10. தமிழில் முக்கியமான சொல்….

நல்ல வேளையாக அந்தக் கொள்ளை நோய் இப்போது இல்லை. ஆனால், நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை, பல ஆயிரம் ஆண்டுகளாய் மனித இனத்தை

நல்ல வேளையாக அந்தக் கொள்ளை நோய் இப்போது இல்லை. ஆனால், நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை, பல ஆயிரம் ஆண்டுகளாய் மனித இனத்தை ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்தது அந்த நோய். 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மம்மீஸ் முகங்களில் அதன் அறிகுறிகள் இருப்பதை ஆராய்சியாளர்கள் கண்டிருக்கிறார்கள். ஆப்ரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஆசியா என எல்லாக் கண்டங்களிலும் பரவி இருந்து, சாமான்யர்கள் முதல் அரச குடும்பத்தவர் வரை எவரையும் விட்டு வைக்காமல் கொத்துகொத்தாக அள்ளிப் போய்க்கொண்டேயிருந்திருக்கிறது அது.

நூற்றுக்கு அறுபது நபர்களுக்கு கண்டிப்பாக வரும். அதில் இருபது  முதல் நாற்பது பேருக்கு மரணம் நிச்சயம். தப்பியவர்கள் முகத்திலும் உடம்பிலும் கொடூரமான வடுகள் உறுதி. பலருக்கு  பார்வை போய்விடும். 18ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் மட்டும் சுமார் 4 லட்சம் பேர் ஒவ்வொரு ஆண்டும் இந்த கொள்ளை நோய்க்கு பலியாகியிருக்கிறார்கள்.

மொத்தத்தில் உலகபோர்களில் உயிர் இழந்தவர்களைப் போல பலமடங்கு மனிதர்களைக் கொன்று குவித்த அந்த நோய், சின்னம்மை என்று தமிழில் குறிப்பிடப்படும் ஸ்மால் பாக்ஸ் (small pox).

1960, 70  களில் எல்லாம் நம் நாட்டில் எல்லோருக்கும் சின்னம்மைக்கான தடுப்பூசி கட்டாயம். பள்ளிக்கூடங்களில்  போட்டுவிடுவார்கள். அப்படிப் போடப்பட்ட  தடுப்பூசியின்  தழும்பு இன்னமும் பலர் கைகளில் இருக்கும். என் கையிலும் இருக்கிறது.  1980 க்குப் பின் பிறந்தவர்கள் அவர்களுடைய பெற்றோர் கைகளில்- புஜத்தில்- பார்த்தால் தெரியும். ஒரு ரூபாய் நாணயங்கள் போன்ற இரண்டு தழும்புகள் இருக்கும்.

தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு சின்ன அம்மை நோய் வராது. இப்படியாக ஒரு காலகட்டத்தில் ஒரே நேரத்தில் உலகில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போட்டிருக்கிறார்கள்.

அதன் காரணமாக இந்த தலைமுறை அந்த கொடிய நோயில் இருந்து தப்பியாகிவிட்டது. உலக சுகாதார நிறுவனம் எடுத்த பெருமுயற்சியால்  1980 ம் ஆண்டில்உலகில் இருந்து சின்னம்மை முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது. அதனால் அதற்கான தடுப்பூசி போடப்படுவதும் நிறுத்தபட்டுவிட்டது. 1980, மே மாதம் 8ம் தேதி World Health Assembly இதை எப்படி அறிவித்தது தெரியுமா?

‘தொன்றுதொட்ட காலத்தில் இருந்து பல தேசங்களிலும் மக்களை சாகடித்தும், குருடாக்கியும், மாறாத வடுக்களை ஏற்படுத்தியும் வந்த சின்னம்மை என்ற கொள்ளை நோயில் இருந்து உலகமும் அனைத்து மக்களும், விடுதலை பெற்றாகிவிட்டது’.

ஆப்ரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆசிய நாடுகள் என்று அங்கிங்கெனாதபடி உலகெங்கும் பரவி பல்லாயிரம் ஆண்டுகளாக மக்களை ஆட்டி அழித்துக்கொண்டிருந்த நோய் ஒரு நேரத்தில்  முற்றிலும் ஒழிக்கபட்டது எப்படி?

17ம் நூற்றாண்டில் இனோகுளேஷன்-Inoculation- என்ற முறையில், சின்னம்மை வந்தவர் உடலில் இருக்கும் கொப்புளத்தில் இருந்து நீர் எடுத்து, அதை அந்த நோய் வராதவரின் உடலில் செலுத்தி, நோய் எதிர்ப்பு சக்தி உண்டாக்கி, அவருக்கு நோய் வராமல் தடுத்திருக்கிறார்கள். இதுதான் ஆரம்பம். இந்தியா, சீனா, ஐரோப்பிய நாடுகளில் இந்த முறை இருந்திருக்கிறது.

இது கொஞ்சம் கரடு முரடான முறை. இதன் காரணமாக, சின்னம்மை நோய் வரப்பெறுவதில் இருந்து தப்பியவர்கள் எண்ணிக்கை கணிசமாக இருந்த போதிலும், இதன் காரணமாகவே இறப்போர் எண்ணிக்கையும் கணக்கிடக்கூடிய அளவிலும் கவலைகொள்ளக்கூடிய அளவிலும் இருந்திருக்கிறது. ஆக, இதன் மூலம் பலர் உயிர் பிழைத்தார்கள். சிலர் இறந்தார்கள். இன்னோகுளேஷன் செய்துகொண்டால் நிச்சயம் நோயைத்தடுத்துவிடலாம் என்பதுடன், ஒருகால் இதன் காரணமாகவே நோய் வரபெற்றாலும் பெறலாம் என்பதாக இருந்தது நிலைமை.

ஒருமுறை டாக்டர் லட்டோ என்பவரிடம் ஒரு பெண் அவரது விரலில் இருந்த காயத்தைக் காட்டிக்கொண்டிருந்திருக்கிறார். அதை ஆராய்ந்த அந்த மருத்துவர், ‘உனக்கு வர ஆரம்பித்திருப்பது ஒருகால் சின்ன அம்மையாக இருக்குமோ என்று’ என்று சொல்லியிருக்கிறார். உடனடியாக அதை மறுத்த அந்தப்பெண், ‘இருக்கவே இருக்காது. காரணம், எனக்கு ஏற்கனவே மாட்டமை வந்து போயிருக்கிறது’ என்று பதில் சொல்லியிருக்கிறார்.

டாக்டர் லட்டோ அதன் பின் வேறு எதையோ பேச, அந்த உரையாடலை அப்படியே போயிருக்கிறது. டாக்டர் லட்டோவிடம் பயிற்சியாளராக இருந்த எட்வெர்ட் ஜென்னர் -Dr Edward Jenner- காதில் அந்த  உரையாடல் விழுந்தது.

‘எனக்கு சின்ன அம்மை வரவே வராது. என் முகத்தில் கோரமான வடுக்கள் நிச்சம் ஏற்படாது. காரணம், எனக்கு ஏற்கனவே மாட்டம்மை வந்து போய்விட்டது’  என்று அந்த பால்காரப் பெண் சொன்ன வாக்கியத்தை ஜென்னர் ‘கவனித்து’ விட்டார். மனதில் வாங்கிவிட்டார். அதைப் பற்றி சிந்திக்கத்தொடங்கினார்.

அதை அவர் ஆராய விரும்பினார். அதற்காக அவரிடம் சிகிச்சைக்காக வந்திருந்த Sarah Nelmsஎன்ற பெண்மணியின் மாட்டம்மை கொப்புளத்தில் இருந்து நீர் எடுத்து அதை James Phippsஎன்ற எட்டு வயது சிறுவனின் உடம்பில் செலுத்தியிருக்கிறார். அவர் எதிர்பார்த்து போலவே அவனுக்கு காய்ச்சல் வந்திருக்கிறது. ஒன்பது நாட்கள் நீடித்த காய்ச்சல் போய்விட்டது. அந்த சிறுவனுக்கு மாட்டம்மை வரவில்லை.

எட்வெர்ட்டின் ஆராய்ச்சி அதுவல்லவே. அது தெரிந்ததுதானே. அடுத்து எட்வெர்ட் இந்த முறை சின்னம்மைக் கொப்புளத்தில் இருந்த நீரை எடுத்து, அதே சிறுவனின் உடலில் செலுத்தியிருக்கிறார். என்ன ஆச்சரியம்! அவனுக்கு ஏதும் நிகழவில்லை.

அதன்பின் அவருடைய பதினோரு வயது மகன் உட்பட வேறு பலரிடமும் அதை செய்து பார்த்து, மாட்டம்மை நீரை வைத்து, கொடிய உயிர்கொல்லி சின்னம்மைக்கு எளிதில் கொடுக்கக்கூடிய தடுப்பு மருந்தை எட்வெர்ட் கண்டுபிடித்துவிட்டார்.

ஆரம்பத்தில் கேலி செய்தும் எதிர்த்தும் பார்த்த உலகம் பின்னர் அவரது கண்டுபிடிப்பை ஏற்றுக்கொண்டு அவரது வேக்சினேஷன் முறையை வெகுவாகப் பயன்படுத்த ஆரம்பித்தது. பின்பு சின்னம்மை என்ற அரக்கனை  வேரறுத்தது.

கோடிக்கணக்கான மக்களை சாவில் இருந்தும், மேலும் கோடிக்கணக்கானவர்களை கண்பார்வை இழப்பில் இருந்தும் மாறாத வடுக்களில் இருந்தும் காப்பாற்றியது எது?

எட்வெர்ட் ஜென்னர் என்ற ஒரு மனிதனின் சிந்தனை.

அந்த சிந்தனை ஏன் மற்றவர்களுக்கு வரவில்லை?

அதே உரையாடலை கேட்ட.. இல்லை இல்லை, அதில் கலந்துகொண்ட எட்வெர்ட் ஜென்னரின் மேலதிகாரி போன்ற சீனியர் மருத்துவர் லாட்டோவுக்கு ஏன் அது தோன்றவில்லை?

இங்கேதான் எட்வெர்ட் வேறுபடுகிறார். அந்தப்பெண் சொன்னதை எட்வெர்ட் ‘கவனித்து’ விட்டார். அந்தச் சொற்கள் அவரது மூளையில் சரியான இடத்தில் விழுந்துவிட்டது.

அன்றாட வேலைகளில், அவசரங்களில், பரபரப்புகளில் மூழ்கிவிடுவோரால்  வந்து விழுபவற்றைக் கவனிக்க முடியாது.

எத்தனையோ மரங்களில் இருந்து ஆப்பிள் பலமுறை விழுந்திருக்கிறது. பலர் பார்த்திருக்கிறார்கள். வெறுமனே பார்க்காமல் ‘கவனித்த’ ஐசக் நியூட்டன் சிந்தித்தது வேறு.

பலர் காதுகளிலும் விழுந்துகொண்டிருந்த, ‘மாட்டுக்காரர்களுக்கு சின்னம்மை வராது’ என்ற வாக்கியத்தை , அதன் பொருளை ‘கவனித்ததால்’ எட்வெர்ட் ஜென்னர் மேல் ஆராய்ச்சி செய்தார், மாபெரும், மானுடம் காக்கும் கண்டுபிடிப்பைச் செய்தார்.

‘கவனித்தல்’  தமிழில் முக்கியமான வார்த்தையோ!

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com