5. பராக்குப் பார்ப்பது

சென்ற அத்தியாயத்தின் முடிவில் கொடுக்கப்பட்டிருந்த இந்தப் படத்தைப் பார்த்ததும் உங்களுக்கு என்ன தோன்றியது?

பேசுவதை விட, கேட்பதன் மூலமும் கவனிப்பதன் மூலமும் நீங்கள் அதிக நன்மையைப் பெற முடியும்.

- ராபெர்ட் படென் பாவெல்

செ

இது தெரியாதா?  குழந்தைகூட சொல்லிவிடுமே என்று படத்தில் இருப்பது யானை என்று சொல்லமாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும்.  அப்படிச் சொன்னால், அந்தப் பதிலும் ஒரு குழந்தை சொல்லும் பதில்போல் ஆகிவிடும் என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன?

யானைப் படம் என்பது சரிதான். ஆனால் அந்தப் படத்தில்  விவரங்கள் குறைவு.

ஒரு யானையின் படத்தைப் போடுவதில் என்ன விவரங்கள் இருக்க முடியும் என்று இன்னும்கூட சிலருக்கு சந்தேகம் வரலாம்.

இப்போது அடுத்த படம்.

முதல் படத்திற்கும் இரண்டாவது படத்திற்கும் இடையே வேறுபாடு இருக்கிறதா இல்லையா? இரண்டாவது படத்தில்,  யானையின் கண்கள், காதுகள், தந்தம், உடல்வாகு, தும்பிக்கை போன்ற விவரங்கள் இருக்கின்றன அல்லவா?

இரண்டாவது படத்தை வரைந்தவர்  யானையை அல்லது யானையின் விவரமான படங்களை நன்கு பார்த்தவராக, கவனித்தவராக, நினைவு வைத்திருப்பவராக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இப்படி வரைய முடியாது. கற்பனையில் வரைவது அல்ல இது.

இனி மூன்றாவது மற்றும் நான்காவது படங்கள்.

படம் 4-ல் யானை பற்றிய கணிசமான விவரங்கள் இருப்பதைப் பார்க்கலாம்.

கிட்டத்தட்ட யானை ஒன்றை நிழற்படம் பிடித்ததுபோல விவரங்கள் அந்தப்படத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

அந்த ஓவியரால் அவ்வளவு விவரங்கள் கொடுக்க முடிந்ததற்கு என்ன காரணம்? அவர் மனதில் அந்த அளவு இருந்திருக்கிறது.

இனி, முதல் படத்தில் இருந்து நான்காவது படம் வரை ஒவ்வொன்றாகத் தொடர்ந்து பார்ப்போம்.  பார்த்தால், படத்துக்குப் படம் விவரங்கள் அதிகரித்துக்கொண்டேபோவது கண்கூடாகத் தெரிகிறதா  இல்லையா?

நான்காவது படத்தை வரைந்த அந்த ஓவியரால் அவ்வளவு விவரங்கள் கொடுக்க முடிந்ததற்கு என்ன காரணம்?

அவர் மனதில் அந்த அளவு இருந்திருக்கிறது.

அவரிடம் அவ்வளவு தகவல் இருக்க என்ன காரணம்?

அவரால் எடுக்க முடிந்திருக்கிறது.

எடுக்க முடிந்ததற்கு காரணம்?

அவரது பார்வை அப்படி.

யானையையோ யானையின் வேறு ஒரு படத்தையோ  பார்க்காமல் வரைய வேண்டும் என்று ஒரு வேலை கொடுத்தால், சிலரால் என்ன முயன்றும் முதல் படம் மாதிரித்தான் வரைய முடியும். காரணம், அவர்கள் மனதில் யானை பற்றிய விவரங்கள் அவ்வளவுதான் இருக்கும்.

காரணம் என்ன?

எல்லோர் பார்வையும் ஒன்றல்ல. வெற்றிபெறுகிறவர்களுக்கும்  பெறாதவர்களுக்கும் இடையே என்ன  வேறுபாடு தெரியுமா? எல்லோரும் வல்லவர்தான். ஆனால் முன்பு பார்த்த செல்போன் உதாரணத்தில் சொன்னதுபோல, சிலர் முயன்று கற்றுக்கொள்வதில்லை. ஊன்றி கவனிப்பதில்லை, தொடர்ந்து பழகுவதில்லை.

மேலே சொல்லப்பட்டிருக்கும் மூன்றையும் அடிக்கோடு இட்டுக்கொள்ளுங்கள்.

இரண்டாவது அத்தியாயத்தில் பார்த்த ‘பாத்ரூம் கதவு, வாஷ்பேசின், டாய்லெட், ஹோஸ் பைப் வைத்தவர்கள்’  செய்த வேலை,  மேலே இருக்கும் நான்கு படங்களில்  எந்தப் படத்துக்கு ஒப்பு?

முதல் படம் வரைந்தவர் செய்த வேலை போன்றதுதான் அவர்கள் செய்த வேலையும். எல்லா வேலைகளிலும் இப்படி செய்நேர்த்தி சார்ந்து பல நிலைகள் உண்டு.

இவையெல்லாம் திறன் சார்ந்தது அல்ல. முயற்சி சார்ந்தது.

யானையைப் பார்ப்பது எல்லோரும் செய்வதுதான். ஆனால், அந்தப் பார்க்கும் செயலை எப்படி அழுத்தமாக, ஆழமாக, தீர்க்கமாக செய்கிறார்கள் என்பதில்தான் மனிதர்களுக்கு  இடையே  வேறுபாடு வருகிறது.

Capturing the information என்பது இங்கே முக்கியம். தகவல், விவரம் சேகரிப்பதுதான் Capturing the information.

எல்லோருக்கும் தவல்கள் கிடைக்கின்றன. ஆனால், எல்லோரும் அதைப் புரிந்துகொள்வதில்லை. அது ‘தகவல்’ என்றே தெரியாமல் விட்டுவிடுகிறார்கள் சிலர்.

எல்லா படைப்பாளிகளும் இந்த சேகரிப்பில் திறன் உள்ளவர்கள். கோவை விஜயா பதிப்பகம் வேலாயுதம் சொன்னார்கள், மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு கடைத்தெருவை பேசாமல் வேடிக்கை பார்க்கப் பிடிக்குமாம். கோவை வரும் நேரங்களில் வெளியில் கூட்டிப்போனால் வேகுநேரம்கூட, பேசாமல் பார்த்துக்கொண்டிருப்பாராம்.

ஜெயகாந்தன் என்ன பராக்கா பார்த்துக்கொண்டிருந்திருப்பார்? அவருடைய  ‘மனது கேமரா’ ஆன் ஆகி, பலவற்றையும் சுருள் சுருளாக படம் பிடித்து , &கோப்புகள்’க்கு தள்ளிக்கொண்டிருந்திருக்கும்.

எழுத்தாளர் சா.கந்தசாமி சொல்லுவார், சிலர் கதை  எழுதினால் அதில் விவரங்கள் இருக்காது என்று. மரத்தடியில் நின்றான் என்று எழுதுவார்கள். எந்த மரத்தடியில், அது பூவரசு மரமா? ஆல மரமா? என்றெல்லாம் எழுதமாட்டார்கள். இன்னும் சிலர்  ‘மீன் சாம்பார் வைத்தாள்’ என்று எழுதுவார்கள். அந்த எழுதாளர்களுக்கு மீனையும் தெரியாது, சாம்பாரையும் தெரியாது என்பார் அவர்.

அவர்கள் என்ன வைத்துக்கொண்டா வஞ்சனை செய்கிறார்கள்! விவரம் இருந்தால்தானே  விவரம் வரும். விவரம் சேகரிக்கவில்லை அதனால் விவரம் இல்லை.  விவரம் இல்லாததால் எழுதத் தெரியவில்லை. வரையத் தெரியவில்லை, வேலை செய்யத் தெரியவில்லை. அவ்வளவுதான்.

சிலர் கலை (திரைப்)படங்களை, ‘போர்’ என்றும் ‘ஸ்லோ’ என்றும் சொல்வதுண்டு. காரணம் அதன் நீளம். நீளத்திற்கு காரணம், இயக்குநர் தெரிவிக்க விரும்புகிற &டீடெயில்’. சத்யஜித் ரே அல்லது ஷியாம் பெனகல் படங்களை  சிலர் அப்படி சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.  குடிசையை அவ்வளவு நேரம் காட்டுவார். ஒரு கிழவன் மெதுவாக பீடியை எடுத்து பற்றவைப்பதை  இரண்டு நிமிடம் காட்டுவார்’ என்பதுபோல குறை சொல்வார்கள்.

அவர் சொல்ல விரும்புகிற விவரங்கள்  தேவைப்படாதாவர்கள் பேச்சு அது. அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. அவர்களுக்கு அந்த விவரங்கள் தேவையில்லை. ஆனால், அவர் தெரியாமல் செய்யவில்லை. அதற்கான அங்கீகாரம் அவருக்கு வேறு இடங்களில் கிடைக்கிறது.

அதே சா.கந்தசாமி அவர்கள், ஒரு மாதம் முன்பு சென்னை பாரிமுனையில் இருக்கும் காளிகாம்பாள் கோவிலுக்குப் போனதை என்னிடம் பகிர்ந்துகொண்டார்.

அவர் சென்ற பேருந்து பற்றி விவரங்கள், அங்கிருந்து ஆட்டோ பிடித்தது, ஒரு வயதான  டிரைவர் மீட்டர்  படி காசு வாங்கிக்கொண்டது, திரும்பி வந்தபோது அவர்கள் கொய்யாப்பழம் வாங்கியது, பின்பு பஸ் ஸ்டாண்ட் வரை நடந்தே வந்தது, ஹாட் சிப்ஸில் டீ குடித்தது போன்ற பலவற்றையும்  விவரமாகச் சொன்னார். பின்பு அடுத்த சப்ஜெக்ட்டுக்கு நகர்ந்தார்.

கவனித்திருக்கலாம். அவர் எல்லாவற்றையும் விவரமாகச் சொன்னார். அவர் சொல்லாமல் விட்டது கோவில் சந்நிதியில் அம்பாளைப் பார்த்ததையும், வணங்கியதையும். அந்த விவரங்களை அவர் சொல்லாமல் விட்டதற்கு காரணம், அவர் மனது அந்த விவரங்களை உள்வாங்கவில்லை, பதிவு செய்துகொள்ளவில்லை. அது அவர் ஆர்வம் சார்ந்த விஷயம் இல்லைபோல.

ஆர்வங்கள் வேறுபடலாம். இயல்புதான்.

எல்லோரும் நல்ல ஓவியராக, வரைபவராக, எழுத்தாளராக இருக்க வேண்டும் என்பதில்லை. இவை அவரவர் ரசனை சார்ந்ததுதான். ஆனால், படைப்பாளிகள் அவர்களுக்கு தேவையானதை கவனிப்பதுபோல, எந்த வேலையை செய்பவரும், கற்றுக்கொள்ள விரும்புகிறவரும், தனக்குத் தேவையானதை கவனமாக விவரங்களுடன் உள்வாங்க வேண்டும். வல்லவர் ஆவதன் அடிப்படை என்பது,  விவரங்கள் சேகரிப்பதும் பயன்படுத்துவதும்.

மொத்தத்தில் - இந்த அத்தியாயத்தில் - முன் வைத்திருப்பது  என்ன?

விவரங்களே ஒருவரை வல்லவராக்குகின்றன. எதையும் விவரங்களுடன் உள் வாங்கினால்தான், விவரங்களுடன் வெளிக்கொணர முடியும்.

இப்போது இரண்டு கேள்விகள் தோன்றுவது இயற்கை.

அதிக விவரங்களுடன் இருக்கும் நான்காவது யானைப் படம்தான் சிறந்ததா? அதை வரைந்தவர்தான் கூடுதல் சிறப்பானவரா?

முன்பு குறைத்துக் கொடுத்து முன்னேற்றம் என்ற பகுதியில் நடிகர் திலகம், வில்லன் நடிகர், தனுஷ், இளையராஜா போன்றோரைப் பற்றிச் சொல்லப்பட்டதே!  யானை படத்தை வைத்து சொல்லப்படும் கருத்து மாறுபடுகிறதே!

இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் அடுத்த அத்தியாயத்தில். 

அதற்கு ஆயத்தம் ஆவதற்காக ஒரு படம் மற்றும் உடன் ஒரு கேள்வியும். (ஒவ்வொரு அத்தியாயத்திலும் எவ்வளவு  படங்கள்!)

சென்ற அத்தியாயத்தில் யானை படத்துக்கு சில பதில்கள் யோசித்தோம். இப்போது இந்தப் படத்தைப் பாருங்கள். என்ன தோன்றுகிறது?

சிரமமில்லை. முன் அத்தியாயங்களில் பார்த்தவற்றை எல்லாம் ஒரு சேர யோசித்தால், இதை சுலபமாகச் சொல்லிவிடலாம். சொல்லிவிட மாட்டீர்களா என்ன?

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com