9. கவனிக்கும் அளவு வெற்றி

கிரிக்கெட் விளையாட்டுப்பற்றி  பலருக்கும் தெரியும். சிலருக்கு தெரியாது. அட! கிரிக்கெட் பற்றித் தெரியாதவர்களும்

கிரிக்கெட் விளையாட்டுப்பற்றி  பலருக்கும் தெரியும். சிலருக்கு தெரியாது. அட! கிரிக்கெட் பற்றித் தெரியாதவர்களும் இருக்கிறார்களா என்று வியப்பாக இருக்கிறதா? கூடாதே! காரணம், நாம் முன்பு பார்த்த 'அ... ஆ... இ' தான்.

'அ...ஆ...இ..' நினைவிருக்குமே! தெரிந்துகொள்ளுவதில், தேர்ச்சி பெறுவதில் இருக்கும் மூன்று நிலைகள்.

சிலர் ஓவியங்கள் பற்றி அதிகம் தெரிந்துகொள்ளாதவர்கள், யோசிக்காதவர்கள். அவர்களைப் பொறுத்தவரை அவையெல்லாம் வெவ்வேறுவிதமான படங்கள், இமேஜஸ். அவ்வளவுதான். அவர்கள் எல்லாம் ஓவியங்கள் பற்றிய புரிதலில் 'அ' நிலையில் இருப்பவர்கள். 'இ' நிலையில் இருப்பவர்களுக்கு அவற்றின் வேறுபாடுகள், நுணுக்கங்கள் தெரியும்.

கிரிக்கெட் என்ற விளையாட்டு பற்றித் 'தெரிந்திருப்பதிலும்' அப்படி நிலைகள் இருக்கும்தானே! இருக்கிறது. கிரிக்கெட் பற்றி அதிகம் தெரியாதவர்கள் நினைப்பார்கள்? ' எவரோ ஒருவர் பந்தை எறிய, வேறு ஒருவர் மட்டையால் அடிக்கிறார். சுற்றி நிற்பவர்கள் பந்தை எடுத்து ஸ்டம்புக்களை நோக்கி எறிகிறார்கள். பந்து வந்து சேர்வதற்குள், மட்டை அடித்தவர் ஓடி ஓடி ஓட்டங்கள் எடுக்கிறார்.  இதுதான் ஆட்டம்' என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

அவர்கள் நினைப்பில் தவறு இல்லை. எல்லாம் சரிதான். ஆனால், இது மட்டுமேவா கிரிக்கெட்? இவ்வளவுதான் இருக்கிறதா கிரிக்கெட்டில்?

இவ்வளவு மட்டுமே இருந்தால் ஏன் சச்சின் , கோலி, தோணி போன்ற சிலர் மட்டும் பிரமாதமாக ஆடுவதாகப் பாராட்டப்படவேண்டும்?

அவர்கள் எல்லாம் 'அ'... 'ஆ'...வை தாண்டி 'இ' க்குப் போய் மேலும் மேலும் என்று முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் பல்வேறு எடுத்துக்காட்டுகள் மூலம் முன்பே சொல்லப்பட்டவைதான். இப்போது சொல்லவருவது 'ஆப்சர்வேஷன்' எனும் 'கவனித்தல்' பற்றி.

செய்வது எதுவாக இருந்தாலும் அதில் முன்னேறி  'இ' நிலைக்குப் போவதற்கு தேவைப்படும் ஒரு முக்கிய செயல் இந்த ஆப்சர்வேஷன்.

டிஸ்கவரி, அனிமல் பிளானட் போன்ற தொலைக்காட்சி சேனல்களில் பார்த்திருக்கலாம். பூச்சிகள், பறவைகள், விலங்குகள் எல்லாம் எவ்வாறு நடந்துகொள்கின்றன  என்று. இயல்பாக அவற்றின் போக்கில் போய்க்கொண்டிருக்கும் அவை, திடீரென கவனம் வரப்பெற்று சுற்றுப்புறத்தை எச்சரிக்கையுடன் ஆராயும், துரித கதியில்  நகரும்.

இந்த நகர்தல், அவை எதைப் பார்த்தன என்பதைப் பொறுத்தது. உதாரணத்திற்கு அப்படி நகரும் விலங்கு பூனை என்றால், அது கவனித்தது ஒரு எலியை என்றால், அதன் நகர்தல் அதற்கான இரையை, உணவைக் கவ்வுவதற்கு. மாறாக அது பார்த்தது அல்லது உணர்ந்தது ஒரு செந்நாயை என்றால், பூனையின் நகர்தல் அதன் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்கு.

ஆக, காடுகளில் வாழும் விலங்குகளுக்கு  அவை உயிர்வாழ்வதற்கும் (உணவு), உயிர் பிழைக்கவும் சுற்றுப்புறத்தைக் கவனித்தல் மிக மிக அவசியம். நல்ல வேளையாக நமக்கு அந்த அளவு அது ஒரு 'அடிப்படைத் தேவை'யாக  இல்லை. நாகரீகமும், மனித நேயமும் காலப்போக்கில் அந்நிலைகளை மாற்றிவிட்டன.

சச்சின் போன்ற கிரிக்கெட் ஆட்டக்காரர்கள், அவர்கள் வேலையில் செய்யும் 'ஆப்சர்வேஷன்' னின் அளவும் அவர்கள் வெற்றியின் உயரத்தைத் தீர்மானிக்கிறது.

எறும்புத்தோலை உரிக்கும் அளவு அவர்களின் கிரிகெட் அறிவு  கூர்மை பெற, அவர்கள் அதன் 'நிவான்சென்சஸ்' சை கவனிக்கிறார்கள். உதாரணத்திற்கு , 'பந்து வீசப்படுகிறது (பவுலிங்)  என்ற ஒரு செயலை, பார்வையாளர்கள் பார்க்கும் விதத்திற்கும், ஆடிக்கொண்டிருப்பவர் பார்க்கும் விதத்திற்கும் இடையே வேறுபாடுகள் உண்டு.

அந்த விஷயத்தில் எனக்குத் தெரிந்தது ஓரளவுதான். பந்து வீசப்படும் வேகம் (Pace), பந்து எறியப்படும் கோணம் (ஆங்கிள்), அது தரையைத் தொடும் இடம் (பிட்ச்), அது சுழலும் விதம் (ஸ்பின் மற்றும் ஸ்விங்), தரையில் பட்டதும் பந்து எழும்பும் உயரம் (பவுன்ஸ்) என்று பல்வேறு விவரங்கள் இருக்கின்றன.

வெறும் 22 அடி தூரத்தில் இருந்து மணிக்கு 120 முதல் 140 கி.மி வேகத்தில் வீசப்ப்படும் கனமான பந்தை, ஒரு உள்ளங்கை அளவு அகலமே உள்ள மட்டையால் வேண்டும் விதம் வேண்டிய இடத்த்துக்கு அடித்துத்தள்ள முயல்பவர்கள் கவனிக்கவேண்டியவை எவ்வளவோ இருக்கின்றன.

பந்து வீசுபவரின் ஒட்டம், அவர் கையைத்தூக்கும்  விதம் மற்றும் பந்தை வீசும்போது அவர் விரல்கள் அசைவது வரை கவனிக்கவேண்டும். இப்படியே ஒருநாள், இருநாட்கள்

கூட சில ஆட்டக்காரர்கள்  'கவனித்து' ஆடி, தாங்கள் அவுட் ஆகாமல் இருப்பது தவிர, ஃபீல்டர் இல்லாத  இடத்திற்கு பந்தை அடித்துவிட்டு ஓட்டங்கள் சேர்க்கவேண்டும்.

சச்சின் போன்றவர்கள் ஒவ்வொரு பந்து வீச்சையும் எவ்வளவு கவனித்தால், பல நேரங்கள் அவுட் ஆகாமல் நூற்றுக்கணக்கில் ஓட்டங்கள் சேர்க்கமுடியும்!

சென்ற அத்தியாத்தில் நோயாளியை நிதானமாக 'கவனித்த' மருத்துவர் பற்றிப் பார்த்தோம். பின்பு உயிர் வாழவும், பிழைத்திருக்கவும் 'கவனித்து' வாழும் விலங்குகள் பற்றிப் பார்த்தோம். பின்பு, கவனித்து ஆடும் கிரிக்கெட் ஆட்டக்காரகள் பற்றியும் பார்த்தோம்.

ஆக,  'சர்வைவல்'லோ  'சக்சஸ்' சோ சரியாக, சிறப்பாகச்  செய்ய , செய்வதில் வல்லவராக 'கவனித்தல்'அவசியம்.

தாங்கள் இருக்கும் இடத்தைச் சுற்றி நடப்பவற்றை, சுற்றி இருப்பவர்களை, செய்யும் வேலையை, எதிர்வினைகளை என்று எல்லாவற்றையும் 'கவனிக்கும் திறன்' வல்லமை பெற அவசியம்.

எல்லோராலும் கவனிக்க முடியுமா? என்பது சிலரின் அடுத்த கேள்வியாக இருக்கலாம்.  ஏன் முடியாது?

இந்த தொடரின் அறிமுகத்தில் பார்த்த செல்ஃபோன் உதாரணத்தையே எடுத்துக்கொள்ளலாம். செல்ஃபோனில் வீடியோ எடுக்கும் வசதி இருக்கிறது. ஆனால் எல்லோரும் எடுப்பதில்லை. காரணம், அப்படி ஒரு வசதி இருப்பதே சிலருக்குத் தெரியாது. அல்லது அதைப் பயன்படுத்தத் தெரியாது.

'அப்சர்வ்' பண்ண முடியாதவர்கள் இல்லை. ஆனால் பலரும் செய்வதில்லை. முன்பு பார்த்த புரசைவாக்கம் தோல் மருத்துவர் போலத் தேவைப்படும் நேரம் கவனம்  குவிப்பதில்லை.

கண், காது , மூக்கு, நாக்கு, தோல் (உடம்பு)  என்று ஐந்து புலன்கள் இருக்கின்றனவே, இவை ஐந்துமே மிகப் பிரமாதமான உள்வாங்கிகள் (ரிசீவர்கள்). சுற்றுப்புறத்தை 'ஸ்கேன்' செய்யவல்லவை. எல்லோரிடமும் இருப்பவை. எவரும் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அது, அவற்றை 'ஆன்' னில்  வைப்பது. 

ஆனால், எல்லோரும் செய்வதில்லையே அது ஏன்?

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com