போகிறேன்.

பிரதானக் கட்டடத்தில் நுழைந்தேன். காலியான வகுப்பறைகள்.

உள்ளே கரும்பலகையில் பெரிய எழுத்தில் –

‘வகுப்புகள் நாளை முதல் தொடங்கும். ஹாஸ்டல் ஒரு நாள் தாமதமாக இன்று மாலை திறக்கப்படுகிறது. வெளியூர் மாணவர்கள் வழங்கப்பட்ட அறைகளுக்குப் போக, அவர்களும், விடுதியில் இல்லாத மாணவர்களும் சீனியர்களோடு நட்பு பூண்டு நண்பர்கள் தினம் கொண்டாடி மகிழ் இன்றைய தினம் வழங்கப்படுகிறது’.

நண்பர்கள் என்றதும் திகிலோடு திரும்பிப் பார்த்தேன். தூரத்தில் கொப்பும் குழையுமாக ஆட்டம் முடிந்து வந்து கொண்டிருந்தார்கள்.

ஓடுவதைத் தவிர வழி இல்லை. சுற்றிச் சுற்றி ரொம்ப தூரம் ஓட வேண்டி இருக்கும். எதாவது ஒரு திசையில் சட்டென்று தியூப்ளே வீதி கண்ணில் படும், அதுவரை ஓடி அலைய வேண்டியதுதான்.

இலக்கில்லாமல் ஓட்டமும் நடையுமாக சரிவு இறங்கும்போது, பின்னால் இருந்து ஸ்கூட்டர் சத்தம். என்னை உரசிக் கொண்டு வேகமாக முன்னால் வந்து வழியில் குறுக்கிட்டுச் சட்டென்று பிரேக் அடித்து நிற்கும் நீல லாம்பிரட்டா ஸ்கூட்டர்.


சகராணி. நான் சலாம் வைத்தவள்.

‘கெட் அப்’ என்றாள்.

தயங்கினேன்.

‘ஏறு, கொண்டு போய் விடறேன்’.

‘நன்றி மேடம்’

‘சீய்ய்.. மேடம் மாதிரியா இருக்கேன்? வைஷாலி’

சிரித்தாள். கூச்சமே இன்றி ஸ்கூட்டரில் வைஷாலி பின் உட்கார்ந்து கொண்டேன். படு ஒயிலாக வண்டி விட்டுக் கொண்டு போனாள் அவள்.

‘ஏண்டா இப்படி அநியாயம் பண்றே’

மேகலா வழக்கம்போல நேரம் காலம் தெரியாமல் நடுவில் வந்தாள்.

‘நானும் ஸ்கூட்டர் வாங்கி உன்னைப் பின்னால் வச்சு ஓட்டிப் போவேன்.’

ஆயுசுக்கும் ஸ்கூட்டரில் பெண் டிரைவர் வைத்துத்தான் சவாரி போல.

மேகலா கலைந்து போனாள்.

‘ஹை இவனே’

‘எஸ் வைஷாலி’

‘எதுக்கு சொளசொளன்னு தலையிலே இவ்வளவு தேங்கா எண்ணெய் தேச்சுட்டிருக்கே. வாடை தாங்கலே. மீடியம் சைஸ் வெங்காய பஜ்ஜியை பில்லியன்லே ஏத்திட்டு வர மாதிரி இருக்கு’

லாம்ப்ரட்டா ஸ்கூட்டர் வேகமாகப் போய்க் கொண்டிருந்தது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com